- கரோனா பெருந்தொற்றால் கல்வி, பொருளாதாரம், சமூகம், அரசியல், வேலைவாய்ப்பு, உடல்நலம், மனநலம் என அனைத்திலும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
- குறிப்பாக, ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் வேலைவாய்ப்பு, ஊதியத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் அவர்களின் பொருளாதாரத்திலும் மனநலத்திலும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கின்றன.
- இது நேரடியாகக் குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்தைப் பாதிக்கும் என்றே தோன்றுகிறது.
- இப்போதுள்ள சூழ்நிலையில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை நல்ல பள்ளிகளில் படிக்க வைக்க முடியுமா என்பதே பெரும் கேள்விக்குறியாகிவிட்டது.
- பல கல்வி நிறுவனங்கள் கல்விக் கட்டணத்தைச் செலுத்தினால் மட்டுமே பாடநூல்களைத் தர முடியும், இணையவழி வகுப்புகளும் நடத்த முடியும் எனக் கூறிய நிலையில், நீதிமன்றங்களின் அறிவுறுத்தல் காரணமாக, சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும் ஏழை, கிராமப்புற மாணவர்களின் கல்வி நிலை கவலை கொள்ளும் விதத்திலேயே உள்ளது.
இணையவழிக் கல்வியும் மாணவர்களும்
- இந்த கரோனா பேரிடர்க் காலத்தில் இணையவழிக் கல்வி முறையே தவிர்க்க இயலாத கற்கும் முறை என்றும் அரசுகளும், சில கல்வியாளர்களும், தனியார் பள்ளிகளும் முடிவெடுத்து அதனை நடைமுறைப்படுத்திவருகின்றன.
- ஆனால், இது கற்றல் மற்றும் கற்பித்தலுக்கான அடிப்படையையே மாற்றிவிடுகிறது. தொடக்கப் பள்ளிக் குழந்தைகள் இணையத்தின் மூலம் கற்பதால் பாடங்களின் பொருளை அவர்களால் தெளிவாக விளங்கிக்கொள்ள முடியும் என்பதற்கான அறிவியல் சார்ந்த ஆய்வுகள் நடத்தப்பட்டதாகத் தெரியவில்லை.
- கல்வி என்பது மாணவர்களின் எதிர்காலம் சார்ந்த விஷயம் மட்டுமல்ல; மாறாக, ஒரு சமூகத்தின் முன்னேற்றமும் அதன் அறிவு வளர்ச்சியும் அதில் அடங்கியுள்ளது.
- இணையவழிக் கற்றலில் பெரும்பாலும் ஆரம்பப் பள்ளி மாணவர்களிடம் ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது. ஆசிரியர்கள் மாணவர்களை நேரடியாகப் பார்க்க முடிவதில்லை, சில மாணவர்கள் வெறும் குரல்களை மட்டும் கேட்கும்படியாகச் செய்து கொள்கிறார்கள்.
- மேலும், சிலர் தங்களது இணையவழிக் கற்றலில் வருகையை மட்டுமே பதிவுசெய்துவிட்டுத் திரையில் ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களைக் கவனிப்பது இல்லை.
- வீட்டில் பெற்றோர்கள் இருக்கும்போது பெயர் குறிப்பிட்டு ஆசிரியர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் தெரியவில்லை என்றால், அச்ச உணர்வுடன் பெற்றோரைப் பார்க்கின்றனர்.
- அதே நேரம், மற்ற மாணவர்கள் பதிலைக் கூறும்போது, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள்மீது கோபப்படுகின்றனர். அல்லது குழந்தைகளுக்குக் கேள்விக்கான பதிலைச் சொல்லிக்கொடுக்கின்றனர்.
- இதனால், மாணவர்களின் சிந்திக்கும் திறனும் கற்றுக்கொள்ளும் ஆர்வமும் குறைந்து விடுகிறது.
- மாணவர்கள் வீட்டுப்பாடங்களை முடித்துவிட்டு வாட்ஸப் மூலம் அனுப்புகின்றனர். அதேவேளை, இந்தப் பதில்கள் அக்குழுவில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் தெரிய வருகிறது.
- இதை மற்ற மாணவர்கள் நகல்செய்து தாங்களும் வாட்ஸப்பில் அனுப்பிவிடுகின்றனர். இதனால், வீட்டுப்பாடம் என்ற முறையே மாறிவிடுகிறது.
- இன்றைய நிலையில், இணையவழிக் கல்வி என்பது மாணவர்களும் பெற்றோர்களும் இணைந்து செயல்படும் ஒரு கூட்டு முயற்சியாகவே உள்ளது. அதிலும் குறிப்பாக 1 முதல் 3-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தினமும் இரண்டு மணி நேரம் இணையத்தில் படிப்பது சவாலாக உள்ளது.
- அதேவேளை, கைபேசியில் மாணவர்கள் அதிக நேரம் கதைகளையும் படங்களையும் விதவிதமான செயலிகளையும் பதிவிறக்கம் செய்துபார்க்கின்றனர்.
