TNPSC Thervupettagam

கறுப்பு, வெள்ளைப் பூஞ்சைகளை எதிர்கொள்வது எப்படி?

May 24 , 2021 1342 days 586 0
  • கரோனாவின் இரண்டாம் அலையில் ‘கறுப்புப் பூஞ்சை’ எனும் மிக அரிதான நோய், நாடு முழுவதிலும் பெரிதாகப் பேசப்படுகிறது. முதல் அலையில் காணப்படாத இந்த நோய் திடீரென்று 20 மடங்கு அதிகரித்துள்ளது என்பதும் கரோனா தீவிரமாக வந்து குணமானவர்களுக்கு இது ஏற்படுகிறது என்பதும்தான் இதற்கான காரணங்கள்.
  • தொற்றாளருக்குப் பார்வை இழப்பு, பக்கவாதம், உயிரிழப்பு எனப் பல ஆபத்துகளைக் கொண்டு வரும் கொடிய நோயாகவும் இது இருக்கிறது.

கறுப்புப் பூஞ்சை

  • ‘மியூகார்மைசீட்ஸ்’ (Mucormycetes) எனும் பூஞ்சைக் கிருமிகள் மண், அசுத்தத் தண்ணீர், தாவரங்கள், விலங்குகளின் கழிவு மற்றும் அழுகிய காய்கனிகளில் காணப்படும்.
  • அவை புறச்சூழலில் கலந்து காற்று மூலம் நமக்குப் பரவும். மூக்கு, முகம், கண், நுரையீரல், மூளை, தோல் ஆகிய உறுப்புகளில் செல்களைச் சிதைத்து ‘கறுப்புப் பூஞ்சை’ (‘மியூகார் மைக்கோசிஸ்’) நோயை உருவாக்கும். இதில் பல வகை உண்டு. முக்கியமானவை: சைனஸ் தொற்று, கண் தொற்று, மூளைத் தொற்று.
  • இங்கே கவனிக்க வேண்டிய விஷயம், இந்தத் தொற்றானது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கே நோயாக மாறும்.
  • இதுவரை நீரிழிவு மோசமான நிலைமையில் உள்ளவர்கள், ‘ஸ்டீராய்டு’களை அடிக்கடி பயன்படுத்துபவர்கள், தீவிர சிகிச்சைப் பிரிவில் நாட்பட்டு இருப்பவர்கள், உறுப்பு மாற்றுச் சிகிச்சை செய்துகொண்டவர்கள், புற்றுநோய் சிகிச்சையில் உள்ளவர்கள், எய்ட்ஸ் நோயாளிகள் ஆகியோருக்கு ‘கறுப்புப் பூஞ்சை’ ஏற்பட்டது.
  • இப்போது கரோனா நோயாளிகளும் பாதிக்கப்படுகின்றனர். ரத்தத்தில் அதிகமாக ‘கீட்டோன்கள்’ மற்றும் ‘ஃபெரிட்டின்’ இரும்புச் சத்து இருப்பவர்களுக்கும் வெள்ளையணுக்கள் குறைவாக இருப்பவர்களுக்கும் இந்த ஆபத்து ஏற்படுகிறது.

