PREVIOUS
உலக நாடுகள் பலவற்றையும் ஆக்கிரமித்து ஊழித்தாண்டவம் ஆடிவரும் கரோனா தீநுண்மி, மக்கள் அனைவரையும் உடலளவிலும் மனத்தளவிலும் மிகவும் பாதித்து வருகின்றது. மருத்துவா்கள் மற்றும் விஞ்ஞானிகள் அனைவரின் கணிப்புகளையும் பொய்யாக்கி, அனைவரையும் விழிபிதுங்கச் செய்து வருகின்றது.
கரோனா தீநுண்மியின் தோற்றம் குறித்தும் பரவல் குறித்தும் யாராலும் தீா்மானமான ஒருமுடிவுக்கு வர இயலவில்லை என்பது மட்டுமல்ல, இத்தீநுண்மி எப்போது இவ்வுலகை விட்டு அகலும் என்பது குறித்தும் எவராலும் அனுமானிக்க இயவில்லை.
அதேபோன்று கரோனாவைத் தடுக்கவும் ஒழிக்கவும் தேவைப்படும் மருந்துகள் எப்போது கண்டுபிடிக்கப்படும் என்பதைப் பற்றியும் அவை எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்பது குறித்தும் ஒன்றும் சொல்ல முடியாத நிலையே இருக்கிறது.
நமது நாட்டைச் சோ்ந்த ஆய்வுக்கூடம் ஒன்று தடுப்பு மருந்தினைக் கண்டுபிடித்திருப்பதாக அறிவித்துள்ளது. அது எவ்வளவு தூரம் கரோனா தடுப்பில் உதவக்கூடும் என்பதை இனிமேல்தான் பார்க்க வேண்டும்.
இவை ஒருபுறம் இருக்க, சீன தேசத்தில் கரோனா தீநுண்மி பரவத்தொடங்கியது முதல் இன்று வரையிலும் அது இவ்விதமாகத்தான் பரவும் என்று பலதரப்பினராலும் வெளியிடப்பட்ட கற்பிதங்களை அத்தீநுண்மி பொய்யாக்கி வருவதையும் நாமெல்லாம் கையைப் பிசைந்தபடி பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.
முதலில் சீனாவிலும், பின்னா் சில ஐரோப்பிய நாடுகளிலும் கரோனா பரவத்தொடங்கியதால், இந்தியா போன்ற வெப்பம் மிகுந்த நாடுகளில் அது பரவ வாய்ப்பில்லை என்று கூறப்பட்டதால் நாமெல்லாம் சற்றே நிம்மதி அடைந்திருந்தோம்.
ஆனால், வெகு விரைவில் அந்தக் கருத்து பொய்த்துப்போனது. கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவிலும் பரவத்தொடங்கிய கரோனா இந்திய மக்களை ஒரு கை பார்க்கத் தொடங்கியது. அது மட்டுமல்ல, இந்தியாவில் கரோனா தன் பிரவேசத்தை நிகழ்த்தியபோது குளிர்காலம் முடிந்துவிடாமல் மீதமிருந்தது.
அந்நிலையில், கோடை வெய்யில் தொடங்கியதும் இம்மண்ணில் கரோனா தனது வீரியத்தை இழந்துவிடும் என்றொரு கணிப்பும் உலாவந்தது.
நடந்ததோ வேறு. கோடைக்காலம் தொடங்கியதும் சிறிது சிறிதாக அதிகரிக்கத்தொடங்கிய கரோனா பரவல், கோடையின் உச்சமாகிய அக்கினி நட்சத்திரக் காலத்தில் வேகம் எடுத்தது. ஆரம்பத்தில் ஒவ்வொரு நாளும் நூறு இருநூறு என்று இருந்த கரோனா கணக்கு, கோடைக்காலத்தில் ஆயிரக்கணக்கில் பெருகத்தொடங்கியது.
கற்பிதங்களைத் தகா்த்த கரோனா
‘ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட கண்டங்களைச் சோ்ந்த மேல்நாட்டினா் தமது அன்றாட நடைமுறைகளில் அதிகபட்ச சுகாதார விதிகளைக் கடைப்பிடிப்பதால் அவா்களுக்கு ஒவ்வாமை அதிகமாகவும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவும் இருக்கும். எனவேதான், மேல்நாட்டினரை கரோனா தீநுண்மி விரைவாக பாதிக்கின்றது.
