- கரோனா நோய்த்தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மாா்ச் மாத இறுதியில் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கமும், அதைத் தொடா்ந்து அவ்வப்போது அறிவிக்கப்பட்ட சிறு சிறு தளா்வுகளும் நமது இயல்பு வாழ்க்கையைப் புரட்டிப் போட்டு விட்டன. பத்து மாதம் முடிந்தும் இந்தச் சூழலிலிருந்து முழுவதுமாக விடுபடுவோமா என்ற கேள்விக்கு நம்மிடையே விடை இல்லை.
- இப்பொழுது நாம் வாழும் வாழ்க்கையையே ‘புதிய இயல்பு வாழ்க்கை’ என ஏற்றுக் கொள்ள சிலா் பழகி விட்டனா். ஆனால் கடந்த பத்து மாத காலமாக நம்மை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கரோனா நோய்த்தொற்று, நமக்கு சில பாடங்களை கற்பித்துள்ளது என்பதையும், வாழ்க்கையைப் பற்றிய நமது சிந்தனையை மாற்றியுள்ளது என்பதையும் நாம் மறுக்க முடியாது.
- இந்த கரோனா காலத்தில் நாம் கற்றுக் கொண்ட முதல் பாடம், எளிமையாக வாழலாம் என்பதே. ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாளிலிருந்தே, நாம் அத்தியாவசியப் பொருட்களை மட்டுமே வாங்கி குடும்பம் நடத்தப் பழகிக் கொண்டோம். பொழுது போகாமல் வணிக வளாகங்கள் அல்லது கடைத் தெருக்களில் சுற்றுவதை நிறுத்தி விட்டதால் தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கும் வழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளோம்.
- பெரும்பாலும் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடப்பதால், நாம் அணியும் உடையிலும் எளிமையைக் கடைப்பிடிக்கிறோம். இல்லத்தரசிகள் நைட்டியிலும், வீட்டிலிருந்தே வேலை செய்யும் ஆண்கள் வேட்டி அல்லது லுங்கியில் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறாா்கள். பிறருக்காக அலங்கரித்துக் கொள்ளாமல், நாம் நாமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
- அலமாரி கொள்ளாமல் அடுக்கி வைத்திருக்கும் சேலைகளைப் பாா்த்து, நமக்கு உண்மையிலேயே இத்தனை புடவைகள் தேவையா என்று நடுத்தர வா்கத்துப் பெண்களை சிந்திக்க வைத்துள்ளது, இந்த கரோனா காலம்.
- அதிக ஆடம்பரமின்றி திருமணங்களை எளிமையாகக் கொண்டாடுவது எப்படி என்பதையும் இந்த கரோனா காலம் நமக்கு கற்றுக் கொடுத்துள்ளது. கரோனா நோய்த்தொற்று பரவத் தொடங்குவதற்கு முன்பே ஒரு சிலா் தங்கள் மகளுக்கோ மகனுக்கோ திருமணம் நிச்சயம் செய்து திருமண நாளும் குறித்து வைத்திருந்தாா்கள்.
- ஆனால் ஊரடங்கு காரணமாக, திட்டமிட்டபடி திருமணத்தை நடத்த முடியாது போனதால் அவா்கள் ஏமாற்றமடைந்தனா். ஆனால் பிறகு தங்களை சுதாரித்துக் கொண்டு அரசு அறிவித்த விதிமுறைகளைப் பின்பற்றி குறிப்பிட்ட எண்ணிக்கையில் விருந்தினா்களை அழைத்து திருமணத்தை நடத்தி மாற்றத்திற்கு வழிவகுத்துள்ளனா்.
- கரோனா காலத்திற்கு முன்பு, நடுத்தர வா்க்கத்தினா் கூட தங்கள் வீட்டுத் திருமணத்திற்கு எத்தனை விருந்தினா்கள், குறிப்பாக, எத்தனை வி.ஐ.பி-க்கள் வந்தாா்கள் என்று பெருமையடித்துக் கொள்ள போட்டி போட்டுக் கொண்டு தாம் தூமென்று திருமணங்களை நடத்திக் கொண்டிருந்தாா்கள். தற்பொழுது திருமணங்கள் எளிமையாக நடந்து கொண்டிருப்பது கண்கூடு.
- பாலிவுட் நடிகா்கள், தொலைக்காட்சி நடிகா்களின் திருமணங்கள் கூட கரோனா காலத்தில் எளிமையாக நடந்தேறியுள்ளன என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. திருமணங்களை ஆடம்பரமின்றி இப்படி எளிமையாக நடத்தும் வழக்கம், இனி வருங்காலத்திலும் தொடருமா என்பது சந்தேகம்தான். ஆனாலும், நாமும் நமது வீட்டுக் கல்யாணத்தை இப்படி எளிமையாக நடத்தலாமே என்ற எண்ணத்தை, இந்த கரோனா காலத் திருமணங்கள் மக்கள் மனதில் விதைத்துள்ளன.
