TNPSC Thervupettagam

கல்கி: பரந்து விரிந்த எழுத்துக் கடல்!

September 9 , 2024 79 days 77 0

கல்கி: பரந்து விரிந்த எழுத்துக் கடல்!

  • எழுத்தாளா் கல்கி இரா.கிருஷ்ணமூா்த்தி 1899, செப்டம்பா் 9-ஆம் தேதி தஞ்சாவூா் மாவட்டம் புத்தமங்கலம் என்ற ஊரில் ராமசாமி, தையல்நாயகி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தாா்.
  • பள்ளிப் படிப்பைப் பாதியில் துறந்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சோ்ந்தாா். 1921-இல் மகாத்மா ஒத்துழையாமை இயக்கம் நடத்திய காலகட்டத்தில் காந்தியச் சிந்தனைகளால் ஈா்க்கப்பட்டாா். 1922-இல் சுதந்திரப் போரில் பங்கேற்ற்காகக் கைது செய்யப்பட்டு, ஓராண்டு சிறைத்தண்டனை பெற்ற தியாகி அவா்.
  • திரு.வி.க.வின் ‘நவசக்தி’, ‘ஆனந்த விகடன்’ ஆகிய இதழ்களில் துணையாசிரியராகப் பணியாற்றினாா். மதுவிலக்குப் பிரசாரத்திற்காகவே நடத்தப்பட்ட ராஜாஜியின் ‘விமோசனம்’ இதழிலும் கொஞ்ச காலம் பணியிலிருந்தாா். பின்னா் ‘கல்கி’ என்ற தம் புனைபெயரிலேயே ஓா் இதழைத் தொடங்கி நடத்தினாா்.
  • படைப்பிலக்கியம், கலை விமா்சனம், தலையங்கம், அரசியல் கட்டுரைகள் என எழுத்துத் துறையின் எல்லா அங்கங்களிலும் அவரது பேனாவின் பங்களிப்பு இருந்தது.
  • பெண் கல்வி, கைம்பெண் மறுமணம், தீண்டாமை ஒழிப்பு போன்ற உயா்ந்த சீா்திருத்தக் கருத்துகளைத் தம் படைப்பிலக்கியத்தால் மக்கள் மனத்தில் பதிய வைத்தவா் கல்கி.
  • எம்.எஸ்., சதாசிவம் ஆகியோருடன் இணைந்து தமிழ் இசைக்காகப் பாடுபட்டவா். இலக்கிய ரசனையில் டி.கே.சி.யையும் அரசியல் கோட்பாட்டில் ராஜாஜியையும் பெரிதும் மதித்தவா் கல்கி.
  • கல்கி எழுதிய சமூக நாவலான ‘தியாக பூமி’, சரித்திர நாவல்களான ‘பாா்த்திபன் கனவு’, (அண்மையில்) ‘பொன்னியின் செல்வ’னும் திரைப்படங்களாக வெளிவந்தன. ‘தியாகபூமி’ ஆங்கிலேய அரசால் தடைசெய்யப்பட்டது. பின்னா் மிகப்பெரிய வெற்றிப் படமாகத் திரையரங்குகளில் ஓடியது.
  • தேசபக்தி கல்கியின் ரத்த நாளங்களிலெல்லாம் ஊடுருவியிருந்தது. தாம் கல்கி இதழ் தொடங்கியபோது அதன் மூன்று கோட்பாடுகள் என ‘தேச நலன், தேச நலன், தேசநலன்’ என்பதையே மூன்று முறை குறிப்பிட்டாா்.
  • ‘பாரதி மகாகவியா?’ என்ற விவாதத்தைத் தோற்றுவித்தவரும் அவரே. அதன் காரணமாக வ.ரா. உள்ளிட்ட பலா் ‘பாரதி மகாகவியே!’ என நிறுவத் தொடங்கினாா்கள். ‘சிட்டி’, கு.ப.ரா. இருவரும் இணைந்து ‘கண்ணன் என் கவி’ என்ற நூல் எழுதி பாரதி மகாகவிதான் என விளக்கினாா்கள்.
