வர்கீஸ் கே. ஜார்ஜ்
- கறுப்பினத்தவரான ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரணம் அமெரிக்காவையே உலுக்கிக்கொண்டிருக்கிறது. அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
- கடந்த மே 25 அன்று அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரத்தில் ஒரு வெள்ளையின போலீஸ்காரர் தனது முழங்காலால் ஜார்ஜ் ஃப்ளாய்டின் கழுத்தின் மேலே 8 நிமிடம் 46 நொடிகளுக்கு நின்றது அவரது உயிரைப் பறித்திருக்கிறது.
- இதனால், ‘கறுப்பினத்தவரின் உயிர்கள் முக்கியம்’ (Black Lives Matter - BLM) என்ற இயக்கம் மறுபடியும் தெருவில் இறங்கியும் சமூக வலைதளங்களிலும் போராட ஆரம்பித்திருக்கிறது.
- இனவெறியால் ஏற்படும் பாதிப்புகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் 2013-ல் தொடங்கப்பட்ட இந்த இயக்கம் முழு வீச்சில் செயல்பட்ட பிறகு தொய்வுகொண்டது.
தொடக்கம்
- 2008-ல் ஒபாமா அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது ஆப்பிரிக்க அமெரிக்கர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியது. எனினும், நிறவெறி தொடரவே செய்தது.
- அமெரிக்காவில் உள்ள 3.6 கோடி கறுப்பினத்தவர்கள் பெரும்பாலும் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தினரால் ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளாகக் கொண்டுவரப்பட்ட 4,00,000 பேரின் வழித்தோன்றல்களே.
- அடிமைகளின் கிளர்ச்சிகளைக் கட்டுப்படுத்தக் கொண்டுவரப்பட்டதால் நிறவெறியானது அமெரிக்கக் காவல் துறையின் அடிப்படையிலேயே கலந்திருக்கும் விஷயமாகும்.
- 2012-ல் ஃப்ளோரிடா மாகாணத்தில் 17 வயது கறுப்பினச் சிறுவன் ட்ரேவோன் மார்ட்டின் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் சுட்டவர் விடுவிக்கப்பட்டார். இதைக் குறித்து ஜூலை 2013-ல் அலிசியா கார்ஸா, பேட்ரிஸ் கல்லர்ஸ், ஒபல் டோமெட்டி ஆகிய கறுப்பின ஒருங்கிணைப்பாளர்கள் மூவரும் ஃபேஸ்புக்கில் விவாதித்துக்கொண்டிருந்தனர்.
- ‘நமது உயிர்கள் முக்கியம், கறுப்பினத்தவர் உயிர்கள் முக்கியம்’ என்று கார்ஸா ஃபேஸ்புக்கில் எழுதினார். அதற்கு, ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ ஹாஷ்டேக்கை (#BlackLivesMatter) கல்லர்ஸ் பின்னூட்டமாக இட்டார். இந்த உரையாடலில் டோமெட்டி கலந்துகொள்ளவே அந்த ஹாஷ்டேக் தனது இணையச் சிறகை விரித்தது.
- குடிமை உரிமைகள் என்ற பெயரிலும், நம்பிக்கையை ஊட்டும் விதத்திலும்தான் அதற்கு முன்பு கறுப்பினத்தவரின் அணிதிரட்டல் நடைபெற்று வந்திருக்கிறது.
- அதிலிருந்து ‘கறுப்பினத்தவர்கள் உயிர்கள் முக்கியம்’ என்ற இயக்கம் பெரிதும் வேறுபடுகிறது. இதன் நிறுவனர்கள் மூவரும் பெண்கள். இவர்களில் கார்ஸாவும் கல்லர்ஸும் தங்களைத் தன்பாலின உறவாளர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள்.
