TNPSC Thervupettagam

க.மு. - க.பி.- புதிய வரலாற்றுக்காலம்!

March 20 , 2020 1758 days 850 0
  • கரோனா வைரஸ் தாக்குதலுக்கு முன்பு வரை, 21-வது நூற்றாண்டு அரசியல் கட்சிகளைப் பற்றி புத்தகம் எழுதலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தேன். உலக நோயாக இது பரவிவிட்டதால் புனைவு அல்லாத எதை எழுதுவதாக இருந்தாலும் நீங்களும் சற்றே நிறுத்தவும். உலகம் இனி, ‘கரோனாவுக்கு முன்’ – ‘கரோனாவுக்குப் பின்’ என்று அடையாளப்படுத்தப்படவிருக்கிறது. கரோனாவுக்குப் பிறகு உலகம் எப்படியிருக்கும் என்று நம்மால் ஊகிக்கக்கூட முடியவில்லை. ஆனால், சில போக்குகளை நான் கவனித்துக்கொண்டிருக்கிறேன்.
  • தெரியாதவை, தெரியாதவையாகவே இருக்கும். உலகம் முழுக்க தகவல்தொடர்பால் இணைக்கப்பட்டது குறித்து 2004-ல் ‘உலகம் தட்டையானது’ என்றொரு புத்தகம் எழுதினேன். அதற்குப் பிறகு உலகம் மேலும் தட்டையானது மட்டுமல்லாமல், பின்னிப்பிணைந்திருக்கிறது. அப்புத்தகத்தை எழுதத் தொடங்கியபோதுதான் ‘ஃபேஸ்புக்’ வந்தது. அதாவது, ‘ட்விட்டர்’ என்பது அப்போது ஒலியாக இருந்தது. ‘கிளவுட்’ வானத்தில் இருந்தது. ‘4ஜி’ தூரத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. ‘லிங்கிடுஇன்’ சிறையாக இருந்தது. இன்னும் இவைபோல பல கருத்துருக்களாக மட்டுமே இருந்து பிறகுதான் பருப்பொருளாயின.
  • மேற்கண்டவை அனைத்துமே தொடர்புச் சாதனங்கள். உலக வர்த்தகம், சுற்றுலா ஆகியவை 2004-க்குப் பிறகு பிரம்மாண்டமாக விரிவடைந்து உலகையே வலைப்பின்னலாக்கிவிட்டன. நம்முடைய புவி இப்போது ஒரு மூலைக்கு இன்னொரு மூலை இணைக்கப்பட்டதாக மட்டுமல்ல; சார்ந்து வாழ்வதுமாகிவிட்டது. இன்னும் சொல்லப்போனால், பிரிக்க முடியாதபடி பற்றவைத்ததுபோல் ஆகிவிட்டது.
  • இது பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தியது. எங்காவது ஒரு மூலையில் பிரச்சினை தோன்றினால் விரைவாக அது இன்னொரு மூலைக்கு ஆழமாகவும், அதிக செலவில்லாமலும் கடத்தப்படவும் வழிவகுத்துவிட்டது. உடல் முழுக்க வைரஸ்களைக் கொண்ட வௌவால், வூஹான் கடல்வாழ் பிராணிகளுக்கான சந்தையில் விற்பதற்காக வைக்கப்பட்டிருந்த ஒரு பாலூட்டியைக் கடித்தது. அந்த வைரஸ், பாலூட்டிக்குள் நுழைந்து அதை உண்ட சீனரின் உடலில் சிறைப்பட்டது. அங்கிருந்து மற்றவர்களுக்கும் பரவியது. சில வாரங்களில் அனைத்து பள்ளிக்கூடங்களும் அமெரிக்காவில்கூட மூடப்பட்டுவிட்டன. நானே பெதஸ்டாவில் எல்லோரிடமிருந்தும் ஆறு அடிகள் விலகியே நடக்கிறேன்.

