TNPSC Thervupettagam

கலைச்சின்னங்களை சிதைக்கும் நிறமாற்றம்

March 10 , 2024 134 days 134 0
  • மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளால் போக்குவரத்து மாற்றங்களுக்கும் இட நெருக்கடிக்கும் உள்ளாகியிருக்கும் மெரினா கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள சிலைகளுக்கு, திடீர் நடவடிக்கையாகத் தங்க வண்ணம் பூசப்பட்டிருக்கிறது. அரிய படைப்பாளிகளால் உருவாக்கப்பட்ட இந்தக் கலைச்சின்னங்கள் இப்படி மாற்றப்பட்டிருப்பது, கலை ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கறுப்பு நிறத்தில் வடிக்கப்பட்ட இந்தச் சிலைகளின் நிறம் வலிந்து மாற்றப்பட்டது, அந்தச் சிலைகளின் இயல்பான கலை நேர்த்தியைச் சிதைத்திருப்பதாகச் சமூக வலைதளங்களில் பலர் விமர்சித்துவருகின்றனர்.
  • சென்னை மெரினா கடற்கரைச் சாலையில் கடலுக்கு எதிர்ப்புறம் ராணி விக்டோரியா உட்பட பல ஆளுமைகளுக்கு பிரிட்டிஷ் அரசு முன்பொரு காலத்தில் சிலைகளை அமைத்திருந்தது. நாட்டு விடுதலைக்குப் பிறகு புகழ்பெற்ற மகாத்மா காந்தி சிலை 1956இல் கடற்கரைச் சாலையின் தெற்குப் பகுதியில் நிறுவப்பட்டது. அன்றைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு இதனைச் திறந்துவைத்தார். அதே வரிசையின் வட முனையில் உழைப்பாளர் சிலை நிறுவப்பட்டது. சென்னை கவின் கலைக் கல்லூரியின் முதல்வராக இருந்த புகழ்பெற்ற சிற்பி தேவி பிரசாத் ராய் சௌத்ரி வடித்த சிலைகள் இவை.
  • அறிஞர் அண்ணா தலைமையிலான தமிழ்நாடு அரசு 1968இல் இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டை நடத்தியது. அதை ஒட்டி காந்தி சிலைக்கும் உழைப்பாளர் சிலைக்கும் இடைப்பட்ட பகுதிகளில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் பங்களித்த திருவள்ளுவர், ஔவையார், ஜி.யு.போப் உள்ளிட்ட ஆளுமைகளின் சிலைகள் தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்டன. புகழ்பெற்ற சிற்பிகளான எஸ்.தனபால், மணி நாகப்பா ஆகியோரால் வடிக்கப்பட்ட சிலைகள் இவை. 1990களில் இதே வரிசையில் காமராஜர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் சிலைகள் நிறுவப்பட்டன. இப்போது உழைப்பாளர் சிலையைத் தவிர கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள பெரும்பாலான சிலைகளுக்கு திடீரெனத் தங்க நிறம் பூசப்பட்டுள்ளது. சென்னை அண்ணா சாலையின் மையப் பகுதிகளில் அமைந்துள்ள பெரியார், அண்ணா சிலைகளுக்கும் இதே நிறம் பூசப்பட்டுள்ளது.
  • தமிழக அரசால் புதிதாகத் திறந்து வைக்கப்படும் சிலைகள் தங்க நிறத்திலேயே அமைந்துள்ளன. மறைந்த முன்னாள் முதல்வர்கள் மு.கருணாநிதி, ஜெ.ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளும் சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் அண்மையில் திறக்கப்பட்ட முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலை உட்பட பல சிலைகள் தங்க நிறத்தில் வடிவமைக்கப்படுகின்றன. கருணாநிதி முதல்வராக இருந்தபோது திறக்கப்பட்ட நடிகர் சிவாஜி கணேசன் சிலையும் தங்க நிறத்திலேயே வடிக்கப்பட்டது.
  • புதிய சிலைகளை தேவைக்கேற்ற நிறத்தில் வடிவமைத்துக்கொள்வதுகூடப் பரவாயில்லை. ஆனால், ஏற்கெனவே நிறுவப்பட்டு மக்கள் மனங்களில் நிலைத்துவிட்ட சிலைகளின் நிறத்தை மாற்றுவதை, அந்தச் சிலைகளையும் அவற்றை வடித்த சிற்பிகளையும் அவமதிப்பதாகவே பார்க்க வேண்டியுள்ளது. மேலும் இந்த நிறமாற்றம், கறுப்பு நிறம் இழிவானது என்னும் மோசமான உளவியல் காரணத்துக்கு வலுச்சேர்ப்பதாக அமைந்துவிட்டதைப் புறம்தள்ளிவிட முடியாது.
  • சிலைகள் வெறும் கற்கள் அல்ல. அவை முக்கியமான கலைப் புதையல்கள், நமது பண்பாட்டின் அடையாளச் சின்னங்கள். இத்தகைய சிலைகளைப் பராமரிப்பதும் மேம்படுத்துவதும் அவசியம்தான். முற்காலத்தில் காந்தி சிலை உள்பட சில சிலைகளில் ஏற்பட்ட சேதங்கள் சரிசெய்யப்பட்டுள்ளன. ஆனால் இந்தப் பரமாரிப்பு, மேம்படுத்துதல், சேதங்களைச் சரிசெய்தல் போன்ற பணிகள் எதுவும் சிலைகளின் இயல்பை பாதிப்பதாக அமையக் கூடாது. இத்தகைய நிற மாற்றத்தின் மூலம் கலைச் சின்னங்களின் இயல்பு மாற்றப்படுவதைக் கலைகள் மீது அக்கறை கொண்டவர்களும் கலையின் இயல்பைப் புரிந்துகொண்டவர்களும் நிச்சயம் ஏற்க மாட்டார்கள். இது பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல் அரசு நிர்வாகத்தில் இருப்பவர்கள் இந்தப் பணிகளை அவசரகதியில் நிறைவேற்றியிருக்கிறார்கள்.

நன்றி: இந்து தமிழ் திசை (10 – 03 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்