- ஒரு நகைச்சுவை நடிகரின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்ட நிகழ்வு, ஒரு புதிய தொடக்கம்.
- நெடிய தமிழ் சினிமா மரபை எடுத்துக்கொண்டால், என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஆர்.ராதா இருவரின் கலவையும் தொடர்ச்சியும் என்று விவேக்கைச் சொல்லலாம்.
- பழைமைவாதத்தையும் மூடத்தனத்தையும் சிரிக்கச் சிரிக்க விமர்சித்து சிந்திக்க வைக்கும் நகைச்சுவைப் பாணி அவருடையது.
- சமூக மாற்றத்துக்கான பகுத்தறிவுக் கருத்துகளைத் திரைப்படங்கள் மூலமாகச் சொல்வதோடு நிறுத்திக்கொள்ளாமல் அன்றாட வாழ்விலும் சாத்தியப்பட்ட வழிகளில் எல்லாம் மக்களிடம் விழிப்புணர்வை உண்டாக்கும் பணிகளில் ஈடுபடுத்திக்கொண்டார்.
- கரோனாவுக்கு எதிரான போரில், தடுப்பூசியே இன்று மனிதகுலம் கொண்டிருக்கும் முக்கியமான ஆயுதம் என்பதை மிகத் துல்லியமாக உணர்ந்திருந்த விவேக், தடுப்பூசியைத் தான் செலுத்திக்கொண்டதும், அதற்கு அரசு மருத்துவமனையைத் தேர்ந்தெடுத்ததும், ஊடகங்கள் வழியாகப் பொதுமக்கள் மத்தியில் அதைப் பிரச்சாரமாக முன்னெடுத்ததும் அவருடைய சமூகப் பணியின் தொடர்ச்சி.
- அவருடைய எண்ணங்களுக்கு நேர் எதிராக கரோனா தடுப்பூசிக்கு எதிர்ப் பிரச்சாரத்துக்கு ஒரு கூட்டம் இன்று அவருடைய மரணத்தையே ஒரு ஆயுதமாக்க முற்படுவது இந்தச் சமூகத்தில் புரையோடியிருக்கும் சில மூடத்தனங்களுக்கு எதிராகக் காலம் முழுவதும் நாம் போராடிக்கொண்டேதான் இருக்க வேண்டுமோ எனும் சலிப்பையே உண்டாக்குகிறது.
- விவேக் கரோனாவுக்குத் தடுப்பூசி செலுத்திக்கொண்ட மறுநாளில் தீவிர மாரடைப்புக்குள்ளாகி இறந்தது தற்செயல்தானே அன்றி, தடுப்பூசியின் நேரடி விளைவு அது என்று சொல்லிவிட முடியாது.
- பொதுவாக, கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு.
- பயனாளிக்கு ஏற்கெனவே இதயம் தொடர்பான பிரச்சினைகள் இருந்திருந்தால் அது தற்செயல் நிகழ்வாக ஏற்படலாமே தவிர, தடுப்பூசிக்கும் மாரடைப்புக்கும் நேரடித் தொடர்பு இருப்பதாக எந்த ஒரு ஆய்வுக் கட்டத்திலும் தகவல் இல்லை.
- இந்தியாவில் இதுவரை 10 கோடிப் பேருக்கு மேல் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். அவர்களில் தடுப்பூசியால் மாரடைப்பு ஏற்பட்டதாகத் தரவுகள் எதுவும் இல்லை. உலக அளவில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் சிலருக்கு ரத்த உறைவு ஏற்பட்டதாக மட்டும் சில தரவுகள் வந்துள்ளன.
ரத்தக்குழாயில் கொழுப்பு அடைப்பு
- மாரடைப்பு என்பது இதயத் தசைகளுக்கு ரத்தம் விநியோகிக்கும் மூன்று கொரோனரி ரத்தக்குழாய்களில் ஏதாவது ஒன்றிலோ பலவற்றிலோ அடைப்பு ஏற்படுவதால் வருகிறது.
- இந்த அடைப்பு இரண்டு வழிகளில் ஏற்படலாம். ஒன்று, நாம் சாப்பிடும் உணவில் அதிகக் கொழுப்பு இருந்தால், அது கொழுப்புப் புரதமாக மாறி சிறிது சிறிதாக ரத்தக்குழாய்களில் படிந்து அடைத்துக்கொள்வது.
- இது நேரடியாக கொரோனரி குழாய்களில் படிந்து அடைத்துக்கொள்வதும் உண்டு. சமயங்களில், உடலில் வேறெங்காவது ரத்தக்குழாயில் இருக்கும் கொழுப்புப் புரதக் கட்டியானது ரத்தக்குழாயை உள்புறமாக முக்கால்வாசி அடைத்த பிறகு உடைந்துவிடும்.
- அப்போது ரத்தக்குழாய் செல்களிலிருந்து சிறிது ரத்தமும் கசிந்து அந்த உடைப்புக் கட்டியின்மீது முலாம்போல் பூசி, ரத்த உறைவுக்கட்டியாக அதை மாற்றிவிடும். இது உடல் முழுவதும் பயணிக்கும். அந்தப் பயணத்தின்போது இதயத்துக்கு வந்து கொரோனரி குழாயை அடைப்பதும் உண்டு.
- இந்த இரண்டு நிகழ்வுகளும் ஒரு நாளில் ஏற்பட வாய்ப்பில்லை. ஏற்கெனவே பல மாதங்களாக, வருடங்களாக இருந்து திடீரென்று அதன் இருப்பைக் காட்டும். அதுதான் நெஞ்சுவலி.
