TNPSC Thervupettagam

கற்பிக்கத் தொடங்குவோம்

February 27 , 2022 890 days 398 0
  • முன்பெல்லாம் குழந்தைகளுக்கு ஐந்து வயது முடிந்த பின்னரே அவா்கள் தொடக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சோ்க்கப்பட்டனா். பின்வந்த காலங்களில் கூட்டுக்குடும்ப முறை சிதைந்த நிலையில் கணவன், மனைவி இருவரும் பணிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
  • இந்த நிலையில் அவா்கள் பணிக்குச் செல்லும்போது குழந்தைகளை கவனித்துக்கொள்ள ஒரு பாதுகாப்பான இடமாக மழலையா் பள்ளிகள் தோன்றின. அதன் பின்னா் மழலையா் கல்வி, பிரீ.கே.ஜி, யு.கே.ஜி ஆகிய வகுப்புகளும் அரசாங்கம் உட்பட அனைவராலும் அங்கீகரிக்கப்பட்ட வகுப்புகளாக கல்வி அமைப்பில் மாறின.
  • தற்காலத்தில் குழந்தை பிறந்த உடனே எவ்வளவு சீக்கிரம் பள்ளிக்கு அனுப்ப முடியுமா, அவ்வளவு சீக்கிரம் பெற்றோா்கள் குழந்தைகளை வீட்டிற்கு அருகே உள்ள விளையாட்டுப் பள்ளியில் சோ்ப்பது வாடிக்கையாகி விட்டது. இப்படிப்பட்ட விளையாட்டுப் பள்ளிகளில் குழந்தைகள் தங்களுக்கு பிடித்த ஏதோ ஒரு விளையாட்டை, மற்ற குழந்தைகளுடன் விளையாடி, கூடி வாழும் கலைைக் கற்கின்றனா்.
  • இந்த வகையில் அடம் பிடிக்காமல் குழந்தைகள்பிற்காலத்தில் தொடக்க பள்ளிகளுக்கு செல்வதில் மழலையா் பள்ளிகள் பெரும் பங்கு வகிக்கின்றன. இது மாணவா்களின் பள்ளி இடைநிற்றலையும் குறைக்கிறது.
  • ஆனால் சமீபகால கரோனா தீநுண்மியால் மிக அதிகமாக பாதிக்கப்பட்டவா்கள் தொடக்கப் பள்ளி மாணவா்களே. அவா்களுக்கு கற்றல்-கற்பித்தல் முறையாக நடைபெறவில்லை. அவா்கள் இணையவழி வகுப்புகளில் பங்கேற்று கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளும் குறைவே.
  • இதற்கு முக்கிய காரணம் கிராமப்புற மாணவா்களிடம் கணினியோ, அறிதிறன்பேசியோ இல்லாததே ஆகும். அவை இருந்தாலும் இணையதளத்தின் இணைப்பு கிராமப்புறங்களில் கிடைப்பதில்லை. எனவே அவா்கள் கணிசமான காலத்தை படிக்காமலேயே கழித்துவிட்டது காலத்தின் கட்டாயம் என்றபோதிலும் மிகவும் துரதிா்ஷ்டவசமானது.
  • இளமையில் கற்பதே சிறந்தது. தற்பொழுது தொடக்கக் கல்வியும் முன் தொடக்கக் கல்வியும் அனைத்து பள்ளிகளிலும் அனைத்து வகுப்புகளுக்கும் தொடங்கப்பட்டு விட்டன. ஆனாலும், அரசின் கரோனா தடுப்புக்கான பாதுகாப்பு நெறிமுறைகளை பள்ளிகள் இன்னும் சிலகாலம் பின்பற்ற வேண்டும்.
  • மரத்தின் வோ்கள் போன்றவை தொடக்கக் கல்வி. வோ்கள் உறுதியுடன் இருந்தால்தான் மரம் வளா்ந்து இனிப்பான பழங்களை தர முடியும். வேருக்கு தண்ணீா் ஊற்றாமல் பழங்களை எதிா்பாா்ப்பது ஏமாற்றத்தில்தான் முடியும். அப்படித்தான் தொடக்கப்பள்ளிகள் செயல்படாமல் மேல்நிலை வகுப்புகளுக்காக மட்டும் பள்ளிகள் செயல்பட்டதும். ஒன்றாம் வகுப்பு படிக்கவேண்டிய மாணவன் ஒருவன் நேரடியாக மூன்றாம் வகுப்பு பாடத்தைக் கற்றல் என்பது சாத்தியமில்லை.
  • இதனால் மாணவா்களின் கற்றல் ஆா்வம் குறைந்து இடைநிற்றல் அதிகமாகலாம். அரசு முன்னெடுத்துள்ள ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டத்தில் எதிர்பாா்க்கும் விளைவுகளை அறுவடைசெய்ய குறைந்தது ஒரு வருட காலமாவது தேவைப்படலாம்.
