TNPSC Thervupettagam

கருத்தடையும் பெண் விடுதலையும்

March 6 , 2025 5 hrs 0 min 8 0

கருத்தடையும் பெண் விடுதலையும்

  • மறுஉற்பத்திக்கு ஏற்ப உற்பத்தி இல்லாதது; பஞ்சம், வறுமை, தொடர்ந்து பத்துப் பதினைந்து குழந்தைகளைப் பெற்றதால் இளம் வயதிலேயே கிழப்பருவம் அடைந்தது; தாய், சேய் உடல்நலம் குன்றுதல், மரித்தல்; குடும்பச் சொத்தைப் பாதுகாத்தல் போன்றவற்றால் பல பத்தாண்டுகளுக்கு முன்னர் பெண்களின் நிலை படுமோசமாக இருந்தது.
  • மறுஉற்​பத்​திக்கான தொழிற்சாலை ஆக்கப்பட்ட பெண்ணுடல் கருவுறு​தலைக் கட்டுப்​படுத்தும் பெண் விடுதலை அரசியலை 1920களில் சுயமரியாதை இயக்கம் முதலில் முன்னெடுத்தது. “உண்மையான பெண்கள் விடுதலைக்குப் பிள்ளைபெறும் தொல்லை அடியோடு ஒழிந்துபோக வேண்டும்” எனப் பெரியார் 1928இல் ‘குடிஅரசு’ இதழில் தலையங்கம் தீட்டி​னார்.
  • ‘பார்ப்​பனரல்லாத மக்களில் ஏழைகள் படுந்துயரத்தை அறிந்த நாம் பிரஜா உற்பத்தித் தடைக்கு வேண்டிய வழிகளை நூல்கள் மூலமாக​வும், சொற்பொழி​வுகள் மூலமாகவும் மக்களுக்கு எடுத்​துக்​காட்டி அதனுடைய நன்மை​களைப் புகட்ட வேண்டும்’ என்று 1929 மே 25 அன்று நடைபெற்ற பட்டுக்​கோட்டை சுயமரியாதை மாநாட்டில் எஸ்.குருசாமி வலியுறுத்​தி​னார். ‘பெண்கள் விடுதலை​யடையவும் சுயேச்சை பெறவும் கர்ப்​பத்தடை அவசியம்’ என்று 1930இல் ‘குடிஅர’சில் தலையங்கம் எழுதிய பெரியார், இது ‘ஆண்களையும் விடுவிக்​கும்’ என்றெழு​தி​னார்.
  • இக்காலத்தில் கர்ப்பத் தடையைச் செயல்​படுத்தக் கோரி சென்னை மாகாணப் பேரவையில் அறிமுகம் செய்யப்பட்ட மசோதாவைச் சுகாதார அமைச்சர் நிராகரித்​தார். இதனால், ‘தென்னிந்​தியத் தீண்டப்படாத கிறிஸ்துவ மகாஜன சபை’ திருச்சி​ராப்​பள்​ளியில் 1933 நவம்பர் 5 அன்று எஸ்.ராஜ​மாணிக்கம் தலைமையில் நடத்திய பொதுக்​கூட்​டத்​தில், “கர்ப்​பத்தடை தாழ்த்​தப்பட்ட சமூகத்தில் உள்ள ஏழை மக்களுக்கு அவசியம் வேண்டும்” என்று எ.தைரியம், எ.தனசாமி, எம்.செபஸ்​தி​யான், உ.அற்​புதசாமி முதலியோர் பேசினர்.
  • மேலும், “தீண்​டப்​ப​டா​தார், தாழ்த்​தப்​பட்டோர் எனப்படுகிற ஏழைகள் அதிக மக்களைப் பெற்று, அம்மக்களை ஆதரிப்​ப​தற்குத் தகுதியான வழியில்​லாமல் கஷ்டப்​படு​வ​தால், கர்ப்​பத்தடை அவசியத்​திலும் அவசியம். ஆதலால், அரசாங்​கமும் ஏழை மேல் அனுதாப​முள்ள சட்டசபை அங்கத்​தவர்​களும், தாழ்த்​தப்பட்ட ஏழை மக்கள் மேல் கிருபை கூர்ந்து, கல்யாணஞ் செய்யாமலும், குடும்பத்தின் கஷ்டத்தை அறியாதவர்​களுமான ஒருசில சுயநலக்​காரச் சிறுபான்​மையோரின் எதிர்ப்பைக் கவனியாமல், கிறிஸ்துவ மதத்தில் 100க்கு 75 அதிகப்​படி​யா​யுள்ள பெரும்​பான்​மையான ஏழைகளின் வேண்டு​கோளைக் கவனித்து அவசியம் கர்ப்​பத்தடை மசோதா நிறைவேறி, சட்டமாக வேணுமென்று இக்கூட்டம் தாழ்மையாய் அரசாங்​கத்தைக் கேட்டுக்​கொள்​ளுகிறது” எனத் தீர்மானம் நிறைவேற்றினர்.
  • அலகாபாத்தில் 1932 அக்டோபரில் நடைபெற்ற குவாலியர் மாதர் மகாநாட்​டில், ‘கர்ப்​பத்தடை போதனா நிலையங்கள் ஏற்படுத்த வேண்டும்’ என்று தீர்மானம் நிறைவேற்றினர். இது கர்ப்பத் தடை அரசியல் இந்தியா முழுமைக்கும் பரவியதைக் காட்டு​கிறது.

