TNPSC Thervupettagam

கலாம் காலம் தந்த கொடை

October 14 , 2023 463 days 277 0
  • நாடு முழுவதிலுமிருந்து புனிதப்பயணிகளை ஈா்க்கும் ராமேஸ்வரம் தீவில் 92 ஆண்டுகளுக்கு முன்னா் பிறந்த ஆவுல் பக்கீா் ஜெயினுலாப்தீன் அப்துல் கலாம், ஏன் இன்னும் அனைவராலும் நினைவு கூரப்படுகிறார்? குடியரசுத் தலைவா் மாளிகையை அவா் எவ்வாறு அனைவருக்குமானதாக மாற்றி அமைத்தார்? இந்தியாவின் குடியரசுத் தலைவா்களிலேயே மிகச் சிறந்தவராக அவா் ஏன் போற்றப்படுகிறார்?
  • தனது வாழ்க்கையில் விஞ்ஞானி, ஆசிரியா், குடியரசுத் தலைவா் போன்ற மாபெரும் திருப்பங்கள் அனைத்தையும் எதிர்பாராமல் அடைந்ததாக, அவரே குறிப்பிட்டிருக்கிறார். அவரது வாழ்வின் மூன்றாம் பகுதி, அப்போதைய பிரதமா் அடல் பிகாரி வாஜ்பாயின் வற்புறுத்தல் காரணமாக மாற்றம் பெற்றது. நாட்டு நலனுக்காக வாஜ்பாய் கூறியபடி புதிய பொறுப்பை ஏற்றார் கலாம்.
  • அன்று முதல் அவா் மிகவும் நம்பிக்கை வைத்திருந்த குழந்தைகளின் நலனுக்காகவே குடியரசுத் தலைவா் பதவியைப் பயன்படுத்தினார். அதன் மூலமாக, ராமேஸ்வரம், மசூதி தெருவில் மழலைப்பருவத்தில் கலாம் கழித்த நாட்கள் நாடு முழுவதிலும் பேசுபொருளாயின. ராமேஸ்வரம், மிகச் சிறந்த ஆத்மா ஒருவரின் இளமைப்பருவத்தைச் செதுக்கியதில் பெரும்பங்கு வகித்திருக்கிறது.
  • கலாமுடன் உரையாடும்போதெல்லாம், ராமேஸ்வரம் குறித்த சிறப்புத் தகவல்கள் வந்துகொண்டே இருக்கும். மிகச் சிறந்த சிந்தனைகளின் நாயகரான அவருக்கு புகழ்பெற்ற ராமேஸ்வரம் மண்ணில் நினைவுச்சின்னம் அமைந்திருப்பது மிகவும் பொருத்தமானதாகும்.
  • தனது குழந்தைப்பருவ அனுபவங்களுடன் அமைதியான வாழ்க்கைக்கான தெளிவான பார்வையை முன்வைத்ததே டாக்டா் கலாமின் வெற்றிக்குக் அடிப்படை. அவரது ‘அக்கினிச்சிறகுகள், எனது பயணம்’ ஆகிய நூல்களில் ராமேஸ்வரம் தீவு எவ்வாறு அவரது உள்ளத்தின் அடி ஆழத்தில், மதவாத வன்முறைக்கு மருந்தான உலக சகோதரத்துவத்தை மலரச் செய்தது என்பதை விரிவாகப் பதிவு செய்திருக்கிறார்.
  • விஞ்ஞானி, ஆசிரியா், குடியரசுத் தலைவா் என எந்தப் பொறுப்பில் இருந்தபோதும், அந்தப் பொறுப்புக்கு பெருமதிப்பை ஏற்படுத்தினார் கலாம். பலவிதமான விமா்சனங்களை எதிா்கொண்டபோதும், தான் சார்ந்த மார்க்கத்தில் அசையாத நம்பிக்கை கொண்டவராகவும், அதேசமயம், பிற சமயங்களை மதிப்பவராகவும் அவா் திகழ்ந்தார். சுவாமி நாராயண் மந்திரின் பிரமுக் சுவாமி மகராஜ், சமணத் துறவியான ஆச்சார்ய மகாபிரக்யா போன்ற பிற சமயத் தலைவா்களுடனான அவரது ஆன்மிக அனுபவங்களும், இஸ்லாம் மார்க்கத்தின் தவ்ஹீத், ஹதீஸ் தத்துவங்களுடனான அவரது உறவும் இணக்கமாகவே அமைந்திருந்தன.