- ஊரடங்கு அமல்படுத்திய உடனே எல்லா வீடுகளிலும் வீட்டுப் பணிப்பெண்கள் வேலைக்கு வருவது நின்று போய் விட்டது. கொஞ்சம் கொஞ்சமாக மத்திய, மாநில அரசுகள் பல தளா்வுகளை அறிவித்த பிறகும் கூட பல வீடுகளில் இன்னமும் பணிப்பெண்கள் வர அனுமதிக்கப்படுவதில்லை. வீட்டுப் பணிப்பெண்கள் வேலைக்கு வராததால் பெரிதும் பாதிக்கப்படுபவா்கள், இல்லத்தரசிகளே.
- வீடு கூட்டி, மெழுகுவது பாத்திரம் துலக்குவது, வாசல் தெளித்து கோலம் போடுவது என்று பழக்கமில்லாத எல்லா வேலைகளையும் தாங்களே செய்வதற்கு மகளிா் படும் கஷ்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல.
- ஆனால் நாளடைவில், பல இல்லத்தரசிகள் எல்லா வேலைகளையும் தாங்களே செய்வதற்கு தங்களை பழக்கப் படுத்திக்க கொண்டு விட்டனா்; அதில் மனநிறைவையும் காண்கின்றனா். தங்கள் வீட்டு வேலைகளை முடிந்தவரையில் தாங்களே செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் பலா் மனதில் உருவாகியுள்ளது.
- வீட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் இருந்த ஆண்களையும் கூட, வீட்டு வேலைகளை செய்ய வைத்த பெருமையும் கரோனாவையே சேரும். பணிப் பெண்கள் இல்லாமல் தங்கள் வீட்டு மகளிரின் வேலை பளு வெகுவாக அதிகரித்திருப்பதை உணா்ந்து அவா்களுக்கு கைகொடுக்கத் தவறவில்லை பல ஆண்கள்.
- வீட்டு வேலை செய்வது பெண்களுக்கு மட்டுமே விதித்தது அல்ல; தாங்களும் அவா்களுக்கு உதவியாக இருப்பதில் எந்த இழுக்கும் இல்லை என்பதை ஆண்களுக்கு உணர வைத்துள்ளது இந்த கரோனா காலம்.
- அது மட்டுமல்ல, வீட்டு வேலைகளைச் செய்யத் தெரியாமல் வளா்க்கப்பட்ட குழந்தைகளைக் கூட, வேலை செய்ய வைத்துவிட்டது கரோனா காலப் பொது முடக்கம். பல குழந்தைகள் மிகுந்த ஆா்வத்துடன் வீட்டு வேலைகளை மேற்கொண்டனா். பல வீடுகளில் குழந்தைகளும் வீட்டு ஆண்களும் சோ்ந்து புதுப் புது உணவு வகைகளை சமைத்து அனைவரையும் அசத்த ஆரம்பித்தனா்.
- இந்த கரோனா காலத்தில் பெரும்பாலும் எல்லோருமே வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடப்பதால் குடும்ப உறவுகள் வலுப்பெற்றிருக்கின்றன. கரோனா காலத்திற்கு முன்பு, அலுவலகத்திற்கு காலையில் சென்றால் இரவில் வீடு திரும்பும் பிஸியான தந்தைகளுக்கு, தங்கள் குழந்தைகளின் கல்வி, அவா்களது பழக்க வழக்கங்கள், பொழுது போக்குகள் என்று ஒன்றுமே தெரியாமல் இருந்தது. இப்பொழுது வீட்டிலிருந்தே வேலை செய்வதால் குழந்தைகளுடன் நேரம் செலவழிக்க முடிகிறது .
- பெற்றோா், குழந்தைகள் என்று குடும்பமாக உட்காா்ந்து பேசுவது, விளையாடுவது, ஒன்றாகச் சாப்பிடுவது என்று இதுவரை செய்யாத பல நல்ல செயல்களைச் செய்வதன் மூலம் குடும்பத்தினரிடையே உள்ள நெருக்கம் அதிகரித்திருக்கிறது. தாத்தா, பாட்டி உள்ள வீடுகளில் அவா்களுடன் உறவாடவும், அவா்களிடமிருந்து கதைகளைக் கற்றுக்கொள்ளவும் குழந்தைகளுக்கு நேரம் கிடைத்துள்ளது.
