- கடந்த ஆண்டு மார்ச்சில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு ஒரு வாரத்துக்குப் பிறகு, யாருக்காவது ஏதாவது அவசரமாகத் தேவையா என்ற கேள்வியை கெவின் சைமன் (40) தனது ஃபேஸ்புக்கில் நிலைத்தகவலாக இட்டார்.
- 80-களைக் கடந்த தம்பதியருக்கு மருந்துகள் தேவைப்படுவதாக ஒரு நண்பர் செய்தி அனுப்பினார். திருவனந்தபுரத்தில் வாழும் கெவினும் அவரது இணையரான மெரின் மேத்யூவும் (27) அந்த மூத்த தம்பதியருக்கு மருந்துகளைக் கொண்டுபோய் சேர்த்தார்கள். அப்போதிருந்தே குழந்தைகளுக்கான பொருட்கள், மளிகைச் சாமான்கள், சுகாதாரத்துக்கான பொருட்கள், இன்னும் பலவும் என்று கேட்புகள் குவிய ஆரம்பித்தன.
- இரண்டரை மாதங்கள் கடந்து பொதுமுடக்கம் தளர்த்தப்பட்டதும் அத்தியாவசியமற்ற பொருட்களையும் மக்கள் கேட்கத் தொடங்கினார்கள். இதில் ஒரு தொழில் வாய்ப்பு இருப்பதை உணர்ந்த கெவின் – மெரின் தம்பதியர், ஏற்கெனவே அவர்கள் நடத்திவரும் 16 ஆண்டு கால நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனம் கடும் வீழ்ச்சியைச் சந்தித்திருப்பதால், ‘கார்ட்வீல் கான்ஸியர்ஜ் வென்ச்சர்ஸ்’ என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்கள்.
- அதைத் தொடர்ந்து கேரளம் சார்ந்த பொருட்களுக்கு உலக அளவில் அவர்களுக்குக் கேட்பு வரத் தொடங்கியது. “ஒருமுறை திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு அடுமனையில் உயரமான கேக் ஒன்றைப் பெற்று, அங்கிருந்து எட்டு மணி நேரத் தொலைவில் இருக்கும் பட்டாம்பிக்கு, ஒரு பிறந்த நாள் நிகழ்வுக்காக அனுப்ப வேண்டியிருந்தது” என்கிறார் மெரின்.
- இதுபோல் நிறைய கேட்புகள் வந்தன. துபாயில் 10 மாதங்கள் சிக்கிக்கொண்ட ஒரு மூதாட்டி, திரும்பி வருவதற்காக அவர் வீட்டை (சுத்தப்படுத்தி, உரிய கட்டணங்களைச் செலுத்தி, மளிகைச் சாமான்களை வாங்கிவைத்து) தயார்ப்படுத்த வேண்டியிருந்தது என்கிறார் மெரின்.
- அவர்களுடைய நிகழ்ச்சி மேலாண்மைத் தொழில் இன்னும் நடைபெற்றுக்கொண்டிருந்தாலும் கடுமையான பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது. “நவம்பர் 2019-ல் 10 திருமண நிகழ்வுகள் நடத்தினோம். 2020-ல் அதில் பாதிக்கும் குறைவுதான்” என்கிறார் மெரின்.
- அவர்களுடைய அலுவலகத்தை விட வேண்டியும் ஊழியர்களை வேலைநீக்கம் செய்ய வேண்டியும் வந்தது. அவர்களைத் தற்போது சுயாதீனப் பணியாளர்களாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.
- பலரும் வேலையிழப்பையும் ஊதியக் குறைப்பையும் தொழில் நொடிப்பையும் அச்சத்தையும் தங்கள் பணி தொடர்பான நிச்சயமின்மையையும் எதிர்கொண்டிருப்பதால் வருமான வாய்ப்புகளைப் பெருக்கிக்கொள்வதற்கான வழிகளைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
- “ஒவ்வொருவரும் வித்தியாசமாக யோசிக்க வேண்டிய நிலைக்கும், பெருந்தொற்றுக்கு முன்னால் அவர்கள் சௌகரியமாக அணிந்துகொண்டிருந்த அங்கியைக் கழற்றியெறிய வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டிருக்கின்றனர்” என்கிறார் குருகிராமைச் சேர்ந்த ‘ப்ளூமைண்ட்ஸ்’ நிறுவனத்தின் இணை நிறுவனரும் மனித வள ஆலோசகருமான விஷ்வப்ரியா கோச்சார்.
வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுதல்
- 2020-ன் தொடக்கத்தில் ஆயிரம் பேருக்கு மேற்பட்டோரிடம் ‘ஹார்வர்டு பிஸினஸ் ரிவ்யூ’ நடத்திய ஆய்வு முடிவுகளை வெளியிட்டது. அதில் பங்கேற்றவர்கள் சராசரியாக வாரத்துக்கு நான்கு நாட்களில் மொத்தம் 13 மணி நேரம் பகுதிநேரப் பணிபுரிந்திருக்கிறார்கள்.
- அந்த இதழில் ஒரு கட்டுரையானது இப்படிக் குறிப்பிட்டிருந்தது: “பகுதிநேரப் பணிகளை நாடுவதற்கு மக்கள் தங்களின் வருமானத்தையும் அந்தஸ்தையும் உயர்த்திக்கொள்ள விரும்புவதுதான் முதன்மையான நோக்கமாக இருக்கிறது.”
- ஊடகங்களில் 10 ஆண்டு அனுபவம் கொண்டிருந்த ரேவதி ராவ் 2015-ல் ‘பிக்கு பேக்ஸ்’ என்ற அடுமனைத் தொழிலை டெல்லியிலுள்ள தனது வீட்டிலிருந்தே தொடங்கினார். “ஒன்பதாவது படிக்கும்போது எனது முதல் கேக்கை நான் தயாரித்தேன், என் சகாக்களுக்காகவோ நண்பர்களுக்காகவோ கேக் செய்துதரும்போது அதற்கு நான் பணம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துவார்கள்” என்கிறார் ரேவதி.
- ஆகவே, தான் வேலை பார்த்த ஊடக நிறுவனத்தில் அவர் தனது பணியை ஆலோசகராக மாற்றிக்கொண்டார். பெருந்தொற்று தொடங்கியது அவருக்கு வந்த கேட்புகள் 50% அதிகரித்தன. பொதுமுடக்கம் தொடங்கி நான்கு மாதங்களில் அவர் வேலை பார்த்துவந்த செய்தித்தாள் இழுத்து மூடப்பட்டு, அவர் தனது வேலையை இழந்தார். சுயாதீனப் பத்திரிகையாளராக போதுமான வருமானத்தை அவரால் ஈட்ட முடியவில்லை. ஆகவே, அடுமனைத் தொழிலே அவரது முதன்மையான தொழிலாக ஆயிற்று.
- “பெருந்தொற்றுக்கு முன்பு எனது மொத்த வருமானத்தில் பகுதிநேர வேலையால் கிடைத்த வருமானம் 30% ஆக இருந்தது. பெருந்தொற்று தொடங்கியபோது அது 50% ஆனது, தற்போது இதை நான் முழுநேர வேலையாகப் பார்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில் 80% வருமானம் இதிலிருந்து கிடைக்கிறது” என்கிறார் ரேவதி.
- ரேவதி மட்டுமல்ல, பலரும் பெருந்தொற்றுக் காலத்தில் உணவுத் தொழிலில் பகுதிநேரமாக இறங்கியுள்ளார்கள். இது ஆபத்தில்லாத தொழிலாகவும், குறைந்த அளவே முதலீடு தேவைப்படுவதாகவும், வீட்டிலிருந்தே செய்யக்கூடியதாகவும் இருக்கிறது.
இரண்டு வகைகள்
- மனிதவள ஆலோசகர் விஷ்வப்ரியாவைப் பொறுத்தவரை பெருந்தொற்றுக் காலத்தில் உருவாகியிருக்கும் வருமான வாய்ப்புகளை இரண்டாகப் பிரித்துக்கொள்ளலாம்: கற்றல் தொடர்பான தொழில்கள், வாழ்க்கைமுறை தொடர்பான தொழில்கள். முந்தையது மக்கள் தங்கள் திறமைகளைச் சிறிய நிறுவனங்கள், மாணவர்கள், பிறர் போன்றோர் பயன்படுத்திக்கொள்ள அனுமதிப்பது தொடர்பானது.
