TNPSC Thervupettagam

கற்பித்தல் தர மேம்பாட்டில் கல்வித் துறையின் பங்கு

May 17 , 2024 229 days 199 0
  • அரசுப் பள்ளிகளில் கல்வித் தரம் உரிய அளவில் இல்லை என்று பொதுவாகக் கருதப்படுகிறது. கல்வித் தரத்தை உறுதிசெய்ய மாணவர்களுக்குப் பல்வேறு வகையான வளர்ச்சித் திட்டங்களை வணிகநோக்கு இல்லாமல் அரசு மேற்கொள்ளவே செய்கிறது. ஆனால், வணிகநோக்கோடு செயல்படுகின்ற பள்ளிகளைக் கல்வித் துறை நாடுகிறது.
  • அங்கே பின்பற்றப்படும் நடைமுறைகள்தாம் உயர்வான அணுகுமுறைகள் என்று கல்வித் துறை கருதி, அப்பள்ளிகளில் மாணவர்கள் சேருவதற்கு ஊக்கம் அளித்துவருகிறது. இந்தப் போக்கு கல்வித் தரம் குறித்த தவறான புரிதலுக்கு இட்டுச் செல்கிறது.

சுயநிதிப் பள்ளிகளின் செயல்பாடுகள்:

  • மாணவர்கள் கசக்கிப் பிழியப்பட்டுத் தேர்வுஎழுத வைக்கப்படுவது கல்வி வளர்ச்சிஅன்று. இதைத்தான் இன்றைய தேர்வுமுறையும் அதைப் பின்பற்றும் சுயநிதிப் பள்ளிகளும் மேற்கொண்டுவருகின்றன. பெற்றோர்களின் இயலாமை, தவறான கருத்தோட்டம், விளம்பர நாட்டம் போன்றவற்றை மூலதனமாக்கிக் கல்வி வணிகத்தில் முன்னணியில் நிற்கின்றன சுயநிதிப் பள்ளிகள்.
  • ‘கல்வித் தரம்’ பற்றிய தவறான கருத்து நிலவுவதால், அத்தவறான கருத்தின் அடிப்படையில் வணிகநோக்குடைய பள்ளிகள் தரமான கல்வி நிறுவனங்களாகத் தங்களைக் காட்டிக்கொள்கின்றன. அவற்றை அரசுப் பள்ளிகளும் பின்பற்ற வேண்டும் என்று கல்வித் துறை அலுவலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
  • கல்வி வளர்ச்சியில் கல்வித் துறை கவனம் செலுத்த வேண்டிய தளங்கள் இரண்டு.ஒன்று படிப்புநிலை தரம் (academic standard), இரண்டாவது நிர்வாக உள்ளீடு (administrative input). நிர்வாக உள்ளீட்டு நிலையில் ஆசிரியர்கள் பணியமர்வு, மாணவர்களுக்கான படிப்பு வசதி, கல்வி நிறுவன உள்கட்டமைப்பு முதலியன இடம்பெறுகின்றன. கல்வி நிறுவன உள்கட்டமைப்பு நிலையில் அரசுத் திட்டங்கள் பல உள்ளன.
  • அவற்றைச் செம்மையாக நிறைவேற்றுதல் கல்வித் துறையின் கடமையும் பொறுப்பும் ஆகும். இவற்றைச் செயல்படுத்தத் தேவைப்படும் வழிகாட்டல்களைக் கல்வித் துறை முறைப்படி வழங்கும்போதுதான் அரசின் கல்வி வளர்ச்சித் திட்டங்கள்செம்மையாகச் செயல்படும்.
  • கோடிக்கணக்கில் செலவிடப்படும் அரசு நிதி, வளர்ச்சிநோக்கில் செலவிடப்படுவதை உறுதிசெய்வது கல்வித் துறையின் பொறுப்பாகும். அதற்காகத்தான் துறையில் பல்வேறுஅலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். எந்நிலையிலும் அவர்கள் விட்டுக்கொடுக்கும் போக்குக்கு இடம் கொடுக்கலாகாது.
  • முறையான வழிகாட்டல், மேற்பார்வையிடல், ஆற்றுப்படுத்துதல் முதலியன கல்வித்துறை உயர் அலுவலர்களின் பணிகளாகும். இப்பணிகள் அலுவலர்களின் அதிகாரத்தைக் காட்டுவதல்ல. உடனிருந்து நெறிப்படுத்தும் செயல்பாடுகளைக் குறிப்பனவாகும். கற்பித்தலை நெறிப்படுத்துவதும், கற்பித்தலில் ஏற்படும் பல்வேறு இடர்ப்பாடுகளைக் களைய வழிகாட்டுவதுமே கல்வி அலுவலர்களின் பொறுப்பாகும்.

