TNPSC Thervupettagam

கல்யாணம்: ஒரு காந்திய வாழ்வு!

May 9 , 2021 1356 days 573 0
  • கல்யாணம் என்ற ஆளுமை, எளிமையின் உருவம். அவர் காந்தியின் உயர்ந்த நோக்கங்களை வாழ்க்கை முழுவதும் கடைப்பிடித்து வந்தார்.
  • அதிகாலை 4 மணிக்கே எழுந்துவிடுவார். அவரது உடைகளை அவரே துவைப்பார். தனக்குத் தானே முடி வெட்டிக்கொள்வார். தனது உணவைத் தானே சமைப்பார். பாத்திரங்களைத் தானே துலக்குவார். வீட்டுக்கு வந்த விருந்தாளிகளுக்கு உணவளித்து அவர்களின் தட்டையும் அவரே சுத்தம் செய்வார்.
  • வீடு ஒரு கலைக்கூடம்போல இருக்கும். எந்த மூலையிலும் ஒரு தூசுகூட இல்லாமல் துடைப்பார்; வீடு என்பது அவருக்கு அவர் வாழும் தளத்தை மட்டும் உள்ளடக்கியது அல்ல.
  • வீட்டின் லிப்ட், படிக்கட்டு, பக்கச் சுவர்களையும் தூசிகளின்றி துடைப்பார். படிக்கட்டுகளைப் பெருக்குவார். வீட்டுக்கு வெளியே நடைபாதையையும் துடைப்பானால் பெருக்குவார்.
  • தன் வீட்டைச் சுற்றி ஆயிரக்கணக்கான செடிகளை வளர்த்து அவற்றுக்கு ஒரு குழந்தைக்குப் பாலூட்டுவதைப் போல தண்ணீரை விடுவார். காய்ந்த செடி இலைகளை பொறுக்கி உரமாக்குவார்.
  • சிறு வயதிலிருந்தே காந்தியின் மீது பெரும் மதிப்பு கொண்டிருந்த கல்யாணம் ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ இதழில் ஆசிரியராக இருந்த காந்தியின் புதல்வரான தேவதாஸ் காந்தியின் ஆசிரமத்தில் இணைந்தார்.
  • அப்போது காந்தி சிறையில் இருந்தார்; விடுதலையான காந்தியைச் சந்தித்த பிறகான சில மாதங்களிலேயே காந்தியோடு பயணிக்கலானார்.
  • காந்தியின் தனிப்பட்ட உதவியாளராக உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து காந்திக்கு வரும் கடிதங்களை மொழிவாரியாகத் தொகுத்து காந்தியிடம் காட்டி, அதற்குப் பதிலும் அனுப்புவார்.
  • வரும் கடிதங்களின் வெற்றுப் பகுதிகளை விரயம் செய்ய மாட்டார். அதில் காந்தி கூறும் செய்திகளை தட்டச்சு செய்து கோப்பில் சேர்ப்பார். கல்யாணத்தின் அம்மா தயாரித்த தமிழ்நாட்டு உணவான இட்லியை காந்தி பல தருணங்களில் சுவைத்திருக்கிறார்.

நினைவில் நிலைத்திருப்பார்!

  • காந்தி இறப்பதற்கு முந்தைய நான்கு வருடங்களில் அவரது தனிச் செயலராக பணியாற்றிய கல்யாணம், காந்தி சுடப்பட்டபோது அவரது வெகு அருகில் சில அங்குல தூரத்தில் நின்றவர்.
  • காந்தி மரணித்தபோது ‘ஹே ராம்’ என்று சொல்லவில்லை என்று கல்யாணம் கூறியது சர்ச்சையானது. ஒரு கூர்மதியான பத்திரிகையாளரின் ஊகத்திலான செய்தி அது என்றார் கல்யாணம்.
  • காந்தி இறந்த பின், பஞ்சாபில் இயங்கிய கடத்தப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் மீட்புக் குழுவில் எட்வினா மவுன்ட் பேட்டனோடு பணியாற்றினார் கல்யாணம்.
  • புது டெல்லியிலும் எட்வினா மவுன்ட் பேட்டனோடு சேர்ந்து அகதிகள் நிவாரணப் பணியிலும் அவர்களின் மறுவாழ்வுக்காக ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஒருங்கிணைந்த பணியிலும் ஈடுபட்டார்.
  • அதன் பின், ரிஷிகேசத்தில் மீராபென் நடத்திய பசுலோக் ஆஸ்ரமத்தில் ஒரு வருடம் பணியாற்றினார். தொடர்ந்து சர்வோதய இயக்கத்தில் வினோபாவேயுடனும், ஜெயபிரகாஷ் நாராயணுடனும், பின்னர் ராஜாஜியின் சுதந்திரா கட்சியிலும் பணியாற்றினார்.
  • நேரு பிரதமராக இருந்தபோதுகூட அவருக்கு உதவியாளராகச் சில நாட்கள் பணியாற்றியிருக்கிறார். நேருவின் செயலர் எம்.ஓ.மத்தாயின் நடவடிக்கைகள் பிடிக்காமல் அங்கிருந்து விலகினார்.
  • கல்யாணம் 1922 ஆகஸ்ட் 15 அன்று சிம்லாவில் பிறந்தவர். டெல்லியில் வணிகவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்.
  • தமிழ், இந்தி, ஆங்கிலம், குஜராத்தி, வங்காளம், பஞ்சாபி எனப் பன்மொழிகள் அறிந்தவர். அவரது மனைவி சரஸ்வதி 30 வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டார். மாலினி, நளினி என இரண்டு புதல்விகள் இத்தம்பதிக்கு உள்ளனர்.
  • இன்னும் சில மாதங்களில் நூறு வயதை எட்டவிருந்த கல்யாணம் தன்னுடைய உற்சாகத்துக்கான காரணமாக ஓயாத உடல் உழைப்பயும் எளிய உணவையும்தான் குறிப்பிடுவார்.
  • தீவிர சிக்கனத்தைத் தன் வாழ்வில் கடைப்பிடித்த கல்யாணம் பல லட்சங்களை ஏழைகளுக்கும் பல்வேறு அமைப்புகளுக்கும் தானமாக வழங்கியவர். பூரண வாழ்வு என்று சொல்லலாம்; நினைவில் நிலைத்திருப்பார்!

நன்றி: இந்து தமிழ் திசை (09 - 05 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்