TNPSC Thervupettagam

கரோனா காலத்தில் மனநலமும் முக்கியம்!

November 23 , 2020 1343 days 605 0
  • மூளையில் நடைபெறும் செயல்களான சிந்தித்தல், புலனறிதல், நினைவாற்றல், உணர்வுகள், ஐம்புலன்களால் பெற்றதை அறிதல் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதே மனம் எனலாம்.
  • ஒருவரின் வாழ்க்கை அவரோடு மட்டுப்பட்டதல்ல; அடுத்தவர்களையும் உள்ளடக்கியது. அந்த வகையில், சமூக முன்னேற்றத்துக்கு மக்களின் மனநலம் மிகவும் முக்கியமானது.
  • கரோனாவானது உலக மொழியாகி மக்களின் உரிமைகள், உணர்வுகள், வாழ்வாதாரங்கள், வாழ்க்கை ஆகியவற்றோடு போரிட்டுக்கொண்டிருக்கும் இந்தச் சூழ்நிலையில் உலக நாடுகள் ஒவ்வொன்றும் மக்களின் மனநலத்தில் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும்.
  • இல்லையென்றால், அது மிகப் பெரிய சமூக, பொருளாதாரச் சிக்கலைத் தோற்றுவிக்கும்என்று உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் கூறியிருக்கிறார்.
  • இந்த எச்சரிக்கையின் ஆழத்தை அறிய வேண்டுமானால், மனநலப் பாதுகாப்புச் சட்டத்தைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
  • இது அதிகாரத்தைச் செலுத்தும் சட்டம் அல்ல; அன்பைச் செலுத்தும் சட்டம். தண்டனைக்கு வாதாடும் சட்டம் அல்ல; மறுவாழ்வுக்கு வாதாடும் சட்டம். மாற்றுத் திறனாளிகளுக்கான பாதுகாப்பு மனநோயாளிகளுக்கும் உண்டு என்று சொல்லும் சட்டம்.

மனநலம் என்றால் என்ன?

  • மனநலம் என்பது மன அழுத்தம், மனச்சோர்வு, மனக்கோளாறு, மனநோய், மனச்சிதைவு போன்ற மனம் தொடர்பான நோய்களற்று இருப்பது மட்டுமல்ல; உலகச் சுகாதார நிறுவனத்தின் கூற்றுப் படி, ‘ஒரு தனிநபரின் மனநலம் என்பது தன்னுடைய முழுமையான ஆற்றலை வெளிப்படுத்துதல், அன்றாட வாழ்க்கைப் போராட்டங்களைத் தாங்கி முன்னேறுதல், திறம்படப் பணியாற்றுதல், சமூகத்துக்குத் தன்னாலான பங்கீட்டைச் சரியாக அளித்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது.ஒன்றில்லாமல் மற்றது இல்லை என்ற அளவுக்கு மனநலமானது உடல்நலத்தோடும் ஒன்றிணைந்தது.
  • மேலும், மனநோய்களில் தீவிர மனநோய், மிதமான மனநோய் என்று இரு பிரிவுகள் உள்ளன. இரு பிரிவுகளிலும் பல உப பிரிவுகளும் இருக்கின்றன.
  • மனநல பாதிப்பு என்ற வாக்கியத்தைக் கேட்ட உடனேயே அவர்கள் பைத்தியக்காரர்கள், சமூகத்திலிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டியவர்கள், ஆபத்து நிறைந்தவர்கள் என்றெல்லாம் கொண்டிருக்கும் தவறான கருத்தின் காரணமாக மனநோய் என்ற வார்த்தையே ஒவ்வாததாகக் கருதப்பட்டு ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளது.
  • இப்படிப்பட்ட பொதுபுத்திதான் மனநலப் பாதிப்பின் பிரச்சினைகளைக் கையாள்வதில் உள்ள மிகப் பெரிய சிக்கல்.
  • ஒருவருக்கு ஏற்பட்டுள்ளது மனநலம் சம்பந்தப்பட்ட பிரச்சினையா அல்லது வேறு ஏதேனுமா? அது மனம் சம்பந்தப்பட்டது என்றால் சமூகம் நம்மை ஒதுக்கி வைத்துவிடுமா, ஏளனம்செய்யுமா, எள்ளி நகையாடுமா? இந்தப் பிரச்சினை தீர்க்கக் கூடியதா, தீர்க்க முடியாததா என்பதையெல்லாம் அறிந்தும் அறியாமலும் ஏற்படுகிற பிரச்சினைகள் எண்ணற்றவை.
  • சில வகையான மனநலப் பிரச்சினைகள் சம்பந்தப்பட்ட நபருக்குப் புரியாது. சில வகைப் பிரச்சினைகளைப் புரிய வைக்க முடியாது. உடன் இருப்பவர்கள் அதைப் புரிந்துகொண்டு ஆதரவளிப்பதும், சிகிச்சைக்குப் பிறகு அவர்களை ஏற்றுக்கொண்டு மறுவாழ்வு அளிப்பதும் நம் முன்னிருக்கும் மிகப் பெரிய சவால்கள்.

