TNPSC Thervupettagam

கரோனா வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் தயங்கியது ஏன்?

January 29 , 2020 1811 days 864 0
  • உலகம் முழுவதையும் அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது கரோனா வைரஸ். சீனாவில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மனிதர்களிடம் இந்த வைரஸ் பரவியிருப்பதை அவர்களுக்கு சளி, நிமோனியா காய்ச்சல், கடுமையான இருமல், மூச்சுவிடுவதில் சிரமம், கல்லீரல், சிறுநீரகப் பாதிப்பு ஆகியவற்றைச் சோதித்து அறிந்த பிறகே தெரிந்துகொள்ள முடியும்.

கரோனா வைரஸ் தாக்குதல்

  • தெரிந்துகொள்ள நேரும்போது, நோய் முற்றி மரணத்தை நெருங்கிவிடவும் வாய்ப்பிருக்கிறது. இவ்வளவு கொடிய நோய்ப் பரவல் குறித்து, இதுவரை உலக அளவில் நெருக்கடி இருப்பதாக எச்சரிக்கப்படவில்லை. அதேவேளையில், சீனாவிலேயே இது பரவும் வேகத்தையும், இதற்குப் பலியானோரின் எண்ணிக்கை குறித்தும் உலக சுகாதார நிறுவனம் தொடர்ச்சியாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கவில்லை.
  • அந்தப் பக்கத்தை உலகம் முழுக்க 51 லட்சம் பேர், அதிலும் மருத்துவர்கள் உள்ளிட்ட விவரம் தெரிந்தோர் பின்பற்றுகின்றனர். எனவே, அது தொடர்ந்து தகவல்களைப் புதுப்பிப்பதுடன் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று எச்சரிப்பதும் அவசியம்.
  • சீனாவின் ஹுபெய் மாநிலத்தின் வூஹான் மாநகரில் மீன், நண்டு, நத்தை உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களை விற்கும் மொத்த விலைச் சந்தையிலிருந்து இந்த வைரஸ் கடந்த ஆண்டின் இறுதி நாளான டிசம்பர் 31-ல் பரவியதாகக் கூறுகின்றனர்.
  • ஜனவரி 17-ல் உலக சுகாதார நிறுவனம் முதலில் இதை ட்விட்டரில் தெரிவித்தது. சீனாவில் ட்விட்டர் கிடைக்காததால் ‘வெய்போ’ என்ற சீன வலைப்பூ அமைப்புக்குத் தகவல்களைத் தெரிவித்தது. ஆனால், தகவல்கள் தொடர்ச்சியாகவும் முழுமையாகவும் இல்லாமல் விட்டுவிட்டும் அரைகுறையாகவுமே இருந்தன.
  • நான்கு நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் ஜனவரி 21-ல்தான் தகவல்களைத் தரத் தொடங்கியது. அதிலும்கூட உலக சுகாதார நிறுவனத்தின் மேற்கு பசிபிக் பிராந்தியம் அளிக்கும் தகவல்களை மற்றவர்களுக்குத் தெரிவிப்பதில் தயக்கம் காட்டியது.

உலக சுகாதார நிறுவனம்...

  • ஜனவரி 17-ல் உலக சுகாதார நிறுவனம் தகவல் தந்தபோது, 41 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டதாகவும் 2 பேர் இறந்ததாகவும் உறுதிசெய்யப்பட்டது. உலக சுகாதார நிறுவனம் மௌனம் காத்த அந்த நான்கு நாட்களில் அது மிகப் பெரும் அளவில் பரவி வேறு நாடுகளையும் பீடிக்கத் தொடங்கியது.
  • ஜனவரி 21-ல் வூஹான் மாநகரில் மட்டும் 222 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், 4 பேர் இறந்துவிட்டதாகவும் உலக சுகாதார நிறுவனத்தின் மேற்கு பசிபிக் பிராந்தியக் கிளை தெரிவித்தது. அன்று மாலையில் அதுவே பாதிக்கப்பட்டோர் 282, இறந்தோர் 6 என்றது. ஜனவரி 22-ல் வைரஸ் தொற்றுக்கு ஆளானோர் 440, இறந்தோர் 17 என்று சீன தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்தது. உலக சுகாதார நிறுவனம் இதைத் தன்னுடைய ட்விட்டரில் சேர்க்கவே இல்லை.
  • சீனாவிலேயே வூஹானிலிருந்து 13 மாநிலங்களுக்கு வைரஸ் தொற்று பரவியது. குவாங்டாங்கில் 26, பெய்ஜிங்கில் 10, ஷாங்காயில் 9 என்று நோய் பாதிப்பு அதிகரித்தது. தாய்லாந்து, ஜப்பான் நாடுகளில் ஜனவரி 17-ல் இரண்டு பேர் இறந்தனர். ஜனவரி 21-க்குப் பிறகு அமெரிக்கா, தாய்வான் நாடுகளிலும் தலா ஒருவருக்கு வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.

