TNPSC Thervupettagam

கர்னாடக இசை தமிழ் மரபு சார்ந்ததே!

November 10 , 2024 5 days 56 0

கர்னாடக இசை தமிழ் மரபு சார்ந்ததே!

  • தொன்மையான தமிழ் இசையின் வரலாற்றைத் தொல்காப்பியம் உள்ளிட்ட சங்க நூல்களின் வழியாகப் பேராசிரியர் அமுதா பாண்டியன் நுட்பத்துடன் ஆய்வுசெய்து இசை சார்ந்த பல நூல்களைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். அண்மையில் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக அரங்கில் ‘கருநாடக இசை என்னும் தமிழிசை தொன்மையும் இலக்கணமும்’ என்கிற தலைப்பில் இவர் சொற்பொழிவு நிகழ்த்தினார். ஏறக்குறைய இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமாக நீடித்த உரையிலிருந்து ஒரு பகுதி:
  • இன்றைய சமுதாய அரசியல் சூழலில் அடையாளப்படுத்துதல் முக்கியமாகியுள்ளது. திராவிடமா தமிழா என்பது போன்றே தமிழிசையா கருநாடக இசையா என்பதும் ஆராயப்பட வேண்டிய இன்றியமையாத விவாதப்பொருள். திராவிடம் என்னும் கருதுகோள் தொல்தமிழ் அல்லது தொல்திராவிடத்தையும், அதன் கிளை அல்லது குடும்ப மொழிகளைப் பேசும் மக்களின் சமுதாய சிந்தனையைக் குறித்தது.
  • தமிழிசை என்று அண்ணாமலை செட்டியார் அடையாளப்படுத்தியது காலத்தின் கட்டாயம். தமிழிசை ஏது, எல்லாமே சம்ஸ்கிருதம் என்கிற குரலுக்கு எதிர்க் குரலானது தமிழிசை. ஆனால், தமிழிசைப் பண்ணிசையே, பண்ணிசை மரபு தேவாரத்தோடு முடிந்துவிட்டது என்றும் சம்ஸ்கிருத நிகண்டுகளில் பேசப்பெற்று தற்சமயம் இசைக்கப்பெறுவது கருநாடக இசை என்றும் கருத்துக்கள் முன்வைக்கப்படுவதால், தமிழிசை என்கிற சொல்லாட்சி இன்று ‘இருபுறமும் கருக்குள்ள பட்டயமாக’ மாறிவிட்டது.
  • கருநாடகம் என்றால் என்ன? சிலப்பதிகாரம் ‘கொடுங் கருநாடு’ என்று கொடுந்தமிழ் பேசப்பட்ட பகுதியைக் குறிப்பிட்டது. பொ.ஆ. (கி.பி.) பதினோராம் நூற்றாண்டில் குலோத்துங்கன், கலிங்கத்தை வென்றபோது ஜெயங்கொண்டார், ‘சில வடுகும் சில தமிழும் குழறி மழலைத்திரு மொழியில்’ பேசிய அப்பகுதிப் பெண்களைப் பார்த்து, ‘எங்கள் நாட்டு வீரர்கள் பசியாற கடைத் திறமின்’ என்றார். இக்காலம் கருநாடக மொழி மழலையாகவே இருந்தது.
  • ஒன்பதாம் நூற்றாண்டில் கருநாடகத்திலிருந்து வந்தோர் காட்டுமன்னார்கோவிலில் தமிழ்ப் பாசுரங்களைப் பாடக் கேட்டு, அவற்றைத் தேடித் தொகுத்தார் நாதமுனி. சாளுக்கியத்தை ஆண்ட குலோத்துங்கன் அம்மா, பாட்டி என அனைவரும் சோழ குலப் பெண்களே. அவன் மனைவி ஏழிசை வல்லபி, அவனுடன் நாடெங்கும் தமிழ்ப் பக்தி இசையைப் பரப்பினார். இவ்விசையே பின்னர் பல மொழிகளிலும் எடுத்தாளப்பட்டது.
  • இக்காலத்தில்தான் இசையில் தேர்ந்த பூலோக மல்லன் என்னும் மராட்டிய தேச மன்னன், தன் நாட்டிற்கு மேல் பகுதியில் பாரசீக முகலாயத் தாக்கத்திற்கு உள்பட்ட இசையை ‘ஹிந்துஸ்தானி’ என்றும், அவன் நாட்டிற்குக் கீழ் புழக்கத்திலிருந்த பழமையான இசையை ‘கருனாடக இசை’ என்றும் அழைத்தான். ‘கர்னாடகம்’ என்றால் பழமை என்றும் பொருள் உண்டு.
  • தேவாரம் உள்பட இந்திய நாட்டின் பழைய இசை வடிவங்கள் யாவும் தமிழிலேயே காணப்படுகின்றன. தமிழ் மூவரும் இம்மரபிலேயே பாடினர். தமிழ்நாடு, தெலுங்கு மன்னரின் பிடிக்குள் வந்தபின் மன்னன், தனவான்களை ஆற்றுப்படுத்த தெலுங்கில் பாடலாயினர். இவர்கள் வழியாக இசை கற்ற ராமசாமி தீட்சிதர் மகன் முத்துசாமி தீட்சிதர் தெலுங்கிலும் சம்ஸ்கிருதத்திலும் கீர்த்தனைகள் பாடினார்.
  • ராம நாடகக் கீர்த்தனைகளைத் தூளியில் ஆடும்போது கேட்டும், திருவையாற்றில் மேளக்காரர் இசையைக் கேட்டும் வளர்ந்த தியாகராஜ சுவாமிகள், தன் தாய்மொழியான தெலுங்கில் பாடினார். ஆனால், இவர்கள் பாடியது தமிழிசை மரபிலேயே அமைந்தது என்பது மறுக்க முடியாது.
  • இப்பழம்பெரும் பாணர் மரபன்றி தென்னகத்தில் வேறு மரபு கிடையாது. வேத காலத்திலும், அதற்குப் பின் மனு மரபிலும் பிராமண சமூகத்திற்கு இசை மறுக்கப்பட்டிருந்த நிலையில், சம்ஸ்கிருதத்தில் நீண்ட இசை மரபு இருக்கவில்லை. இன்று தமிழிலும் தெலுங்கிலும், சம்ஸ்கிருதத்திலும், கன்னட மொழியிலும் பாடப்படும் இசை மரபு தமிழுக்குரியது. தற்காலத்தில் இவ்விசை பாணியில் சில பாடல்கள் ஆங்கிலத்தில் கூடப் பாடப்படுகின்றன. இந்நிலையில், அனைத்து மொழிகளிலும் உள்ள தமிழ் மரபு சார்ந்த இசையைக் கர்னாடக இசை என்று அடையாளப்படுத்துவது பொருத்தமானது.

நன்றி: இந்து தமிழ் திசை (10 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்