TNPSC Thervupettagam

கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் தீர்ப்பு

September 25 , 2024 111 days 170 0

கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் தீர்ப்பு

  • தகவல் தொழில்நுட்பச் சட்ட விதிகளில் கடந்த ஆண்டு மத்திய அரசு மேற்கொண்ட திருத்தத்தை மும்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்தத் தீர்ப்பின் மூலம் போலிச் செய்திகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள், குடிமக்களின் கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட ஜனநாயக உரிமைகளைப் பறித்துவிடக் கூடாது என்பதை நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
  • மத்திய மின்னணு - தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், ‘தகவல் தொழில்நுட்ப (இடைநிலை வழிகாட்டுதல்கள் - டிஜிட்டல் ஊடக நெறிமுறைகள் சட்டம்) திருத்த விதி’களைக் கடந்த ஆண்டு வெளியிட்டது. இது தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021இல் திருத்தம் மேற்கொண்டது. இதன்படி டிஜிட்டல் - சமூக ஊடகங்களில் வெளியாகும் மத்திய அரசு தொடர்பான உள்ளடக்கங்களின் உண்மைத்தன்மையைப் பரிசோதிப்பதற்கான குழு ஒன்று மத்திய அரசால் நியமிக்கப்பட்டது; மத்திய அரசு தொடர்பான பொய், போலி, தவறான கருத்தை உருவாக்கக்கூடிய உள்ளடக்கங்களை நீக்கச் சொல்லி டிஜிட்டல்-சமூக ஊடக சேவை வழங்கும் இடைநிலை நிறுவனங்களுக்கு (intermediaries) இந்தக் குழு பரிந்துரைக்கும்; பரிந்துரையைச் செயல்படுத்தத் தவறினால் சம்பந்தப்பட்ட உள்ளடக்கங்களால் பாதிக்கப்பட்டவர்கள் அவை பதிவேற்றப்பட்ட இடைநிலை நிறுவனங்களின் மீது வழக்குத் தொடர முடியும்.
  • பயனர்களால் பதிவேற்றப்படும் உள்ளடக்கங்களுக்கு எதிராக இடைநிலை நிறுவனங்கள் மீது வழக்குத் தொடர முடியாது என்னும் பாதுகாப்பு அம்சம் இருந்தது. மத்திய அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தம் அந்தப் பாதுகாப்பைக் கேள்விக்குரியதாக மாற்றியிருந்தது. தற்போது மத்திய அரசின் சட்டத் திருத்தத்தை மும்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளதன் மூலம், இடைநிலை நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • இந்தத் திருத்தம் அறிவிக்கப்பட்டபோதே இது கருத்துச் சுதந்திரத்தையும், தகவல்களைத் தெரிந்துகொள்ளும் உரிமைகளையும் பறிக்கும் என்று விமர்சனங்கள் எழுந்தன. இந்தத் திருத்தத்தை எதிர்த்து நகைச்சுவை நிகழ்த்துக் கலைஞர் குணால் காம்ராவும், எடிட்டர்ஸ் கில்டு உள்ளிட்ட அமைப்புகளும் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த அமர்வின் இரண்டு நீதிபதிகள் கடந்த ஜனவரி 31 அன்று மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர்.
  • இந்நிலையில், வழக்கு விசாரணை நீதிபதி அதுல் சரத்சந்திர சாந்துர்க்கர் அமர்வுக்கு மாற்றப்பட்டது. அவர் செப்டம்பர் 20 அன்று வழங்கிய தீர்ப்பில் தகவல் தொழில்நுட்பத் திருத்த விதிகள் - 2023 அரசமைப்புச் சட்டக் கூறுகள் 14 (சமத்துவத்துக்கான உரிமை), 19 (கருத்துச் சுதந்திரம்), 19(1) (ஜி) (தொழில் உரிமை) ஆகியவற்றுக்கு எதிரானது என்று கூறியுள்ளார். ‘பொய், போலி, தவறான கருத்தை உருவாக்கக்கூடிய’ என்னும் வரையறை தெளிவற்றதாக இருப்பதால், இந்தத் திருத்தம் தவறானது என்றும் கூறியுள்ளார்.
  • டிஜிட்டல்-சமூக ஊடகங்களில் பதிவேற்றப்படும் போலிச் செய்திகள் சமகாலச் சமூகத்தின் மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளன. இவற்றைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்தான். ஆனால், மத்திய அரசு தொடர்பான உள்ளடக்கங்களின் உண்மைத்தன்மையை மத்திய அரசு நியமிக்கும் குழுவே சரிபார்ப்பது அரசமைப்புச் சட்டத்துக்கு மட்டுமல்லாமல், இயற்கை நீதிக்கும் முரணானது. ஏனென்றால், இது மத்திய அரசு தொடர்பாக எவையெல்லாம் மக்களைச் சென்றடையலாம், எவையெல்லாம் சென்றடையக் கூடாது என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை மத்திய அரசுக்குக் கட்டுப்பட்ட அமைப்பிடமே வழங்குவதாகிறது.
  • மத்திய அரசு தொடர்பானவை மட்டுமல்லாமல், அனைத்து விதமான போலிச் செய்திகளையும் தடுப்பதற்கான நடவடிக்கைகள் காலத்தின் தேவை. ஆனால், அவை அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள உரிமைகளை மீறாத வகையில் திட்டமிடப்பட வேண்டியதன் அவசியத்தை மும்பை உயர் நீதிமன்றத் தீர்ப்பு உணர்த்தியுள்ளது.

நன்றி: இந்து தமிழ் திசை (25 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்