- எவ்விதப் பாகுபாடும் பார்க்காமல், போலித்தனம் இல்லாமல் இயல்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கக்கூடியது குழந்தைப் பருவம் மட்டுமே. பெற்றோர் அனைவருக்கும் தங்கள் குழந்தையின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்கிற நியாயமான ஆசை இருக்கும். தங்களது குழந்தையின் வளமான எதிர்காலத்துக்காகப் பெற்றோர் கடினமாக உழைக்கின்றனர். ஆனால், குழந்தைகளின் நலனில் அக்கறை காட்டும் பெற்றோர் அந்தக் குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்கின்றனரா என்று சிந்திப்பது இல்லை.
குழந்தைகளின் பார்வையில்
- குழந்தைகள் மகிழ்ச்சி எது தொடர்புடையது, எதைச் சார்ந்தது என்று பெற்றோருக்குப் புரிதல் வேண்டும். குழந்தை ஆரோக்கியமான உடல்நலனுடன் இருக்க வேண்டும், ஒழுக்கமானவர்களாக இருக்க வேண்டும், எதிர்காலத்தில் நல்ல பணியில் அமர வேண்டும், பொருளாதார நிலையில் சிறந்து விளங்க வேண்டும், தாங்கள் அனுபவித்த எவ்வித சிரமங்களையும் தங்கள் குழந்தைகள் அனுபவிக்கக் கூடாது ஆகியவைதான் குழந்தைகளைப் பற்றி ஒவ்வொரு சராசரி பெற்றோரின் எதிர்பார்ப்பாகும்.
- இந்த இலக்குகளை அடையத் தங்களால் இயன்ற உதவிகளையும் முயற்சிகளையும் குழந்தைகளுக்குப் பெற்றோர் தொடர்ச்சியாகச் செய்து வருகின்றனர். பெற்றோர், சமுதாயத்தின் பார்வையிலிருந்து மேற்கண்ட விஷயங்கள் அனைத்தும் நியாயமானவையாகவே தெரியும். ஆனால், இந்த விஷயங்களை ஒரு குழந்தையின் பார்வையிலிருந்து சிந்திப்பவர்கள் மிகவும் குறைவு.
மன அழுத்தம் ஏன்
- நாம் செய்யும் அனைத்துச் செயல்களும் குழந்தைகளின் நலனுக்காகத்தானே, குழந்தையின் பார்வையிலிருந்து ஏன் சிந்திக்க வேண்டும் என்பது பெற்றோரின் வாதமாக இருக்கக் கூடும். ‘டேவிட் மெல்வல்லி’ என்கிற கல்வியாளரின் கூற்றின்படி குழந்தைகள் என்போர் சிறிய உருவில் உள்ள மனிதர்கள். பெரிய மனிதர்களுக்கு உள்ள கோபம், வெறுப்பு, ஆசை போன்ற அவ்வளவு உணர்வுகளும் அவர்களுக்கும் உண்டு. அந்த உணர்வுகளுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும்.
- அண்மையில் வெளியான தேசியக் குற்றப் பதிவு அறிக்கையின்படி (NCRB), 2020இல் மட்டும் ஒவ்வொரு 42 நிமிடங்களுக்கும் இந்தியாவில் ஒரு மாணவனோ மாணவியோ தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஒரு நாளைக்கு 35 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். தற்கொலை முயற்சியிலிருந்து காப்பாற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை இதைவிட அதிகம். கல்வி சுமை, மன அழுத்தத்தினாலேயே பெரும்பாலான தற்கொலைகள், தற்கொலை முயற்சிகள் நடைபெற்றதாக அந்த அறிக்கை கூறுகிறது.
- இந்தப் புள்ளி விவரமும் உண்மை. பெற்றோர் தங்கள் குழந்தைகள் மீது அக்கறை காட்டுவதும் உண்மை. ஆனால், இரண்டும் முரணாக உள்ளது. பெற்றோர் குழந்தைகள் மீது அக்கறையுடன் இருக்கும்போது இத்தனை இழப்புகள் ஏன் நடக்கின்றன என்பது ஆய்வுக்குரியது. பெற்றோரின் அக்கறை குழந்தைகளுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறதா என்கிற கோணத்தில் சிந்திக்க வேண்டும்.
குழந்தைகள் விருப்பம்
- குழந்தைகளுக்கு மிக நல்ல பெயராகத் தேர்ந்தெடுத்து வைப்பதில் பெற்றோர் மிகவும் முனைப்பாக இருப்பார்கள். அது தனக்குப் பிடித்த பெயரா, பிடிக்காத பெயரா என்பதைப் பள்ளியில் சேர்த்த பிறகுதான் குழந்தைகளுக்குப் புரிகின்றது. ஆனால், குழந்தையின் பெயர்களில் மிகப் பெரிய உளவியல் உள்ளது. தங்கள் பெயரை விரும்பும் குழந்தைகள், தன்னம்பிக்கை உடையவர்களாகவும் வெற்றியாளர்களாகவும் மாறுகின்றனர்.
