- கரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான தீவிர நடவடிக்கைகள் எடுக்கும் அதே வேளையில், இதர தீவிர நோயாளிகளையும் நாம் புறக்கணித்துவிடக் கூடாது.
- ஆனால், இப்போது அதுதான் நடந்துகொண்டிருக்கிறது. கரோனாவைக் காட்டிலும் ஆண்டுதோறும் அதிகம் பேரைப் பலிவாங்கும் தொற்றாத நோய்களும் பல உள்ளன.
- இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை மட்டும் 7.7 கோடி; ஆண்டுதோறும் தொற்றாத நோய்களால் இறப்போரின் எண்ணிக்கை மட்டும் 58 லட்சம் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.
- நாடெங்கும் ஊரடங்கு தொடரும் நிலையில், வாகன வசதிகள் இல்லாததாலும், மருத்துவமனைக்குச் சென்றாலே கரோனா தாக்கிவிடுமோ என்று நோயாளிகளின் குடும்பத்தினரும் உறவினரும் அச்சப்படுவதாலும் தீவிர நோய்களுக்குச் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது.
- அதன் விளைவு, மருத்துவமனைக்கு வரும் தீவிர நோயாளிகள் நோய் முற்றிய பிறகு, உயிருக்கு ஆபத்தான நிலையில்தான் வருகிறார்கள்.
சிகிச்சைகளைத் தள்ளிப்போடக் கூடாது
- ஊரடங்காலும் வீட்டிலேயே பாதுகாப்பாகத் தங்கியிருப்பதாலும் கரோனாவின் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாமே தவிர, கரோனா வைரஸை இல்லாமலாக்கிவிட முடியாது.
- ஒரு குறிப்பிட்ட காலம் வரை அதன் பரவல் தவிர்க்க இயலாததாகத்தான் இருக்கப்போகிறது. எனவே, அந்த அச்சத்தை மட்டுமே முன்னிறுத்தி, மற்ற சிகிச்சைகளை இரண்டாம்பட்சமாக அணுகுவது மிகப் பெரும் சுகாதார நெருக்கடியையும் உயிரிழப்புகளையும் உருவாக்கும். எனவே, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் தங்களது வழக்கமான சிகிச்சைகளைத் தொடர்வதே நல்லது.
- இதயம், நரம்பு மண்டலம், செரிமான மண்டலம், பக்கவாதம், நீரிழிவு, எலும்பு முறிவு ஆகிய உடல்நலப் பிரச்சினைகளுக்கு உடனடியாகச் சிகிச்சை பெறுவது அவசியம்.
- உலக அளவில் அன்றாடம் அதிகம் பேரைப் பலிவாங்குவது இதயம் தொடர்பான நோய்களே. ஆரம்பக் கட்டத்திலேயே மருத்துவமனைக்கு வந்தால் உயிரைக் காப்பாற்றிவிடலாம்.
- பக்கவாதம் ஏற்பட்ட நான்கு மணி நேரத்துக்குள் நல்ல மருத்துவமனைக்குச் சென்றால் பாதிப்பே இல்லாமல் சரிசெய்துவிடலாம். தாமதித்தால் சிக்கல்கள் அதிகமாவதுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் தங்க வேண்டிய நாட்கள் அதிகமாகும். மருத்துவச் செலவும் அலைச்சலும் சேர்ந்துகொள்ளும்.
- நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தால், அது முக்கியமான உறுப்புகளைச் செயலிழக்க வைத்துவிடும். எனவே, ரத்தத்தில் சர்க்கரை அளவை அவ்வப்போது சோதித்துக்கொள்வதுடன் மருத்துவர்களின் ஆலோசனைகளையும் பெறுவது அவசியம். ஊரடங்கால் சாலை விபத்துகள் குறைந்துள்ளன. ஆனால், முதியவர்கள் குளியலறைகளிலும் பிற இடங்களிலும் சறுக்கி விழுந்து எலும்பு முறிவுக்கு ஆளாகும் எண்ணிக்கை குறையவில்லை. உடனடியாகச் சிகிச்சை அளித்தால்தான் அவர்களை முன்பைப் போல நடமாடச் செய்ய முடியும்.
அபாயத்தில் சிறுநீரக நோயாளிகள்
- டெல்லி ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை வாசலில் எப்போதும் நூற்றுக்கணக்கான புற்றுநோயாளிகள் தங்கியிருப்பார்கள். நகரத்தில் வீடோ அறையோ வாடகைக்கு எடுத்துத் தங்குவதற்கு வசதியற்றவர்கள் சாலையோரங்களில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவது வழக்கம்.
