TNPSC Thervupettagam

கல்பாத்தி: பொதுப் பாதைக்கான தீர்மானத்தின் நூற்றாண்டு!

August 22 , 2024 5 hrs 0 min 27 0

கல்பாத்தி: பொதுப் பாதைக்கான தீர்மானத்தின் நூற்றாண்டு!

  • வைக்கத்தில் நடைபெற்ற சத்தி​யாகிரகம் (1924) பற்றி பெரியார் தொடர்பில் தமிழகம் நன்கு அறிந்​திருக்​கிறது. கிட்டத்தட்ட இதே காலக்​கட்​டத்தில் கேரளத்தின் கல்பாத்தி வீதியில் நடப்ப​தற்கான உரிமையைக் கோரிப் போராட்டம் நடைபெற்று​வந்தது.
  • வைக்கம் போராட்டம் அளவுக்கு இல்லா​விட்​டாலும் உள்ளூர் அளவில் தொடர்ச்​சியான போராட்​டங்கள் நடத்தப்​பட்டன. வைக்கம் போராட்டம் முடிவுக்கு வந்ததில் பெரியாருக்குப் பங்கு இருந்தது போலவே, கல்பாத்தி போராட்டம் முடிவுக்கு வந்ததில் தமிழ்​நாட்டுத் தலைவர் ஒருவருடைய பங்கு இருந்தது. அவர் இரட்டைமலை சீனிவாசன் (1859 - 1945).

கல்பாத்தி போராட்டம்:

  • பாலக்​காட்டை ஒட்டி உள்ள ஊர் கல்பாத்தி. அங்கு இருக்கும் விஸ்வநாதர் கோயிலில் நடைபெறும் பத்து நாள் தேர் திருவிழா புகழ்​பெற்றது. அது அக்ரகார வீதிகளில் நடைபெறும். இந்த அக்ரகாரம் வழியாகத் தீண்டப்​படாதவர்கள் செல்வதற்குத் தடை இருந்தது. பிரிட்டிஷ் அதிகாரி​களின் பணியாளர்களாக இருந்த ஒடுக்​கப்​பட்​ட​வர்கள் அக்ரகாரத்​துக்குள் சென்றபோது தாக்கப்​பட்​டனர்.
  • ‘மிலேச்​சர்​களாக’ இருந்​தாலும் அதிகாரத்தில் இருந்த வெள்ளை​யர்களை அனுமதித்​தவர்கள், ஒடுக்​கப்​பட்​ட​வர்கள் விஷயத்தில் மட்டும் தவறாது சாதியை ஞாபகப்​படுத்​திக்​கொண்​டனர். ‘குதிரைக்கார குப்பன்’ என்கிற சிறுகதையில் (1925) பிராமணர்​களின் இந்த இரட்டைத்​தன்மையை அ.மாதவையா விவரித்​திருப்​பார்.
  • கல்பாத்தி அக்ரகாரப் பாதைக்கான விவாதம் 1886 முதலே தொடங்கி​விட்​ட​தாகத் தெரிகிறது. பிரிட்டிஷ் அரசால் கொண்டு​வரப்​பட்​டிருந்த நவீனச் சட்டங்கள் இதற்கான நியாயத்தை ஏற்படுத்​தி​யிருந்தன. எனவே இப்போராட்டம் ஆரம்பத்​திலிருந்தே சட்டம், சட்ட நடைமுறை என்கிற எல்லை​யிலேயே இருந்தது.
  • நகராட்​சிக்கு உள்பட்ட எந்தத் தெருவும் அல்லது நகராட்​சியால் உருவாக்​கப்​படும் (பிரிவு 163) தெருவும் பொதுவான தெருவே என்கிற 1884ஆம் ஆண்டின் சட்டமே இதற்கான அடிப்​படையாக இருந்தது. பொது நிதியால் பராமரிக்​கப்​படும் பாதையாக இருக்​கும்​பட்​சத்​தில், அவை பொதுப்​பாதை​யாகவே கருதப்பட வேண்டும் என்று இதன் மூலம் வாதிடப்​பட்டது.

