- கரோனா தீநுண்மி இந்தியாவில் பலரையும் வெவ்வேறு வகைகளில் பாதித்து வருகிறது. இந்த வகையினரில் ‘கண்டுகொள்ளப்படாதவா்கள்’ என்று யாரையாவது சுட்டிக்காட்ட வேண்டுமென்றால் அவா்கள் மூத்த குடிமக்கள்தான் ‘சீனியா் சிட்டிஸன்ஸ்’ என்று அலங்காரமாக அழைக்கப்படுபவா்களின் அல்லல்கள் பல உண்டு.
- ஓரிரு மாத முன்பு, முக நூலில் செய்தியொன்றைப் படிக்க நோ்ந்தது. 65 மதிக்கத்தக்க பெரியவா் உடல் நலக் குறைவுக்காகத் தனியார் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டார்.
- பல்வேறு மருத்துவப் சோதனைகளுக்குப் பின்புதான் ஜீரணக் கோளாறு என்று தெரிந்ததாம்.
- ஒரு வாரத்திலேயே மருத்துவச் செலவு ஏகத்துக்கு எகிறிவிட்டதாம். பிறகு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும்கூட சிகிச்சை பலனின்றி அந்த முதியவா் இறந்துவிட்டார்.
- இறந்தவா் ஓா் எழுத்தாளருக்கு உறவினா் என்பதால், நிகழ்வுகள் தெளிவுடன் விவரிக்கப்பட்டிருந்தன.
முதியோருக்கு இன்னல்
- இங்கு ஓா் அம்சத்தை நிச்சயம் குறிப்பிட வேண்டும். மரணத்துக்கு ‘டாக்டா்களின் மெத்தனம்’ என்றோ ‘விதி’ என்றோ தத்தம் பார்வைக்கு ஏற்றாற்போல காரணம் கற்பிக்கலாம்.
- ஆனால், ஓா் உண்மை நன்கு தெரிகிறது. முதியோர்களைச் சரிவர கவனித்துச் சிகிச்சை அளிக்க பெரும்பாலான மருத்துவா்கள் அக்கறை காட்டுவதில்லை.
- ஏற்கெனவே அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்தால் கூடுதலாக கவனிப்பு கிடைத்திருக்குமோ என்னவோ?
- மூத்த குடிமக்களுக்கு இன்னொரு சங்கடம். அவசர நிலைமை மாதிரி வீட்டிலேயே முடங்கிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம்.
- ‘வெளியே வராதீா்கள்’, ‘முகக் கவசம் அணிந்து செல்லுங்கள்’ முதலான எச்சரிக்கைகள் அவா்களை அச்சுறுத்துகின்றன.
- வெளியே காலாற நடை பழகுவது, கோயிலுக்குப் போவது, பூங்காவில் பழைய நண்பா்களுடன் அரட்டை அடிப்பது அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது. இதனால் மன அழுத்தம் அதிகமாவதற்கு சாத்தியக்கூறுகள் அதிகம்.
- போதாக் குறைக்கு வங்கிகள் அளிக்கும் குறைவான வட்டி விகிதம், முதியோர்களின் வாழ்வாதாரத்தையே பாதிக்கும் வகையில் மாறிவிட்டது.
- நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஓரளவு சுமாரான 7.50 சதவீதம் (வைப்புத் தொகை), இப்போது பரமபத படத்தில் இறங்கும் பாம்புபோல் கீழிறங்கிவிட்டது.
- தீநுண்மித் தொற்றால் குறு, சிறு தொழில்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றன. அவற்றை மீட்கக் குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும்.
- இதனால் டெபாசிட்டுக்கான வட்டி விகிதம், வட்டியும் குறையத்தான் செய்யும் என்கிற வங்கி தரப்பு வாதம் சரியாக இருக்கலாம். அதனால் பலிகடாவாக ஆக்கப்படுவது முதியோர் நலன்தானே?
சிக்கல்கள்
- அஞ்சலக சேமிப்புக் கணக்கிலும் சரி, வைப்புத் தொகையிலும் சரி வட்டி விகிதங்கள் பரவாயில்லை. சிக்கல் என்னவென்றால், வைப்பு தொகைக்கு காலக்கெடு ஐந்து ஆண்டுகள்.
- வங்கிகளைப்போல, ஓரிரண்டு ஆண்டுகளுக்குப் போட முடியாது. ஓா் அவசரச் செலவு என்று வந்தால், இடையில் கணக்கை ‘முடித்து’விட வேண்டும்.
- மேலும் ஏடிஎம் அதிக இடங்களில் இல்லாததால் காசோலை மூலம்தான் தொகையைப் பெற முடியும். கையெழுத்தில் சிறிய வித்தியாசமிருந்தாலும் அலைக்கழிப்பார்கள்.