- தங்கள் பெயரைப் பிடிக்காத குழந்தைகள் மிகவும் கூச்ச சுபாவம் உடைய வர்களாகவும் மனதளவில் பலவீனமாகவும் இருக்கிறார்கள் என ஓர் ஆய்வு கூறுகிறது. தங்கள் பெயரைப் பிடிக்காத குழந்தைகளுக்கு 10 வயதுக்குள் தங்கள் பெயரை மாற்றிக்கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என அந்த ஆய்வு பரிந்துரைக்கிறது.
- குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்த பிறகு அந்தப் பள்ளிச் சூழல் தங்கள் குழந்தை களுக்குப் பிடித்தமானதாக இருக்கிறதா என்று வெகு சில பெற்றோரே குழந்தைகளிடம் பேசித் தெரிந்துகொள்ள முற்படுகின்றனர். குழந்தைகளை நேசிக்கும் பள்ளிகளைவிடக் குழந்தைகள் நேசிக்கும் பள்ளிகள் சிறந்த குடிமக்களை உருவாக்கும்.
மதிப்பெண் அழுத்தம்
- குழந்தைகள் அறிவுரைகள் கேட்டு வளர்வது கிடையாது. தாங்கள் பார்ப்பதையே தங்கள் வாழ்க்கையில் பிரதிபலிக்கின்றனர். குழந்தைகளைத் தொலைக்காட்சி பார்க்க வேண்டாம் என்பதை நாம் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டே கூறுகின்றோம்.
- கைப்பேசியில் அதிக நேரம் செலவிட வேண்டாம் என்பதை நாம் கைப்பேசியைப் பயன்படுத்திக் கொண்டே கூறுகின்றோம். பெற்றோரிடம் இருக்கும் ஒரு சில தீய பழக்கங்களைக் குழந்தைகள் எளிதாகப் பின்பற்றத் தொடங்குகின்றனர்.
- குழந்தைகள் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் எனப் பெற்றோர் விரும்புகின்றனர். மரபு சார்ந்த திறன்கள், கற்றுக்கொள்ளும் திறன்கள் என இரண்டு வகையான திறன்கள் குழந்தைகளுக்கு உள்ளன. அறிவியல் கருத்துகளின்படி மரபு சார்ந்த திறன்களுக்கு நாமும் நமது முன்னோர்களுமே காரணம். குழந்தைகளிடம் உள்ள இந்த வெளிப்பாடு புரியாமல் பெரும்பாலான பெற்றோர் அவர்களைத் தங்களுடைய விருப்பத்துக்கு தகுந்தாற்போல் மாற்றி அமைக்க விழைகின்றனர். ஒரு வகுப்பில் அனைத்துக் குழந்தைகளுமே முதல் மதிப்பெண் எடுக்க முடியாது என்பதைப் புரிந்துகொள்வதில்லை.
கனவுகளைத் திணிக்கக் கூடாது
- யுனிசெப் போன்ற நிறுவனங்கள் குழந்தைகளின் உரிமைகள் என்று வரையறை செய்துள்ள பல்வேறு விஷயங்கள் பற்றி நாம் கவனம் கொள்ளாவிட்டாலும், குழந்தைகளின் உணர்வுகளுக்காவது நாம் மதிப்பளிக்க வேண்டும்.
- குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் தங்களுடைய கனவுகள், ஆசைகள், எதிர்பார்ப்புகள் அனைத்தையும் அவர்கள் மீது திணிக்கின்றனர். அவர்களைத் தங்களின் பிரதிபலிப்பாக உருவாக்க நினைக்கும் பெற்றோரில் ஒரு சிலர் வெற்றியும் பெறுகின்றனர். ஆனால், அது பெற்றோருக்கும் குழந்தைக்கும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும் என்பதை மறுக்க முடியாது.
- குழந்தைகளின் விருப்பத்தை அறிந்து அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி தருகிற பெற்றோர் வெகு சிலரே. அவர்கள் விரும்பும் பாதையைச் சிறப்பாக வழி நடத்தி, அதற்கான ஆதரவை உளவியல் ரீதியாகத் தரும் பெற்றோர்தாம் தங்கள் குழந்தைகளுக்கு மன நிம்மதியைத் தருகின்றனர்.
- பெற்றோரின் கனவுகளை குழந்தைகள் மீது திணிக்காமல் அவர்களின் விருப்பங்களை நெறிப்படுத்தி நல்ல முறையில் வழிகாட்டினால் எதிர்கால சமுதாயம் மனதளவிலும் உடலளவிலும் ஆரோக்கியமாகவும் ஆக்கபூர்வமாகவும் வளர்ச்சி அடையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
நன்றி: இந்து தமிழ் திசை (13 – 02 – 2024)