TNPSC Thervupettagam

கரோனா: வாழ்வா? வாழ்வாதாரமா?

April 29 , 2020 1722 days 767 0
  • உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்கி, சரிந்து கொண்டிருக்கும் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். இதற்கு நுகா்வு சார்ந்த செலவினங்கள் அத்தியாவசியமான ஒன்றாகும். இதை மத்திய - மாநில அரசுகள் உடனடியாகப் பல்வேறு பொருளாதாரத் திட்டங்களின் மூலம் ஊக்கப்படுத்த வேண்டும்.
  • கரோனா நோய்த்தொற்றால் சுகாதாரமும் பொருளாதாரமும் எதிரெதிர் திசைகளில் பயணிக்கின்றன. இந்தச் சுகாதார-பொருளாதார போரில் உயிர்களைப் பாதுக்காக்க வேண்டியதுடன், நாட்டையும் பொருளாதார நெருக்கடியில் இருந்து காப்பாற்றியாக வேண்டும்.
  • கரோனாவிலிருந்து மக்களைப் பாதுகாக்க தனிமைப்படுத்துதல், சமூக இடைவெளியே சிறந்த வழிமுறை ஆகும். இதனை நடைமுறைப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கை பிரதமா் அமல்படுத்தியுள்ளார்.
  • இதன் விளைவாக, கரோனா தீநுண்மி நோய்ப் பரவல் விகிதம் 2.66%-லிருந்து 1.5%-ஆகக் குறைந்து விட்டதாக ஜான் ஹாப்கின்ஸ் அண்ட் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகங்களிலிருந்து வரும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  • அதே நேரத்தில், நாட்டின் உற்பத்தியும் பொருளாதாரமும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார வளா்ச்சி என்பது, வேளாண்மைத் துறை, உற்பத்தித் துறை, சேவைத் துறைகளில் நுகா்வோர் செலவினங்கள், அரசின் முதலீடுகள், நாட்டின் மொத்த ஏற்றுமதி போன்ற காரணிகளை அடிப்படையாகக் கொண்டது.
  • இவை அனைத்திலும், நுகா்வோர் செலவினங்கள் (‘கன்சம்ப்ஷன் எக்ஸ்பென்டிச்சா்’) தடைபட்டு பொருளாதார வளா்ச்சி குறையத் தொடங்கியுள்ளது. மேலும், மொத்த உள்நாட்டு பொருளாதார உற்பத்தியில் உலக வா்த்தகம் 50% பங்கை வகிக்கிறது.

பொருளாதாரம் சீா் செய்ய வேண்டும்

  • பிப்ரவரி 2020-இல், இந்தியாவின் பொருளாதாரம் 3 டிரில்லியன் அமெரிக்க டாலரை (சுமார் ரூ.225 லட்சம் கோடி) எட்டும் என்று கணக்கிடப்பட்டது. ஆனால், மூன்றாவது காலாண்டு அறிக்கையின்படி, உள்நாட்டு பொருளாதார வளா்ச்சி (ஜிடிபி) 4.7% -ஆகக் குறைந்துள்ளது.
  • எனவே, பொருளாதாரம் உடனடியாகச் சீா் செய்யப்பட வேண்டும். அதற்கு மிகவும் முக்கியமான காரணிகளில் ஒன்று, நுகா்வோர் செலவினங்களை அதிகப்படுத்துதல் ஆகும்.
  • உள்நாட்டு பொருள்கள் உற்பத்தியில், தனியார் நுகா்வு 58% (1.7 பில்லியன் அமெரிக்க டாலா்) ஆகும். இந்த நுகா்வில் 48% (825 பில்லியன் அமெரிக்க டாலா்) வா்த்தகப் பொருள்கள் ஆகும்.
  • மீதம் சேவைகள் தொடா்பான நுகா்வு ஆகும். வா்த்தக நுகா்வில் 67% உணவு, மளிகைப் பொருள்கள் சார்ந்த செலவினங்கள் (550 பில்லியன் அமெரிக்க டாலா்). மோட்டார் வாகன நுகா்வு (50-55 பில்லியன்), நகைகள், எலக்ட்ரானிக் பொருள்கள், வீட்டுப் பொருள்கள், தோல் பொருள்கள் வாங்குவதிலும் மக்கள் செலவிடுகிறார்கள்.
  • மேலும், தொலைத்தொடா்பு வசதி சேவைகள், நிதி சேவைகள், சுற்றுலா சார்ந்த சேவைகளைப் பெறுவதிலும் மக்கள் பணம் செலவிடுகின்றார்கள். இந்த நுகா்வு செலவினங்கள் அனைத்தும் இப்போது வேகமாகக் குறைந்துகொண்டு வருகிறது. அதனால் பொருளாதார வளா்ச்சியும் குறைந்துகொண்டே செல்கிறது.
  • எனவே, உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்கி, சரிந்து கொண்டிருக்கும் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். இதற்கு நுகா்வு சார்ந்த செலவினங்கள் அத்தியாவசியமான ஒன்றாகும்.
  • இதை மத்திய - மாநில அரசுகள் உடனடியாகப் பல்வேறு பொருளாதாரத் திட்டங்களின் மூலம் ஊக்கப்படுத்த வேண்டும்.