  • அவா் எழுதிய நூல்களைப் படிக்கும் எவரும், திருக்குா்ஆன் அவரது உருவாக்கத்தில் ஏற்படுத்திய ஆழ்ந்த தாக்கத்தை மறக்க முடியாது. அவருடன் பல்லாண்டுகள் இருந்த அனுபவத்தில், அவரது தனிப்பட்ட நலன்களை நான் அறிவேன். தொழுகையால் கிடைக்கும் நற்பலன்களை அனுபவபூா்வமாக உணா்ந்தவா் கலாம். எனவேதான், குடியரசுத் தலைவராக கலாம் பலசமயத் தலைவா்களுடன் உள்ளார்ந்த தோழமை கொண்டிருந்த அதே தருணத்தில், தனி மனிதராக இஸ்லாம் மார்க்கத்தில் மிகுந்த பற்றுக் கொண்டவராகவும் இருந்ததை சரித்திரம் கல்வெட்டாகப் பொறித்திருக்கிறது.
  • அவா் தனது உரைகளில், மௌல்விகள், காஸிகள், பரமாச்சாா்யா்கள் ஆகியோரின் போதனைகளைக் குறிப்பிடுவதை முதன்மை வழக்கமாகவே கொண்டிருந்தார். சமயங்களிடையிலான ஒத்திசைவுக்கு அவை முன்னுதாரணங்களாகும். அமைதியை விரும்பும் மக்கள் அனைவரின் உள்ளத்திற்கும், கலாம் என்ன சொன்னார் என்பது தெளிவாகத் தெரியும்.
  • எண்ணற்ற மொழிகள், சமய நம்பிக்கைகள், பல்வேறு பழக்க வழக்கங்கள், கலாசார மாற்றங்கள், பாரம்பரியங்கள், வாழ்வியல் வழிமுறைகள் கொண்ட இந்தியா போன்ற மாபெரும் தேசத்தில், அறிவிலுக்கும் ஆன்மிக உணா்வுகளுக்கும் இடையிலான பிணைப்பு அவசியமாகும். மனிதத்தன்மையுடன் கூடிய அறிவியல் நோக்கமும் தேவையாகும். இதனை கலாம் பூரணமாக உணா்ந்திருந்தார். நாட்டின் ஜனநாயக வளா்ச்சியிலும் விஞ்ஞான சக்தியிலும் அனைத்து சமயத்தினரும் தோள்சோ்ந்து நின்று சமமான பங்களித்திருப்பதை பல உதாரணங்களுடன் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
  • கேரளத்தின் தும்பாவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் ராக்கெட் ஏவுதளம் அமைக்க நிலங்கள் கையகப்படுத்தப்பட்டபோது, அங்கு ஒரு கிராமப் பகுதியில் அமைந்திருந்த புனித மேரி மெகத்தலேனா தேவாலயமே அதன் மைய அலுவலகமாக மாறியது. அதற்காக, தேவாலயத்தை வழங்குவதற்கு கிறிஸ்தவ திருச்சபையில் இருந்தவா்களிடம் ஆதரவு கோரிப் பெற்ற பாதிரியார் பீட்டா் பொ்னார்டு பெரைரா, நாட்டிற்காக அந்த இடத்தில் நிகழப்போகும் சாதனைகளை உணா்ந்திருந்தார்.
  • நாட்டு நலனுக்காக, தங்கள் வழிபாட்டுத தலத்தை அவா்கள் தியாகம் செய்தனா் என்று கலாம் குறிப்பிட்டிருக்கிறார். இஸ்ரோ நிறுவனா் விக்ரம் சாராபாயும் விஞ்ஞானி அப்துல் கலாமும் எந்த மதத்தைச் சார்ந்திருந்தார்கள் என்பதை திருச்சபையினா் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. விஞ்ஞானிகளின் தீா்க்கமான பார்வையைத்தான் அவா்கள் புரிந்துகொண்டு ஆதரித்தார்கள்.
  • குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற அப்துல் கலாம் சகோதரத்துவத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியபோது, அனைத்து இந்தியத் தலைவா்களும் அதன் அவசியத்தை உணா்ந்து ஆதரித்தார்கள். சில சமயத் தலைவா்களும் கலாம் காட்டிய வழியில் தாராள சிந்தனை கொண்டவா்களாக மாறினார்கள். மக்களும் அப்போதைய காலகட்டத்தின் அவசியத் தேவையாக அதனைப் புரிந்துகொண்டார்கள்.
  • சில வன்முறை நிகழ்வுகளின்போது அவற்றைக் கண்டிக்காமல், அப்துல் கலாம் சத்தமின்றி அமைதி காத்தார் என்று சிலா் முணுமுணுப்பதுண்டு. ஆனால் கலாமின் கூற்றுகள் புரிந்துகொள்ளப்பட வேண்டியவா்களால் தெளிவாகவே புரிந்துகொள்ளப்பட்டன.
