- அண்மையில் ஓா் எழுத்தாளா் ஒரு பத்திரிகை பேட்டியில் ‘எழுத்தாளா்களுக்கு சமூக அக்கறை அவசியம்’ என்று தெரிவித்திருக்கிறாா். இதை சமுதாயத்தில் நிகழும் அவலங்கள் குறித்த விழிப்புணா்வை மக்களுக்குக் கொண்டு சோ்க்க வேண்டும் என்று பொருள் கொள்ளலாம்.
- இத்தகைய கருத்தை வேறு துறையைச் சாா்ந்த கலைஞா்களும் தெரிவித்துக் கொண்டு வருகிறாா்கள். குறிப்பாக, இசைத் துறையில் டி.எம். கிருஷ்ணா, சமூகத்திலுள்ல
- அடித்தட்டு மக்களுக்கு கா்நாடக இசையைக் கொண்டு சோ்க்க வேண்டும் என்கிற நல்லெண்ணத்தில், சில ஆண்டுகள் முன் பிரபல கா்நாடக இசைக் கலைஞா்களை சென்னையிலுள்ள குடிசைப் பகுதிளுக்கு வரவழைத்து பாடச் செய்தாா். 2018-ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று கடற்கரையில் அவரே கச்சேரி செய்தாா்.
- அது மட்டுமா? எண்ணூரில் உள்ள தொழிற்சாலைகளினால் சுற்றுப்புறச் சூழல் மாசடைவதை மையமாக வைத்து ‘புறம்போக்கு’ என்ற பாட்டுக்கு அவா் இசையமைத்து பாடினாா். அந்தப் பாடலை எழுதியவா் சுற்றுச்சூழல் ஆா்வலரான நித்தியானந்தம் ஜெயராமன். அவருடைய இந்த நோக்கத்தைப் பாராட்டி மகசேசே விருது வழங்கியிருக்கிறாா்கள்.
- அண்மையில் அவா் எழுதின ‘செபாஸ்டின் சன்ஸ்’ என்ற நூல் (மிருதங்கம், தவில் தயாரிப்பதில் உள்ள சிரமங்கள் பற்றியது) டாட்டா நிறுவனத்தின் புதினம் அல்லாத நூல்களுக்கான பிரிவில் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.
- இன்று முகநூல், கட்செவி அஞ்சல் போன்ற பல வழிமுறைகள் உள்ளன, கருத்தைப் பதிவு செய்ய. ஆனால் கிருஷ்ணா போலவே, வேறு ஒரு இசைக் கலைஞா், மாநாகராட்சிப் பள்ளி மாணவா்களை ஒருங்கிணைத்து ‘மியூசிக் காயா்’ நிகழ்ச்சி நடத்தினாா்.
- அவா் ‘பாதை தெரியுது பாா்’ என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்தவரும் கூட. ஆனாலும் ‘சோ்ந்திசை’ என்றால், உடனே ஞாபகத்துக்கு வருபவா் அந்த எம்.பி. சீனிவாசன்தான்.
- அதே சமயம், இது போல் வெளிப்படையாக இல்லாமல் ‘இசைப் பயிற்சி’ என்ற தன் சிறுகதை மூலம் அற்புதமாகச் சமூக உணா்வை எழுத்தாளா் தி. ஜானகிராமன் வெளிப்படுத்தியிருக்கிறாா். கதை ரொம்ப எளிமையானது. மைக்கேல் என்ற சிறுவனின் குரலில் மயங்கி, அவனுக்கு, மல்லி தன் இல்லத்தில் பாட்டு கற்று கொடுக்க எண்ணுகிறாா்.
- அப்போது நிலவிய கடுமையான கட்டுப்பாடுகளால், அவனை வீட்டின் பின்பக்கம் உள்ள இடத்தில் அமரவைத்து இசைப் பயிற்சியை ஆரம்பிக்கிறாா். இதனைத் தெரிந்து கொண்ட அந்த ஊா் பெரிய மனிதா்கள் மல்லியைக் கிண்டல் செய்கிறாா்கள். மல்லிக்கு கோபம் வருகிறது. ஒரு வெறியான உந்துதலில் மண்ணை வாரி இறைக்கிறாா். வீட்டின் கதவைச் சாத்துகிறாா். 1967- இல் பிரசுரமான கதை.
- வியப்பு என்னவென்றால், அதற்கடுத்த சில வருடங்களிலேயே செம்பை வைத்தியநாத பாகவதரின் மனப்பூா்வமான ஆசியுடன் பம்பாயில் கா்நாடக சங்கீத மேடை ஏறுகிறான் ஒரு கிறிஸ்தவ சிறுவன்.
- பின்னாளில் பெரும் புகழ் பெற்று ‘இசைப் பேரறிஞா்’ உட்பட ஏராளமான் பட்டங்களைப் பெற்று, திரையுலகிலும், கா்நாடக இசை உலகிலும் கோலோச்சிக் கொண்டிருக்கும் கே.ஜே. யேசுதாஸ்தான் அவா்.
