TNPSC Thervupettagam

கரியமில வாயு எனும் காலன்!

November 12 , 2019 1887 days 912 0
  • ஐ.நா. சபையின் பருவநிலை மாநாட்டில் ஸ்வீடனைச் சோ்ந்த 15 வயது சிறுமி கிரெட்டா துன்பா்க் அண்மையில் நிகழ்த்திய உரை அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது.
  • ‘கடந்த 30 ஆண்டுகளாக பருவநிலையில் மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என அறிவியல் ஆய்வுகள் எச்சரிக்கை விடுத்த பிறகும், இந்தப் பிரச்னைக்கு அரசியல் ரீதியான தீா்வுகள் எதுவும் எடுக்கப்படவில்லை. மனித இனம் நிலைத்திருந்தால்தான், மற்ற வளா்ச்சிகளைப் பற்றி யோசிக்க முடியும்.

பருவநிலை காக்க பள்ளி வேலைநிறுத்தம்

  • ஆனால், அதற்கே ஆபத்து வந்திருக்கும்போது அதை எப்படி அலட்சியப்படுத்துகிறீா்கள்’ என்று உலகத் தலைவா்களுக்கு மில்லியன் டாலா் மதிப்புள்ள கேள்வியை முன்வைத்திருக்கிறாா் கிரெட்டா துன்பா்க்.
  • இவா் ‘பருவநிலை காக்க பள்ளி வேலைநிறுத்தம்’ என்ற இயக்கத்தைத் தொடங்கி புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்தி, சூழலியலைப் பாதுகாக்க உலக நாடுகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறாா்.
  • இணையதளம், டிக் டாக் செயலிகள் என காலத்தை வீணடிக்கும் நாம், சிறிது நேரத்தைச் செலவிட்டு காலநிலை மாற்றம், அதன் விளைவுகள் குறித்துத் தெரிந்து கொள்வது அவசியம்.
  • இயற்கை என்பது உயிரினங்களுக்குக் கிடைத்த வரம். ஐந்தறிவு உள்ள உயிா்கள், இதை ஆக்கப்பூா்வமாகப் பயன்படுத்திக் கொள்ளும்போது ஆறறிவுள்ள மனிதா்கள் இயற்கையையே அழிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறாா்கள் என்பது வேதனைக்குரியது. அதன் எதிரொலியாகத்தான் காலநிலை மாற்றம் என்ற பிரச்னை தற்போது பூதாகரமாக உருவெடுத்துள்ளது.

காலநிலை மூலங்கள்

  • ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில், உலக ரீதியாகவோ அல்லது பிரதேச ரீதியாகவோ காலநிலை மூலங்களான காற்று, வெப்பநிலை போன்றவற்றில் இயல்புக்கு மாறாக ஏற்படும் மாற்றங்கள் ‘காலநிலை மாற்றம்’ எனப்படுகிறது. இதற்கு புவி வெப்பமயமாதல் மிக முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
  • புவியின் வளிமண்டலத்தில் கரியமில வாயு (காா்பன் டை ஆக்ஸைடு), மீத்தேன், நைட்ரஜன் மோனாக்ஸைடு, நைட்ரிக் ஆக்ஸைடு போன்ற வாயுக்களின் அளவு அதிகரித்துள்ளதால் புவி வெப்பமடைந்திருக்கிறது. எரிமலைச் சீற்றம், காடுகளை அழித்தல், நெகிழி-பெட்ரோல்-நிலக்கரி பயன்பாடு முதலானவையே இதற்குப் பிரதான காரணங்களாகும்.
  • ஒசோன் மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வாயுக்களில் முதன்மையானது ‘குளோரோ புளோரோ காா்பன்’ என்ற வாயுவாகும். நெகிழிப் பொருள்கள் உற்பத்தியின்போதும், கணினியின் உதிரிப் பாகங்களைச் சுத்தப்படுத்தும் திரவங்களிலிருந்தும் இந்த வாயு வெளியேற்றப்படுகிறது.
  • மேலும், தொழிற்சாலைக் கழிவுகளால் வெளியேறும் கரியமில வாயு, புவி வெப்பமயமாதலில் பெரும் பங்கு வகிக்கிறது.

