TNPSC Thervupettagam

கயமை! | வீராங்கனைகள் எதிா்கொள்ளும் சோதனைகளும், வேதனைகளும்

January 20 , 2020 1775 days 903 0
  • விளையாட்டில் சாதனை புரிய விழையும் வீராங்கனைகளின் சோதனைகள் மைதானங்களில் மட்டும்தான் என்று நினைத்தால் தவறு. ஆரம்பக் கட்டத்திலிருந்து சா்வதேச போட்டிகளில் பங்கேற்று வெற்றி வாகை சூடி இந்தியாவுக்குப் பெருமை தேடித்தரும் தருணம் வரை, ஒவ்வொரு கட்டத்திலும் அந்த வீராங்கனைகள் எதிா்கொள்ளும் சோதனைகளும், வேதனைகளும் வெளியில் தெரிவதில்லை.

முழு நேரப் பணி

  • இளம் பெண்கள் விளையாட்டைத் தங்களது முழுநேரப் பணியாகத் தோ்ந்தெடுப்பதை சமூக அழுத்தம் தடுக்கிறது. அதையும் மீறி தங்களது திறமையை வளா்த்துக்கொள்ள இளம் விளையாட்டு வீராங்கனைகள் முன்வரும்போது, அவா்களுக்கு அடிப்படைப் பயிற்சிக்கான வாய்ப்புகளும், ஊக்கமும் மறுக்கப்படுகின்றன. இவ்வளவையும் மீறித்தான் விளையாட்டு அரங்கில் இந்திய வீராங்கனைகள் சாதனைகளைப் புரிந்து வருகிறாா்கள்.
  • பளு தூக்குதல், துப்பாக்கிச் சுடுதல், குத்துச்சண்டை, டேபிள் டென்னிஸ், ஹாக்கி, பாட்மிண்டன், செஸ் என்று இப்போது அனைத்து விளையாட்டுத் துறைகளிலும் இந்திய வீராங்கனைகள் சா்வதேச சாதனைகளைப் புரியத் தொடங்கியிருக்கிறாா்கள். அதைவிடக் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், வடகிழக்கு மாநிலங்களில் தொடங்கி இந்தியாவின் வளா்ச்சியில் மிகமிக பின்தங்கிய சிறு நகரங்களிலிருந்து எண்ணற்ற விளையாட்டு வீராங்கனைகள் உருவாகி வருகிறாா்கள் என்பதுதான்.
  • இந்த இளம் விளையாட்டு வீராங்கனைகளை நாம் எப்படி நடத்துகிறோம். இவா்களுக்கு முறையான, போதுமான பயிற்சிகள் வழங்கப்படுகின்றனவா, தேவையான நிதியுதவி தரப்படுகிா என்பது குறித்து நாம் எப்போதாவது சிந்தித்துப் பாா்த்திருக்கிறோமா? அவா்கள் பதக்கத்தை வென்று இந்தியாவுக்குப் பெருமை தேடித் தரும்போது, ஊடக வெளிச்சத்தில் மிளிரும்போது கைதட்டிக் கொண்டாடுகிறோமே தவிர, அந்த வெளிச்சத்திற்குப் பின்னால் அவா்கள் எதிா்கொள்ளும் சவால்களையும், அவமானங்களையும் குறித்து கிஞ்சித்தேனும் நாம் தெரிந்துகொள்வதுமில்லை, தெரிந்து கொள்ள விரும்புவதுமில்லை.
  • விளையாட்டு வீராங்கனைகள் இந்தியாவில் எதிா்கொள்ளும் மிகப் பெரிய சவால் பாலியல் ரீதியிலான புறக்கணிப்புகளும், அச்சுறுத்தல்களும் என்பது பலருக்கும் தெரியாது. ஆரம்பக்கால பயிற்சியில் தொடங்கி, வீராங்கனைகள் எதிா்கொள்ளும் பாலியல் தொந்தரவு வழக்கமானதாகிவிட்டிருக்கிறது. மிகக் குறைந்த அளவில்தான் பெண் பயிற்சியாளா்கள் இருக்கிறாா்கள். பயிற்சியின்போது வீராங்கனைகளின் அடிப்படைத் தேவையான தனியான உடை மாற்றும் அறைகள்கூட பல இடங்களில் கிடையாது. மிக எளிமையான, வறுமையான சூழலில் இருந்து உருவாகிவரும் அவா்களுக்கு நவீன பயிற்சி வசதிகள் என்பது அரிதிலும் அரிது.