மனநலப் பாதுகாப்புச் சட்டம்

  • மனநோயால் பாதிக்கப்படுபவர்களின் மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும், அவர்களின் கண்ணியம் காக்கப்பட வேண்டும், அவர்களின் மறுவாழ்வு உறுதிசெய்யப்பட வேண்டும் என்பன போன்ற உயரிய நோக்கத்தில் மனநலப் பராமரிப்புச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
  • மனநோய் சம்பந்தப்பட்ட எல்லாப் பிரச்சினைகளுக்கும் இந்தச் சட்டம் தீர்வு சொல்கிறது. சொத்துகள் குறித்து இதுவரை உயில்கள் எழுதப்பட்டுள்ளன. இந்தச் சட்டத்தின் கீழ் சுகத்துக்காக ஒரு உயில் எழுத முடியும்.
  • ஒருவேளை மனநலம் பாதிக்கப்பட்டால் அதற்கு எத்தகைய சிகிச்சை அளிக்க வேண்டும், எத்தகைய சிகிச்சை அளிக்கக் கூடாது என்பது குறித்தும், பாதிக்கப்பட்டவர் யாருடைய மேற்பார்வையில் அல்லது யாருடைய பராமரிப்பில் இருக்க வேண்டும் என்பது குறித்தும், முன்பே எழுதி வைக்கவும் அதை மருத்துவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய அவசியத்துக்கும் இந்தச் சட்டம் வகைசெய்கிறது.
  • மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவக் காப்பீடு செய்வதற்கு இந்தப் புதிய சட்டம் வழிவகை செய்துள்ளது.
  • வீடற்றவர்கள், வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களுக்குச் சிகிச்சை இலவசம் என்றும், பாலினம், மதம், கலாச்சாரம், சாதி அடிப்படையில் நோயாளிகளிடம் பாகுபாடு காட்டக் கூடாது என்றும் இந்தச் சட்டம் கட்டளையிட்டுள்ளது.
  • புதிய சட்டத்தின்படி, நாடு முழுவதும், மாவட்டந்தோறும் மனநல ஆய்வுக் குழு ஒன்றை அமைக்க வேண்டும்.
  • மனநலம் பாதிக்கப்பட்டவர்களைச் சங்கிலியால் பிணைத்துக் கட்டிப்போட இந்தச் சட்டம் தடை விதித்துள்ளது. இவர்களுக்கு மயக்க மருந்து தராமல் மின்சார அதிர்ச்சி சிகிச்சை அளிப்பதைப் புதிய சட்டம் தடைசெய்துள்ளது. கொடூரமான, மனிதாபிமானமற்ற, இழிவான சிகிச்சையிலிருந்து பாதுகாக்கப்படுவதற்கான உரிமையையும் இந்தச் சட்டம் வழங்கியுள்ளது.
  • மனநல பாதிப்பின் உச்சக்கட்டம் தற்கொலை. தற்கொலை முயற்சியின் நோக்கம் வாழ்க்கையை முடித்துக்கொள்வது அல்ல, வலியை முடித்துக்கொள்வதுதான் என்பதை இந்தச் சட்டம் உணர்ந்துள்ளது.
  • அதனால்தான், தற்கொலை முயற்சி செய்பவர்கள் மன அழுத்தத்தின் காரணமாக அதைச் செய்தார்கள் என்று அனுமானிக்கிறது.
  • தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர்கள் மீண்டும் அதில் ஈடுபடுவதைத் தவிர்க்கும் பொருட்டு, அவர்களுக்குச் சிகிச்சை அளித்து மறுவாழ்வு அளிக்கும் கடமையும் அரசாங்கத்துக்கு உண்டு.

அரசு செய்ய வேண்டியவை

  • ஒன்றிய, மாநில அரசுகள் மனநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தங்கும் இடத்தையும், சமூகத்தோடு ஒருங்கிணைக்கப்பட்ட மறுவாழ்வு சேவைகளையும் வழங்க வேண்டும்.
  • குழந்தைகளுக்கான மனநல சேவை மையம் தொடங்குவதும் அவசியமாகும். மனநலம் குறித்த விஷயங்களைப் பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்.
  • மனநலம் பாதிக்கப்பட்ட மூத்த குடிமக்களுக்குச் சிறப்பான மனநல சேவைகள் வழங்க வேண்டும்.
  • கரோனா பாதிப்பின் காரணமாக உலகப் பொருளாதாரமே முடங்கியிருக்கும் சூழ்நிலையில், அரசாங்கம் இத்தகைய வசதிகளைச் செய்து தருவது எளிதான காரியமல்ல.
  • அப்படியே முடியும் என்றாலும்கூட மக்களுடைய அடிப்படைத் தேவைகளுக்குச் செலவிடாமல் மனநோய்க்காகச் செலவிட முடியுமா என்றும் கேள்வி எழக் கூடும்.
  • ஆனால், இதுவும் ஒரு அடிப்படைப் பிரச்சினை என்ற பின்னணியில்தான், எல்லா நாடுகளும் மக்களின் மனநலம் காப்பதில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்துகிறது.
  • மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம்என்று வள்ளுவர் சொல்லிவிட்டார். மனநலத்தைப் பாதுகாத்துக்கொள்ள உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ள 10 வாழ்க்கைத் திறன்களை வசப்படுத்துவோம்!

நன்றி: தி இந்து (23-11-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்