- ஒரு பெண்ணைப் பொறுத்தவரை கருவுறுதல் அவள் வாழ்க்கையில் மிக மகிழ்வான தருணம். ஆனால், எப்போதுமே அது அப்படியானதாக இருப்பதில்லை. பல பெற்றோர்கள் ஆணோ பெண்ணோ எதுவாயினும் ஒரு குழந்தை மட்டும் போதும் என்கிற மனநிலைக்கு வந்துவிட்டார்கள். மறுபுறம், முதல் குழந்தை பெண் என்றால் சற்றே மனத்தாங்கலுடனும் அதிருப்தியுடனும் ஏற்றுக்கொண்டு, அடுத்து ஓர் ஆண் குழந்தை வேண்டும் என்னும் மனநிலையில் இருப்பவர்களும் உண்டு. ஆண் - பெண் என இரண்டு குழந்தைகளுக்குப் பின்னும் மீண்டும் கருவுறும்போது, அந்தக் கருவைக் கலைக்க விரும்பினாலும், சுற்றியிருக்கும் உறவுகளின் விருப்பத்துக்கும் வற்புறுத்தல்களுக்கும் இணங்கி, ‘இது என் உடல், இந்தக் கருவை ஏற்பதும் மறுப்பதும் என் உரிமை’ என்று துணிந்து நிற்கும் மனவலிமை இல்லாதவர்கள் மற்றொரு வகை.
- உண்மையிலேயே பாவப்பட்டவர்கள் இவ்வகையினர்தான். மூன்றாவது குழந்தை என்பது இக்காலகட்டத்தில் பெரும்பாலானவர்களுக்குப் பெரும் சுமைதான். இதில் பாவம், புண்ணியம் என்பதற்கெல்லாம் இடம் ஏதுமில்லை. உளவியல்ரீதியிலான சிக்கல்களோடு உடல்ரீதியான தொந்தரவுகளைப் பெண்களிடம் ஏற்படுத்துவதற்கும் இதில் வாய்ப்பிருக்கிறது. அடிக்கடி கருக்கலைப்பு செய்துகொள்வதும் பெரும் ஆபத்தையே விளைவிக்கும்.
ஏழாம் மாத சூட்சுமம்
- மிகச் சமீபத்தில், கருவுற்று ஏழாவது மாதத்தில் ஒரு பெண் கருக்கலைப்பு செய்வதற்காக மாத்திரைகளை உட்கொண்டதால், விபரீதமாகி கருவுடன் அந்தத் தாயும் சேர்ந்தே மரணமடைந்த செய்திகள் வெளியாயின. இரண்டு குழந்தைகளுக்குப் பின் உருவான வேண்டாத கரு அது. வேண்டாம் என முடிவெடுத்த பின், விரைந்து செயல்படாமல் ஏன் ஏழு மாதங்கள் வரை அவர் காத்திருந்திருக்க வேண்டும்? ஏழாம் மாதக் கருக்கலைப்பும் அதைத் தொடரும் பெண்களின் மரணமும் நாடெங்கும் பரவலாக உள்ள செய்தி.அதற்கும் காரணம் இருக்கிறது. ஏழாவது மாதத்தில் தான்குழந்தையின் பாலினம் தெரியவரும். அவ்வாறு செய்யப்படுவது கருக்கலைப்பு அல்ல; கருக்கொலை. குழந்தையின் பாலினத்தைத் தெரியப்படுத்தக் கூடாது என்றும் சட்டம் இருக்கிறது.
- இப்பெண்ணின் மரணத்தைத் தொடர்ந்து, மருத்துவரின் பரிந்துரையின்றிக் கருக்கலைப்புக்கான மருந்துகளை விற்றதாகத் தமிழ்நாடு முழுமையும் நூற்றுக்கணக்கான விற்பனையகங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, தற்காலிகமாக 117, நிரந்தரமாக 6 மருந்துக் கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மருத்துவரின் ஒப்புகைச் சீட்டு இல்லாமல் மருந்து விற்பனை செய்யக் கூடாது; கருக்கலைப்பு மருந்தைப் பொறுத்தவரை மகப்பேறு மருத்துவரின் ஒப்புகைச்சீட்டு மிக மிக அவசியம்; அதன் பிரதியையும் குறிப்பிட்ட சில காலத்துக்குப் பாதுகாத்து வைக்க வேண்டும் எனச் சட்டங்கள், நியதிகள் வகுக்கப்பட்டுள்ளன. வழக்கம்போல சட்டமீறல்களும் மலிந்தே இருக்கின்றன.
கண்ணியமாக வாழும் உரிமை
- மருத்துவக் கருக்கலைப்புத் திருத்தச் சட்டம் 2021, திருமணமான பெண்கள் மட்டுமல்ல, மணமாகாத, தனித்து வாழும் பெண்களும்கூட தங்களுக்கு விருப்பமில்லாத கருவைக் கலைத்துக்கொள்வதையும், குழந்தை பெற்றுக்கொள்வதையும் அனுமதிக்கிறது. பெண்களின் இனப்பெருக்க உரிமை, கண்ணியம், அந்தரங்கம் என அனைத்துமே இந்திய அரசமைப்புச் சட்டக்கூறு 21இன்படி, பாகுபாடுகள் ஏதுமற்று கண்ணியமாக வாழும் உரிமையில் அடங்கும் என உச்ச நீதிமன்றமும் கருத்துத் தெரிவித்துள்ளது. இத்தகைய சட்டப் பாதுகாப்புகளும் நீதிமன்றத் தீர்ப்புகளும் மருத்துவ வசதிகளும் பெண்களுக்கு ஆதரவான நிலையில் இருக்கும்போது, ஏன் அவர்கள் இவ்வாறு தவறான முடிவை எடுக்கிறார்கள்? தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகள் ஏராளமாக உள்ளன.
