TNPSC Thervupettagam

கரோனா போரில் ராணுவ பங்களிப்பு

November 13 , 2020 1529 days 732 0
  • கரோனா தீநுண்மிக்கு எதிரான போரில் மருத்துவர்கள், சுகாதாரத் துறையினர், தூய்மைப் பணியாளர்கள் போன்ற முன்களப் பணியாளர்களின் சேவை மகத்தானது.
  • அதே வேளையில், இப்பணியில் ராணுவ வீரர்களின் சேவை போதிய அளவில் ஊடக வெளிச்சம் பெறவில்லை என்பதே உண்மை.
  • எல்லையில் அந்நிய சக்திகளிடமிருந்து தேசத்தைப் பாதுகாப்பது மட்டுமின்றி, பேரிடர் காலத்தில் மீட்புப் பணியில் துரிதமாக ஈடுபட்டு பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவதிலும் ராணுவத்தினரின் பங்களிப்பு அளப்பரியது.
  • பூகம்பம், வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கைப் பேரிடர் ஏற்படும் சமயங்களில், ஓடோடி வந்து மீட்புப் பணிகளில் ஈடுபடுவது மத்திய ஆயுத போலீஸ் படை (சிஏபிஎப்). அதேபோல், கரோனா பேரிடரிலும் சிஏபிஎப்-இன் சேவை அளவிட முடியாதது.
  • கரோனா தீநுண்மி இந்தியாவில் அதன் கோரமுகத்தை வெளிப்படுத்தும் முன்பே, சிஏபிஎப்-இன் ஒரு பிரிவான இந்திய- திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையை (ஐடிபிபி) சேர்ந்தோர், தில்லி புறநகர் சாவ்லா பகுதியில் 600 படுக்கைகளைக் கொண்ட தனிமைப்படுத்தும் மையத்தை உருவாக்கி, தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வசதிகளை உறுதிப்படுத்தினர்.
  • இதன் காரணமாக கரோனா தீநுண்மியின் பிறப்பிடமான சீனாவின் வூஹானிலிருந்து முதல் கட்டமாக கடந்த பிப்ரவரி 1-இல் தில்லி அழைத்து வரப்பட்ட 324 இந்தியர்களில், 103 பேர் சாவ்லா தனிமைப்படுத்தும் மையத்துக்கும், எஞ்சிய 121 பேர் மானேசரில் அமைந்துள்ள ராணுவப் பகுதிக்கும் அழைத்துச் செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.
  • சாவ்லா பகுதியில் 600 படுக்கைகள் கொண்ட தனிமைப்படுத்தும் மையத்தை அமைக்க ஐடிபிபி-இன் இயக்குநர் ஜெனரல் சுர்ஜீத் சிங் தேஸ்வாலுக்கு மத்திய அரசால் அளிக்கப்பட்ட கால அவகாசம் வெறும் இரண்டு நாள் மட்டுமே.
  • மேலும் ஐடிபிபி அதிகாரிகளுடன் இணைந்து செயல்படும் விதமாக தில்லி சப்தர்ஜங் மருத்துவமனையிலிருந்து நிபுணர்களும் மத்திய சுகாதார - குடும்பநல அமைச்சகத்தால் அனுப்பப்பட்டனர்.
  • சப்தர்ஜங் மருத்துவர்களும், ஐடிபிபி-இன் துணைநிலை மருத்துவர்களும் இணைந்து தனிமைப்படுத்தும் மையத்துக்கு அழைத்து வரப்பட்டவர்களின் உடல்நிலையை கண்காணித்தனர்.
  • இதனால்தான் மக்கள்தொகை மிகுந்த நம் நாட்டில், கரோனா பரவலின் ஆரம்ப கட்டத்திலேயே அதை எளிதாக எதிர்கொள்ள முடிந்தது.
  • இது தவிர, தில்லியின் சாத்தர்பூர் பகுதியில் 10,000 படுக்கை வசதிகளைக் கொண்ட தனிமைப்படுத்தும் மையம் ஐடிபிபி சார்பில் ஏற்படுத்தப்பட்டது. உலகின் மிகப் பெரிய தனிமைப்படுத்தும் மையம் என அழைக்கப்படும் இந்த மையத்தில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
  • இதன் காரணமாக, நாடு முழுவதும் 37 மையங்களில், 75 வார்டுகளுடன் கூடிய 5,400 படுக்கைகளைக் கொண்ட தனிமைப்படுத்தும் மையங்களை உருவாக்குமாறு சிஏபிஎப்-ஐ மத்திய உள்துறை அமைச்சகம் பணித்தது.
  • சிஏபிஎப்-ஐ பொருத்தமட்டில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎப்), எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்), மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எப்), சஷஸ்த்ரா சீம்பால் (எஸ்எஸ்பி), அஸ்ஸாம் ரைஃபிள்ஸ், ஐடிபிபி ஆகிய பிரிவினர் அங்கம் வகிக்கின்றனர்.