அதிவேகப் பரவலின் ஆற்றல்

  • இந்தத் தொற்றுநோய் எப்படி கண்டம் விட்டு கண்டம் இவ்வளவு விரைவாகப் பரவிற்று என்று மனித மூளைகளால் புரிந்துகொள்ள முடியவில்லை. நோய்த்தொற்றுக்கு ஆளானவர்கள், பலியானவர்கள் எண்ணிக்கை இரண்டிரண்டு மடங்காகப் பெருகிக்கொண்டே வருகின்றன. அமெரிக்காவில் முதலில், ஐயாயிரம் பேருக்குத்தான் நோய்த்தொற்று என்றார்கள். அது எப்படி சில நாட்களுக்குள்ளேயே பத்து லட்சத்தையும் தாண்டியது என்று புரிந்துகொள்ளவே முடியவில்லை.
  • நாம் எதிர்கொண்டுள்ள இந்த அதிவேகப் பெருக்கம் எப்படிப்பட்டது என்று புரிந்துகொள்ள எளிய உதாரணம் உண்டு. ‘சன் மைக்ரோ சிஸ்டம்ஸ்’ நிறுவனத்தின் சக நிறுவனரும் கணினி அறிவியலாளருமான பில் ஜாய் இந்த உதாரணத்தைக் கூறுகிறார்: “இந்த வைரஸானது ஒரு நாளைக்கு 25% வட்டி வசூலிக்கும் கந்து வட்டிக்காரரைப் போன்றது. நாம் முதலில் ஒரு டாலர்தான் கடன் வாங்கினோம். நாற்பது நாட்களுக்கு எதுவும் செய்யாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். இப்போது நாம் அசலும் வட்டியுமாக 7,500 டாலர்களைத் திருப்பித்தர வேண்டும்! இன்னும் மூன்று வாரங்கள் தவணை கேட்டால் நாம் பத்து லட்சம் டாலர்களைத் தர வேண்டியிருக்கும்.”
  • அதனால்தான், ஒவ்வொரு நாளும் தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பது தொற்று பரவும் வேகத்தைக் கட்டுப்படுத்த முக்கியமானதாகிறது. முடிந்தவரை அனைவரையும் சோதித்துவிட வேண்டும். ஏனென்றால், இந்த விவகாரத்தில் எங்காவது ஒரு இடத்தில் நாம் சண்டையில் தோற்றாலும், எல்லா முனைகளிலும் முழுப் போரிலும் தோற்றுவிடுவோம்.

மருத்துவமனைகள் எப்படி இருக்கின்றன?

  • நாட்டில் இதுவரை எத்தனை பேருக்கு வைரஸ் தொற்றியிருக்கிறது, நாட்டில் எத்தனை பொது மருத்துவமனைகள், தீவிர சிகிச்சைப் பிரிவுகள் உள்ளன, அவற்றில் எத்தனை படுக்கைகள் உள்ளன - இதைப் பற்றித்தான் என் யோசனைகள் செல்கின்றன. வைரஸ் தொற்று உச்சகட்டத்தை எட்டும்போது நோயாளிகளின் எண்ணிக்கைக்குச் சமமாகப் படுக்கைகளின் எண்ணிக்கையும் இருக்கும் என்றால் நாம் நிம்மதியாக இருக்கலாம். இல்லையென்றால், இந்த தொற்றுநோயை மிஞ்சக்கூடிய பெருங்குழப்பத்தில் நாம் ஆழ்ந்துவிடுவோம்.
  • அதிவேகமாகப் பரவும் நோய்க்கு எதிராக மிக மெத்தனமாக இருக்கின்றன அரசின் நடவடிக்கைகள். இருப்பினும், 1965-ல் கார்டன் மூர் என்பவர் கணினியின் அதிவேக நவீனத்துவ வளர்ச்சி குறித்துக் கூறியது, நம்மைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. “ஒவ்வொரு இரண்டாண்டு காலத்திலும் கணினித் தொழில்நுட்பம் இரட்டிப்பாக ஆற்றலைப் பெருக்கிக்கொள்ளும்” என்று ஊகித்தார் மூர். அதை ‘மூர் விதி’ என்று சொல்வார்கள். மூர் விதியை ‘இன்டெல் நிறுவனம்’ ஒவ்வொரு முறையும் நன்றாகவும் சூட்டிகையாகவும் விரைவாகவும் செய்துகொண்டிருக்கிறது.
  • 1971-ல் தயாரான ஃபோக்ஸ்வாகன் கார் இப்படியே நவீனத்துவம் அடைந்திருந்தால் 2020-ல் அது எப்படி இருக்கும் என்று சில பொறியாளர்கள் வேடிக்கையாகக் கணக்கிட்டார்கள். அதன்படி, ஃபோக்ஸ்வாகனின் புதிய தயாரிப்பான பீட்டில் கார் மணிக்கு 3 லட்சம் மைல் வேகத்தில் செல்லக்கூடியதாகவும், ஒரு கேலன் பெட்ரோலில் 20 லட்சம் மைல்களைக் கடக்கக்கூடியதாகவும் விலை மலிந்து 4 பைசாவாகவும் மாறியிருக்க வேண்டும். இது பொறியியல் துறையில் தொழில்நுட்பம் அதிவேகமாக எப்படி மாற்றமடைகிறது என்பதைக் கூறுகிறது. கரோனா வைரஸுக்குச் சிகிச்சையும் அதற்குத் தடுப்பூசி கண்டுபிடிப்பதும் அதே வேகத்தில் நடந்தாக வேண்டும்.