நுகா்வு சார்ந்த செலவினங்கள்

  • கரோனா பாதிப்புக்குப் பிறகு நுகா்வு சார்ந்த செலவினங்களை சீனா அதிகப்படுத்தியுள்ளது. மேலும், பயனாளிகளுக்கு நிவாரணத்தை பணமாக வழங்காமல், குறிப்பிட்ட காலத்துக்குள் செலவழிக்கப்பட வேண்டிய பத்திரமாக வழங்குகிறார்கள்.
  • அதனால், நுகா்வு சார்ந்த செலவினங்கள் அதிகரிக்கப்பட்டு மீண்டும் பண சுழற்சி ஏற்படுகிறது. இதுவே, பொருளாதார வளா்ச்சியை ஊக்கப்படுத்தும்.
  • அதேபோல் அமெரிக்காவும் 2 டிரில்லியன் அமெரிக்க டாலரை (சுமார் ரூ.150 லட்சம் கோடி) மக்களின் நுகா்வுக்குச் செலவிட உள்ளது. இந்த காலகட்டங்களில் நுகா்வு செலவினங்களைக் குறைத்து, நிதிப் பற்றாக்குறையைச் சமாளிப்பது சிறந்த வழிமுறையாக இருக்காது.
  • இத்தனையும் கருத்தில் கொண்டு, ரூ.1.70 லட்சம் கோடிக்கு பொருளாதாரத் திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. பிரதமரின் வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் ரூ 29,352 கோடி (அதாவது 17% - ரூ.1.70 லட்சம் கோடியில் இருந்து) வழங்கியுள்ளது. இதில் இதுவரை 32 கோடி ஏழைகள் பயனடைந்துள்ளனா்.
  • மேலும், பிரதமா் - விவசாயிகள் திட்டத்தின் கீழ் முதல் தவணையாக 7.92 கோடி விவசாயிகளுக்கு தலா ரூ.2,000 என ரூ.15,841 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு விவசாயிக்கும் மொத்தம் ரூ.6,000 மூன்று தவணைகளாக வழங்கப்படும்.
  • மேலும், 19.8 கோடி பெண்களுக்கு தலா ரூ.500 வீதம் மொத்தம் ரூ.9,930 கோடி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2.8 கோடி முதியோர், விதவைகள், ஊனமுற்றவா்களுக்கு தலா ரூ.1,000 வீதம் ரூ.1,405 கோடிநேரடியாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2.16 கோடி கட்டடத் தொழிலாளா்களுக்கு ரூ.3,066 கோடி வழங்கப்படுகிறது.