- வீட்டிலிருந்தே வேலை பார்த்தல், டிஜிட்டல் சந்திப்புகள், இணையவழி கற்றல் தளங்கள் போன்றவற்றால் இது சாத்தியமாகிறது. வாழ்க்கைமுறை தொழில்கள் என்பது உணவு, உடற்பயிற்சி, அழகுத் தொழில், பொழுதுபோக்கு போன்றவற்றில் மேற்கொள்ளப்படும் சிறு முயற்சிகளைக் குறிக்கும்.
- ஊர்விஜா கூர்யேவின் (28) இணையவழி நடன வகுப்புகள் பிந்தைய வகையைச் சேர்ந்தவை. மும்பையைச் சேர்ந்த ஊர்விஜா திருமண நடன வகுப்புகளை மூன்றாண்டுகளுக்கு முன்பு தொடங்கினார். நண்பர் ஒருவருக்காக அவர் இதனை முதன்முதலில் செய்தார். அதற்குக் கணிசமான தொகை அடங்கிய காசோலை அவருக்கு வழங்கப்பட்டபோது அவர் வியப்பில் ஆழ்ந்தார். வார விடுமுறை நாட்களில் அவர் நடன வகுப்புகள் எடுக்க ஆரம்பித்தார். சில மாதங்களில் அவரது ‘ரசா ராகா டான்ஸ் ஸ்டூடியோ’ உருவாகிச் செயல்பட ஆரம்பித்தது.
- ஒரு புதிய நிறுவனத்துக்கான தொழிலக வழக்கறிஞராக இருந்த ஊர்விஜாவின் பணியானது நெகிழ்வுத்தன்மை கொண்டதாகவே இருந்தது. ஆனால், எம்பிஏ படிப்பதற்காக அந்த வேலையை 2020-ல் அவர் விட வேண்டிவந்தது.
- படிப்புகளெல்லாம் இந்த ஆண்டு நிச்சயமற்றுப் போனதாலும் அவருக்கு எந்த நிறுவனத்திலும் வேலை கிடைக்காததாலும் ஊர்விஜா தனது நடன வகுப்பையே முதன்மையான பணியாக மாற்றிக்கொண்டார். பெருநிறுவன நடனப் பயிற்சிகள், சிறாருக்கான வகுப்புகள், பெண்களுக்கான வகுப்புகள் என்று அவர் தன் தொழிலை விரிவுபடுத்தினார். பாலிவுட் நடனம், பாலி-ஃபிட், பரதநாட்டியம் போன்றவற்றை அவரது வகுப்புகள் உள்ளடக்குகின்றன.
- ஒருபக்கம் மக்களின் வாழ்வாதாரங்களைப் பெருந்தொற்று பறித்துக்கொண்டாலும் இன்னொரு பக்கம் புதிய வாய்ப்புகளை வழங்கியிருக்கிறது. பொதுமுடக்கம் தொடங்கியதும் புதுச்சேரியைச் சேர்ந்த தேசிரீ அன்வர் (38) தனது மக்கள்தொடர்பு தொழிலில் ஏராளமான வாடிக்கையாளர்களை இழந்தார். ஆகவே, ஓவியம் வரைதலின் பக்கம் அவரது பார்வை மறுபடியும் திரும்பியிருக்கிறது.
- சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு காபி கடையை அவர் நடத்தியபோது தனது ஓவியங்களை அங்கே அவர் விற்பனைக்கு வைத்திருந்தது குறிப்பிடத்தகுந்தது.
- புதிய முயற்சிகளில் கால் பதித்த எல்லோருமே அதிர்ஷ்டசாலிகள் என்று சொல்லிவிட முடியாது. எனினும், திறமை, படைப்புத்திறன், துணிவு போன்றவற்றுக்குக் குறைவில்லை என்பதைப் பார்க்கும்போது, உற்சாகமாக இருக்கிறது.
- சம்பளக் குறைப்பு, வேலையிழப்பு, விலைவாசி அதிகரிப்பு போன்றவற்றை எதிர்கொண்டிருக்கும் பலரும் மிகுந்த பொறுமையுடன் இருந்து, மிகவும் மோசமான 2020-ல் தங்களால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்துவந்திருக்கிறார்கள். அப்படி நடக்கும்வரை நல்லதுதான்!
நன்றி: இந்து தமிழ் திசை (05 -01 -2021)