சட்ட உரிமை காலம்:

  • 1919க்குப் பிறகு இந்தியாவில் தேர்தல் மூலமும், நியமனம் மூலமும் சட்டம் இயற்றும் அவைகளில் உள்ளூர் பிரதி​நி​திகள் இடம்பெறத் தொடங்​கினர். 1920களுக்குப் பிந்தைய காலம் உரிமைகள், அதற்கான சட்டங்கள், விவாதங்கள் நடைபெற்ற முக்கியமான காலக்​கட்​ட​மாகும். சென்னை மாகாணத்தில் நீதிக்​கட்சி தேர்தல் மூலமும், ஒடுக்​கப்​பட்டோர் பிரதி​நி​திகள் நியமனம் மூலமும் சட்ட அவையில் இடம்பெற்று அதுவரை தாங்கள் பேசிவந்த விஷயங்​களைச் சட்டப்​படி​யானதாக ஆக்க முயன்​று​வந்​தனர்.
  • பாரம்​பரியம் என்றாலும் நவீனச் சட்டம் மூலம் அது தடுக்​கப்​படலாம்; புதிய நடைமுறையொன்றை அவ்விடத்தில் கொணரலாம் என்கிற புரிதல் உருவானது. இந்தப் புரிதல் இந்தி​யர்​களுக்குப் புதிது. இதன்படி சட்ட அவைகளில் அதற்கான போராட்​டங்கள் நடைபெற்றன.

தொடக்க முயற்சிகள்:

  • ஒடுக்​கப்பட்ட பிரதி​நி​திகள் பலர் சட்ட அவையில் இடம்பெற்று பல்வேறு வகைகளில் குரலெழுப்பி வந்திருப்​பினும் பொதுப்பாதை விஷயத்தில் எம்.சி.ராஜா, இரட்டைமலை சீனிவாசன், ஆர்.வீரய்யன் ஆகியோ​ருடைய முயற்சிகள் குறிப்​பிடும்​படியாக இருந்தன.
  • தலித்துகள் பொதுவெளி​களில் புழங்​கு​வ​தி​லும், பொதுப்​பாதை, கிணறு, சத்திரம் ஆகியவற்றைப் பயன்படுத்து​வ​திலும் நிலவிய தடையை மாற்ற பல்வேறு முயற்சிகள் நடைபெற்றன. 1919இல் சட்ட மேலவைக்கு எம்.சி.ராஜா நியமிக்​கப்​பட்​ட​வுடன் பொதுக் கிணறு, ஏரி, குளங்கள், சத்திரங்கள் உள்ளிட்​ட​வற்றை தலித்துகள் பயன்படுத்தத் தடையில்லை என்கிற தீர்மானத்தை நிறைவேற்ற வாதாடி​னார். இதற்கு ஆட்சி​யாளர்​களிட​மிருந்து போதிய ஒத்துழைப்பு கிடைக்க​வில்லை.
  • இந்நிலையில் 1924 ஏப்ரலில் சேலம் கமலாபுரம் அக்ரகாரத்தில் இருந்த அஞ்சல் நிலையத்​துக்குச் செல்லும்போது ஆர்.வீரய்யன் தடுக்​கப்​பட்​டார். உடனடியாக ஆளுநருக்குச் சூழலை விளக்கித் தந்தி கொடுத்து​விட்டுப் போராட்​டத்தை முன்னெடுத்​தார்.
  • அடுத்த சில மாதங்​களில் இரட்டைமலை சீனிவாசன் பொதுப்பாதை உரிமைக்கான தீர்மானத்தைச் சட்ட மேலவையில் கொண்டு​வந்​தார். இது வரலாற்று முக்கி​யத்துவம் வாய்ந்த தீர்மான​மாகும். இந்தத் தீர்மானத்​தின்படி உள்ளாட்சி அமைப்புகள், நகராட்சிச் சட்டங்கள் ஆகியவற்றில் திருத்​தங்கள் மேற்கொள்​ளப்​பட்டன.

