- எட்டு மாதங்களாக உலகையே முடக்கிப்போட்டிருக்கும் கரோனா வைரஸ் குறித்து நாளொரு செய்தியும் பொழுதொரு வியப்பூட்டும் அறிவியல் உண்மையும் வெளிப்படுகின்றன.
- மூக்கு, தொண்டை, நுரையீரலைப் பாதிக்கும் ஒரு சுவாச நோய் எனும் அளவில்தான் ஆரம்பத்தில் கரோனா அறியப்பட்டிருந்தது.
- ஆனால், கரோனா பரவத் தொடங்கிய சில மாதங்களிலேயே அது இதயம், ரத்தக்குழாய், சிறுநீரகம், குடல் உள்ளிட்ட பலதரப்பட்ட உடலுறுப்புகளையும் பாதிக்கக்கூடியது என்பது தெரிந்தது.
- இதுபோல், கரோனா தொற்றாளரின் திடீர் மரணத்துக்கு அவர் உடலில் ‘சைட்டோகைன் ஸ்டார்ம்’ எனும் தடுப்பாற்றல் மிகைநிலை உருவாகி, கடுமையான மூச்சுத் திணறலுக்கு வழிகொடுப்பதுதான் காரணம் என்று சொல்லப்பட்டது.
- ஆனால், இப்போதோ இவர்களின் மரணத்துக்கு ‘பிராடிகைனின் ஸ்டார்ம்’ (Bradykinin storm) எனும் மற்றொரு உடலியல் மாற்றமும் காரணம் என்பது தெரியவந்துள்ளது. இதைக் கண்டுபிடித்தது அதிதிறனுள்ள ஒரு கணினி என்பதுதான் வியப்புக்குரிய விஷயம்.
- அமெரிக்காவில் ஜேக்கப்சன் எனும் ஆராய்ச்சியாளர் சுமார் 17,000 கரோனா தொற்றாளரிடமிருந்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரபணுக்களைப் பிரித்தெடுத்து, அதிதிறனுள்ள கணினியில் உள்ளீடு செய்தார்.
- அவர்களின் நோய்க்குறிகள் தொடர்பான தரவுகளையும் சமர்ப்பித்து, அந்த மரபணுக்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஆராய்ந்தபோது, இந்தப் புதிய உண்மை புலப்பட்டது.
- இது ‘சைட்டோகைன் ஸ்டார்ம்’ நிலைமையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. எப்படியெனில், திறந்திருக்கும் முன்கதவு வழியாக மட்டும் திருடன் வீட்டுக்குள் நுழைவதில்லை; மாடிக்கதவு திறந்திருந்தாலும் வீட்டுக்குள் நுழைந்துவிடலாம் அல்லவா? அதுபோலத்தான்.
பிராடிகைனின் புயல்
- ‘பிராடிகைனின்’ என்பது நம் உடலில் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் ஒரு வேதிப்பொருள்.
- நம் சிறுநீரகங்கள் ரெனின், ஆஞ்சியோடென்சின் எனும் இரண்டு முக்கிய ஹார்மோன்களைச் சுரந்து, பிராடிகைனின் உள்ளிட்ட பலதரப்பட்ட வேதிப்பொருட்களுடன் பிணைந்து, ‘ராஸ்’ (RAS) எனும் ஒரு பாதுகாப்பு அமைப்பைக் கொண்டிருக்கிறது; ஒரு காவல் நிலையத்தில் துணைக் கண்காணிப்பாளர், ஆய்வாளர், பல காவலர்கள் இருப்பதைப் போல. இதுதான் நம் ரத்த அழுத்தத்தைச் சரியாக வைத்துக்கொள்கிறது; ரத்த ஓட்டம் முறையாக இயங்க உதவுகிறது.
- கரோனா வைரஸ் நம் மூக்கு, வாய், தொண்டை, நுரையீரல், குடல், சிறுநீரகம், இதயம் போன்ற உறுப்பு செல்களில் காணப்படும் ‘ஏஸ்2’ (ACE2) புரத ஏற்பிகளுடன் இணைந்து, நுழைந்து, வளர்ந்து, பெருகி ‘கோவிட்-19’ நோயை உண்டாக்குகிறது.
- எப்படி ஒரு காவல் நிலையத்தையே தீவிரவாதிகள் வெடிகுண்டு போட்டுத் தகர்த்துவிடுகிறார்களோ அப்படி கரோனா வைரஸ் நம் சிறுநீரகத்திலுள்ள ‘ராஸ்’ பாதுகாப்பைச் சிதைத்துவிடுகிறது.
- அப்போது பிராடிகைனின் சுரப்பு கட்டுக்கடங்காமல் போகிறது. பொதுவாக, இந்த மாதிரியான மிகை சுரப்புச் சூழலில் பிராடிகைனினை உடைத்துச் சிறுநீரில் வெளியேற்ற ‘ஏஸ்’ புரதங்கள்தான் உதவிக்கு வரும்.
