- தற்போதைய கரோனா காலத்தில் முகக்கவசம் அணிய மறுத்தால், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கத் தவறினால், மக்கள் கூடும் இடங்களுக்குத் தகுந்த பாதுகாப்பு இல்லாமல் சென்றால், அரசமரத்தடி ஆண்டி ஆனாலும் அரசாளும் அதிபர் ஆனாலும் கரோனா விட்டுவைக்காது என்பதற்குச் சமீபத்திய உதாரணம், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்.
- அடுத்தவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய அதிபர் ட்ரம்ப், ஆரம்பத்திலிருந்தே முகக்கவசம் அணிவதை விரும்பவில்லை.
- அதன் விளைவு, வெள்ளை மாளிகை முழுவதும் கரோனாவுக்கான கட்டுப்படுத்தப்பட்ட பகுதி என அறிவிக்கும் அளவுக்கு ட்ரம்பின் மனைவி மெலானியா, பணியாளர்கள் பலரும் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
- சமீபத்தில், வால்டர் ரீட் ராணுவ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட அதிபருக்கு ‘ரெம்டெசிவிர்’ எனும் வைரஸ் எதிர்ப்பு மருந்தும் ‘டெக்சாமெத்தசோன்’ எனும் ஸ்டீராய்டு மருந்தும் உடனடியாக வழங்கப்பட்டன.
- இரண்டு முறை ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டது. அமெரிக்காவில் கரோனா பரவத் தொடங்கிய காலத்திலிருந்து மருத்துவர்களின் கருத்துக்கு எதிராக ‘ஹைட்ராக்ஸி குளோரோகுவின்’ மாத்திரையை கரோனாவுக்குரிய அருமருந்தாக ட்ரம்ப் அறிவித்துக்கொண்டிருந்தார்.
- ஆனால், அந்த மருந்து அவருக்கு வழங்கப்படவில்லை; மாறாக, ‘ரீஜென்-கோவ்2’ (REGN-COV2) எனும் மருந்து வழங்கப்பட்டுள்ளது.
- இது கரோனாவுக்கு நேரடி நிவாரணம் தரும் மருந்து இல்லை. அமெரிக்க ஒழுங்குமுறை அமைப்புகளால் இன்னும் சான்றளிக்கப்படவில்லை. அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் ஆய்வுநிலையில் உள்ளது. இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்ட எந்தவோர் உலகத் தலைவருக்கும் அரசியலர்களுக்கும் பிரபலங்களுக்கும் வழங்கப்படாத புதுமை மருந்து.
எதிரணு மருந்து
- இது ‘ரத்த எதிரணுக்களைக் கொண்டு கரோனாவைக் கட்டுப்படுத்தலாம்’ எனும் அடிப்படை அறிவியலில் தயாரிக்கப்பட்ட ஓர் எதிரணு மருந்து (Antibody drug).
- எதிரணுக்களை இயற்கையாகவும் பெறலாம், செயற்கையாகவும் தயாரிக்கலாம். உதாரணத்துக்கு, ‘பிளாஸ்மா சிகிச்சை’யைச் சொல்லலாம். இந்தியாவிலும் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல நாடுகளிலும் பிளாஸ்மா தானம் மூலம் இயற்கையாக் கிடைக்கும் எதிரணுக்களைப் பெற்று கரோனா தொற்றாளர்களுக்குச் செலுத்துகிறார்கள். இது இயற்கை வழி. ஆனால், இது ட்ரம்ப்புக்கு வழங்கப்படவில்லை. மாறாக, செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட மருந்துதான் செலுத்தப்பட்டுள்ளது.
- இது அமெரிக்காவில் ரீஜெனிரான் மருந்து நிறுவனத்தின் (Regeneron pharmaceuticals) புதிய தயாரிப்பு.
- ‘ஒற்றைப்படியாக்க எதிரணு மருந்து’ (Monoclonal antibody) வகையைச் சேர்ந்தது. வைரஸ், பாக்டீரியா, புற்றுநோய் செல்களை அழிக்கும் ஆற்றல் உடையது.
- புற்றுநோய், கீல்வாத மூட்டுவலி மருந்தாக இதுவரை பார்க்கப்பட்ட இந்த மருந்தைச் சமீப காலங்களில் கரோனாவுக்காகவும் கொடுத்துப் பார்க்கின்றனர்.
- அமெரிக்காவிலும் இந்தியாவிலும் ஆபத்தான நிலையில் உள்ள கடைசிக் கட்ட கரோனா நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கப்படும் ‘டோசிலிஸுமாப்’ (Tocilizumab) இதே மருந்து வகையைச் சேர்ந்ததுதான்.
- ஆனாலும், ட்ரம்ப்புக்கு இது வழங்கப்படவில்லை. இப்படி, ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் பல மருந்துகளைப் புறந்தள்ளிவிட்டு, இன்னமும் ஆய்வுநிலையில் உள்ள புதிய மருந்தை அமெரிக்க அதிபருக்கு வழங்கியது ஏன்?