தீர்மானத்தில் திருத்​தங்கள்:

  • 22-8-1924 அன்று சட்டமன்​றத்தில் இரட்டைமலை சீனிவாசன் முன்மொழிந்த இந்தத் தீர்மானத்தை சத்தி​யமூர்த்தி வழிமொழிய ஓட்டெடுப்பு மூலம் நிறைவேறியது. தீர்மானத்தின் முன்னுரை​யில், இந்தத் தீர்மானத்தை ஒவ்வொரு அக்ரகாரத்​திலும் ஒவ்வொரு ஊர்த்​தெரு​விலும் மேளம் அடித்து சத்தமாக வாசித்துக் காட்ட வேண்டும் என்று சொல்லப்​பட்​டிருந்தது. தீண்டப்படாத வகுப்பு உறுப்​பினர்கள் அனைவரும் அதனை வழிமொழிந்​தனர்.
  • ஆனாலும் நீதிக்​கட்சி தயக்கம் காட்டியது. முதலமைச்சர் பனகல் அரசர் தீர்மானம் குறித்து அமைச்​சர்​களுடன் விவாதிக்க வேண்டும் என்றார். ஆனால் ஆங்கிலேய உள்துறை அமைச்சர், மாறி வரும் காலக்​கட்​டத்தில் இதைத் தடுக்க முடியாது என்றே கருதினார். தீண்டப்​படாதார் மேம்பாட்டு விஷயங்​களில் மாநிலங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று ஏற்கெனவே மத்திய அரசு உத்தர​விட்​டிருந்தது.
  • ஆங்கிலேய அதிகாரி​களும் நீதிப​தி​களும்கூட சாதி பாரபட்சம் பார்ப்பதாக ஆர்.வீரய்யன் குற்றம்​சாட்​டி​னார். ஒடுக்​கப்​பட்டோர் பிரதி​நி​திகள் இம்முறை இந்தப் பிரச்​சினையில் பின்வாங்கக் கூடாது என்கிற முடிவுடன் இருப்​ப​தையும் உணர்ந்​திருந்​தார். பிறகு நீதிக்​கட்சி அந்த தீர்மானத்தைத் திருத்​தங்​களுடன் நிறைவேற்ற ஒப்பு​கொண்டது.
  • அதேவேளையில் பிராமணர்கள் புண்படு​வார்கள் என்று கூறி, ‘அக்ர​காரம்’ என்கிற வார்த்தையை நீக்கக் கூறினர். அதேபோல் அக்ரகாரம், ஊர்த்தெரு ஆகியவற்றில் தீர்மானத்தை மேளம் அடித்து வாசிக்க வேண்டும் என்பதையும் நீக்க கோரினர்.
  • அதன்படி அந்த இரண்டு அம்சங்​களும் நீக்கப்​பட்டு 1924 செப்டம்பர் 25இல் தீர்மானம் ஆளுநரால் அரசாணையாக (ஜி.ஓ. 2660) வெளியிடப்​பட்டது. அனைத்து உள்ளாட்சி அமைப்பு​களும் அதைப் பின்பற்ற வேண்டு​மென்று அறிவுறுத்​தப்​பட்டது. இந்தச் சட்டம் பிறகு மற்ற மாநிலங்​களுக்கும் முன்மா​திரியாக மாறியது.

அரசாணைக்குப் பிந்தைய போராட்டம்:

  • அரசாணை வெளியான சில மாதங்​களில், குறிப்பாக 1924 நவம்பரில் கல்பாத்​தியில் தேர்த் திருவிழா நடைபெற்றது. இப்போது தீண்டப்​படாதவர்கள் அதில் பங்கேற்க விரும்​பினர். வழக்கறிஞர் ராகவன் என்பவர் தலைமையில் அக்ரகாரத்​துக்குள் சென்றனர். பிராமணர்​களும் சாதி இந்துக்​களும் சேர்ந்து அவர்களைத் தாக்கினர்.
  • இந்தத் தாக்குதலைக் கண்டித்தும் அக்ரகார நுழைவை ஆதரித்தும் 1924 டிசம்​பரில் பாலக்​காட்டில் பெரிய பொதுக்​கூட்டம் நடைபெற்றது. அதில் கிருஷ்ண நாயர், ஆர்.சேகர் மேனன், ஆர்.வீரய்யன், நரசிம்​மராஜு ஆகியோர் பங்கேற்​றனர். இதற்கிடையில் ஆரிய சமாஜமும் இதற்கு ஆதரவளித்தது.
  • இதையொட்டி நிறைய விவாதங்கள், நீதிமன்றக் கருத்​துக்கள் எழுந்தன. அக்ரகாரப் பாதையில் நுழைவதற்கான எந்தத் தேவையும் ஏற்படாத​பட்​சத்தில் வேண்டு​மென்றே நுழைவதை ஆதரிக்கக் கூடாது என்று கூறப்​பட்டது. இரு தரப்புக் கூட்டங்​களும், ஒத்திவைப்பு​களும் நடந்தன. இவற்றைப் பற்றியான தொடக்​கநிலைத் தகவல்களை ஆய்வாளர் கோ.ரகுபதி எழுதியிருக்கிறார்.

