TNPSC Thervupettagam

கரோனா அடுத்த அலை விடுக்கும் எச்சரிக்கைகள்

April 13 , 2021 1381 days 601 0
  • இந்தியாவில் தினசரி ஒரு லட்சம் பேருக்கும் மேல் புதிதாக கரோனா தொற்று ஏற்படுவதும், தினசரி தொற்று விகிதத்தில் உலகிலேயே முதல் இடத்தில் நாம் இருப்பதும் பெரும் கவலை அளிக்கிறது.
  • 2020 ஜனவரி முதலாக 1.34 கோடிப் பேருக்குத் தொற்று ஏற்பட்டிருக்கிறது. இவர்களில் 1.21 கோடிப் பேர் குணமடைந்திருக்கின்றனர்; சுமார் 1.70 லட்சம் பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
  • இதே நிலை தொடர்ந்தால், மே 1 வாக்கில் மேலும் 40 லட்சம் பேருக்குத் தொற்று ஏற்பட்டிருக்கும் என்று வல்லுநர்கள் எச்சரிப்பதை அரசும் மக்களும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
  • தடுப்பூசியின் வரவு பெரிய ஆறுதல் என்றாலும், அது மட்டுமே கரோனாவை எதிர்கொள்ளும் ஒரே ஆயுதம் ஆகிவிடாது என்ற எண்ணம் எல்லோருக்கும் வேண்டும்.
  • தடுப்பூசி போடும் பணி தொடங்கிய 85 நாட்களில் 10 கோடிப் பேருக்கும் மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது ஒரு சாதனை.
  • ஆயினும், நம்முடைய மக்கள்தொகையின் காரணமாக, தொற்று பரவும் வேகத்துக்கு முன் உற்பத்தியாகும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை பற்றாக்குறையில் விழுந்துவிடுகிறது.
  • தடுப்பு மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் இந்தியாவுக்கு முன்னுரிமை கொடுத்து, மருந்துகளை வழங்குவதற்கும் தடுப்பூசி இயக்கத்தின் வேகத்தை மேலும் அதிகரிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • அதோடு சேர்த்து, ‘முழு ஊரடங்கு’ எனும் மோசமான நிலைக்கு நாடு மீண்டும் சென்றுவிடுவதைத் தவிர்க்கும் வகையில் முன்கூட்டிய கட்டுப்பாட்டுச் செயல்திட்டத்தையும் வகுக்க வேண்டும்.
  • கரோனா தடுப்பு என்பது அரசின் கைகளில் மட்டும் இல்லை, சமூகத்தின் கூட்டுப்பொறுப்பு அது என்கிற உணர்வு மக்களிடையே உருவாக வேண்டும்.
  • கரோனா தொற்றிலிருந்து குணமானவர்களுக்கு உடலில் கரோனாவுக்கு எதிரான எதிர்ப்புச் சக்தி சில மாதங்களுக்குத்தான் நீடிக்கும் என்பதைச் சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
  • ஆக, கரோனா தொற்றிலிருந்து குணமானவர்கள் தமக்கு மீண்டும் தொற்று ஏற்படாது என்று அலட்சியமாக இருந்துவிடக் கூடாது. அதேபோல, கரோனா தடுப்பூசியும் ஆயுட்காலப் பலன் அளிக்கக் கூடியது அல்ல.
  • குறிப்பிட்ட ஒரு காலத்துக்கு உடலில் எதிர்ப்புச் சக்தியை அது கூட்டுகிறது; ஒருவேளை தொற்று ஏற்பட்டாலும் பாதிப்பு குறைவாக இருக்கும் என்ற அளவிலேயே அது செயலாற்றுகிறது.
  • ஆக, தடுப்பூசி போட்டுக்கொள்வதாலேயே முற்றிலுமாகத் தொற்றுக்கு விடை கொடுத்துவிட்டதாகவும் கருதிட முடியாது.
  • ஒரு நாட்டில் முதலாமவருக்குப் போடப்பட்ட தடுப்பூசி செயல்பாட்டில் இருக்கும் காலகட்டத்துக்குள்ளேயே கடையானவருக்கும் தடுப்பூசியைப் போட்டு முடித்து, அதற்குள் தொற்றை நாட்டை விட்டே விரட்டிட வேண்டும் என்ற செயல்திட்டத்திலேயே எல்லா நாடுகளும் உழைக்கின்றன.
  • இந்த இலக்கை சுகாதாரத் துறை நிறைவேற்ற தொற்றாளர்களின் எண்ணிக்கை கட்டுப்பாட்டில் இருப்பது அவசியம். அதற்கு ஒரு சமூகமாக நாம் முழு விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும்.
  • கூடுமானவரை விழாக்கள், கூட்டங்கள், அத்தியாவசியமற்ற பயணங்கள் போன்றவற்றைத் தவிர்ப்பதில் தொடங்கி முகக் கவசம் அணிவது, அடிக்கடி கைகளைக் கழுவுவது, தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவது எனும் ஒழுங்குகளைக் கடைப்பிடிப்பது வரை இந்த விழிப்புணர்வு செயல்களின் வழி வெளிப்பட வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (13 - 04 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்