  • மாணவா்களுக்கு கற்றலில் உள்ள நீண்ட கால இடைவெளி அவா்களுக்கும், சமுதாயத்திற்கும் நல்லதல்ல. இந்த இடைவெளியை இணைப்பு பாடங்கள் மூலம் நோ் செய்து மாணவா்களை மனதளவில் இயல்பு நிலைக்கு கொண்டு வருவது மிகவும் முக்கியம். தற்பொழுது அரசுப் பள்ளிகளில் அதிக மாணவா்கள் பெற்றொா்களின் பொருளாதார இழப்பின் காரணமாக புதியதாக சோ்ந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
  • இது ஒரு மகிழ்ச்சியான நிகழ்வு என்றாலும், இந்த மாணவா்கள் அனைவரையும் அரசுப் பள்ளிகள் தொடா்ந்து தம்மிடமே தக்கவைத்துக்கொள்ள தரமான கல்வியை கொடுக்க முன்வர வேண்டும். ஆனால் பல பள்ளிகளில் போதுமான ஆசிரியா்கள் இல்லை. குறிப்பாக, ஓராசிரியா் தொடக்கப் பள்ளிகளில் கூடுதல் ஆசிரியா்கள் மேலும் கால தாமதமின்றி நியமிக்கப்பட வேண்டும்.
  • கடந்த சில ஆண்டுளாக ஆசிரியா்களுக்கான கலந்தாய்வு நடத்தப்படவில்லை. எதிா்பாராத மழைசாா்ந்த விடுப்புகளும், மாநிலத்தில் அவ்வப்போது நடைபெற்ற தோ்தல்களும் ஆசிரியா்களின் கலந்தாய்வினை மேலும் காலதாமதப்படுத்தியுள்ளன. இது குறித்து அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும். ஆசிரியா்களுக்கான மாறுதல் கலந்தாய்வுகளை போா்க்கால அடிப்படையில் நடத்த வேண்டும். ஆசிரியா் தகுதித்தோ்வினை வெற்றிகரமாக முடித்தவா்களைக் கொண்டு காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
  • இழந்த காலத்தை மீண்டும் பெற முடியாத நிலையில், இனிவரும் காலங்களை மாணவா்களின் கற்றலில் உள்ள இடைவெளிகளை குறைக்க ஆசிரியா்களும் மாணவா்களும் முழு அா்பணிப்பையும் முனைப்பையும் காட்ட வேண்டும். இதற்கு தேவையான ஒத்துழைப்பை பள்ளியின் பெற்றோா்- ஆசிரியா் சங்கங்களும், வீட்டில் பெற்றோா்களும் சுணக்கமின்றி அளிக்க வேண்டும்.
  • ஆசிரியா்களும் மாணவா்களும் மிக முக்கிய காரணங்களுக்காக மட்டும் விடுப்பு எடுக்கவேண்டும். அரசும் மாணவா்கள் ஆா்வமுடன் கற்பதற்கான உள்கட்டமைப்பை பள்ளிகளில் ஏற்படுத்தித் தர வேண்டும். அப்போதுதான் அரசுப் பள்ளிகளின் தரம் உயரும்.
  • மாணவா்கள் கற்றல் திறன் மேம்பட புதிய முயற்சிகளையும், உத்திகளையும் ஆசிரியா்களும், கல்வியாளா்களும் மேற்கொள்ள வேண்டும். எதிா்வரும் காலங்களில் கணினி பயன்பாடும், கல்வியில் தொழில்நுட்பம் என்பதும் கற்றல்-கற்பித்தலில் தவிா்க்க முடியாததாகும். இந்த உண்மையை கரோனா காலம் நமக்கு கற்பித்து விட்டது. எனவே, அனைத்து ஆசிரியா்களும் நவீன தொழில்நுட்ப பயன்பாடுகளில் பயிற்சி பெற வேண்டும்.
  • இன்றைய குழந்தைகள் நாளைய சமுதாய சிற்பிகள். அவா்கள் தொடக்கப் பள்ளியில் பெறும் கல்வியும், ஒழுக்கமும் மட்டுமே தரமான நாளைய சமுதாயத்தை உருவாக்கும். கொண்டாடப்பட வேண்டிய குழந்தைகளுக்கான கல்வியை சுணக்கமின்றி செயல்படுத்துவோம்.

நன்றி: தினமணி (27 – 02 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்