- இது ஒரு பக்கம் என்றால், திறன்பேசி வசதியற்ற குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் இன்னொரு பக்கம்.
- அவர்களைப் பொறுத்தவரை இந்த கரோனா பெருந்தொற்றுக் காலத்தில், இந்தக் கல்வி முறை தோற்றுவிட்டது.
- இன்று குழந்தைகள் அதிக அளவு கைபேசியைப் பயன்படுத்துகிறார்கள். மேலும், வீட்டில் இருக்கும் நேரம் தற்போது அதிகமாகிவிட்டதால், தொலைக்காட்சியில் வரும் கார்ட்டூன் படங்களை மிகவும் விரும்பிப் பார்க்கின்றனர்.
- இதனால், ஓடியாடி விளையாடும் நேரம் குறைந்துவிட்டிருக்கிறது. கண்களுக்குப் பாதிப்பு, கண் எரிச்சல், மனஅழுத்தம், மனச்சோர்வு, பசியின்மை, தூக்கமின்மை, நரம்புகள் தொடர்பான இடர்ப்பாடுகள், மற்ற குழந்தைகளுடன் தொடர்பின்மை ஆகிய நெருக்கடிகளைக் குழந்தைகள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
- இணையவழியில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் அதற்கான சிறப்புப் பயிற்சியைப் பெற்றிருக்கிறார்களா என்றால் ‘அநேகமாக இல்லை’ என்றே கூற முடியும்.
- ஆகவே, அவர்களும் பெரும்பாலும் தங்களது வேலையை முடித்துவிட வேண்டும் என்று வேகமாகப் பாடங்களை நடத்திவிடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
- ஒருசில மாணவர்களாலேயே ஆசிரியர்களின் வேகத்துக்கு ஈடுகொடுத்துப் படிக்க முடிகிறது. பெரும்பான்மையான மாணவர்கள் பின்தங்கிவிடுகிறார்கள். இதனால், பாடங்களைப் படிப்பதில் தொடர்பற்ற நிலை ஏற்படுகிறது. மேலும் சில பள்ளிகளில் இணையவழிச் செயலி மூலமாகப் பாடங்களை அனுப்பிவிட்டு, மாணவர்களையே விடைகளைக் கண்டுபிடித்து எழுதச்சொல்லிவிடுகிறார்கள்.
- இதில் பெற்றோர்களின் பங்கு பெரிதாக உள்ளது. எத்தனை பெற்றோர்களால் தங்கள் குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியரைப் போலப் பாடங்கள் சொல்லிக்கொடுக்க முடியும்? மேலும் பெற்றோர்கள் இருவருமே பணிபுரியும்போது, மாணவர்களின் நிலைமை மிகவும் பரிதாபத்துக்குரியதாகிவிடுகிறது.
- அதிலும், அடித்தட்டுக் குடும்பங்களைச் சேர்ந்த பெற்றோர்கள் பலரும் தங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்கும் அளவுக்குக் கல்வியறிவோ வாழ்க்கைப் பாட்டுக்கான போராட்டத்துக்கு இடையில் அதற்கான நேரமோ கொண்டிருப்பதில்லை.
- இதனால் பெரும்பாலும் ஆரம்பப் பள்ளி வகுப்பு மாணவர்களே பெரிதும் பாதிப்படைகிறார்கள்.
- மேலும், இணையவழிக் கல்விச் செயலிகளை மாணவர்கள் ஆன் செய்துவிட்டு, தங்களுக்கு விருப்பமான செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர். இதனால் இணையவழிக் கல்வியின் அடிப்படைக் கோட்பாடு மாறிவிடுகிறது.
- ஏற்கெனவே, 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டுவிட்டன. நவம்பர் 1-ம் தேதி முதல் 1-ம் வகுப்பிலிருந்து 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படவிருக்கின்றன.
- கரோனா பெருந்தொற்றின் போக்கு எப்படி இருக்கும் என்று தெரியாத சூழலில் இணையவழிக் கல்வியும் கல்வி முறையின் ஒரு பகுதியாக மாறிவிட்டது.
- அதற்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது, அதனால் ஏற்படும் கல்விநிலை மாற்றங்கள், மாணவர்களின் மனநிலை, குடும்பப் பொருளாதார நிலை, பெற்றோர்களின் பங்கு, கல்வியறிவு ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
- நாட்டின் கடைக் கோடி மாணவர்களுக்கும் இணையவழிக் கல்வியும் அதன் நன்மைகளும் சென்று சேரும் வகையில், என்று இணையப் பயன்பாடு வருகிறதோ அன்றுதான் இணையக் கல்வியில் தன்னிறைவு பெற முடியும்.
- ஆகவே, இணையவழிக் கல்வியில் பெற்றோர், மாணவர்கள், அரசு, பள்ளி நிர்வாகம் போன்ற அனைவரின் ஒருங்கிணைந்த பங்கேற்பு மிக அவசியமான ஒன்றாகும்.
நன்றி: இந்து தமிழ் திசை (01 - 10 - 2021)