தயாரிப்பில் ஒரு புதுமை
- ‘ரீஜென்-கோவ்2’ மருந்து ‘ஒற்றைப்படியாக்க எதிரணு மருந்து’தான் என்றாலும் இதன் தயாரிப்பில் ரீஜெனிரான் நிறுவனம் ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டது.
- அதாவது, ‘ரீஜென்10933’, ‘ரீஜென்10987’ எனும் இரண்டு ஒற்றைப்படியாக்க எதிரணுக்களை முதலில் உருவாக்கிக்கொண்டது.
- எப்படியெனில், கரோனா தொற்றாளர்கள் உடல்நிலை தேறிவரும்போது அவர்கள் ரத்த பிளாஸ்மாவில் உருவாகும் எதிரணுக்களை ஒரு ஊடகத்தில் சேகரித்துக்கொண்டனர்.
- இது ‘ரீஜென்10933’. அடுத்து, மனிதரைப் போல் மரபணு மாற்றம் செய்யப்பட்ட சுண்டெலிகளுக்கு கரோனா கிருமிகளைச் செலுத்தி, 3 வாரங்கள் கழித்து அவற்றின் ரத்தத்தில் உருவாகும் எதிரணுக்களையும் சேகரித்துக்கொண்டனர். இது ‘ரீஜென்10987’.
- இந்த இரண்டையும் ஆய்வகத்தில் செயற்கைமுறையில் ஒன்றாக இணைத்து, மரபணுப் பொறியியல் முறையில் (Genetic engineering) கரோனா கிருமிகளைத் தாக்கும் தன்மையை அதில் புகுத்தி மருந்தாகத் தயாரித்தனர்.
- இந்த இரண்டு எதிரணு மருந்தில் ஒன்று மனித மரபணு கொண்டது. மற்றொன்று, விலங்கு மரபணு கொண்டது. கரோனா முதலில் விலங்கினத்திலிருந்து பரவி, அடுத்ததாக மனிதர்களுக்குப் பரவியதாகக் கருதப்படுவதால், இந்த இரட்டை எதிரணு மருந்துக்குக் கூடுதல் பலம் கிடைக்கலாம் என்று நம்பப்படுகிறது.
- இந்த மருந்தை ஆய்வு அடிப்படையில் முதல் கட்டமாக, முயல்களுக்கு கரோனா தொற்றை ஏற்படுத்தி, அவற்றுக்குக் கொடுத்துப் பார்த்தனர்.
- அடுத்து, உடற்பருமன், உயர் ரத்த அழுத்தம் போன்ற துணை நோய்கள் உடைய 275 கரோனா தொற்றாளர்களுக்குக் கொடுத்துப் பரிசோதித்தனர். அவர்கள் ரத்தத்தில் கரோனா வைரஸ் உடனடியாகக் காணாமல்போனது. அவர்களுக்கு ஏற்பட்ட நிமோனியாவும் விரைவில் குணமடைந்தது.
- இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலும் இந்த மருந்துக்கு இதேபோன்று நல்ல பலன் கிடைத்தது. இதன் செயல்திறன் என்னவென்றால், வைரஸின் கூர்ப்புரதங்களை இந்த மருந்தில் உள்ள எதிரணுக்கள் அடியோடு ஒழித்துவிடுவதால், கரோனா கிருமிகள் மனித உடல் செல்களுக்குள் நுழைய முடிவதில்லை.
- அவை பலமிழந்து முழுவதுமாக அழிந்தும் போகின்றன. இதன் பலனால் ரத்தத்தில் வைரஸ் சுமை உடனே குறைந்துவிடுகிறது.
உலகுக்கு வழிகாட்டுமா?
- பொதுவாக, ஒற்றைப்படியாக்க எதிரணு மருந்தில் ஒரு எதிரணு மருந்து மட்டும் இருக்கும்.
- அதனால், சமயங்களில் கரோனா கிருமிகளின் உடல் பகுதிகள் சில அழிக்கப்படாமல் தப்பித்துக்கொள்ள வாய்ப்பு உண்டு.
- ஒற்றை மாட்டு வண்டியைவிட இரட்டை மாட்டு வண்டியின் வேகம் அதிகம் என்பதுபோல 8 கிராம் அளவில் ஒருமுறை மட்டும் கொடுக்கப்படும் ‘ரீஜென்-கோவ்2’ ஊசி மருந்தில் இரண்டு எதிரணு மருந்துகள் உள்ளதால் இதன் வீரியம் அதிகம்; கரோனா கிருமிகள் இதில் தப்பிக்க வழியில்லை. இதுவே இந்த மருந்தின் சிறப்புத் தன்மையாகப் பார்க்கப்படுகிறது.
- இப்போது அமெரிக்க அதிபருக்குச் சந்தேகத்துக்கு இடமின்றி இந்த மருந்து வழங்கப்பட்டுள்ள நிலையில், விரைவிலேயே இது கரோனா மருந்தாக அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உலக அளவில் அதிகரித்துள்ளது.
- சென்ற வாரப் பங்குச்சதையில் ரீஜெனிரான் மருந்து நிறுவனத்தின் பங்குகள் பல மடங்கு எகிறியுள்ள செய்தி இதை உறுதிப்படுத்துகிறது.
நன்றி: தி இந்து (08-10-2020)