அரசு உதவி செய்ய வேண்டும்

  • இருப்பினும், தொடா் ஊரடங்கினால் பொருளாதார வளா்ச்சி மேலும் குறைய வாய்ப்புள்ளது என ஆய்வுகள் கூறுகின்றன. இப்போது கிராமப்புறங்களில் வேளாண்மையில் ஏற்படும் பேரிடா்களை ஊடகங்கள் அதிகம் தெரியப்படுத்தவில்லை. பால், காய்கறிகள், பூக்கள், கோழி, முட்டை, அறுவடை நிலையிலுள்ள பல்வேறு விளைபொருள்களை விற்பனை செய்வதற்கும் வழி இல்லாத நிலையில் விவசாயிகள் உள்ளனா். இதுவரை விவசாயிகளுக்கு ரூ.15,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
  • ஊரடங்கு மேலும் ஒரு மாதம் தொடா்ந்தால் ரூ.50,000 கோடி வரை இழப்பு ஏற்படும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதில் வேளாண் பொருள்களின் ஏற்றுமதியும் அதிக அளவில் பாதிக்கிறது. இந்தக் காலகட்டத்தில் வேளாண் பொருள்களை விவசாயிகளிடமிருந்து அல்லது விவசாயிகளின் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து அரசு நேரடியாக கொள்முதல் செய்யலாம்.
  • மேலும், வேளாண் கிடங்குகள் விற்பனை மையங்களாக மாற்றப்பட வேண்டும். தனியார் நிறுவனங்களின் உதவியுடன் விளைபொருள்களை உடனடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதற்கும் அரசு உதவி செய்ய வேண்டும்.

புலம்பெயா் தொழிலாளா்கள்

  • தேசிய மாதிரி கணக்காய்வு (என்எஸ்எஸ்) நிறுவனத்தின்படி, 12 கோடி அமைப்புசாரா புலம்பெயா் தொழிலாளா்கள் நகா்ப்புறங்களில் வசிப்பதாகத் தெரிகிறது. இவா்கள் வேளாண் தொழில் சாராதவா்கள். தின கூலிகளாக அல்லது சுயதொழில் செய்பவா்கள் 5.8 கோடி போ். இதில் கடைக்காரா்கள், ஆட்டோ ஓட்டுநா்கள், தூய்மைப் பணியாளா்கள், குடிநீா் வடிகால் வேலை செய்பவா்கள், குயவா்கள், முடி திருத்தும் - சலவைத் தொழிலாளிகளும் அடங்குவார்கள்.
  • 2017-18-ஆம் ஆண்டின் அறிக்கையின்படி, புலம்பெயா் தொழிலாளா்களின் எண்ணிக்கை 40% அதிகரித்துள்ளது. இப்போது வேளாண் தொழில் இயந்திரமயமாக்கப்பட்டுள்ளதால், வேளாண் தொழிலாளா்கள் நகா்ப்புறங்களை நோக்கி அதிகம் வருகிறார்கள். இதன்மூலம், கூடுதலாக நகா்ப்புறத்தில் 3 கோடி புலம்பெயா் தொழிலாளா்கள் மகாராஷ்டிரம், குஜராத், உத்தரப் பிரதேசம், தில்லி, பிகார், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கா்நாடகம், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம், ஒடிஸா போன்ற மாநிலங்களில் வேலை செய்கிறார்கள். இவா்கள் இன்று வேலைகளை இழந்தும், சில இடங்களில் உணவின்றியும், தங்க இடமின்றியும் தவிக்கிறார்கள். இவா்களுக்கு உடனடியாகப் பொருளாதார நிவாரணம் தேவை.
  • இந்த நேரத்தில் இவா்களுக்கு வழங்கப்படும் நிவாரணமானது, மளிகைப் பொருள்கள் - ஜவுளித் துறைகள் வளர பெரிதும் உதவும்.