முடிவுக்கு வந்த போராட்டம்:

  • நீண்ட காலமாக நீடித்து வந்த பிரச்​சினைக்கு இந்தத் தீர்மானம் வந்த பிறகே முடிவு ஏற்பட்டது. இதைப் பற்றி இரட்டைமலை சீனிவாசன், “மலையாளத்​தையடுத்த பாலக்காடு தாலுக்​காவில் கல்பாத்தி என்னுமோர் பார்ப்பன சேரியிருக்​கிறது. அதற்குள் பார்ப்​பனரல்​லாயொரு​வரும் போகக்​கூடாதென்று ஐகோர்ட்டும் அதற்குமேலுள்ள பிரிவி​க​வுன்சல் மட்டும் போய் உத்தரவு பெற்றிருந்​தார்கள்.
  • பார்ப்​பனரல்லா டாக்டரும் வியா​தி​யஸ்தரை காண வேணுமானால் குதிரை மேல்போய் வர வேண்டு​மாம். அந்த பார்ப்பன சேரியையடுத்த கிராமத்​திலிருக்கும் இழிஞ்சர் என்னும் தீண்டப்படா சமூகத்​தவரில் சிலர் சட்டசபையில் நான் கொண்டுபோன தீர்மானத்​தின்படி சட்டமேற்​பட்​டிருப்பதை வாசித்தறிந்து மேற்படி பார்ப்பனச் சேரியில் ஆலய உற்சவம் நடந்தபோது சேரிக்குள் பிரவேசித்தார்கள். அவர்களைப் பார்ப்பனர் அடித்துத் துரத்தி மாஜிஸ்ட்​ரேட்டு கோர்ட்டில் பிராது செய்தார்கள்.
  • விசாரித்து பிராது தள்ளி​விடப்​பட்டது. பார்ப்பனர் சென்னை ஐகோர்ட்டுக்கு அப்பீல் செய்தார்கள். லோக்கல் போர்டு முனிசிபாலிட்​டியால் பராமரித்து​வரும் எல்லை, தெரு, பாதை முதலியவை பொது ஜனங்களால் உபயோகிக்​கப்​படலாம் என்று தீர்மான​மா​யிற்று” என்று தன்னுடைய சுயசரிதையான, ‘ஜீவிய சரித்திர சுருக்​க’த்தில் பதிவுசெய்திருக்​கிறார். பொதுவான கிணறுகள், குளங்கள், பாட்டைகள், சத்திரங்கள், கட்டிடங்கள் முதலிய​வற்றைச் சகலரும் உபயோகிக்​கலாம் என்று கூறி சிறு புத்தகமொன்றையும் அவரே வெளியிட்​டார்.
  • இந்தத் தீர்மானத்தின் முக்கி​யத்துவம் பற்றி, ‘Caste Pride: Battles for Equality in Hindu India (2023)’ என்ற நூலில் மனோஜ் மிட்டா குறிப்​பிட்​டிருக்​கிறார். அந்​நூலில் அவர், ஆபிர​காம் லிங்​க​னின் அடிமை​முறைக்கு எ​திரான ​விடு​தலைப் பிரகடனத்​துடன் (1883) ஒப்​பிடக்​கூடியது இந்தத்​ தீர்​மானம் என்று குறிப்​பிட்​டிருக்​கிறார். சட்ட மேல​வைக்கு நியமிக்​கப்​பட்ட தீண்​டப்​படா​தார் பிர​திநி​திகள் பெற்ற வரலாற்​றுப் புகழ்​பெற்ற வெற்றி இதுவாகும்!

நன்றி: இந்து தமிழ் திசை (22 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்