- சூழ்நிலையை அனுசரித்து நம் கலாச்சார வழக்கங்கள் கொஞ்சம் மாறிக்கொள்வது நடைமுறை. பெற்றவர்களுக்கு இயலாதபோது அவர்களின் பங்காளி உறவினர் தாய், தந்தையாக இருந்து மணப்பெண்ணைத் தாரைவார்த்துக் கொடுப்பதைத் திருமணங்களில் பார்த்திருக்கிறோம்.
- இப்படி சிறிய மாற்றங்களை மட்டும் செய்துகொண்டு கடக்க முடியாத பெரும் சங்கடங்களுக்குள் நம் கலாச்சார வழக்கங்களைத் தள்ளிவிட்டது கரோனா.
- மணப்பெண், மணமகன், இட்டுநீர் வார்த்துக்கொடுப்பவர்கள், பெறுபவர்கள் என்று சேர்ந்து நிற்பவர்களின் ஆறு ஜோடி கைகளை அடுக்கி வெற்றிலை பாக்கும் பெண்ணுமாக நீர்வார்த்துக் கொடுக்கும்போது, ஆறடி சமூக இடைவெளியை மதிக்கும் மாப்பிள்ளையின் தாயார் என்ன செய்வார்? தன் கைகளுக்குள் இப்படித் தரும் பெண்ணை மருகிக்கொண்டே பெற்றுக்கொண்ட பிறகு அவர் கையைக் கழுவிக்கொண்டால் அது முறை விரோதமாகிவிடும்.
- அந்தச் சடங்கை ஒதுக்கித் திருமணம் நடந்தால், நடந்தது திருமணம் என்ற தகுதியை சட்டம் அதற்குத் தராது. விருந்தாளிகளுக்குப் பந்தல் வாசலில் சந்தனப் பேலாவை நீட்டுவார்கள்.
- இதுவரை எத்தனை விரல்கள் இதைத் தொட்டிருக்குமோ என்று பயந்தாலும் அதைத் தொட்டு முகர்ந்துகொள்ளாமல் உள்ளே போக நம் மனம் ஒப்புமா? முகர்ந்துகொள்ள பூவும் சந்தனமும், வாய் இனிப்புக்கு ஒரு சிட்டிகை ஜீனியும் இல்லாதது திருமணமா? ஆனால், இந்த வழக்கங்களோ கரோனா தடுப்புக்கு விரோதமானவை.
பந்தி இல்லாத விருந்து
- பரிமாறிய பண்டங்கள் நளபாகமானாலும் பீமபாகமானாலும் கல்யாண வீட்டுப் பந்தியில் உட்கார்ந்து ஆற அமர சாப்பிட எத்தனை பேர் துணிவார்கள்? கூட்டம் குறைவுதான். ஆனாலும், நமக்கு இடைவெளி குறைவு என்ற பயம் விட்டுப்போகாது.
- ஒரு பஞ்சக் காலத்தில் இத்தனை பேருக்கு மேல் திருமண விருந்து தரக் கூடாது என்று விதி இருந்ததாம். அரசின் ஆய்வாளர்கள் திருமண வீட்டுக்கு வந்து எச்சில் இலைகளை எண்ணி, அவை அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் இருந்தால் அபராதம் விதிப்பார்கள் என்று கேள்விப்பட்டுள்ளேன். இதற்குப் பயந்து திருமண வீட்டார் இலைகளைக் குழியில் போட்டு மண்ணால் மூடிவிடுவார்களாம்.
- இன்றைய கரோனாவை இப்படியெல்லாம் ஏமாற்ற முடியாது. விருந்து வழக்கங்கள் கையில் தட்டுகளை வைத்துச் சாப்பிடும் முறைக்கு மாறிக்கொண்டன.
- ஒரு பெரிய தட்டைச் சுற்றி எல்லோருமாக ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் வழக்கம் உள்ளவர்கள்கூட தனித் தனித் தட்டுகளில் சாப்பிடுகிறார்கள் என்று செய்தி.