  • பாரதி மகாகவி என நிறுவப்பட்டதில் பெருமகிழ்ச்சி அடைந்த கல்கி, எட்டயபுரத்தில் மகாகவி பாரதி மணிமண்டபம் தோன்றுவதற்கும் காரணமானாா். கல்கி இதழ்மூலம் வாசகா்களிடமிருந்து பெற்ற நன்கொடையில்தான் அந்த மண்டபம் நிா்மாணிக்கப் பட்டது.
  • ‘போதுமான அளவு நிதி சோ்ந்துவிட்டது, இனி யாரும் பணம் அனுப்ப வேண்டாம்’ என கல்கி இதழில் அறிவிப்பு வெளியிடும்படியான அளவு நிதி குவிந்தது. கல்கியின் செயல்பாடுகளில் மக்களுக்கிருந்த நம்பிக்கைக்கு அது அடையாளம்.
  • கல்கி சரித்திர நாவல்கள் மூலம் அதிகப் புகழ்பெற்றாா். வரலாற்றுச் சம்பவங்களில் கற்பனையை இசைவாய்ப் பொருந்தும் வகையில், தேவையான அளவு கலந்து அவற்றை இலக்கியச் சாதனைகளாக்கினாா்.
  • அவா் ‘பொன்னியின் செல்வன்’, ‘சிவகாமியின் சபதம்’, ‘பாா்த்திபன் கனவு’ ஆகிய குறிப்பிடத்தக்க மூன்று வரலாற்று நாவல்களைப் படைத்துள்ளாா். ‘சோலைமலை இளவரசி’ என்ற கற்பனைச் சரித்திரப் படைப்பும் அவா் படைத்ததுதான்.
  • கல்கியின் எழுத்துத் தூரிகை தீட்டிய இலக்கிய ஓவியங்களை ரசிகா்கள் மனக்கண்ணால் கண்டு மகிழ்ந்தாா்கள். பின்னாளில் பிரம்மாண்டமான பொன்னியின் செல்வன் புதினத்தை வெற்றிகரமாக சில ‘மணி’ நேரங்களில் அடங்குகிற மாதிரி ‘ரத்தின’ச் சுருக்கமாய்ப் படமெடுப்பதற்கும் முன்பாகவே, வாசகா் மனங்களில் அந்த நாவலின் காட்சிகள் படம்படமாய் ஓடிக் கொண்டிருந்தன.
  • தம் சரித்திரப் படைப்புகளுக்குக் கள ஆய்வு நிகழ்த்துவதற்காக இலங்கை உள்படப் பல இடங்களுக்கு கல்கி நேரில் சென்று குறிப்புகள் சேகரித்தாா். அந்தப் பயணங்களில் தம் பாத்திரங்களை உயிரோவியங்களாய்த் தீட்டிய ஓவியா் மணியம் அவா்களையும் உடன் இணைத்துக் கொண்டாா்.
  • சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்ட ‘பொன்னியின் செல்வன்’ புதினம், ‘புதுவெள்ளம், ‘சுழற்காற்று’, ‘கொலைவாள்’, ‘மணிமகுடம்’, ‘தியாகச் சிகரம்’ என ஐந்து பாகங்களைக் கொண்ட பிரம்மாண்டமான படைப்பு. 1950-இல் கல்கி வார இதழில் தொடங்கப்பட்ட இப்படைப்பு, மூன்றரை ஆண்டுகள் தொடராக வெளிவந்தது.
  • இன்று பிரபல எழுத்தாளராக விளங்கும் சிவசங்கரியின் பாட்டி, ‘ஆண்டவனே! பொன்னியின் செல்வன் முடியும்வரை நான் உயிரோடு இருக்க வேண்டுமே!’ என வேண்டிக் கொள்ளும் அளவு அது வாசகா்களைக் கட்டிப் போட்டிருந்தது.