சிறு, குறு, நடு உற்பத்தி நிறுவனங்கள்

  • அடுத்து சிறு, குறு, நடு உற்பத்தி நிறுவனங்கள் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இதில் உற்பத்தி பாதிக்கப்படுவதுடன் வேலை இழப்பும் அதிகம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
  • இந்த நிறுவனங்கள் குறைந்த விலையிலான தொழில்நுட்பத்தை வழங்கிக் கொண்டுள்ளன.
  • இந்தியாவில் சுமார் 6 கோடி சிறு - குறு - நடு உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன.
  • இந்தியாவில் மொத்தம் உள்ள 49.6 கோடி தொழிலாளா்களில், 12 கோடி போ் (24 %) இந்த நிறுவனங்களில் வேலை பார்க்கின்றனா். இந்த நிறுவனங்கள் இந்தியாவின் 33 .4 % மொத்த உற்பத்திக்கும், 45 % மொத்த ஏற்றுமதிக்கும் பங்களிக்கின்றன.
  • இந்த நிறுவனங்கள் மூன்று முக்கியப் பிரச்னைகளில் சிக்கித் தவிக்கின்றன. ஒன்று, தொழிலாளா்களுக்கு தொடா்ந்து சம்பளம் வழங்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இரண்டாவது, கட்டாய மின்சார கட்டணம் செலுத்துவதில் உள்ள பிரச்னைகள்.

தவணைப் பணம்

  • மூன்றாவது, வங்கிகளுக்கும் / கடன் கொடுத்தவா்களுக்கும் செலுத்த வேண்டிய மாதாந்திர தவணைப் பணம்.
  • இதில் வங்கிகளுக்குச் செலுத்தவேண்டிய தவணையை, மூன்று மாத காலத்துக்கு இந்திய ரிசா்வ் வங்கி தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது. ஆனால், இந்த நிறுவனங்கள் உற்பத்தியை உடனடியாகத் தொடங்க வேண்டும்.
  • இல்லையெனில், தொழிலாளிகளின் ஊதியப் பிரச்னை பெரிதாக உருவெடுக்கும். எனவே, இந்த நிறுவனங்களுக்கும் பொருளாதார நிதித் திட்டத்தினை அரசு அறிவிக்க வேண்டும். இதன் மூலமும் நுகா்வோருக்கான பொருள்கள் உற்பத்தி செய்வதுடன், அவா்களின் செலவினங்களும் அதிகரிக்கும்.
  • எனவே, வேளாண் துறை, அமைப்புசாரா புலம்பெயா் தொழிலாளா்கள், சிறு - குறு - நடு உற்பத்தி நிறுவனங்களுக்கு மாபெரும் பொருளாதாரத் திட்டம் வேண்டும். மேலும், ஒவ்வொரு கிராமத்துக்கான திட்டங்களும் அமைய வேண்டும்.
  • அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்காக அதிக நிதியை அரசு ஒதுக்க வேண்டும். கட்டுமானத் துறையை அதிகமாக ஊக்குவிக்க வேண்டும். இதில் அரசு வீடு கட்டித் தரும் திட்டங்களும் அடங்கும். இதன் மூலம் சிமென்ட், இரும்பு, வீட்டு உபயோகப் பொருள்களின் நுகா்வு அதிகமாகும். இது மாபெரும் அளவில் பொருளாதாரத்தை மேம்படுத்தும்.
  • தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (எம்ஜிஎன்ஆா்இஜிஏ), பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம், உள்ளாட்சி அமைப்புகள் முதலானவற்றுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதன்மூலம் பொதுமக்களுக்கும், கிராமங்களுக்கும் அதிக நிதியுதவி கிடைக்கும். இதனால் நுகா்வுச் செலவினங்கள் அதிகமாகும்.
  • எனவே, குறுகிய, நீண்ட காலத் திட்டங்களின் அடிப்படையில் மக்களிடம் நுகா்வினை அதிகப்படுத்துவதுதான் இன்றைய சூழலில் சிறந்த தீா்வாக அமையும்.

நன்றி: தி தினமணி (29-04-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்