சீனாவில்...

  • சீன சுகாதாரத் துறைப் பணியாளர்களில் 15 பேர் வைரஸ் தொற்றால் இறந்துவிட்டனர் என்று உலக சுகாதார நிறுவனத்தின் மேற்கு பசிபிக் பிராந்தியக் கிளை பின்னர் உறுதிப்படுத்தியது. அதற்கும் முன்னால், மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு இந்த வைரஸ் தொற்றியிருப்பதாகவும், ஆனால் எண்ணிக்கை குறைவு என்றும்கூட அது ட்விட்டரில் வெளிப்படையாகத் தெரிவித்திருந்தது.
  • நோய்த் தொற்றுக்கு ஆளானவர்கள் நகரின் கடல்வாழ் உயிரினங்கள் விற்கப்படும் சந்தைக்குச் செல்லவில்லை என்றும் தெரிவித்தது. அந்தச் சமயத்தில் சுகாதார ஊழியர் ஒருவரும் நோய்த் தொற்றால் பாதிக்கப்படவில்லை. பிறகு, சுகாதார ஊழியர்களுக்கும் பரவியிருக்கிறது என்பதிலிருந்து மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் அளவுக்கு அந்த நோய்க்கிருமி வளர்ந்துவிட்டது என்பது புலனாகிறது.
  • இந்த வைரஸ் எங்கிருந்து எப்படிப் பரவியது என்பது முழுதாகத் தெரியாவிட்டாலும் ஜனவரி 17 முதல் 21 வரையில் இந்நோய் தொடர்பான ஒவ்வொரு தகவலும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அது உலகம் முழுவதும் தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.
  • ஜனவரி 22-ல், கரோனா வைரஸ் பரவுவது குறித்து அவசரகாலக் கூட்டத்துக்கு உலக சுகாதார நிறுவனம் ஏற்பாடு செய்தது. சர்வதேச அளவில் மக்களையும் அரசுகளையும் எச்சரிக்க வேண்டுமா, இந்நோய் பரவாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானிக்க அந்தக் கூட்டம் கூட்டப்பட்டது.
  • உலகின் எந்தப் பகுதியில் புதிதாக ஒரு வைரஸ் பரவினாலும், நோயால் பலர் இறந்தாலும் உரிய காலத்தில், உரிய விதத்தில் உலக சுகாதார நிறுவனம் மக்களை எச்சரிப்பதில்லை என்று ஏற்கெனவே பல முறை புகார்கள் கூறப்பட்டுள்ளன.
  • கரோனா வைரஸ் போன்ற நோய்த் தாக்குதல் ஏற்படும்போது முழுமையான தகவல்களை அனைவருக்கும் தெரிவிப்பது உலக சுகாதார நிறுவனத்தின் கடமை. சீனாவில் நிலவுப் புத்தாண்டு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், இந்த வைரஸ் தொற்று அரசையும் மக்களையும் முடக்கிவிட்டது.
  • ஏராளமானவர்கள் தங்களுடைய வீடுகளிலிருந்து வெளியே வரவில்லை. ஆனால் வெளியூர்கள், வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் குடும்பத்தாருடன் விடுமுறையைக் கொண்டாட ஊர் திரும்பிக்கொண்டிருக்கின்றனர். எனவே, வைரஸ் பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று சீனாவும் பிற நாடுகளும் அச்சத்தில் இருக்கின்றன.

நன்றி: இந்து தமிழ் திசை (29-01-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்