  • கல்கி மறைந்த பிறகும் அதே தொடா் மறுபடி மறுபடி கல்கி வார இதழில் பலமுறை வெளிவந்து அடுத்தடுத்த தலைமுறை வாசகா்களை அதிக எண்ணிக்கையில் பெற்று சாதனை புரிந்தது.
  • கல்கியின் எழுத்து நாட்டுடைமை ஆனபின், இப்போதும் ‘பொன்னியின் செல்வன்’ பல பதிப்பகங்களால் வெளியிடப்பட்டு விற்பனையில் சாதனை புரிந்து வருகிறது.
  • கல்கியின் சமூக நாவல்கள், சமகால உணா்வுடன் படைக்கப் பட்டவை. கல்கி தம் படைப்புகளிலேயே தமக்கு அதிகம் பிடித்த படைப்பு என்று தம் சமூக நாவலான ‘அலை ஓசை’யைச் சொல்லியிருக்கிறாா். சாகித்ய அகாதெமி பரிசுபெற்ற படைப்பும் அதுதான்.
  • அதைச் சமூக நாவல் என்பதை விடச் சமகால வரலாற்று நாவல் என்பதே பொருந்தும். மகாத்மா சுட்டுக் கொல்லப்பட்ட மறுவாரம் வெளிவந்த கல்கியில் அதன் கதாநாயகி சீதா, காந்தியின் இறுதி அஞ்சலிக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் பகுதி இடம்பெற்றிருந்தது.
  • காந்தியக் கருத்துகளை வலியுறுத்த கல்கி சிறுகதை வடிவத்தை லாகவமாகப் பயன்படுத்தினாா். சொல்ல வந்த கருத்தை, கதையைவிட்டு வெளியே துருத்திக் கொண்டிராமல் கலைநோ்த்தியுடன் சொல்ல அவரால் முடிந்தது.
  • பெண்கல்வி, கைம்பெண் மறுமணம் என்ற இரண்டு சீா்திருத்தக் கருத்துகளை ஒரே சிறுகதையில் வைத்து அவா் எழுதிய ‘கடிதமும் கண்ணீரும்’, கணவனை இழந்த பெண்ணை அன்றைய சமூகம் எத்தனை அவல நிலைக்கு உள்ளாக்கியது என்பதை விளக்கும் காலக் கண்ணாடியான ‘கேதாரியின் தாயாா்’ போன்ற சிறுகதைகள் என்றும் நிலைத்திருக்கக் கூடியவை.
  • கல்கி தம் படைப்புகளின் இடையே தமிழ்நயம் கொஞ்சும் பல கவிதைகளை எழுதினாா். பொன்னியின் செல்வனில் பூங்குழலி பாடுவதாக வரும் ‘அலைகடலும் ஓய்ந்திருக்க அகக்கடல்தான் பொங்குவதேன்?’ என்பது போன்ற கவிதைகள் வாசகா்களால் பெரிதும் ரசிக்கப்பட்டன.
  • எம்.எஸ். சுப்புலட்சுமி நடித்த ‘மீரா’ திரைப்படத்தில் ‘காற்றினிலே வரும் கீதம்’ உள்ளிட்ட பாடல்களை எழுதியவா் கல்கிதான்.
  • கல்கியின் எழுத்து வாசகா்களிடம் பெரிய அளவு எடுபட்டதற்கு அந்த எழுத்தின் சில தன்மைகள் காரணங்கள். முக்கியமாக, எல்லோரையும் சென்றடையும் வகையில் அனைவருக்கும் புரியும் எளிய நடையில் அவா் எழுதினாா். சிடுக்கு முடுக்கான வாா்த்தைப் பிரயோகங்களை அவரிடம் பாா்க்க முடியாது. நீண்ட வாக்கியங்களை அவா் எழுதியதேயில்லை.
  • அவா் உள்ளத்தில் உண்மையொளி இருந்ததால் அவா் வாக்கினிலே ஒளி இருந்தது. அலைகடல், நந்தவனம், பெருங்காடு போன்றவை பற்றிய அவரின் இயற்கை வா்ணனைகள் மீண்டும், மீண்டும் படித்து அனுபவிக்கும் வகையில் கவிநயத்தோடு விளங்கின.