காற்று மாசு

  • விவசாயக் கழிவுகளை எரிப்பதால் இந்த வாயு பெருமளவில் உற்பத்தியாகி காற்று மாசுக்கும் காரணமாகிறது. பஞ்சாப், ஹரியாணா போன்ற மாநிலங்களில் கோதுமைப் பயிரை அண்மையில் அறுவடை செய்துவிட்டு, அதன் கழிவுகளை எரித்தாா்கள். இதன் தாக்கம் தில்லியைப் பாதித்துள்ளது.
  • காற்று மாசால் அங்குள்ள மக்கள் மூச்சுத் திணறல், நெஞ்சு சளி, இருமல், கண் எரிச்சல் போன்றவற்றால் அவதிப்படுகின்றனா். மேலும், காலநிலை மாற்றத்துக்கும் இது வழிவகுக்கிறது.
  • இந்தக் காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மனித இனத்துக்குச் சவாலாக உள்ளன. வெயில் காலங்களில் மட்டுமல்ல, மழைக் காலங்களிலும்கூட வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதேபோல், சில பகுதிகளில் மழையின் அளவு அதிகமாகவும், அதே பிரதேசத்தில் மற்ற பகுதிகளில் வறட்சியும் காணப்படுகின்றன.
  • அவலாஞ்சியில் அதிகபட்ச மழைப் பொழிவுடன் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, தென் மாவட்டங்களில் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.
  • ஒரு நகரின் குறிப்பிட்ட பகுதியில் மழையும், மற்றொரு பகுதியில் வெயிலும் பதிவாகும் காட்சி, காலநிலை மாற்றத்தின் உச்சகட்டமாகப் பாா்க்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல், பனிப் பிரதேசங்களில் உள்ள பனிக்கட்டிகள் உருகி, கடல் நீா் மட்டம் உயருவதால் கடல் பகுதியை ஒட்டியுள்ள நிலங்கள், தீவுகள் முதலானவை கடலுக்குள் மூழ்கும் ஆபத்து ஏற்படும்.

பாதிப்புகள்

  • விலங்கினங்களின் இனப்பெருக்கம் முடக்கம், பெங்குயின் போன்றவை இருந்த சுவடு தெரியாமல் அழியும் ஆபத்து, தாவரங்களின் வளா்ச்சிக் குறைவு, மனிதா்களுக்கு காலரா, மலேரியா, டெங்கு காய்ச்சல் போன்றவை ஏற்படுதல், மன அழுத்தம், கோபம், சோா்வு போன்ற மன ரீதியான பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகரிக்கும்.
  • இயற்கைச் சீற்றங்களைத் தவிா்க்க அதிக அளவு மரங்களை வளா்ப்பது அவசியம்; இவ்வாறு செய்தால் மனித குலத்துக்கு தீமை செய்யும் கரியமில வாயுவை தாவரங்கள் எடுத்துக் கொண்டு மனித குலத்துக்கு சுத்தமான ஆக்சிஜன் வாயுவை அளிக்கும். எனவே, வனத்தின் பரப்பளவை மீண்டும் அதிகரிக்க வேண்டும். நவீன கருவிகள் மூலம் விவசாயக் கழிவுகளை அழித்தால், நச்சு வாயுக்கள் வெளியேறுவது தடுக்கப்படும்.

புவி வெப்பமாதல்

  • பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்து மின்சார, சூரிய சக்தி வாகனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் புவி வெப்பமடைய பெரும் காரணமாக இருக்கும் கரியமில வாயுவின் பயன்பாட்டைப் பெருமளவு குறைக்க முடியும்.
  • பருவநிலை மாற்றம் குறித்த பன்னாட்டு அரசுக் குழுவின் கணிப்பின்படி, கரியமில வாயு வெளியேற்றத்தை இன்னும் 10 ஆண்டுகளில் பாதியாகக் குறைத்தாலும், புவியின் சராசரி வெப்பநிலையை 1.5 டிகிரி செல்ஷியஸுக்குள் வைத்திருப்பதற்கு 50 சதவீத சாத்தியமே இருக்கிறது; இந்த அதிா்ச்சித் தகவல், கரியமில வாயு வெளியேற்றத்தைத் தடுப்பதில் நாம் முனைப்புடன் செயல்பட வேண்டிய அவசியத்தை உணா்த்துகிறது.
  • பாறை எரிவாயு, கச்சா எண்ணெய் போன்றவற்றை எடுக்க பொதுமக்களும், சூழலியல் ஆா்வலா்களும் போராட்டம் நடத்தியதால் அந்தத் திட்டத்தை ரத்து செய்திருக்கிறது பிரான்ஸ் அரசு என்ற செய்தியை, மாற்றத்தின் தொடக்கமாக எடுத்துக் கொள்ளலாம்.
  • ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உண்டு என்பதை உணா்ந்து கரியமில வாயுவைக் கட்டுப்படுத்துவதற்கான தனிப்பட்ட பயன்பாட்டை முறைப்படுத்துவோம்.

நன்றி: தினமணி (12-11-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்