- கருப்பைவாய்ப் புற்றுநோய், பெரும்பாலும் ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (எச்பிவி) தொற்றுடன் தொடர்பு உடையது. இந்தியாவில் பெண் களுக்குப் பெரியளவில் உடல்நலக் குறைவை ஏற்படுத்தும் ஒரு முக்கியப் புற்றுநோயாக இது கருதப்படுகிறது.
- ஆபத்தான எச்பிவி வைரஸ் தொற்றால் ஏற்படும் அசாதாரண உயிரணு வளர்ச்சி யானது, இறுதியில் கருப்பைவாய்ப் புற்றுநோயாக மாற்றமடைவதுதான் இதன் சிக்கல்.
- ‘தி லான்செட் குளோபல் ஹெல்த்’ வெளியிட்ட சமீபத்திய ஆய்வறிக்கையில், இந்தியாவில் கருப்பைவாய்ப் புற்றுநோய் பாதிப்பு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துவருகிறது எனக் கூறுகிறது.
- மேலும் அதிர்ச்சி அளிக்கும் வகையில், உலகளவில் கருப்பை வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்படும் 5 பேரில் ஒருவர் இந்தியர் என்கிற தகவலையும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. இந்த ஆய்வு பெண்களின் உடல்நலன் சார்ந்து நிலவிவரும் ஆபத்தின் தீவிரத்தை எடுத்துக்காட்டுவதுடன், அதற்குத் தேவை யான தீர்விற்கான அவசரத் தேவையைக் கோடிட்டுக் காட்டுகிறது.
- இந்தியாவில் அதிகரித்துவரும் கருப்பைவாய்ப் புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான விழிப்புணர்வு, தடுப்பு நடவடிக்கைகள், சுகாதார அணுகு முறைகள் ஆகியவற்றின் உடனடித் தேவையை இந்த ஆய்வு முடிவுகள் உணர்த்துகின்றன.
தடுப்பு முறை
- பெண்களிடையே கருப்பைவாய்ப் புற்றுநோய் ஏற்படுவதைத் தடுப்பதில் மனித பாப்பிலோமா வைரஸுக்கு (எச்பிவி) எதிரான எச்பிவி தடுப்பூசி முக்கியப் பங்கு வகிக்கிறது.
- தடுப்பூசி போடுவதற்கான சரியான வயது, தடுப்பூசி போடுவதன் முக்கியத் துவம் என்ன என்பதை அறிந்து கொள்வதுடன், தடுப்பூசி போடுவதற்கான வயதைக் கடந்த பிறகும் தடுப்பூசி போட்டுக்கொள்வது சாத்தியமா, அதன் நன்மைகள் என்ன என்பதைப் பற்றியும் நாம் அறிந்துகொள்ள வேண்டும்.
சரியான வயது
- பெண்களுக்குச் சிறுவயதிலேயே எச்பிவி தடுப்பூசி போட வலியுறுத்தப் படுகிறது. அந்த வகையில் பெண்களுக்கு 9 முதல் 14 வயதுவரை தடுப்பூசி வழங்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதாவது பாலுறவு தொடங்குவதற்கு முன்பே ஊசியைப் போட்டுவிட வேண்டும்.
- 6 மாத இடைவெளியில் 2 தவணை தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்வது, அதிக ஆபத்துள்ள எச்பிவி வைரஸ் பாதிப்புகளுக்கு எதிராகக் கிட்டத்தட்ட முழுமை யான பாதுகாப்பை வழங்குகிறது. மேலும் இக்கால அட்டவணையில் அளிக்கப்படும் தடுப்பூசி இப்புற்றுநோய்க்கு எதிராக நோய் எதிர்ப்பு பாதுகாப்பையும் உறுதிசெய்கிறது.