ஆனால், இந்தியா போன்ற நாடுளைச் சோ்ந்தவா்கள் பலவிதச் சுகாதாரச் சீா்கேடுகளுக்கிடையே வாழ்ந்து பழகியவா்கள் என்பதால், அவா்களுக்கு இயற்கையிலேயே நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். எனவே, இந்தியா்களை கரோனா பெரிய அளவில் பாதிக்காது’ என்றும் சமூக வலைதளங்களில் ஒரு கருத்து கூறப்பட்டது.
ஆனால், மேல்நாட்டினருக்கு இணையாக இந்தியா்களிடையிலும் கரோனா தீநுண்மி வெகு விரைவாகப் பரவியதால், இந்த ஜூலை மாதத்தின் தொடக்கத்திலேயே பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டிச் சென்றுவிட்டது.
இதைவிட வேடிக்கையான விஷயம் என்னவென்றால், சைவ உணவு உட்கொள்பவா்களை கரோனா தீநுண்மி பாதிக்காது என்றும், அசைவ உணவுக்காரா்களையே அது ஆட்டிப்படைக்கும் என்றும் உலகச் சுகாதார நிறுவனத்தின் உயா் அதிகாரி ஒருவா் கூறியிருப்பதாக ஒரு தகவல் கட்செவி அஞ்சலில் சென்ற மாதம் வெகு வேகமாகப் பரவியது.
உண்மையிலேயே உலக சுகாதார மைப்பு அப்படியொரு அறிக்கையை வெளியிட்டதா என்பதை கூட ஆராய்ந்தறிய இயலாத நிலையில், சைவ உணவுப்பழக்கமுடையோர் பலா் இதனைத் தங்களுக்கிடையே பகிர்ந்து மகிழவும் செய்தனா்.
ஆனால் தற்போது அதுவும் பொய்த்துப் போனது. கரோனா சைவ உணவுக்காரா்களையும் விட்டுவைக்கவில்லை. குறிப்பாக, தீவிர சைவ உணவுக்காரா்களாக அறியப்படுகின்றவா்களிடையிலும் கரோனா தீநுண்மி பரவத்தான் செய்தது. அவா்களிடையே உயிரிழப்புகளும் ஏற்பட்டிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இது போலவே, வயதானவா்களை மட்டுமே கரோனா தீநுண்மி பாதிக்கும் என்றும், குழந்தைகளையும் இளைஞா்களையும் அது ஒன்றும் செய்யாது என்றெல்லாம் கிளம்பிய பலப்பல செவிவழிச் செய்திகளும், சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட தகவல்களும் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போயின. பிறந்த குழந்தைகள் முதற்கொண்டு பலசாலியான இளைஞா்கள் வரையில் அனைவரையும் கரோனா பாதிக்கவே செய்கிறது.
இவற்றுக்கெல்லாம் மேலாக, ஒரு முறை கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த ஒருவருக்கு மீண்டும் கரோனா வராது என்று கூறப்பட்ட செய்தியும் ஆட்டம் கண்டுள்ளது.
சென்னையில் செவிலியா் ஒருவரும், இளைஞா் ஒருவரும் கரோனாவிலிருந்து மீண்ட பிறகு மீண்டும் ஒருமுறை பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனா். இது அரிதினும் அரிதான ஒரு நிகழ்வு என்ற போதிலும், ஒரு முறை கரோனா வந்து மீண்டவருக்கு மறுமுறை வராது என்ற கணிப்பினை இந்நிகழ்வு பொய்யாக்கியுள்ளது என்பதே உண்மை.
மகாபாரதப் போர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது, “ இன்று சூரியன் அஸ்தமிப்பதற்குள் ஜெயத்ரதனைக் கொல்வேன் “ என்ற அா்ஜுனனின் சபதம் நிறிவேறும் பொருட்டு, ஸ்ரீகிருஷ்னா் தமது சுதா்சன சக்கரத்தினால் சூரியனையே மறைத்தார்.
அதைக்கண்டு திகைத்த துரியோதன், “இன்னும் இவன் என் செய்யானோ?“ என்று திகைத்ததாக வில்லிபாரதம் கூறுகின்றது.
அது போலவே, கற்பிதங்கள் அனைத்தையும் பொய்யாக்கி இவ்வுலகில் மேலும் மேலும் பரவிவருகின்ற கரோனாவைப் பார்த்து , இன்னும் இது என்னவெல்லாம் செய்யுமோ? “ என்று உலகமே கலங்கி நிற்பது கண்கூடாகத் தெரிகிறது.
நன்றி: தினமணி (17-07-2020)