- கறுப்பினத்தவர் அரசியலால் ஒதுக்கப்பட்ட கறுப்பினத்தவர்களையும் உள்ளடக்குவதும் தங்கள் குறிக்கோள்களில் ஒன்று என்கிறார்கள் அவர்கள். ‘வெள்ளையின ஆதிக்கத்தை அழிப்பதும், கறுப்பினச் சமூகங்கள் மீது அரசாலும் சட்டத்துக்குப் புறம்பான கண்காணிப்பாளர்களாலும் ஏவப்படும் வன்முறையைத் தடுக்கும் விதத்தில் உள்ளூர் அமைப்புகளை உருவாக்குவதும்தான்’ தனது லட்சியம் என்று இயக்கத்தின் இணையதளம் கூறுகிறது.
புது இயக்கத்தின் பண்பு
- மின்னணு யுகத்தின் பண்புக்கேற்ப அது மேல்-கீழ் என்ற படிநிலையற்ற வலைப்பின்னலாக இருக்கிறது; சூழல்களுக்கேற்ப மக்களை அணிதிரளச் செய்கிறது.
- ‘காவல் துறையில் முதலீடு செய்வதை விட்டுவிட்டு கறுப்பினச் சமூகங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எங்கள் சமூகங்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும்’ என்று டோமெட்டி கடந்த வாரம் ‘நியூ யார்க்கர்’ இதழுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
- இந்த இயக்கம் தன்னைக் குடிமை உரிமைகள் இயக்கம் என்பதைவிட மனித உரிமைகள் இயக்கமாகத்தான் அடையாளப்படுத்திக்கொள்கிறது.
- ஜூலை 2013-ல் இந்த இயக்கம் உருவானது. ஆகஸ்ட் 2014-ல், மிசௌரி மாகாணத்தின் ஃபெர்குஸன் நகரில் 18 வயது கறுப்பின இளைஞன் மைக்கேல் பிரௌன் சுட்டுக்கொல்லப்பட்ட நிகழ்வு அந்த இயக்கத்தை முதன்முதலாக ‘கறுப்பினத்தவரின் உயிர்கள் முக்கியம்’ என்ற பெயரின் கீழ் வீதியில் இறங்கிப் போராட வைத்தது.
- அந்தப் போராட்டம் மற்ற நகரங்களுக்கும் பரவியது. ‘நீதி கிடைக்காவிட்டால், அமைதி கிடையாது’ என்றார்கள் அந்தப் போராட்டக்காரர்கள்.
- முன்னதாக அதே ஆண்டு, சிகரெட் விற்ற எரிக் கார்னர் ஒரு போலீஸ் அதிகாரியால் கழுத்து இறுக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். 2013-லிருந்து மே 2018-வரை ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ ஹாஷ்டேக் (#BlackLivesMatter) 3 கோடி முறை பயன்படுத்தப்பட்டது.
- ட்விட்டரில் அதிக முறை பயன்படுத்தப்பட்ட ஹாஷ்டேகுகளில் அதுவும் ஒன்றாக இருந்தது. வெள்ளை ஆதிக்கர்களும் குடியரசுக் கட்சியின் பல்வேறு அரசியலர்களும் இந்த இயக்கத்தை எதிர்த்துவருகின்றனர், ‘எல்லா உயிர்களும் முக்கியம்’ மற்றும் ‘நீல நிறத்தினர் உயிர்கள் முக்கியம்’ என்றெல்லாம் போட்டி ஹாஷ்டேகுகள் உருவாக்கப்பட்டன.
காவல் துறையின் நிறவெறி
- எதிலும் கச்சிதமாக இருக்கக்கூடிய அமெரிக்காவில் மாகாண அளவில் காவல் துறையைப் பற்றிய தரவுகள் இல்லை.
- 2015-லிருந்து காவல் துறை நிகழ்த்திய துப்பாக்கிச் சூடுகளில் நிகழ்ந்த மரணங்கள் குறித்த தரவுகளை ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ இதழ் திரட்ட ஆரம்பித்தது.