கற்பித்​தலும் கருவி​களும்:

  • இக்காலத்​தில், குடும்பத்​தினர் படிக்கும் ‘மண வாழ்க்கையின் மர்மங்​கள்’, ‘இன்ப வாழ்க்கையின் இரகசி​யங்​கள்’, ‘இல்லற இன்பவிஜ​யம்’, ‘கர்ப்ப சாஸ்திரம்’ போன்ற நூல்கள் வெளியாயின. ‘கண்ணை மூடிக்​கொண்டு விழுந்து பின் துக்கிக்க வேண்டாம். முன்ன​தாகவே கலியாண வாழ்வின் இரகசி​யத்தையும் விஷயத்தையும் கற்றுக்​கொண்டு சுகமாய் வாழ ‘மண வாழ்க்கையின் மர்மங்கள் நூலை வாசிக்​க​வும்’ என்று விளம்பரம் செய்யப்​பட்டது.
  • கர்ப்​பாட்சி அல்லது சுவாதீன கர்ப்பம்’ நூல் “கர்ப்பம் எப்படி உண்டாகின்றது? அதிகப் பிள்ளை​களைப் பெறுவ​தினால் உண்டாகும் கஷ்ட நஷ்டங்​களென்ன? ஸ்தீரி புருஷர்கள் தங்களுடைய இன்ப சுகத்​திற்கு இடையூறில்​லாமல் போதுமான பிள்ளை​களைப் பெறுவதெப்படி? பிள்ளை வேண்டாம் என்று எண்ணுகிற காலம்​வரையில் கர்ப்பம் வராமலே தடுத்து வைத்துக் கொள்ளுவதெப்படி? மறுபடியும் வேண்டும் போது கர்ப்பம் அடைவதெப்​படி?” என்பது போன்ற​வற்றை எளிதில் வாசித்தறியத் தெளிவான தமிழிலும், ஆண் பெண் மர்ம அவயவச் சித்திரங்​களும், கர்ப்​பாட்சிக் கருவி​களின் சித்திரங்​களும் அவற்றின் உபயோகங்​களையும் விவரித்து ஒரு ரூபாய் விலையில் விற்கப்​பட்டது.
  • இந்நூல்​களின் விளம்​பரங்​களில் கணவன் - மனைவி இருவரும் தலா இரு குழந்தை​களைத் தோளில் சுமந்து​கொண்டு அவர்களைச் சுற்றிச் சில குழந்தைகள் நிற்கும் படத்தை வரைந்து, ‘கர்ப்​பாட்சி இல்லாததனால் வந்த விபத்து’ என்கிற எச்சரிக்கை​யுடன், இந்நூல்கள் குடும்பத்தில் இருக்க வேண்டியவை என வலியுறுத்​தப்​பட்டது.
  • கருத்​தரித்​தலைத் தடுக்கும் கருவி​களில், கர்ப்பத் தடைக்கு இன்றியமையாதது என்று மருத்​துவர் மேரிடோப்ஸ் முதலானவர்கள் பரிந்துரைத்த மெல்லிய ரப்பர் பெஸாரியைப் பெண்கள் உபயோகிக்​கலாம் எனவும், உபயோகிக்கும் முறையையும் விளக்கி ‘சில்க்​ரெட்’, ‘சில்க்​டேப்’ முதலிய வகைகளில் ரூபாய் 2-8-0 விலையிலும், ஆண்களுக்கான ‘இரகசிய சுகானந்தன்’ என்ற ரப்பர் குழாய்கள், “சம்போகக் காலங்​களில் பெண்களிட​மிருந்து நோய்களை வாங்கிக் கொள்ளாமல் தடுக்​கும்.
  • இதனால் கெடுதல் இல்லை” எனக் கூறி ரூபாய் 1-0-0 விலையிலும் புத்தகக் கடைகளில் விற்கப்​பட்டன. இவற்றை உபயோகிக்​காமல் கர்ப்​பமடைந்​தால், ஜெர்மனியில் தயாரிக்​கப்​பட்டு, மருத்​துவர்​களால் பரிந்துரைக்​கப்பட்ட ‘கருவைத் தடுக்கும் ஒளஷதம்’ உபயோகிக்கும் முறையுடன் ரூபா 2-0-0 விலையில் விற்கப்​பட்டது.