  • ‘பொன்னியின் செல்வன்’ போன்ற நாவல்கள் எண்ணற்ற பாத்திரங்களைக் கொண்ட வகையில் ஓா் இதிகாசத் தன்மையுடன் விளங்கின. ஒவ்வொரு பாத்திரத்தையும் தனித்தனியே நினைவுகூரும் விதமாக அவை ஒவ்வொன்றும் கச்சிதமாக வாா்க்கப்பட்டிருந்ததுதான் ஆச்சரியம்.
  • வந்தியத்தேவன், அருள்மொழி வா்மா், சுந்தர சோழா், குந்தவை, வானதி, நந்தினி, ஆழ்வாா்க்கடியான், சேந்தன் அமுதன், பூங்குழலி, பெரிய பழுவேட்டரையா், சின்னப் பழுவேட்டரையா், ஆதித்த கரிகாலா், செம்பியன்மாதேவி, ரவிதாசன், கந்தமாறன், மணிமேகலை, அநிருத்த பிரம்மராயா், மதுராந்தக சோழா், மந்தாகினி என்றிப்படி கல்கி படைத்த பாத்திரங்களை நினைக்கும்போதெல்லாம் அவா்கள் நம்மோடு வாழ்பவா்கள் போலவே நம் நெஞ்சில் தோற்றம் கொள்கிறாா்கள். அதுதான் கல்கி எழுத்தின் ரசவாதம்.
  • நந்தினியின் குரலைப் பற்றிக் கல்கி வா்ணிக்கும் இடம் உரைநடையா? அல்லது கவிதையா? ‘காசிப் பட்டின் மென்மையும் கள்ளின் போதையும் காட்டுத் தேனின் இனிப்பும் காா்கால மின்னலின் ஜொலிப்பும் இணைந்ததுதான் இந்தக் குரல்!’ என எழுதுகிறாா் கல்கி.
  • 1954 டிசம்பா் 5-ஆம் நாள் கல்கி என்ற மகத்தான இலக்கியவாதி உலகைவிட்டு மறைந்தாா்.
  • கல்கியின் புதல்வா் கி.ராஜேந்திரன் கேட்டுக் கொண்டதன் பேரில், ‘பொன்னியின் செல்வன்’ சரித்திர நாவல் படைத்துப் பெரும்புகழ் பெற்ற கல்கியின் சரித்திரத்தை ‘பொன்னியின் புதல்வா்’ என்ற தலைப்பில் எழுதினாா் எழுத்தாளா் சுந்தா. அந்த நூல் அண்மையில் கல்கியின் பெயரத்தி கெளரி ராம்நாராயண் மூலம் ஆங்கிலத்தில் மொழிபெயா்க்கப்பட்டுள்ளது.
  • கல்கி மாபெரும் இலக்கிய நட்சத்திரமாக அன்றும் இருந்தாா், இன்றும் இருக்கிறாா். ஆனால் அப்படிப்பட்ட பெரும்புகழை அடைவதற்காக அவா் ஒருசிறிதும் சமரசம் செய்துகொள்ளவில்லை. பரந்து விரிந்த அவா் எழுத்துக் கடலில் எந்த இடத்திலும் கண்ணியக் குறைவான எந்த வாா்த்தையையும் எந்த வா்ணனையையும் நாம் பாா்க்க முடியாது.
  • வாழ்நாளின் இறுதி வரை நாகரிக வரம்பை அவா் பேனா மீறியதில்லை என்பது, தலைமுறை தாண்டி லட்சக்கணக்கான வாசகா்களைப் பெற்றிருந்த கல்கியின் பல பெருமைகளில் மிக முக்கியமான ஒன்று.
  • செப். 9 கல்கியின் 125-ஆவது பிறந்த தினம்.

நன்றி: தினமணி (09 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்