- ஐந்து, ஏழு, ஒன்பது என்ற எண்ணிக்கையில் சுமங்கலிகள் திருமணப் பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் கையிலும் கன்னத்திலும் சந்தனம் பூசி நலங்கு வைப்பது வழக்கம். சாதாரண நாட்களில் இன்னும் இரண்டு பேர்,
- இன்னும் இரண்டு பேர் என்று நலங்கு வைப்பவர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே இருக்கும். இப்போது ஐந்து பேர் நலங்கு வைப்பதே அதிகம் என்று சுருக்கிக்கொள்கிறார்கள்.
- திருமணச் சடங்குகளும் இறுதிச் சடங்குகளும் அவ்வளவு எளிதாக மாறாது என்பது சமூகவியல் பாடம். அது உண்மை. இப்போது அவை சரியான சங்கடத்தோடு வடிவம் மாறித் தொடர்வதும் உண்மைதான்.
- முன்பெல்லாம் துக்க வீடுகளுக்குச் சென்றுவருபவர்கள் சில நேரங்களில் குறைபட்டுக்கொண்டே வருவதைப் பார்த்திருக்கிறேன். வந்தவர்களைக் கட்டிக்கொண்டுகூட அழவில்லை என்று துக்க வீட்டாரை அவர்கள் குறை சொல்வார்கள்.
- இறந்தவரைச் சுற்றி அமர்ந்து, இடதிலும் வலதிலும் இருப்பவர்களின் தோளில் கையை வைத்துக் கட்டிக்கொண்டு அழுவது பெண்களுக்கு மரபு. ஒருவர் மரணித்தவுடன் அங்கே இருக்கும் ஆண்களும் நின்றுகொண்டே இப்படிச் செய்து, அந்த ஒரு தரத்தோடு கூடி அழுவதை விட்டுவிடுவதும் வழக்கம்.
- துக்கம் விசாரிக்க அடுத்தடுத்து வரும் ஒவ்வொருவரோடும் பெண்கள் இப்படிச் சேர்ந்து அமர்ந்துகொள்வார்கள். இப்போது துக்க வீட்டுக்குச் செல்பவர்களை இப்படியெல்லாம் செய்யக் கூடாது என்று எச்சரித்து அனுப்புகிறார்கள்.
தொடாமல் வராத துக்கம்
- கரோனா காலத்துக்கு முன்பு துக்கம் விசாரிக்கச் சென்று வந்தவர்களுக்கு அழுது ஓய்ந்ததுபோல் இருந்த உணர்வு இப்போது சென்றுவருபவர்களுக்கு இருக்காது.
- ஒருவரின் மனப் பரப்புக்குள் அடங்காத பரிமாணம் துக்கத்துக்கு உண்டு. அதையே செல்லரித்ததுபோல் அரித்து அந்த இடத்தில் பயத்தை விதைத்துவிட்டது இந்த கரோனா.
- அச்சத்தில் துக்கம் கரைந்துவிடுமா அல்லது வேறு ஒன்றாக அவதரித்துத் தங்கிப்போகுமா என்று தெரியவில்லை. அந்தக் காலத்தில் ஆண்களும் துக்க வீட்டைப் பற்றிக் குறை சொல்லிக் கேட்டிருக்கிறேன்.
- விசாரிக்க வருபவர்கள் இரண்டு கைகளிலும் பற்றிக்கொள்வதற்குத் துக்க வீட்டார் ஒருவர் தன் இரண்டு கைகளின் ஆட்காட்டி விரலையும் நடுவிரலையும் நீட்டுவது வழக்கம். தொடுவதற்கு விரல்களை நீட்டவில்லை என்றால் துக்கம் கொடுக்கவில்லை என்று வந்தவர்கள் குறைபட்டுக்கொள்வார்கள்.
