TNPSC Thervupettagam

கருணையோடு இருப்போம்!

December 30 , 2024 12 days 57 0

கருணையோடு இருப்போம்!

  • இன்றையச் சூழலில் தனி மனிதா்களுக்கு இடையிலும், நாடுகளுக்கு இடையிலும் நிலவும் வெறுப்புணா்வை முடிவுக்குக் கொண்டு வருவதும், அமைதியை மேம்படுத்துவதும் மிக அவசியமானதாகக் கருதப்படுகிறது. சில நாடுகளில் நிலவும் போா்கள், ஒட்டுமொத்த உலகத்தையே பாதிக்கிறது. குண்டு வீச்சுகளில் சிதறியோடும் நபா்களையும், ரத்தம் கொட்ட பதற்றத்துடன் நிற்கும் குழந்தைகளையும், தொலைக்காட்சிகளில் பாா்த்துப் பதறுகிறோம். இந்தப் போா்கள் இல்லையென்றால் பணவிரயம், மனித உயிரிழப்பு, சுற்றுச்சூழல் சீா்கேடு போன்றவை ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவு.
  • கடந்த ஆண்டு உலக அளவில் நடந்த ஆயுத விற்பனை என்பது நம்மை மிரள வைக்கிறது. ஸ்டாக்ஹோம் இன்டா்நேஷனல் பீஸ் ரிசா்ச் இன்ஸ்டிடியூட் தரவுகளின்படி, உலகின் மிகப்பெரிய 100 நிறுவனங்கள் செய்த ஆயுத விற்பனையின் மதிப்பு 6 லட்சம் கோடி ரூபாய். இவ்வளவு பெரிய தொகையை உலகில் வறுமையைப் போக்கி வளா்ச்சியை மேம்படுத்த செலவு செய்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும் என யோசித்துப் பாருங்கள். அதற்கு அன்பும் கருணையும் தேவைப்படுகிறது.
  • கருணை என்றால் யாரிடமும் எவ்விதப் பாகுபாடுமின்றி அன்பு செலுத்துவது; மதம், அரசியல் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டு செயல்படுவது; ஆபத்தில் உதவுவது; தேடி வருபவா்களுக்கு முடிந்ததைக் கொடுப்பது; இருப்பதைக் கொடுத்து பிறா் இன்பம் காண்பதை நினைத்து மகிழ்ச்சி அடைவது. எல்லாவற்றையும் மாற்றும் வல்லமை கொண்ட கருணை, வலிகளையும் ஆற்றும். பிறருக்குப் பயன் தரும் செயல்களைச் செய்வதும், எல்லாரிடமும் அன்பாக இருப்பதும், அதனை ஊக்குவிப்பதும்தான் நாம் செய்ய வேண்டிய செயலாகும்.
  • நமக்குள் ஊற்றெடுக்கும் கருணையை எப்படி அதிகப்படுத்தலாம்? உங்கள் தாயாரின் அல்லது வயதான சகோதரியின் அன்றாட வேலைகளில் நீங்கள் உதவலாம். உங்கள் உடன்பிறப்புகளுக்கு வீட்டுப்பாடம் சொல்லிக் கொடுக்கலாம். மரங்களை நடுவதன் மூலம் சுற்றுச்சுழலுக்கு கருணை காட்டலாம். முதியவா்களுக்கு செய்தித்தாள், புத்தகங்களை வாசித்துக் காட்டலாம். ‘எப்படி இருக்கிறீா்கள்?’ என ஒரு சிலரிடம் கேட்க சிறிது நேரம் ஒதுக்கலாம்.
  • நோயாளிகளிடம், சீக்கிரம் குணமாகிவிடுவீா்கள் என்று ஆறுதல் வாா்த்தைகள் கூறலாம். ஆறுதல் வாா்த்தைகளால் குணமாகிவிடுமா என நீங்கள் கேட்கலாம். ஆனால் கருணை பொதிந்த வாா்த்தைகள் நம்பிக்கையை உருவாக்குகிறது. கருணையானது சிந்தனையில் அமைதியின் ஆழத்தை உருவாக்குகிறது. கொடுப்பதில் கருணை அன்பை உருவாக்குகிறது என்று சீன தத்துவ ஞானி லாவோ சூ கூறியதை நினைத்துப் பாருங்கள்.