கற்றல் உள்ளீடு:

  • படிப்புநிலை தரம் என்பதில் இன்னொரு இன்றியமையாத கூறு ‘தேர்வும் மதிப்பீடும்’. இதைச் சீர்படுத்தாமல் கல்வித் தரத்தைச் செம்மைப்படுத்த இயலாது.அரசுத் தேர்வுகளுக்கெனத் தனி இயக்ககம்மட்டுமல்லாது, கல்வியின் தரத்தை அவ்வப்போது உறுதிப்படுத்தவும் மேம்படுத்தவும் மாநிலக் கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவனமும் (இயக்ககமும்) இயங்கிவருகிறது.
  • இவற்றின் பணிகளை முறைப்படுத்தாத வரையில் கல்வித் தரம் கேள்விக்குரியதே. இந்த ஆண்டு தொடக்கத்தில், கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கில் தேர்வுமுறை மாற்றத்தைக் கல்வித் துறை தெரிவித்தது. பாடநூலில் தரப்பட்டுள்ள வினாக்களைத் தவிர்த்துச் சிந்தனைத் திறத்தை வெளிப்படுத்தும் வகையிலான வினாக்கள் தேர்வில் இடம்பெறும் என அறிவித்திருந்தது. ஆனால், அப்படி எந்த வினாக்களும் தேர்வுகளில் இடம்பெறவில்லை.
  • பாடநூல்கள் வழி வழங்கப்படும் கற்றல் பொருள்களின் தரம் வல்லுநர்களின் மறுஆய்வுக்கு உட்படுத்தப்படுவதாகத் தெரியவில்லை. அவற்றைப் பற்றி வல்லுநர்களின் கருத்துரைக்குக் கேளாச் செவியினராகவே கல்வித் துறையினர் உள்ளனர்.

கற்பித்தல் போக்கு:

  • ‘படிப்புநிலைத் தரம்’என்பதில் கற்பித்தல் போக்கு இன்றியமையாததாகும். எண்ணியல் நுட்பத்தை நடைமுறைப்படுத்துதல் (digital technology) ஆசிரியர்களைப் பொறுப்பற்றவர்களாகக் கருதும் போக்கை வலுப்படுத்துகிறதே ஒழிய, கற்பித்தலை ஊக்குவித்து அவர்களுக்கு வழிகாட்டுவதற்கு உகந்ததாக இல்லை.
  • கற்பித்தலின் நோக்கம் பாடப்பொருளை மனனம் செய்து, தேர்வில் கக்குவதன்று. இது கற்றல் தரத்தை உயர்த்துவது ஆகாது.சிந்தனை மேம்பாடு, ஆக்கத் திறன் வெளிப்பாடு, விழுமியப் பதிவு ஆகியனவற்றை உள்ளடக்கியதாகக் கல்வி அமைய வேண்டும். இதுவே கல்வியின் உயரிய, உகந்த, தேவையான நோக்கமாகும். இதனை நிறைவேற்றுவதே கல்வித் துறையின் பொறுப்பாக அமைதல் வேண்டும்.
  • ஆசிரியர் தன்னுரிமை என்பது கல்விவழங்குவதற்கான உரிமை, கற்பிப்பதற்குரிய உரிமை ஆகியவை. தன்னுரிமை - கற்பித்தல்திறம்பட அமைவதை உறுதிசெய்யும் பொறுப்பை ஏற்கவும் கற்கும் முறையைநெறிப்படுத்தும் திறனாகவும் கொள்ளத்தக்கது.
  • இது மாணவர் கொண்டிருக்கும் திறன், மனப்பான்மை முதலியனவற்றை உள்ளடக்கியது. மேலும், பல்வேறு அளவுகளில் மேம்பட்டுக் கற்பித்தல், கற்றலைவளப்படுத்துவதாகும். ஆசிரியர் என்பவர் கற்றலுக்கான வசதிசெய்பவர்; கற்றலை நெறிப்படுத்துபவர். இவற்றைச் செம்மையுற ஆற்றிடத் தன்னுரிமை தேவை என்று 1986ஆம் ஆண்டின் தேசியக் கல்விக் கொள்கை கூறியது.
  • புதுமைப்படுத்துதல், பொருத்தமான தகவல்தொடர்பு முறைகள், தொடர்புடைய செயல்பாடுகளை ஊடகம்வழி தருதல் போன்றனவற்றுக்குக் கல்வி முறையில் ஆசிரியரின் தன்னுரிமை வழிவகுப்பதை 2005ஆம் ஆண்டின் தேசியக் கல்வி ஏற்பாட்டுக் கட்டமைப்பு (NCF 2005) வலியுறுத்துகிறது. ஆசிரியர்களுக்கோ பள்ளித் தலைமையினருக்கோ தன்னுரிமை இல்லாத நிலையில், கற்றல்-கற்பித்தல் தரம் மேம்படும் என எதிர்பார்க்க இயலாது.
  • கண்டித்தல், தண்டித்தல் என்பனவற்றுக்கு வேறுபாடு தெரியாமல், ஆசிரியர்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. ஆதலால், அவர்கள் தங்கள் பொறுப்பிலிருந்து விலகிக் கற்பித்தல் கடமையைத் தவிர்க்கின்றனர். இந்நிலை பற்றி கல்வித் துறை சிந்தித்து உரிய தீர்வு காண வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (17 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்