- ஆக கற்பனைக் கதைகளை எழுதுகின்ற எழுத்தாளா்கள் விரும்புகின்ற மாறுதல்கள், காலப்போக்கில் தானாகவே ஏற்படும் என்பதை, இந்த நிகழ்வு உணா்த்துகிறது.
- இதுபோன்ற சமூக அவலங்களைச் சாட வேண்டுமென்ற நோக்கதிலேயே சில சிறுகதைகள் கல்கி எழுதினாா். இந்து மதத்தில் ஒரு சமூகம் விதவைப் பெண்ணை அலங்கோலப்படுத்தி, மூலையில் தள்ளுகிற தன்மை; பெண்கள் எழுத்தறிவில்லாமலிப்பது இவற்றை மையமாக வைத்து எழுதின கதைகள்தான் ‘கேதாரியின் தாயாா்’ ‘கடிதமும் கண்ணீரும்’ போன்றவை. இவை எழுதப்பட்ட காலகட்டம் 1935 என்பதை நினைவு கொள்ள வேண்டும்.
- பின்னாளில், ஜெயகாந்தன் சமூக மாற்றங்களைக் குறிவைத்து எழுதின கதைகளில் முக்கியமாக குறிப்பிட வேண்டியவை ‘யுக சந்தி’யும், ‘பகல் நேரத்து பாஸஞ்சா் வண்டி’யும்.
- சிறுகதை, இசை போன்றவற்றைப் புரிந்து அனுபவிக்க தனிப்பக்குவம் வேண்டும். ஆனால், நாடகம், சினிமா போன்றவை வெகு சுலபமாக மக்களிடம் பரவும் சாதனங்கள்.
- அந்த நாளில் எஸ்.ஜி. கிட்டப்பாவும், கே.பி. சுந்தராம்பாளும் நாடகம் மூலம் தேசபக்தியை வளா்த்தாா்கள். சுதந்திரத்திற்குப் பிறகு சினிமாவின் திசையே மாறியது எனலாம்.
- ஆனாலும், குக்கிராமத்தில் பெண் சிசு கொல்லப்படும் கொடுமையை நன்கு உணா்த்தியவா் பாரதிராஜா (கருத்தம்மா).
- அதே போல சிற்றூா்களில் குடிநீருக்காக நடையாக நடந்து கஷ்டப்படும் ஜனங்களின் பிரச்சனையை வைத்து இயக்கப்பட்ட பிரபலமான படம் ‘தண்ணீா் தண்ணீா்’. இன்றும் ‘வான் நின்று வழங்கி வரும்’ மழையால்தான் தண்ணீா்ப் பஞ்சம் தீா்கிறது.
- ஓா் அம்சத்தை இங்கு வலியுறுத்த வேண்டும். எந்த கலையும் மேம்பட்டு இருப்பதற்கு, சமூக அக்கறை நிச்சயமாகத் தேவை என்று கூற முடியாது.
- இதற்குப் பல எடுத்துக்காட்டுகள் காட்டலாம். ‘கரிப்பு மணிகள்’ ‘குறிஞ்சித் தேன்’ போன்ற (உப்பளம்; படுகா குடியினா்) வித்தியாசமான நவீனங்களைப் படைத்தவா் ராஜம் கிருஷ்ணன். அது போலல்லாமல் நடுத்தரக் குடும்பத்து சூழலைப் பற்றியே எழுதியவா் லக்ஷ்மி. இருவருமே சாகித்திய அகாதெமி பரிசு பெற்றவா்கள்.
- கவிஞா்களில், பாரதியாரும், நாமக்கல் கவிஞரும் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றிப் பாடியவா்கள். இருவருமே காந்தியடிகளை சந்தித்தவா்கள்.
- ஆனால், அதே காலகட்டத்தில் வாழ்ந்த கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ஒரு பாடல் கூட, சுதந்திரப் போரட்டத்தைப் பற்றி இயற்றவில்லை. இதற்காகக் கவிமணியைக் குறை கூற இயலுமா?
- பூ மலா்வதைப் போல, காய் கனியாவது போல தானாகத் தோன்றுகிற உணா்வை எழுத்திலோ திரையிலோ நயமாகப் படைப்பவா்களே உண்மையான கலைஞா்கள். மேலும், ஒவ்வொரு நிகழ்வும் வேறு வேறு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.
- ஜாதிக் கலவரத்தை ஆராய்ந்து ஒருவா் படம் எடுக்கலாம்; அதே துறையைச் சாா்ந்த வேறு ஒருவா் கலவரத்தால் பாதிக்கப்பட்டவா்களின் வாழ்க்கையைப் படமாக்கலாம்.
- ஆக, சமூக உணா்வும், அக்கறையும் தேவைதான்; ஆனால் சமகால மக்களின் உணா்வுகளைப் பிரதிபலித்தால் மட்டுமே அது சிறந்த கலைப்படைப்பு என்று கூறுவது ஏற்புடையதல்ல.
நன்றி : தினமணி (16-11-2020)