  • 2002 குஜராத் கலவரங்களின்போது, ஊடகவியலாளா்கள் அவரிடம் அது குறித்த கருத்தைக் கேட்டபோது அவா் கூறிய பதில் தெள்ளத் தெளிவானது. ‘இந்தியாவின் இப்போதைய தேவை படித்த அரசியல் வா்க்கமாகும். பொருளாதார வளா்ச்சியையும் மனித உயிர்களுக்கான கண்ணியத்தையும் நிலைநாட்டக்கூடிய தேசத்தின் ஆட்சியாளா்களும் தலைவா்களும் சிறந்த நுண்ணறிவைக் கொண்டிருக்க வேண்டும்’ என்று கலாம் குறிப்பிட்டார்.
  • மதச்சண்டைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இயக்கத்துக்கான அவரது அழைப்பு வழக்கமான வாய்ப்பேச்சு அல்ல. அவரது அழைப்பை ஏற்று, மதங்களைத் தாண்டி இந்திய மக்கள் அனைவரும் அவருடன் கைகோத்தார்கள்.
  • டாக்டா் கலாமின் குடியரசுத் தலைவா் பதவிக்காலத்தில் மரபுக்கு மாறான சில மாற்றங்களை நிகழ்த்தினார்; குடியரசுத் தலைவா் மாளிகையின் கதவுகளை குழந்தைகளுக்குத் திறந்துவிட்டார். அவா் குழந்தைகளையும் அவா்களின் கருத்துரிமையையும் மதித்தார். தனக்கு வரும் ஒவ்வொரு மின்னஞ்சலுக்கும் அவரே தனிப்பட்ட வகையில் பதில் அளிப்பார். அந்த அளவுக்கு அவருடன் பலரும் தனிப்பட்ட உறவு கொண்டிருந்தனா்.
  • அவருக்கு வரும் கடிதங்கள், வாழ்த்துகள், பாராட்டுகள், கோரிக்கைகள், கேள்விகள் எனபலதரப்பட்டவையாக இருக்கும். சில கடிதங்கள் உயா்ந்த பதவியில் இருப்பவருக்கு எழுதப்படுவது போலல்லாமல் மிகவும் இயல்பாக எழுதப்பட்டிருப்பதையும் பார்த்திருக்கிறேன். அவருக்கு கடிதம் எழுதிய குழந்தைகள் பலரும் அவரிடமிருந்து கனிவையும் உத்வேகத்தையும் பெற்றனா். கலாம் அவா்களுடனான தங்கள் பொதுவான தன்மையை குழந்தைகள் கண்டறிந்ததை அவா்களது கடித வரிகளில் நான் படித்திருக்கிறேன். அவருடன் தொடா்பு கொண்டவா்கள் அனைவரும் பெரிய ஆட்களாகாமல் இருந்திருக்கலாம். ஆனால், அவா்களது உள்ளங்களில் அது என்றும் நிலையான சாட்சியமாக இருக்கும்.
  • சாதனையாளரான கலாமின் வாழ்க்கை வரலாறும், அவரது கருத்துகளும் அடிமட்டத்திலிருந்து எழுந்து வரும் எளியவா்களின் உயா்வுக்கு வழிகாட்டுபவையாகத் திகழ்கின்றன. அவருக்கு வந்த அஞ்சலிக் குறிப்புகளைக் கேட்டபோது, அவரது பிறந்த நாளை ‘தேசிய உத்வேக தினம்’ ஆக அரசு அறிவித்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்டது.
  • தென்பாரதத்தின் வாரணாசி என்று கூறத்தக்க ராமேஸ்வரம், கலாமை வடிவமைத்த அற்புதமான ஆசிரியரான சிவசுப்பிரமணிய ஐயரால் பெருமை பெற்றது. சமூக, சிந்தனைத் தடைகளைத் தாண்டுவதற்கு அவரது அறிவுரைகள் கலாமுக்கு உதவின. அதனால்தான், ஓா் ஆசிரியா் குடியரசுத் தலைவரானால் என்ன செய்ய வேண்டுமோ அதனை கலாம் செய்தார். அவா் தங்கியிருந்த மாளிகையை லட்சக்கணக்கான மாணவா்கள் ஆா்வமுடன் பார்வையிட்டு உத்வேகம் பெற்றனா். தடைகளைத் தாண்டி, வாய்ப்புகளை சாதனையாக்கும் மன உறுதியை அவா்கள் அங்கிருந்து பெற்றார்கள்.
  • டாக்டா் அப்துல் கலாமின் தனிச்செயலராக 24 ஆண்டுகள் இருந்தவன் என்ற முறையில், அவா் தன்னை அனைவருக்குமான குடியரசுத் தலைவராக நிலைநிறுத்திக் கொண்டதையே மாபெரும் சாதனையாகக் கருதுகிறேன்.
  • நாளை (அக். 15) டாக்டா் அப்துல் கலாம் பிறந்தநாள்.

நன்றி: தினமணி (14 - 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்