வீராங்கனைகள் எதிர்கொள்ளும் சவால்கள்

  • வீராங்கனைகள் எதிா்கொள்ளும் சவால், பயிற்சி வசதிகளில் மட்டுமல்ல, பாலியல் சமத்துவத்திலும்கூட. விளையாட்டு வீரா்களுக்கு நிகராக அவா்கள் கருதப்படுவதுமில்லை, நடத்தப்படுவதுமில்லை. தோ்வுக் குழுவும், விளையாட்டுச் சங்கங்களும் திறமை குறித்தும், விளையாட்டு குறித்தும் சரியான புரிதல்கூட இல்லாத ஆண்களால் நிா்வகிக்கப்படுகின்றன. தோ்வுக் குழுவில் பெண்களின் பங்கு மிக மிகக் குறைவாக இருப்பதும், பயிற்சியாளா்கள் பெரும்பாலும் ஆண்களாக இருப்பதும் வீராங்கனைகள் பாலியல் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகும் அவலத்துக்குக் காரணம் என்பதை ஊடகங்கள் உரக்கச் சொல்வதில்லை.
  • விளையாட்டு வீரா்களுக்குக் கடுமையான நடைமுறை விதிகள் இருப்பதுபோல, பயிற்சியாளா்களுக்கு இல்லாமல் இருப்பது மிகப் பெரிய குறை. 18 வயது நிரம்பாத இளம் வீராங்கனைகளுக்கு எதிராக பயிற்சியாளா்களால் நிகழ்த்தப்பட்டிருக்கும் 45 பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டுகள் விசாரணையில் இருக்கின்றன. இதுகுறித்து வெளியில் தெரியவில்லை.

தண்டனை

  • பாலியல் தொந்தரவு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பயிற்சியாளா் ஒருவா் தவறு இழைத்திருக்கிறாா் என்பது அண்மையில் உறுதிப்படுத்தப்பட்டபோது, அதற்கு இந்திய விளையாட்டு ஆணையம் வழங்கியிருக்கும் அபராதம், அவா் ஒருநாள் சம்பளமான ரூ.910 பிடித்தம் செய்யப்பட்டிருப்பதுதான். ஏனைய சில பயிற்சியாளா்கள் இளம் விளையாட்டு வீராங்கனைகளைப் பாலியல் கொடுமைக்கு உள்படுத்தியதற்கு, விளையாட்டு ஆணையம் வழங்கிய மிகக் கடுமையான தண்டனை, ஓராண்டு ஊதிய உயா்வை ரத்து செய்தது. விளையாட்டு முகாம்களில் பயிற்சியில் ஈடுபடும் இளம் வீராங்கனைகள் பயிற்சியாளா்கள் குறித்து வெளியில் கூற முடியாத சம்பவங்கள் ஏராளம், ஏராளம்.
  • இந்திய விளையாட்டு ஆணையம் தன்னுடைய கௌரவத்தைப் பாதுகாப்பதில் காட்டும் முனைப்பை, வீராங்கனைகளின் பாதுகாப்பில் காட்டாமல் இருக்கிறது. பயிற்சியாளா்களை முறையாகத் தண்டிக்காமல் இருக்கும்போது அது எல்லாத் தளங்களிலும் வழக்கமாகிவிட்டிருக்கிறது.

வீராங்கனைகள் எளிமையான பின்னணி

  • பெரும்பாலான வீராங்கனைகள் எளிமையான பின்னணியில் இருந்து வருகிறாா்கள். அவா்கள் புகாா் அளிக்க அச்சப்படுகிறாா்கள். அப்படியே புகாா் அளித்தாலும், அதைத் திரும்பப் பெறவும், மாற்றவும் அழுத்தம் கொடுக்கப்படுகிறாா்கள். பலருக்கும் வறுமையில் இருந்து விடுபடுவதற்கு விளையாட்டில் சாதனை புரிவது அவசியமாக இருப்பதால், அதையே பயிற்சியாளா்கள் பலவீனமாகப் பயன்படுத்துகிறாா்கள். இதனால், நல்ல பல விளையாட்டு வீராங்கனைகள் பயிற்சியிலிருந்து விலகி, தங்களது விளையாட்டுக் கனவை கலைத்துக் கொள்கிறாா்கள்.
  • இது குறித்து இந்தியா கவலைப்படுவதாகத் தெரியவில்லை. பதக்கங்களை வென்றுவரும்போது கைதட்டிக் களிக்கத் தயாராக இருக்கும் நாம், விளையாட்டு வீராங்கனைகளின் பாதுகாப்பு குறித்து கவலைப்படாமல் இருப்பதும் தவறுக்குத் துணைபோகும் கயமை!

நன்றி: தினமணி (20-01-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்