கரோனாவை எதிர்கொள்ள மருந்து?

  • பெங்களூருவில் உள்ள தட்சசீலா நிறுவன இயக்குநர் நிதின் பை, லைவ்மின்ட்.காம் இணையத்தில் எழுதியிருக்கிறார்: “நோய்க்குக் காரணமான நுண்கிருமிகளைக் கண்டுபிடிப்பதையும் நோயின் தன்மையை ஆராய்வதையும் நவீன கணினித் தொழில்நுட்பமும் செயற்கை உயிரியலும் புரட்சிகரமான வகையில் சாத்தியப்படுத்திவிட்டன. அதையடுத்து, தடுப்புமருந்தைத் தயாரிப்பதிலும், மூரின் விதிகளுக்கேற்ப வேகம் கூடியிருக்கிறது. சமீப கால தொற்றுநோய்கள் ‘சார்ஸ்’, ‘ஹெச்1என்1’, ‘எபோலா’, ‘ஜிகா’, இப்போது ‘கோவிட்-19’ அனைத்துமே உயிரியல் துறையிலும் தொற்றுநோய் தடுப்பு அறிவியல் துறையிலும் ஆகச் சிறந்தவர்களை வெளிக்கொண்டு வருவதற்கான வாய்ப்புகள்.”
  • அது சரி, ஆனால் இந்தத் தடுப்புமருந்து கண்டுபிடிப்பு வேகமாக நடக்குமா? ஹார்வர்ட் கென்னடி உயர்கல்வித் துறையின் பொதுத் தலைமைக்கான (ஆய்வு) மையத்தைச் சேர்ந்த கௌதம் முகுந்தா இதற்குப் பதில் அளிக்கிறார்: “மிகவும் நவீனத்துவமடைந்த பிறகும் எச்ஐவிக்கும் மலேரியாவுக்கும் நம்மால் ஊசி மருந்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. உலகம் முழுவதும் பரவிய இவ்விரு நோய்களுக்கு எதிராகப் பல ஆண்டுகளாக மருத்துவ உலகம் போராடிக்கொண்டிருக்கிறது. நம்மால் கண்டுபிடித்துவிட முடியும் என்பது உண்மை. ஆனால், அது மிகமிக மெத்த கடினம்.”