- ஒருவருடைய கொரோனரி ரத்தக்குழாயில் கொழுப்புப் புரதக் கட்டி இருக்கிறதா, இல்லையா என்பதை சாதாரணப் பரிசோதனைகளில் தெரிந்துகொள்ள முடியாது.
- முக்கியமாக, கரோனா தடுப்பூசி போடுவதற்கு முன்பு பரிசோதிக்கப்படும் ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, ரத்த ஆக்ஸிஜன் அளவு ஆகிய பரிசோதனைகளில் இதை அறிய முடியாது.
- கொரோனரி ஆஞ்சியோகிராம், சி.டி. ஆஞ்சியோகிராம் ஆகிய பரிசோதனைகளில்தான் இது தெரியவரும். வழக்கமாக, 50 வயதைக் கடந்தவர்களுக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், மிகை ரத்தக் கொழுப்பு போன்றவை கட்டுப்பாடில்லாமல் இருந்தால் மாரடைப்பு வரும்.
- இது நாட்பட்ட நிகழ்வு. இதயம் தொடர்பான பிரச்சினை உடையவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு முன்பாகத் தங்கள் இதய மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது என்று சொல்வதற்குக் காரணம், நடிகர் விவேக்குக்கு நிகழ்ந்ததுபோல் தற்செயல் நிகழ்வுக்காகத் தடுப்பூசியைக் குறை சொல்லக் கூடாது என்பதற்குத்தான்.
ரத்த உறைவு ஏற்படுவது ஏன்?
- தடுப்பூசியால் ஏற்படுகிற ‘ரத்த உறைவு’ பிரச்சினைக்கு இப்போது வருவோம். அடினோ வைரஸைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு மிக அரிதாக ‘ரத்த உறைவு’ ஏற்பட்டு இறப்புகள் நிகழ்ந்ததாக வெளிநாடுகளில் தகவல்கள் வந்துள்ளன.
- இந்தத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு ரத்தத்தில் தட்டணுக்கள் குறைந்துவிடுவதாலும் தட்டணுக்கள் தேனடைபோல் ஒன்று சேர்ந்துகொள்வதாலும் ரத்த உறைவு ஏற்படுகிறது என அறிந்திருக்கிறார்கள்.
- இந்த ரத்த உறைவு உடனே ஏற்படுவதில்லை. தடுப்பூசி போட்டுக்கொண்ட 20 நாட்கள் கழித்தே உருவாகிறது.
- ஐரோப்பாவில் இந்தத் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒரு லட்சம் பேரில் ஒருவருக்கும், பிரிட்டனில் 25 ஆயிரம் பேரில் ஒருவருக்கும் அமெரிக்காவில் 10 லட்சம் பேரில் ஒருவருக்கும் மரணம் நேர்ந்திருக்கிறது. ஆக, இந்த விபரீதம் நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது.
- இந்தியாவில் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியால் ரத்த உறைவு வந்து இறந்திருப்பவர்கள் 79 பேர் மட்டுமே. இது தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் வெறும் 0.0002%. அதே நேரத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கு கோவிட் 19 நோய் வந்து, தீவிரமானால் ரத்த உறைவு வந்து இறப்பதற்கு 40% வாய்ப்பு இருக்கிறது.
- இங்கே கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், இந்த ரத்த உறைவானது ‘மாடர்னா எம்.ஆர்.என்.ஏ.’, ‘பைசர் எம்.ஆர்.என்.ஏ.’, ‘கோவேக்சின்’ போன்ற தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டவர்களுக்கு ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் இல்லை.
- நடிகர் விவேக் செலுத்திக்கொண்டது ‘கோவேக்சின்’ தடுப்பூசி. ஆகவே, தடுப்பூசி போட்டுக்கொண்டதால் அவருக்கு மாரடைப்பு வந்தது என்று கூறுவதற்கு ஆதாரமே இல்லை.
- மேலும், தடுப்பூசியால் உடலில் ரத்த உறைவு ஏற்பட்டுள்ளதா என்பதை அறிய ‘டி-டைமர்’ பரிசோதனை உள்ளது. இந்தப் பரிசோதனையிலும் அவருக்கு ரத்த உறைவு ஏற்பட்டதற்கு ஆதாரமாகத் தகவல் இல்லை.
- அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கொரோனரி ஆஞ்சியோகிராம் உறுதிசெய்துள்ளது என்றுதான் மருத்துவ அறிக்கைகள் தெரிவித்துள்ளன.
- எனவே, கரோனா தடுப்பூசி குறித்து ஊடகங்களில் உலவும் அறிவியலற்ற அறைகூவல்களுக்குப் பொதுச் சமூகம் அடிமையாகிவிடாமல் கரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள முன்வர வேண்டும்.
- இந்த இடத்தில் அரசுக்குச் சொல்ல வேண்டிய விஷயம் ஒன்று உண்டு.
- தடுப்பூசி போட்ட பின்னர் உடனடியாக நடக்கும் மரணங்களில், இறந்தவர்களின் உடல்களை மருத்துவத் துறையினர் உடற்கூறு ஆய்வுசெய்து உண்மையான காரணத்தை வெளிப்படையாக அறிவிக்கும் முடிவை அரசு எடுக்க வேண்டும்.
- அது தேவையற்ற சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்!
நன்றி: இந்து தமிழ் திசை (19 - 04 - 2021)