தடுப்பூசி போடத் தவறியவர்களுக்கு
- இளம்பருவத்தில் தடுப்பூசிகளைத் தவறவிட்டவர்களுக்கு ‘கேட்ச்-அப்’ தடுப்பூசிகள் ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகின்றன. 14 வயதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தவறியவர்கள், தங்களது 26 வயதுவரை இத்தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம்.
- அதிக ஆபத் துள்ள பாப்பிலோமா வைரஸ் நோய் கிருமிகளுக்கு எதிரான பாதுகாப்பை இந்தத் தடுப்பூசி மேம்படுத்தும். மேலும் இவ்வைரஸினால் பாதிப்புக்கு உள்ளான பெண்களுக்கும் ‘கேட்ச்-அப்’ முறையில் தடுப்பூசியைச் செலுத்துவதன் மூலம் புற்றுநோய் பாதிப்பிலிருந்து பெண்களைப் பாதுகாக்கலாம்.
சரியான நேரத்தில்
- கருப்பைவாய்ப் புற்றுநோயைத் தடுப்பதில் சரியான நேரத்தில் எச்பிவி தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது மிக முக்கியமானது. எச்பிவி நோய்க்கிருமி தாக்குவதற்கு முன்பாகவே தடுப்பூசியைப் போட்டுக்கொண்டால் உடலில் நோய்த் தடுப்பு விளைவுகள் அதிகரிக்கும்.
- ஆரம்பக் கட்டத்தில் அதிக ஆபத்துள்ள எச்பிவி வைரஸ் பாதிப்புகளுக்கு எதிராக நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப் படுத்துவதன் மூலம், தடுப்பூசி வைரஸ் நிலைபெறுவதற்கு உள்ள வாய்ப்புகள் கணிசமாகக் குறைக்கப்படுகின்றன. அத்துடன் கருப்பை வாய்ப் புற்றுநோயின் அசாதாரண வளர்ச்சியையும் அடுத்தடுத்து குறைக்கிறது. மேலும், தடுப்பூசியை உரிய நேரத்தில் எடுத்துக்கொள்வதன் மூலம் நோயினை ஆரம்பக் கட்டத்திலேயே தடுத்துநிறுத்த முடியும்.
பரிந்துரைக்கப்பட்ட வயதுக்கு மேல்
- கருப்பைவாய்ப் புற்று நோயைத் தடுப்பதில் இந்தத் தடுப்பூசி களின் செயல்திறன் 26 வயதிற்குப் பிறகு செலுத்தப்படும்போது அதன் திறன் குறைகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
- மேலும், ஒரு நபர் ஏற்கெனவே எச்பிவி வைரஸினால் தாக்கப்பட்டிருந்தால், தடுப்பூசி குறைவான பாதுகாப்பை வழங்கக் கூடும். இளம் தலைமுறையினருடன் ஒப்பிடும்போது, ‘கேட்ச்-அப்’ தடுப்பூசிகள் பெரியவர்களுக்கு வெகு அரிதாகப் பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
- இருப்பினும், எச்பிவி தடுப்பூசிக்குக் கூறப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி, 45 வயது வரையிலான பெண்களுக்கு கேட்ச்-அப் வழியில் எச்பிவி தடுப்பூசி போடுவது குறித்து உரிய மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ளலாம்.
- எச்பிவி தடுப்பூசிகளின் தாக்கம் பன்முகத்தன்மை கொண்டது. சரியான வயதில் தடுப்பூசி அளிப்பதன் மூலம் அதன் முழுப் பயனையும் பெற முடியும்.
- இறுதியாக, கருப்பைவாய்ப் புற்று நோயின் அச்சுறுத்தலை முழுமையாகப் புரிந்துகொள்ளவும், அதிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவும், தடுக்கவும் தகுந்த சுகாதார நிபுணர்களுடன் கலந்தாலோசிப்பது பெண்களின் உடல் ஆரோக்கியத்துக்கு நலன் பயக்கும்.
நன்றி: இந்து தமிழ் திசை (09 – 03 – 2024)