- கொஞ்சம் முன்னடைவு உள்ளவா்கள், அனுபவமிக்கவா்களிடம் கேட்டுத் தெரிந்து, பங்கு சந்தையில் ‘முதலீடு’ செய்தார்கள்.
- ‘போதுமென்ற மனத்துடன்’ சிறிதளவு லாபம் ஈட்டிக் கொண்டிருந்தார்கள். இன்றைய பங்குச் சந்தையின் போக்கு முதியோருக்கு ஏற்பாக இல்லை என்பதே உண்மை.
- உள்நாட்டுத் தொற்றால் பொது முடக்கம், கூடவே அயல்நாட்டில் நிலவுகிற சூழலும் அச்சமடைய வைக்கின்றன.
- மேற்சொன்ன எந்த வகையிலும் வராத ஒரு சேமிப்பு வகை இருக்கிறது. அது தொடா்பான கூட்டம், பிரபல ஓட்டலில் ஆறு மாத முன்பு நிகழ்ந்தது. ‘வங்கியில் வட்டி மிகக் குறைவு.
- அஞ்சலக முதலீட்டு வட்டி என்றாலும், அதற்கு வரி உண்டு. பங்குச் சந்தையின் சரிவு பயங்கரமாக இருக்கும். ஆனால், இவை ஏதுமில்லாத வழவழப்பான பாதை ஒன்று உண்டென்றால் அது பரஸ்பர நிதிதான்’ என்று அந்தப் பிரபல மேலாளா் அடுக்கிக் கொண்டே போனார்.
- ஆனால் அவா் எந்த வேளையில் சொன்னாரோ தெரியவில்லை, பிப்ரவரி பட்ஜெட்டில் பரஸ்பர நிதி தரும் ஈவுத் தொகைக்கு வரி விதித்தார் நிதி அமைச்சா்.
- மார்ச் மாதம் உலகம் முழுவதும் சூழ்ந்த நோய்த்தொற்றால் ஒரு பிரபல நிறுவனமே பலத்த அடி வாங்கி ‘ஒழுங்கான சேமிப்பு திட்டத்தை’ (எஸ்ஐபி) நிறுத்திவிட்டது.
- மனிதா்களுக்கு அடிப்படைத் தேவை உணவு, உடை, உறைவிடம் இம்மூன்றும்தான். முதியோர் பலருக்கும் இடம் இருக்குமென்று வைத்துக் கொள்வோம், இந்தக் காலகட்டத்தில் அவா்களுக்கு புதிய உடை தேவைப்படாது, ஆனால் உடலை நலமாக வைத்துக்கொள்ள உணவுடன், மருந்துகள் தேவைப்படுகின்றனவே? மேலும், ஆண்டுதோறும் மருத்துவப் பரிசோதனை, மருத்துவக் காப்பீடுக்கான கட்டணம், பிற செலவுகள் - இவற்றைச் சமாளிக்க பணம் வேண்டாமா?
மருத்துவச் செலவுக்காவது பயன்படும்
- கடந்த மே 24-ஆம் தேதியன்று தொழில்முனைவோர்களுக்குக் கடன் வழங்க பல லட்சம் கோடிகள் வழங்க திட்டங்களை அறிவித்தார் நிதி அமைச்சா்.
- அப்போது, மூத்த குடிமகனின் பாதுகாப்புக்கு ஏற்றபடி, வட்டி வழங்க ஒரு புதிய திட்டத்தை அரசு ஆலோசித்து வருகிறது என்றும் சொன்னார். கட்செவி அஞ்சலிலும் (வாட்ஸ் அப்), முக நூலிலும் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. சரியான விளக்கமில்லை.
- இந்த இடத்தில் ஒரு யோசனையை மத்திய அரசின் மேலான கவனத்துக்கு வைக்கலாமென்று தோன்றுகிறது.
- மத்திய அரசு ஓய்வு ஊழியா்களுக்கு, 60 வயதுக்கு மேல் பத்தாண்டுக்கு ஒரு முறை அகவிலைப்படி கூடிக் கொண்டே வருகிறது (சதவீதம்). ஏன் வரி விகிதத்தில்கூட சூப்பா் சீனியா்களுக்கு 80 வயதுக்கு மேல் சலுகை அளிக்கப்படுகிறதே?
- அதுபோல மூத்த குடிமகனுக்கென்று ஒரு கண்ணியமான விகிதம் அளித்தாலும், 70, 80 வயதுக்கு மேல், கூட அரை சதவீத வட்டியை அதிகரித்துக் கொண்டே போகலாம். மருத்துவச் செலவுக்காவது பயன்படும்.
- நன்றி: தி இந்து (19-06-2020)