கடும்நாடுகளும் நெகிழ்நாடுகளும்

  • இந்தத் தொற்றுநோய்க்குப் பிறகு, அரசியல் என்னவாகும் என்ற கேள்வி எழுகிறது. அதிபர் தேர்தலுக்கான பிரச்சார மேடையில் ஆளுங்கட்சியினர் தோன்றி, “நாங்கள் அரசை ஆள்பவர்கள், உங்களுக்கு உதவுவதற்காக வந்திருக்கிறோம்” என்றால் மக்கள் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். இந்த நெருக்கடியிலிருந்து நாம் நிச்சயம் மீள்வோம். நம்மிடைய உள்ள திறமை, சுயநலம் பாராத அர்ப்பணிப்பு உணர்வு நம்மைக் காப்பாற்றும். நம்முடைய அரசுடன், அறிவியல் அறிஞர்கள், மருத்துவ நிபுணர்கள், பேரிடர்களிலிருந்து மக்களை மீட்கும் நிபுணர்கள், சுற்றுச்சூழல் வல்லுநர்கள் இணைந்து தீர்வைக் கண்டுபிடிப்பார்கள். மாபெரும் அமெரிக்க அரசும் அமெரிக்க மருந்துத் துறையும் மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்றே வேண்டுகிறேன்.
  • என்னுடைய நண்பர் பேராசிரியர் மைக்கேல் ஜெல்ஃபேன்ட், ‘ரூல் மேக்கர்ஸ், ரூல் பிரேக்கர்ஸ்: ஹவ் டைட் அண்ட் லூஸ் கல்ச்சர் வயர் தி வேர்ல்ட்’ என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். மக்களின் சுதந்திரத்தைவிட அரசின் விதிகளுக்கு எந்தெந்த நாடுகள் முன்னுரிமை தருகின்றன என்ற அடிப்படையில் அவற்றை ‘கடுமையானது’, ‘நெகிழ்வானது’ என்று தரம் பிரித்திருக்கிறார். சீனா, சிங்கப்பூர், ஆஸ்திரியா ஆகியவை கடுமையானவை என்றால் அமெரிக்கா, இத்தாலி, பிரேசில் நெகிழ்வானவை.
  • இப்படி நாடுகள் கடுமையாக இருப்பதற்கும் நெகிழ்வாக இருப்பதற்கும் வரலாற்றுப் பின்னணி உண்டு என்கிறார் ஜெல்ஃபேன்ட். வலுவான சட்டங்களும் கடுமையான தண்டனைகளும் விதிக்கும் நாடுகள் பஞ்சம், போர், இயற்கைப் பேரிடர்கள், கொள்ளைநோய்களின் தொற்று ஆகியவற்றுக்கு ஆளானவை என்று அவற்றின் வரலாற்றிலிருந்து எடுத்துக் காட்டுகிறார். கடுமையான விதிகளைக் கொண்ட நாடுகளில் இத்தகு நெருக்கடிச் சூழலில் இழப்புகள் குறைவாக இருக்கிறது. கரோனா பரவாமல் எப்படித் தடுக்க வேண்டும் என்பதில் சிங்கப்பூர் செயல்பாட்டையே இதற்கு உதாரணமாகப் பார்க்கலாம். நெகிழ்வான நாடுகள் தடுமாறுகின்றன.
  • அமெரிக்காவிலேயே இந்த வைரஸின் பாதிப்பு பெரிதாக இருக்காது என்று குறைத்து மதிப்பிட்டுவிட்டனர். தடுப்பு நடவடிக்கைகள் வேண்டும் என்ற கோரிக்கைகளுக்குப் பின்னால் அரசியல் நோக்கம் இருப்பதாக ஆட்சியாளர்கள் குற்றஞ்சாட்டினர். இதனால், அனைவரின் உயிர்களுக்குமே இப்போது அச்சுறுத்தல் ஏற்பட்டுவிட்டது. என்றாலும் எதிர்கொள்வோம்!

தயாளச் சிந்தை வேண்டும்

  • உலகப் போர் அனுபவம் அமெரிக்காவுக்குச் சொல்வது ஒன்றுண்டு, தயாளச் சிந்தைதான் நம்மைக் காப்பாற்றும். இந்த இக்கட்டான தருணத்தில் நம்முடைய தொழிலாளர்களை நாம் காத்திட வேண்டும். அதற்குப் பெரும் பணம் வேண்டும்; அப்போதுதான் அவர்கள் பட்டினி கிடக்காமல் சாப்பிட முடியும். அமெரிக்க அரசும் நாடாளுமன்றமும் இதில் விரைந்து செயல்படக்கூடும் என்பது நல்ல அறிகுறி.
  • எதிலும் கண்டிப்பு இல்லாமல் செயல்படுவதை நிறுத்திக்கொண்டு விதிகளைக் கண்டிப்பாகப் பின்பற்றுவதும், கஜானாவைத் திறந்து வைத்து வசதி குறைவானவர்களுக்குப் பணம் அளித்துக் கனிவுடன் காப்பாற்றுவதும் ‘கரோனாவுக்குப் பின்’ என்கிற புதிய மாற்றத்தை நம்முடைய வரலாற்றில் உருவாக்கட்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (20-03-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்