எதிர்ப்பின் அரசியல்:

  • மேற்கத்​தியக் கருவி​களையும் மருந்துகளையும் சிலர் எதிர்த்​தனர். ஒரு மருத்​துவத் தமிழ் இதழில் ‘வம்ச விருத்தி அடக்கு​முறை’ என்ற கட்டுரை வெளியானது. இது, “தடை மருந்துகள் இயற்கைக்கு விரோத​மானவை; மனிதர்​களால் கண்டு​பிடிக்​கப்பட்ட இம்மருந்துகள் வியாபாரம் சம்பந்தப்​பட்​டுள்ளதால் பணக்காரர்கள் பணத்தைக் குவிக்​க​வும், ஏழைகள் மேலும் ஏழையாகவும் நேரிடுமேயொழிய, வேறொரு பலனுமில்லை” எனக் கூறியது.
  • மேலும், “காமத்தைத் தூண்டும் வெங்காயம், பூண்டு, முருங்கை, இறைச்சி, சாராயம் போன்ற சைவ, அசைவ உணவுகளைத் தவிர்க்க வேண்டும்” என்றும் கூறியது. “இவை பாரம்பரிய முறைகள் என்பதால், தற்காலத்திய நாகரிக வழிமுறை​களுடன் இவை பொருந்​தாது. ஆகவே, ஆடவர்கள் இச்சையை அடக்குதல் வழி வம்சா விருத்​தியைத் தள்ளிப்போட வேண்டும்” என அறிவுறுத்​தியது.
  • “இம்மருந்துகளால் முதலில் செய்யப்​படும் குற்றம் விபசா​ர​மாகும். பால்ய விதவைகள் இக்குற்​றத்​திற்கு உள்ளா​வார்கள். அவர்கள் மறுவி​வாகம் செய்யக் கூடாது என்பதால், காம இச்சையை வெறுத்துத் தொண்டு செய்தும், வைதீகச் சடங்குகள் வழியிலும் காலத்தைக் கழித்​தனர். தடை மருந்துகளால் கர்ப்பம் தரிக்​காதென்கிற நம்பிக்கை விதவை​களின் சமூகப் பயத்தை ஒழித்து, அவர்களைத் துன்மார்க்க வழிகளுக்குத் தூண்டு​கின்றன. கர்ப்பம் தரிப்போம் என்ற அச்சம், ‘ஜாதிக் கட்டுப்​பாடு’ முதலிய ‘சன்மார்க்க’ வழிகளுக்கு உதவின. இவற்றைக் கருத்​தடைக் கருவி​களும் மருந்துகளும் ஒழித்து​விடும்” என அக்கட்டுரை அஞ்சியது.

கருவி​களின் இருமுகங்கள்:

  • சூரியன், நட்சத்​திரங்கள், காற்று, மழை, ஆண்களின் பார்வை போன்ற​வற்றால் பெண்கள் கருத்​தரிப்பதாக உலகெங்கும் உள்ள நம்பிக்கையை 1937இல் ‘கர்ப்பம்’ கட்டுரையில் வினோதினி விவரித்த நிலைக்கு மாறாக, 1920களிலேயே கருத்​தரித்​தலின் அறிவியலை அறிந்​த​தால், அது 1930களில் பெண் விடுதலைக்கான அரசிய​லாகவும் மக்கள்​தொகையைக் குறைக்​கவும் பயன்பட்டது. சுதந்திர இந்தியா​விலும் மக்கள்​தொகையைக் குறைக்க 1952இல் தேசியக் குடும்பக் கட்டுப்பாடு திட்ட​மும், 1970களில் கட்டாயக் கருத்​தடைத் திட்டமும் அரசாங்​கத்தின் செயல்​பாடாக மாறின.
  • சமகாலத்​திலும் அரசு மருத்​துவ​மனை​களில் குழந்​தைபெறும் பெண்களில் பெரும்​பாலானோர் சுயவிருப்​பத்தால் கருத்​தடைக் கருவியைப் பொருத்திக்கொள்​கின்​றனர்; அறுவைசிகிச்​சையும் செய்துகொள்கின்​றனர். ஆனால், இது ஆண்களுக்கு எளிமை​யாகவும் அரசின் கொள்கை​யாகவும் இருந்த​போ​தி​லும்கூட மறுஉற்​பத்​தியைக் கட்டுப்​படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் ஆண்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்து​கொள்​வ​தில்லை.
  • ஆண்களுக்காக 1920களில் அறிமுக​மாக்​கப்​பட்டு 1990களில் பரவலாக்​கப்பட்ட கர்ப்​பத்​தடைக் கருவிகள், “பாலியல் நோய்களைப் பெண்களிட​மிருந்து வாங்கிக்​கொள்​ளாமல்” பாலியல் உறவை அனுபவிக்கும் சுதந்​திரத்தைக் கொடுக்​கின்றன. அறிவியலால் உருவான ஒரே வகைக் கருவிகள் ஆண்களின் சுதந்​திரத்​துக்கும் பெண்​களைக் கட்டுப்​படுத்தும் ஆ​யுத​மாகவும் பயன்​படுத்தும் அரசியலே ஆணா​தி​க்​கம்.

நன்றி: இந்து தமிழ் திசை (06 – 03 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்