அறிகுறிகளும் ஆபத்துகளும்

  • மூக்கடைப்பு, தலைவலி, மூக்கில் ரத்தம் வழிவது, மூக்கைச் சுற்றி கறுப்புத் திட்டுகள் தோன்றுவது, கண்கள் சிவப்பது, வீக்கம், வலி, இமை இறக்கம், பார்வை குறைவது, திடீரெனப் பார்வை இழப்பது ஆகியவை ‘கறுப்புப் பூஞ்சை’யின் முக்கிய அறிகுறிகள்.
  • இந்த நோயைத் தொடக்கத்திலேயே கவனித்தால் ‘ஆம்போடெரிசின்-பி’ மருந்து பலனளிக்கும். சிகிச்சை தாமதமானால் ஆபத்து அதிகமாகும். பார்வை இழப்பு உண்டாகிக் கண்ணை அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும். அப்படிக் கண்ணை எடுக்கவில்லை என்றால் பூஞ்சை மூளைக்குப் பரவி உயிரிழப்பை உண்டாக்கிவிடும்.
  • தீவிர கரோனா தொற்று உள்ளவர்களுக்கு ஸ்டீராய்டு மருந்து வழங்கப்படுகிறது. இது இரட்டை முனைக் கத்தி போன்றது.
  • இது கரோனாவிலிருந்து தொற்றாளரைக் காப்பாற்றுகிறது. அதேசமயம், அவரது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்துவிடுகிறது.
  • நீரிழிவு உள்ளவர்களைக் குறிவைத்துத் தாக்கும் தன்மை கரோனாவுக்கு உண்டு. அவர்களுக்கு ஸ்டீராய்டு மருந்துகள் கொடுக்கப்படும்போது ரத்தச் சர்க்கரை இன்னும் அதிகரிக்கிறது.
  • இதனாலும் இவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. குறிப்பாக, கட்டுப்பாடு இல்லாத நீரிழிவுக்காரர்களை கரோனாவிலிருந்து காப்பாற்ற அதிகமான ஸ்டீராய்டு பயன்படுத்தப் படுகிறது. கரோனா குணமான பின்னர் இவர்களுக்கு ‘கறுப்புப் பூஞ்சை’ ஆபத்து பல மடங்கு அதிகரிக்கிறது.
  • தவிரவும், இவர்களில் பலர் ஆக்ஸிஜன் சிகிச்சையிலும் வென்டிலேட்டர் சிகிச்சையிலும் நீண்ட நாள் இருக்கும்போது கருவிகள் வழியாக ‘கறுப்புப் பூஞ்சை’ ஏற்பட வாய்ப்புண்டு.
  • ஆக்ஸிஜன் செலுத்தும் கருவி மற்றும் வென்டிலேட்டரில் உள்ள ஈரமூட்டிகளில் தண்ணீர் அசுத்தமாக இருப்பதுதான் அதற்குக் காரணம்.
  • அடுத்தடுத்து அதிக கரோனா நோயாளிகள் ஆக்ஸிஜன் சிகிச்சைக்குக் காத்திருப்பதாலும் மருத்துவப் பணியாளர்களின் பற்றாக்குறையாலும் அந்தத் தண்ணீரை மாற்றுவது தாமதப்படுவதால் இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது.
  • கரோனா இரண்டாம் அலையில் ஆக்ஸிஜன் தேவைப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகியிருப்பதால், ‘கறுப்புப் பூஞ்சை’ நோயும் அதிகரித்திருக்கிறது.

தடுப்பது எப்படி?

  • நீரிழிவுக்காரர்களுக்கு எச்சரிக்கை விடும் விதமாக வந்திருக்கும் ‘கறுப்புப் பூஞ்சை’யைத் தடுக்க, கரோனாவுக்கு முன்னரும் பின்னரும் ரத்தச் சர்க்கரை அளவைச் சரியானபடி கட்டுப்படுத்த வேண்டும்.
  • கரோனாவின் அறிகுறிகள் தெரியத் தொடங்கியவுடனேயே இவர்கள் முறையான சிகிச்சையை எடுத்து, ஸ்டீராய்டு பயன்பாட்டைத் தடுத்துவிட வேண்டும்.
  • அப்படியே தேவைப்பட்டாலும், சரியான அளவில் குறைந்த காலத்துக்கு மட்டுமே அதைப் பயன்படுத்த வேண்டும். இவர்கள் உடனடியாக கரோனாவுக்குத் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அதன் பிறகு, இவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டால்கூட மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு நோய் தீவிரமாகாது.
  • அப்போது ஸ்டீராய்டு மருந்தும் தேவைப்படாது. இப்படி ‘கறுப்புப் பூஞ்சை’யைத் தடுத்துவிடலாம். தொற்றாளரிடமிருந்து இது மற்றவர்களுக்குப் பரவாது என்பது ஆறுதல். கரோனாவிலிருந்து மீண்டவர்கள் அடுத்த 3 மாதங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டியதும்அவசியம்.