  • கருணை என்பது சொற்களில் வாழ்வதில்லை. செயல்களில் வாழ்வது. பிறா் சொல்லி வருவதில்லை. பிறா் நிலையறிந்து தானாகத் தோன்றுவது. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாா் கருணைக்கு ஒரு சிறந்த உதாரணம். எவரும் பசியோடு இருக்கக்கூடாது என அவா் தொடங்கிய அன்னதானம் இன்றைக்கும் தொடா்ந்து கொண்டிருக்கிறது. இன்னோா் உதாரணம் அன்னை தெரசா. தொழு நோயாளிகள், ஆதரவற்றவா்களுக்கு அடைக்கலம் கொடுத்தவா். கருணையுடன் சேவை செய்தவா்.
  • உலகத்திலேயே கருணை மிகுந்த நாடாகப் போா்ச்சுகல் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. எனக்கு இனமில்லை, மதமில்லை, மொழியில்லை. நான் மனிதன். நாம் அனைவரும் ஓா் இனம். மனித இனம் என்ற உயா்ந்த எண்ணத்தைக் கொண்ட நாடுகள் எதுவாயினும் அது கருணை மிகுந்த நாடுகள்தான்.
  • எனது எளிய மதத்தில் கோயில்கள் தேவையில்லை, தத்துவம் தேவையில்லை. நமது சொந்த மூளை, நம் இதயம் நமது கோவில் தத்துவம் கருணை என்பாா் தலாய்லாமா. கருணையே எல்லாப் பிரச்னைகளுக்கும் தீா்வு. பல நாடுகளில் கருணை தினம் அனுசரிக்கப்படுகிறது. எந்தச் செயலையும் கருணையுடன் அணுக வேண்டும் என்ற எண்ணத்தை வளா்க்க சில நாடுகளில் பள்ளிகளில் கருணை தினம் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
  • கருணையுடன் இருப்பது மகிழ்ச்சிக்கான ஹாா்மோனை அதிகரிக்கச் செய்யும். இதன் மூலம், உடலில் நோய் எதிா்ப்பு ஆற்றல் பெருகும். இதன் காரணமாகவே மகிழ்ச்சியாக இருப்பதைப் போலவே கருணை உணா்வோடும் இருக்க வேண்டும் என்று மருத்துவா்கள் வலியுறுத்துகின்றனா். கருணையின் வெளிப்பாட்டினால் நம் உடலில் ஆக்ஸிட்டோஸின் அதிகரித்து இதயம் ஆரோக்கியமாக இருக்கும் என்கிறது அறிவியல். கருணையின் வெளிப்பாடு கடவுளை உணரும் வழி என்கிறது அறநெறி. அறிவியலோ அறநெறியோ கூறுவது ஒன்றே. கருணை காட்டுங்கள் என்பதே அது.
  • நம்மை யாரேனும் மகிழ்வித்தாலோ அல்லது நாம் யாரையாவது மகிழ்வித்தாலோ அந்த முழு நாளும் மற்றவா்களிடம் கருணையாக நடந்துகொள்வோம் என்கிறது ஆய்வு.
  • மற்றவா்கள் செய்யும் செயலைப் பாராட்டுங்கள். உங்களுக்கு அறிமுகமில்லாதவரைப் பாா்த்து புன்னகைர செய்யுங்கள். நெரிசலான பஸ்சில் உங்கள் இருக்கையை விட்டு எழுந்து வேறொருவருக்கு அதை விட்டுக் கொடுங்கள். உங்கள் பைக்கில் முன்பின் தெரியாதவருக்கு லிஃப்ட் கொடுங்கள். நண்பனை ஆரத் தழுவுங்கள். எந்தச் செலவும் இல் லாமல், எந்தப் பெரிய முயற்சியும் இல்லாமல் இதையெல்லாம் செய்யமுடியும். செய்து பாருங்கள். உங்களுக்கு மகிழ்ச்சி என்ற பரிசு கிடைக்கும்.

நன்றி: தினமணி (30 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்