- டிஸ்லெக்சியா, டிஸ்கிராபியா, டிஸ்கால்குலியா, டிஸ்பிராக்சியா என மருத்துவரீ தியாகப் பல உட்பிரிவுகள் இருந்தாலும், கற்றல் குறைபாடுள்ளவர்களை ‘மெதுவாகக் கற்பவர்கள்’ (ஸ்வோவ் லேர்னர்ஸ்) எனலாம். எழுத்துகள் இடம் வலம் மாறித் தெரிவது, வார்த்தைகளின் பொருள் புரிய அவகாசம் தேவைப்படுவது, வாக்கியங்களை வாசிக்க அதிக நேரம் எடுப்பது போன்ற கற்றல் குறைபாடுகள், கடின முயற்சியாலும் சரியான வழிகாட்டுதலாலும் கடந்துவிடக்கூடிய சவால்தானே தவிர, ஆளை முடக்கிப்போட்டுவிடும் நோய் அல்ல.
- இந்தியாவில் மட்டுமே ஆண்டொன்றுக்கு 3.5 கோடி மாணவா்கள் கற்றல் குறைபாடு உள்ளவா்களாகக் கண்டறியப்படுகிறார்கள். இந்தியாவில் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையில் இது சுமார் 7%. சராசரியாக, இந்தியப் பள்ளிகள் எல்லாவற்றிலும் கற்றல் குறைபாடுள்ள மாணவர்கள் இருப்பதாக அண்மையில் வெளிவந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
குறைதீர்ப்புப் பயிற்சி முறை
- தன் பிள்ளை சரியாகப் படிப்பதில்லை என்று பெற்றோர் கூறினாலோ, தன்னிடம் பயிலும் மாணவன் போதிய மதிப்பெண்கள் எடுப்பதில்லை என்று ஆசிரியர் கூறினாலோ, தான் எவ்வளவுதான் முயன்றாலும் மற்ற மாணவர்களுக்கு நிகராக நம்மால் பாடங்களைப் படித்துத் தேர்வெழுத முடியவில்லை என்று மாணவர் கூறினாலோ, அவர்கள் கற்றல் குறைபாடு உள்ள பிள்ளைகளா என்று அடையாளம் காண வேண்டுமே தவிர, அவர்களை உதவாக்கரைகள் என்று ஒதுக்கிவிடக் கூடாது.
- அவ்வாறு ஒதுக்கப்படும் பிள்ளைகள் தாழ்வு மனப்பான்மையில் சுருங்கிப்போய்விடுவர். துரதிர்ஷ்டவசமாகக் கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களை அடையாளம் காண்பதற்கான ஓர் அறிவுசார் நடைமுறை இங்கு இல்லை. இதற்காக ஆண்டுதோறும் மனநல ஆலோசகர்களைக் கொண்டு பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என முத்தரப்பு ஆய்வு முகாம் நடத்தப்பட வேண்டும்.
- இத்தகைய மாணவர்களுக்கு எனப் பிரத்யேகப் பன்னோக்குப் பாடத்திட்டமும், சிறப்புப் பள்ளிகளும் தேவை. இதுதான் கற்பதில் பின்தங்கியவா்களுக்கு உதவி செய்யும் முறையிலான கற்றலில் குறைதீா்ப்புப் பயிற்சி முறை. ‘நீங்கள் கற்பிக்கும் முறையில் ஒரு மாணவனால் கற்றுக்கொள்ள முடியாதபோது, அவன் கற்றுக்கொள்ள விரும்பும் விதத்தில் கற்பிக்க வேண்டும்’ என்கிறார் அமெரிக்க உளவியலார் ஹோவர்ட் கார்ட்னர்.
- இதை மனதில் கொண்டு இந்தியாவில் உருவாக்கப்பட்டதுதான் தேசிய திறந்தநிலைப் பள்ளிக் கல்வி நிறுவனம் (என்ஐஓஎஸ்). மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்நிறுவனத்துக்கு, நாடு முழுவதும் பல கிளைகள் உள்ளன. சென்னையிலும் இதன் அலுவலகம் செயல்படுகிறது. தேசிய கல்வி வாரியம் அங்கீகரித்துள்ள மூன்று மேனிலைக் கல்வி முறைகளுள் இந்த என்ஐஓஎஸ் முறையும் உள்ளடக்கம். இதைப் பற்றிய பரவலான அறிதல் இன்னும் தமிழகத்தில் போதிய அளவில் ஏற்படவில்லை.
என்னென்ன சிறப்புகள்?
- மற்ற பள்ளிகளைப் போன்று என்ஐஓஎஸ் முறையில் காலை முதல் மாலை வரை வகுப்புகள் இல்லை. கற்றலில் குறைபாடுள்ள மாணவா்கள் மட்டுமல்லாமல் விளையாட்டுத் துறையிலோ, நடனம், இசை போன்ற பிற துறைகளிலோ நாட்டம் உள்ள மாணவ மாணவிகள் அந்தந்தப் பயிற்சிகளை முடித்துவிட்டு, குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் இத்தகைய பாடத்திட்டம் கொண்ட பள்ளிகளில் வந்து பயின்றால் போதுமானது.
- தேர்வெழுத மாற்றுத் தேர்வெழுதுநர் அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள், டிஸ்லெக்சியா மாணவர்களைவிட ஒரு வகுப்பு கீழ்நிலையில் படிக்கும் மாணவர்களாக இருப்பர். இவர்கள் தேர்வு எழுத கூடுதலாக ஒரு மணி நேரம் அவகாசம் வழங்கப்படும். எழுத்துப் பிழைகளுக்காக மதிப்பெண்கள் குறைக்கப்பட மாட்டாது.
- பொதுவாக, கல்வியைப் பாதியில் கைவிடும் மாணவர்களின் எண்ணிக்கையில் கணிசமானவர்கள் கற்றல் குறைபாடு கொண்டவர்களே. அவர்களுக்கு என்ஐஓஎஸ் கல்வி முறை ஒரு சிறந்த வினையூக்கி.
நன்றி: இந்து தமிழ் திசை (11-02-2020)