- எஃப்.பி.ஐ. கூறுவதைவிட இரண்டு மடங்கு எண்ணிக்கை கிடைத்தது. 2019-ல் போலீஸால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,004 – இதில் 376 பேர் வெள்ளையினத்தவர், 236 பேர் கறுப்பினத்தவர்.
- அமெரிக்க மக்கள்தொகையில் கறுப்பினத்தவரின் எண்ணிக்கை 13%-தான்; ஆனால், காவல் துறையினரால் நிகழ்த்தப்படும் துப்பாக்கிச் சூட்டில் இறப்பவர்களில் நான்கில் ஒரு பங்கு அவர்கள்தான்.
- இவற்றில் 127 சம்பவங்களில் மட்டுமே, காவல் துறை அதிகாரிகள் உடலில் கேமரா பொருத்தியிருந்தனர். ஜார்ஜ் ஃப்ளாய்டு மரணத்துக்குக் காரணமான சாவின் என்ற அதிகாரி மீது 18 புகார்கள் இருந்தும் அவர் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
- இந்த விஷயங்களை எல்லாம் ஊடகங்கள் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தன.
- ஏழைகளிடமும் கறுப்பினத்தவரிடமும் பாரபட்சம் காட்டுவதாகக் குற்றம்சாட்டப்படும் சட்டம் ஒழுங்கு அமலாக்கும் அமைப்பின் கைப்பாவைகள் மட்டுமே காவல் துறை அதிகாரிகள்.
- கறுப்பினத்தவர்கள் மீதான வன்முறையில் அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கே உரிய, வெள்ளையினத்தவரை மையம்கொண்ட பாரபட்சமான அணுகுமுறைகள் சுட்டிக்காட்டப்படுகின்றன.
- என்றாலும், இந்த விஷயத்தைப் பொறுத்தவரை தற்காலத்துக்கும் கடந்த காலத்துக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. 1994-ல் பில் கிளிண்டனால் கொண்டுவரப்பட்ட ‘கூட்டாட்சி குற்ற மசோதா’ (Federal Crime Bill) கூட்டம் கூட்டமாகப் பலரையும் சிறையில் அடைத்தது என்று எழுதுகிறார் ‘அமெரிக்க குடிமை உரிமைகள் ஒன்றிய’த்தின் உடி ஓஃபர்.
- ‘கறுப்பினத்தவர் உயிர்கள் முக்கியம்’ என்ற இயக்கத்துக்கு ஜனநாயகக் கட்சியினர் பெரிதும் ஆதரவாகப் பேசியிருக்கின்றனர்; மாறாக, அதிபர் ட்ரம்ப் சார்ந்த குடியரசுக் கட்சியினரோ மிகக் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளனர்.
- இந்த இயக்கம் காரணமாகக் காவல் துறைக்குக் கட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாகவும், இதனால் குற்றங்கள் அதிகரித்துக்கொண்டிருப்பதாகவும் முன்னால் எஃப்.பி.ஐ. தலைவர் ஜேம்ஸ் காமே கவலை தெரிவித்துள்ளார். 2016 தேர்தலின்போது கறுப்பினத்தவர்களின் பிரச்சினைகளில் ஈடுபாடு காட்டும்படி ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களை இந்த இயக்கத்தினர் கட்டாயப்படுத்தினார்கள்.
- ஆனால், அந்தக் கட்சி எந்தப் பக்கமும் சாய்ந்துவிடாமல் ஒரு நிலைப்பாடு எடுத்தது.
- 2016-ல் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து இந்த இயக்கத்தின் செல்வாக்கு சரிய ஆரம்பித்தது. இதற்குப் பல காரணங்கள் உண்டு, காவல் துறை நிகழ்த்தும் கொலைகள் குறைந்ததும் ஒரு காரணம்.
- ஃப்ளாய்டின் மரணம் அந்த இயக்கத்தை மறுபடியும் செயலில் இறங்கத் தூண்டியிருக்கிறது.
நன்றி: தி இந்து (12-06-2020)