- ஊரடங்கையடுத்து, அவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுவிட்டார்கள். அவர்கள் பெற்றுவந்த சிகிச்சைகளும் அப்படியே நின்றுவிட்டன. ஊரடங்கால் இப்படிப் புற்றுநோயாளிகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பலவிதங்களில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
- புற்றுநோயின் ஆரம்பக் கட்டத்தில் எளிதில் சிகிச்சை அளித்துக் காப்பாற்றிவிடலாம். அப்படிப்பட்டவர்களை உடனே கவனிப்பதே நல்லது. நோயை முற்றவிட்டுவிட்டால் சிக்கல்கள் அதிகமாகும்.
- ஏற்கெனவே, சற்று வளர்ந்த நிலையில் புற்று உள்ளவர்களுக்கு, பிறகு வலிமறப்புச் சிகிச்சை நிலைக்குத்தான் செல்ல வேண்டியிருக்கும். வழக்கமல்லாத புற்றுநோய், வேறு உடல் நலக்குறைவுடன் புற்றுநோயும் கொண்டவர்கள், மிகவும் வயதானவர்கள் விஷயத்தில் எல்லாவற்றையும் ஆராய்ந்த பிறகே முடிவெடுக்க வேண்டியிருக்கும்.
- அறுவைச் சிகிச்சை அல்லது கீமோதெரபி என்றாலும் அது அவசியமா, அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்ன என்றெல்லாமும் பார்க்க வேண்டும். ஆனால், அதற்கெல்லாம் வாய்ப்பில்லாத வகையில் ஊரடங்கு உத்தரவால் புற்றுநோய்ச் சிகிச்சை கடும் சவாலை எதிர்கொண்டிருக்கிறது. சிறுநீரகத்தில் கோளாறுகளை எதிர்கொள்ளும் நோயாளிகளின் நெருக்கடி நிலையை விவரிக்கவே வேண்டியதில்லை; அவர்களுக்கான சிகிச்சைகள் தாமதிக்கப்படும் ஒவ்வொரு நாளும் அபாயம் நோக்கி அவர்கள் நகர்கிறார்கள்.
மூடப்பட்டிருக்கும் மருத்துவமனைகள்
- கிருமித் தொற்றுப் பரவல் குறித்த அச்சத்தால் பெரும்பாலான பொதுநல மருத்துவர்கள் தங்களது மருத்துவமனைகளை மூடிவிட்டார்கள்.
- அதற்கு முக்கியக் காரணம், தங்களது மருத்துவமனைகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது மிகவும் சிரமம் என்ற காரணத்தால்தான்.
- ‘என்-95’ முகக்கவசம் போன்ற அவசியமான மருத்துவப் பாதுகாப்பு உபகரணங்களைப் பெறுவதில்கூட மருத்துவர்களுக்குச் சிரமங்கள் இருக்கின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை.
- ஊரடங்கை மீறியதாக மருத்துவர்கள் காவல் துறையினரால் தாக்கப்பட்ட சில சம்பவங்கள் கடும் அதிருப்தியை உருவாக்கிவிட்டது என்பதும் மறுக்க முடியாதது.
- பொதுப் போக்குவரத்து முடக்கத்தின் காரணமாக செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர் மருத்துவமனைக்கு வருவதும் சிக்கலாகியுள்ளது. ஆக, பெரும்பான்மை தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், அரசு மருத்துவமனைகள் கூடுதல் நெருக்கடியை எதிர்கொள்கின்றன.
- இவை எல்லாமுமாகச் சேர்ந்து, தொடர் சிகிச்சையில் இருந்துவந்த லட்சக்கணக்கான நோயாளிகளின் நிலையைக் கேள்விக்குறியாக்கி உள்ளது. குறிப்பாக, அறுவைச் சிகிச்சைக்கு முன்கூட்டித் திட்டமிட்டிருந்தவர்கள் பெரும் மன உளைச்சலில் இருக்கிறார்கள்.
- மருத்துவர்கள், நோயாளிகள் இரு தரப்பினருமே இன்று கரோனாவின் அச்சத்தில் இருக்கிறார்கள். மிக முக்கியமான காரணம், கரோனா தொற்றால் பாதிக்கப்படலாம் என்ற அச்சம்தான்.
- கரோனாவுக்கு எதிரான வியூகங்கள் வகுப்பதில் ஏனைய நோயாளிகளை எப்படி அணுகுவது என்பது தொடர்பிலான வியூகமும் மிக முக்கியமானது; பல்லாயிரக்கணக்கான மனிதர்கள் வழமையான சிகிச்சைகளுக்காகக் காத்திருக்கிறார்கள். அரசு மிக அவசரமாக அணுக வேண்டிய பிரச்சினைகளில் இதுவும் தலையாயது!
நன்றி: தி இந்து (06-05-2020)