- கரோனா காலத்தில் துக்கம் கொடுக்கவில்லை என்று யாரும் குறைபட்டுக்கொள்ள வழியே இல்லை. ஆனால், அந்தக் காலத்தில் உடம்பைத் தொடாமல் தன் துக்கத்தை ஒருவர் மற்றொருவருக்குக் கடத்த முடியாது என்றும், அதை அந்த வழியாகத்தான் மற்றவர் பகிர்ந்துகொள்ள முடியும் என்றும் தோன்றுகிறது.
- இப்படித் தொடுவதற்கும் கூடுவதற்கும் கட்டிக்கொள்வதற்கும் கரோனா கால சமூக விலகல் இடம் தராது. உடம்பை அவரவரும் தங்களோடு வைத்துக்கொள்ளும் வித்தையைப் பழக வேண்டும். அதை சமிக்ஞைகளால்கூட நாம் விநியோகிக்க முடியாது.
தானும் தானுமான வாழ்க்கை
- மலைக்க வைக்கும் மாளிகையாக எழும்பிக்கொண்டிருந்தது மனித நாகரிகம். அந்த நாகரிகம் தன் இன்றைய வளர்ச்சிச் சிகரங்களுக்கு வருவதற்குப் பல ஆயிரம் ஆண்டுகள் பிடித்திருக்கும்.
- கூட்டம் கூடுவதும் அந்த நாகரிகத்தின் அடிப்படையான கூறுகள்.
- கரோனா காலத்து அளவுகோலின்படி தெரு, கிராமம், நகரம், பெருநகரம் எல்லாம் கூட்டங்கள்தான். தொழிற்கூடங்களும் கூட்டமே. கோயில்களும் கூட்டம்.
- அலுவலகம், நீதிமன்றம், சட்டமன்றங்கள் எல்லாமும் கூடும் இடங்கள்தான். பள்ளிக்கூடங்களும் பல்கலைக்கழகங்களும் கூட்டங்கள். ஊர்வலம் ஆர்ப்பாட்டம், அரங்கம், சந்தை, அங்காடி, உணவகம், மருத்துவமனை போன்றவையும் கூட்டங்கள்.
- கச்சேரிகள் கூட்டம். கூடி உரையாடும் இடம் என்ற பொருளில் உணவகங்களுக்கு ‘காப்பி கிளப்’ என்ற பெயர் இருந்ததே! வீட்டுக்குள்ளேயே தனிமைப்படுத்திக்கொள்ளும்போது குடும்பமும் கூட்டம். நாகரிகத்தின் பெருமைகளாக நாம் அறிந்த எல்லாமே இன்று அஞ்ச வேண்டிய கூட்டங்கள்.
- இவற்றைப் பற்றிய பயத்தை நாம் புதிய ஞானமாகக் கற்க வேண்டும். நம் பெருமைகளான சமூக, பொருளாதாரக் கட்டமைப்புகள் எல்லாமே பயத்தின் ஊற்றாக மாறிக்கொண்டிருக்கும் விந்தையைப் பார்க்கிறோம்.
- அவரவரும் தானும் தானுமாகவே, தானும் தன் உடம்புமாகவே வாழ்ந்துகொள்ளக் கற்பிக்கும் புதிய நாகரிகம் ஒன்று பிறப்பதாகத் தெரிகிறது. நம் உடம்பே நாம் தாண்டக் கூடாத எல்லை என்ற நூதனமான தனிமனிதத் தத்துவம் அதற்கு ஆதாரமாக அமையலாம்.
- கட்டிக்கொண்டே வந்த கட்டிடத்தை அப்படியே நிறுத்தி, இதை எப்படி ஒவ்வொரு கல்லாகப் பிரிப்பது என்ற திகைப்பில் மனித நாகரிகம் உறைந்து நிற்கிறது. கலாச்சார வழக்கங்களின் சங்கடமும் அந்த திகைப்பின் அடையாளம்தானே!
நன்றி: தி இந்து (14-10-2020)