- இங்கெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு கருக்கலைப்பு செய்துகொள்ளும் வாய்ப்புகளும் மகப்பேறு மருத்துவர்களும் இருக்கும்போது, ஏன் பெண்கள் தவறான முடிவெடுக்கிறார்கள்? திருமணத்தை மறுத்துத் தனித்து வாழும் பெண்கள், திருமணமின்றி ‘லிவிங் டுகெதர்’ முறையில் இணைந்து வாழும் பெண்கள் எனப் பலதரப்பட்ட பெண்களும் நம்மிடையே உண்டு. திருமணமாகாத பெண்கள் கருவுறுவது நம் சமூகத்தின் பார்வையில் மிகப்பெரும் குற்றமாகவே பார்க்கப்படுகிறது. ஒரு பெண் எங்கு செல்கிறாள்? எதற்குச் செல்கிறாள்? எப்போது வீடு திரும்புகிறாள் என்பவையெல்லாம் சம்பந்தப்பட்ட பெண்ணின் குடும்பத்தாரைவிட மற்றவர்களாலேயே அதிகம் கவனிக்கப்படுகிறது; கண்காணிக்கப்படுகிறது.
- சட்டபூர்வமற்ற, பாதுகாப்பற்ற, உயிருக்கு ஆபத்தான கருக்கலைப்புகளின் பின்னணியில், இத்தகைய கலாச்சாரக் காவலர்களின் பங்கும் பிரதானமாக இருக்கிறது என்பது கசப்பான உண்மை. இப்போதும் எப்போதும் ஒழுக்க நியதிகள் பெண்ணுக்கு மட்டுமேயானவை. ஆண் இல்லாமல் பெண் கருவுறுவதில்லை; ஆனால், அதற்காக ஆண் ஒருபோதும் தண்டிக்கப்படுவதில்லை. எல்லாச் சுமைகளும் பெண்களுக்கே... இங்கு பெண்கள் தவறான முடிவெடுக்கத் தூண்டப்படுகிறார்கள் என்பதே உண்மை.
கண்காணிக்கப்பட வேண்டியவை எவை
- இப்படியான அவலங்களின் பின்னணியில் சில மருந்துக் கடைகளும் இருப்பதாகக்கூடப் பேசப்படுகிறது. மருத்துவரின் ஒப்புதலின்றிச் சட்டவிரோதமாக மருந்துகளை விற்பது மட்டுமல்லாமல், மகப்பேறு மருத்துவர்களின் உதவியின்றி சில செவிலிகள் உதவியுடன் சட்டத்துக்குப் புறம்பான கருக்கலைப்புகளுக்கு உதவிசெய்வதாகவும் தெரிகிறது. மகப்பேறு மருத்துவரின் உதவியின்றி, நன்கு பயிற்சி பெற்ற செவிலியே ஆனாலும் கருக்கலைப்பில் ஈடுபட முடியாது; ஈடுபடவும் கூடாது. அது தண்டனைக்குரிய குற்றம். நகர்ப்புறங்களில் இந்த அவலம் என்றால், கிராமப்புறங்களின் நிலையோ வேறுவிதமானது.
- முறையான கல்வியோ பயிற்சியோ பெறாத மருத்துவச்சிகள், கிராமப்புறப் பெண்களின் உதவியுடனோ அல்லது கைமருந்துகளின் வசமோ பெண்கள் தங்கள் விலை மதிப்பற்ற உயிரை ஒப்படைக்கிறார்கள். 24 வாரங்களுக்கு உட்பட்ட கருவை ஒரு பெண் மகப்பேறு மருத்துவரின் உதவியுடன் கருக்கலைப்பு செய்துகொள்ளலாம். சில வேளைகளில் பெண்ணின் உடல்நலன் பொருட்டு இரண்டு மருத்துவர்களின் ஆலோசனையும் உதவியும் தேவைப்படலாம். கருக்கலைப்பு செய்துகொள்வதும் கருவைச் சுமப்பதும் முற்றிலும் அந்தக் கருவைச் சுமக்கும் பெண்ணின் விருப்புரிமை. ஆனால், அந்தப் பெண்ணைச் சுற்றியுள்ள சமூகம் இதனை ஏற்க மறுக்கிறது. அதனால் ஆபத்தான கருக்கலைப்புகள் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில், சுகாதாரத் துறை விழிப்புடன் செயல்பட்டு இவற்றை நிறுத்த வேண்டும். கருவுற்ற பெண்களின் உயிரும் கண்ணியமும் பாதுகாக்கப்பட வேண்டும்!
நன்றி: இந்து தமிழ் திசை (27 – 11 – 2023)