வெள்ளைப் பூஞ்சை

  • சில வட மாநிலங்களில் ‘கறுப்புப் பூஞ்சை’யைப் போலவே ‘வெள்ளைப் பூஞ்சை’ (Candidiasis) நோயும் இப்போது பரவுவதாகச் செய்திகள் வருகின்றன.
  • அசுத்தமான தண்ணீர் மூலம் ஏற்படும் இந்தத் தொற்றானது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு மட்டுமே ஏற்படுகிறது.
  • முக்கியமாக, நீரிழிவு நோயாளிகளுக்கும் ஸ்டீராய்டு மருந்தை நாட்பட்டு எடுத்துவருபவர்களுக்கும் இது ஆபத்தாகிறது. மற்றவர்களைவிட, இந்த நோய் குழந்தைகளையும் பெண்களையும் சற்றே அதிக அளவில் பாதிப்பதாகவும் தெரிகிறது.
  • கரோனா காலத்தில் பயனாளியின் நுரையீரல் களைத்தான் ‘வெள்ளைப் பூஞ்சை’ பெரிதாகப் பாதிக்கிறது.
  • அதே நேரம், இது வாய், இரைப்பை, குடல், தோல், சிறுநீரகம், நகம், மூளை, அந்தரங்கப் பகுதிகளையும் பாதிக்கக்கூடியது.
  • இது நுரையீரலைப் பாதிக்கும்போது, கரோனா தாக்குதலில் பிரதானமாகத் தெரிகிற காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல், நெஞ்சுவலி போன்ற அறிகுறிகளே இதிலும் தெரிகின்றன. ஆனால், ‘ஆர்டிபிசிஆர்’ பரிசோதனையில் இது தெரிவதில்லை.
  • ஆகவே, ‘ஆர்டிபிசிஆர்’ முடிவு ‘நெகட்டிவ்’ என்று வந்தவர்களுக்கு அறிகுறிகள் நீடிக்குமானால், நெஞ்சு சி.டி. ஸ்கேன் எடுக்க வேண்டியது அவசியம்.
  • இதையும் சொல்ல வேண்டும். ‘கறுப்புப் பூஞ்சை’யின் பல அறிகுறிகள் முகத்தில் தோன்றுவதால் உடனே கவனிக்க முடிகிறது. ‘வெள்ளைப் பூஞ்சை’யின் அறிகுறிகளோ நெஞ்சகப் பகுதியிலிருந்தும் வயிற்று உறுப்புகளிலிருந்தும் தோன்றுவதால் உடனே கவனிக்கத் தவறிவிடுகின்றனர்.
  • இது நோயாளியின் உயிருக்கு ஆபத்தாக முடிகிறது. ‘வெள்ளைப் பூஞ்சை’க்குப் பலதரப்பட்ட மருந்துகள் உள்ளன. இதை எளிதில் குணப்படுத்திவிடலாம்.
  • பயனாளிகள் குளிக்க, குடிக்கப் பயன்படுத்தும் தண்ணீர் சுத்தகமாக இருக்க வேண்டியதும், மருத்துவமனைகளில் உள்ள ஆக்ஸிஜன் கருவியின் ஈரமூட்டிகளில் குழாய்த் தண்ணீருக்குப் பதிலாக சுத்தமான தண்ணீரைப் பயன்படுத்த வேண்டியதும் இந்த நோயைத் தடுக்கும் வழிகளாக உள்ளன.

நன்றி: தினமணி  (24 – 05 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்