TNPSC Thervupettagam

கரோனா சிகிச்சைக்குப் புதிய படை ஒன்றை உருவாக்கிப் பயிற்சி தருக

April 28 , 2021 1367 days 541 0
  • வரவிருக்கும் மே மாதத்தில் கரோனா தொற்றின் எண்ணிக்கை மூன்று மடங்குகள் வரை அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கும் பின்னணியில், இப்போதைய எண்ணிக்கைக்கே திணறும் நம்முடைய கட்டமைப்பை அதற்கேற்பப் பலப்படுத்துவது முக்கியம்.
  • எல்லாப் பிரச்சினைகளுக்கு ஊடாகவும் தமிழக அரசு உடனடியாகப் புதிய படை ஒன்றை உருவாக்க வேண்டும்; முன்னனுபவம் இல்லாதவர்களையும் சிகிச்சைப் பணியில் களம் இறக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஈடுகொடுக்க ஏதுவாக இந்தப் படையைப் பயன்படுத்திட அவர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும்.
  • கரோனா இரண்டாவது அலை அதன் உச்சத்தை நோக்கி நகரும்போது, தமிழ்நாடு ஒருசமயத்தில் 3 லட்சம் கரோனா நோயாளிகளைக் கையாளும் சூழல் வரலாம்.
  • இவர்களில் 5% பேருக்குத் தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது என்று கணக்கிட்டாலும்கூட 15 ஆயிரம் பேருக்கு ஒரு வாரத்துக்கும் மேலாக தீவிர சிகிச்சை கொடுக்க வேண்டியிருக்கும்.
  • இதற்குத் தேவையான ஆக்ஸிஜனும் கணிசமான அளவில் அதிகரிக்கும். அரசு, தனியார் மருத்துவமனைகள் இரண்டையும் சேர்த்து சுமார் 8 ஆயிரம் தீவிர சிகிச்சைப் படுக்கைகளையே கொண்டிருக்கும் தமிழகம், இந்த நெருக்கடியை எதிர்கொள்வது சாமானிய காரியமல்ல.
  • புதிய சிகிச்சை மையங்களின் வழி படுக்கைகளை அதிகரிக்கும்போது ஆள் தேவை உருவாகும். கட்டமைப்பைப் பலப்படுத்த முன்னனுபவம் அல்லாத ஒரு படையைக் களம் இறக்கும் சூழல் அப்போது வரலாம்.
  • இதை முன்கூட்டித் திட்டமிட்டு அவர்களுக்கான பயிற்சியை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும்.
  • பணியின்றி வெளியில் இருப்பவர்களோடு, தேர்வுக்காகக் காத்துக்கொண்டிருக்கும் மருத்துவ, செவிலிய மாணவர்களுக்கும் தடுப்பூசி போட்டு, அவர்களை முறையான பயிற்சிக்குப் பின் இதில் பயன்படுத்தலாம்.
  • இப்போது பணியில் இருப்பவர்களுக்குமே சில விஷயங்களைக் கையாள்வதில் பயிற்சி தேவைப்படுவதைக் கள நிலவரங்கள் உணர்த்துகின்றன.
  • ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டுக்கான காரணங்களில் ஆக்ஸிஜன் வீணாவதும் ஒன்றாக இருப்பதை இங்கே சுட்டலாம். ஜலந்தர் மருத்துவமனை ஒன்றில் ஆக்ஸிஜன் பயன்பாட்டை ஆய்வுக்குள்ளாக்கிய பிறகு, அதன் சிலிண்டர்கள் தேவை 410 என்ற எண்ணிக்கையிலிருந்து 214 ஆகக் குறைந்திருப்பதை இங்கே குறிப்பிடலாம்.
  • ஆக்ஸிஜன் சிலிண்டர்களைக் கையாள்வதில் பல மருத்துவ ஊழியர்கள் மத்தியில் சிக்கல் இருப்பதை அறிய முடிகிறது. சில மணி நேரப் பயிற்சியில் சீரமைக்கப்படக் கூடியது இது.
  • யாருக்கு ஆக்ஸிஜன் தேவை; எப்போது எந்த அளவுக்குத் தேவை என்று மருத்துவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய வழிகாட்டலும் அப்படித்தான். இது ஓர் உதாரணம்.
  • தமிழ்நாடு அளவில் ஒருங்கிணைந்த திட்டமிடலும், அனுபவப் பகிர்தல்களும் அன்றாடம் நடக்க வேண்டும். கட்டமைப்புக்கு இது மேலும் வலுவூட்டும்!

நன்றி: இந்து தமிழ் திசை (28 - 04 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்