- ஆனால், கரோனா பாதிப்பின்போது இந்தப் புரதங்களில் பெரும்பாலும் கரோனா கிருமிகளின் வளர்ச்சிக்கே செலவாகிவிடுவதால், அந்த வழியும் அடைபட்டுப்போகிறது. அதன் விளைவால், உடலில் திடீரென்று சுழன்றடிக்கும் பிராடிகைனின் புயலைக் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நிலைமை மோசமாகிறது.
ரத்தக் குழாய்கள் பாதிப்பு
- ரத்தத்தில் பிராடிகைனின் அளவு அதிகமாகும்போது, ரத்தக் குழாய்களின் உட்சுவரை அது சிதைக்கிறது.
- அப்போது உடலில் ரத்தக் குழாய்கள் வீங்கி, துளை விழுந்து, ஒழுகத் தொடங்குகின்றன.
- முக்கியமாக, இந்த நிலைமை நுரையீரல்களில் ஏற்படுமானால், அங்கே ஆக்ஸிஜன் – கார்பன் - டை - ஆக்ஸைடு பரிமாற்றம் நிகழும் இடங்களிலெல்லாம் ரத்தக் கசிவு ஏற்பட்டுவிடுவதால், உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காமல் போகிறது.
- அதனால், கரோனா தொற்றாளருக்குக் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. அத்தோடு, பிராடிகைனின் மிகைச் சுரப்பு இதயத்தையும் பாதிக்கிறது. இதயத்துடிப்பு சீர்கெட்டு ரத்த அழுத்தம் குறைந்துபோகிறது. உயிருக்கு ஆபத்து நெருங்குகிறது.
- கரோனா வைரஸ் நம் ரத்தச் சுற்றோட்டத்தில் ஹையலுரானிக் அமிலச் (Hyaluronic acid) சுரப்பையும் அதிகப்படுத்துகிறது என்பது ஜேக்கப்சன் ஆராய்ச்சியில் புலப்பட்ட மற்றொரு உண்மை.
- இந்த அமிலம் ஒரு நுரைக்கும் பொருள். ஒரு சோப்புத் துண்டைத் தண்ணீரில் முக்கியதும் நுரை வருகிறது அல்லவா? அதற்கு இந்த அமிலம் சோப்பில் கலந்திருப்பதுதான் காரணம்.
- ஆக, ஏற்கெனவே நுரையீரல்களில் ரத்தக் கசிவு உள்ள இடங்களில் ஹையலுரானிக் அமிலமும் வந்துசேரும்போது, அந்த இடங்களெல்லாம் நுரைத்துப்போகின்றன.
- நுரையுள்ள பலூனில் காற்றை அடைப்பது சிரமம் அல்லவா? அதுமாதிரிதான், நுரைத்துப் பொங்கும் நுரையீரலில் நாம் சுவாசிக்கும் காற்று நுழைவதற்கே இடம் இல்லாமல் போகிறது.
- அப்போது உடலில் கடுமையான ஆக்ஸிஜன் பற்றாக்குறை உண்டாகிறது. இந்த நிலையில் வென்டிலேட்டர், எக்மோ கருவிகள் கொண்டு செயற்கை சுவாசம் மூலம் ஆக்ஸிஜனைச் செலுத்தினாலும், அதை உடலுக்குள் எடுத்துச்செல்வதற்கு இந்த அமில நுரைகள் வழி கொடுப்பதில்லை. எனவேதான் கரோனா தொற்றாளர்களுக்குத் திடீர் மரணங்கள் ஏற்படுகின்றன என்கிறார் ஜேக்கப்சன்.
- இந்தப் புதிய ஆய்வு முடிவுகள் விரைவில் உறுதிப்படுமானால், கரோனா சிகிச்சையின் அடுத்த கட்ட முன்னேற்றத்துக்கு நிச்சயம் உதவும் என்கின்றனர் அறிவியலாளர்கள்.
- காரணம், பிராடிகைனின் மற்றும் ஹையலுரானிக் அமிலச் சுரப்பைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் பலவும் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கின்றன.
- கரோனா சிகிச்சைக்கு இப்போது வழங்கப்படும் ‘ரெம்டெசிவிர்’, ‘டோசுலிசிமாப்’ போன்ற மருந்துகளோடு ஒப்பிடும்போது, இவை எல்லாமே சாமானியருக்கும் எட்டும் மலிவான மருந்துகளே.
- நோயின் சரியான கட்டத்தில் இந்த மருந்துகளை எடுத்துக்கொண்டால் குறைந்த செலவில் கரோனாவின் கோரப்பிடியிலிருந்து விடுபட்டுவிடலாம்.
நன்றி: தி இந்து (08-09-2020)