  • இதில், கரோனா பொது முடக்கத்தால் இடம் பெயர்ந்தவர்களுக்கு உதவும் வகையில், சிஆர்பிஎப்-க்கு மத்திய உள்துறை அமைச்சகத்தால் ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
  • இதேபோல், கரோனாவுக்கு எதிரான போரில், தேசிய பேரிடர் மீட்பு படையினரின் (என்டிஆர்எப்) பங்களிப்பும் உரிய கவனம் பெறவில்லை. பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதோடு மட்டும் இவர்களது பணி முடிவடைவதில்லை. அனைத்து மாநில பேரிடர் மீட்புப் படையினருக்கும் பயிற்சியளித்து அவர்களையும் மீட்புப் பணியில் ஈடுபடச் செய்தனர். 
  • நோய்த்தொற்றுப் பரவல் அச்சத்தால், வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களின் உடல்நிலை விமான நிலைய குடியேற்ற அதிகாரிகளால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இவர்களுக்குப் பயிற்சியளித்து, கரோனாவை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு தேசிய பேரிடர் மீட்புப் படையினர் வெகுவாக உதவினர்.
  • இவ்வாறாக, இந்திய பிரதமரை தலைவராகக் கொண்டு செயல்படும் என்டிஆர்எப், கரோனா காலத்தில் நாடு முழுவதும் இதுவரை 30,000-க்கும் மேற்பட்டோருக்கு பேரிடர் மேலாண்மை, மீட்புப் பணிகள் குறித்து பயிற்சியளித்து கரோனா பேரிடருக்கு எதிரான போரில் சிறப்பான கடமையாற்றி வருகிறது.
  • தேசிய பேரிடர் மீட்புப் படையினர்  ஒரு பட்டாலியனுக்கு 1,149 வீரர்கள் வீதம் 12 பட்டாலியன்களாக நாடு முழுவதும் செயல்படுகின்றனர். இதில் நிபுணத்துவம் பெற்றவர்கள் கொவைட் 19 போரை எதிர்கொள்வதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்வதில் கைதேர்ந்தவர்கள்.
  • எனினும், இதில் சில சீர்திருத்தங்களைக் கொண்டுவருவது அவசியமாகிறது. முதலாவதாக, பயிற்சி பெற்ற வீரர்களின் மன உறுதியைப் பெருக்குவதில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்.
  • ஏனென்றால், மத்திய ஆயுத போலீஸ் படையின் ஓர் அங்கமான தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பணியை நிறைவு செய்ததும் மீண்டும் தங்கள் தாய் அமைப்புக்கே திரும்ப நேரிடுகிறது.
  • இந்த வழக்கத்தைக் கைவிட்டு இதுபோன்ற பயிற்சி பெற்ற தேர்ந்த வீரர்களை தனிமைப்படுத்தும் மையங்களிலேயே பணியமர்த்தலாம்.
  • ஏற்கெனவே, எம்பிபிஎஸ் மருத்துவர்களுக்கு நிகரான குடும்பநல சிகிச்சை முறைகளை பல் மருத்துவர்களும் மேற்கொள்ளும் பொருட்டு அதற்கான இணைப்புப் பாடங்களை நடத்த வேண்டுமென நீதி ஆயோக் கடந்த ஆண்டு பரிந்துரை செய்திருந்தது.
  • இரு கல்வி முறையும் முதல் மூன்று ஆண்டுகள் ஒரே பயிற்சியையும், பாடத்திட்டங்களையும் கொண்டிருப்பதால் இந்தப் பரிந்துரையை நீதி ஆயோக் முன்வைத்தது.
  • இதை ஏற்று, தேர்ந்த மருத்துவர்களை அவசரக் காலங்களில் சேவை புரியும் வகையில் எப்போதும் தயார்நிலையில் வைத்திருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கலாம்.
  • இதன் மூலம், பேரிடர் காலங்களில் உயிரிழப்புகளைத் தவிர்ப்பது மட்டுமின்றி, நகர்ப்புறங்களுக்கு இணையான உயர் மருத்துவ வசதிகளை சமூகத்தில் பின்தங்கிய, தொலைதூர பகுதிகளில் வசிக்கும் குடிமக்களுக்கு உறுதி செய்யவும் முடியும்.

நன்றி : தினமணி (13-11-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்