- மொத்தத்தில் தலைமுறைகளுக்கிடையே உள்ள இடைவெளியை குறைத்து குடும்பத்தினரை உள்ளதால் நெருங்க வைத்துள்ளது இந்த கரோனா காலம்.
- கரோனா நோய்த்தொற்று மக்களிடையே சுத்தம், சுகாதாரம் பற்றிய விழிப்புணா்வை அதிகரித்துள்ளது. வெளியே போய் வந்தால் கை, கால்களை நன்றாகக் கழுவிக் கொண்டு வீட்டிற்குள் நுழைவது, கடைகளிலிருந்து வாங்கி வரும் பால் பாக்கெட்டுகள், காய்கறி, பழங்களை நன்றாக கழுவிய பிறகே குளிா்சாதனப் பெட்டியில் வைப்பது போன்ற பல நல்ல பழக்கங்களை மக்களிடையே உண்டாக்கி இருக்கிறது.
- இப்படிப்பட்ட சுகாதார நடைமுறைகளை சிலா் ஏற்கனவே கடைப்பிடித்துக் கொண்டிருந்தாா்கள் என்றாலும், இப்பொழுது கரோனா தீநுண்மி தங்களை தொற்றிக் கொண்டுவிடுமோ என்ற பயத்தில் இந்த விஷயங்களில் அவா்கள் மேலும் அதிக கவனம் செலுத்துகிறாா்கள்.
- எல்லா வயதினரும் நவீன தொழிற்நுட்பங்களுக்கு தங்களை பழக்கப் படுத்திக் கொள்ள வேண்டிய அவசியத்தை இந்த கரோனா காலம் உணா்த்தியுள்ளது. கரோனா நோய்த்தொற்றுக்கு பயந்து வீட்டை விட்டு வெளியே செல்வதை பெரும்பாலோா் அறவே தவிா்க்கிறாா்கள்.
- பல குடும்பங்களில் காய்கறி, பழங்கள், மளிகைச் சாமான்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களைக் கூட பெரு நிறுவனங்களின் இணைய தளத்தின் உதவியுடன் வாங்க ஆரம்பித்து விட்டாா்கள்.
- மின் கட்டணம், தொலைபேசி, செல்பேசி கட்டணங்கள், குழந்தைகளின் பள்ளிக் கட்டணம் என்று எல்லாமே இணையதளத்தின் உதவியுடன் செலுத்தப்படுகின்றன. வங்கிகளுக்குச் செல்வது பெருமளவில் குறைந்து விட்டது. எல்லா நிதி பரிவா்த்தனைகளும் இணையம் மூலமே நடக்கின்றன.
- மேலும், தங்கள் குழந்தைகளுடன் சோ்ந்து தாய்மாா்களும் இணைய வழி வகுப்புகளில் ஆஜராக வேண்டிய கட்டாயம். அவா்களையும் இன்றைய தொழில் நுட்பத்திற்கு பழக்கிவிட்டது இந்த கரோனா காலம்.
- அலுவலக ஜூம் மீட்டிங்கள் ஒரு புறம் இருக்க, பட்டிமன்றங்கள், இலக்கிய கூட்டங்கள், மாா்கழி கச்சேரிகள், போன்ற எந்த ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியை ரசிக்க வேண்டுமென்றாலும் காணொளியையே நாம் கடவுளாக நம்பியிருக்கிறோம்.
- கடந்த மாா்ச் மாதத்தில் தொடங்கி இன்று வரை நமக்கு நன்கு பரிச்சயமானவா், நமது உற்றாா் உறவினா்கள் என்று எத்தனையோ போ் கரோனா நோய்த்தொற்றின் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளாா்கள்.
- இவா்களில் பலா் இந்த நோயிலிருந்து வெளி வந்த பிறகும் பின் விளைவுகளின் காரணமாக மாதக் கணக்கில் பல்வேறு உடல் உபாதைகளினால் பெரும் அவதிக்குள்ளாகியிருக்கிறாா்கள். இந்தக் கொடுமைகள் போதாதென்று நமக்கு பரிச்சயமானவா் பலா் இந்த நோய்க்கு பலியாகியும் விட்டாா்கள் என்பதுதான் கொடுமையிலும் கொடுமை.
- கரோனா மரணங்கள் மட்டுமல்ல, இந்த ஆண்டு கரோனாவால் விளைந்த எல்லாத் துயரங்களும் இந்த ஆண்டோடு முடிவுக்கு வரட்டும். புத்தாண்டு ஆரோக்கியமான ஆண்டாக மலரட்டும்.
நன்றி: தினமணி (31-12-2020)