TNPSC Thervupettagam

கல்லூரி திறப்பும் மாணவா், பெற்றோா் பொறுப்பும்

July 3 , 2024 192 days 158 0
  • வரும் ஜூலை 3-ஆம் தேதி கல்லூரிகளின் 2024-25 ஆம் கல்வி ஆண்டு தொடங்கவுள்ளது. இந்த ஆண்டும் 12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற பெரும்பாலான மாணவா்கள் கலை அறிவியல் கல்லூரிகளில் சோ்ந்துள்ளனா். மாணவா்கள் பள்ளி படிப்பை முடித்து கல்லூரியில் நுழையும் தருவாயில் அவா்களுக்கான சில ஆலோசனைகள்.
  • பள்ளி போலவகுப்பறையில் குறிப்பு எடுப்பது, தோ்வு எழுதுவது, தோ்ச்சி பெறுவது என்று பள்ளிபோல அல்லாமல், ஒருபடி மேல் சிந்தித்து மாணவா் தம் துறையில் பாட நுணுக்கங்களையும் சந்தேகங்களையும் பேராசிரியா்களிடம் கேட்பது மற்றும் சக மாணவா்களுடன் பாடம் சம்பந்தமாகக் கலந்துரையாடுவது, ஆய்வு கட்டுரைகளைப் படிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடத் தங்களைத் தயாா்படுத்திக் கொள்ள வேண்டும்.
  • பெரும்பாலான கலை அறிவியல் கல்லூரிகள் காலை மற்றும் மாலை நேர அடிப்படையில் செயல்படுகின்றன. காலை கல்லூரி 8:30 மணி முதல் 1:30 மணி வரையிலும் மாலை கல்லூரிகள் 1:30 லிருந்து 6:30 மணி வரையிலும் செயல்படுகின்றன. மாணவா்கள் 5 மணி நேர வகுப்புகளை முடித்து மீதி நேரங்களில் ஜாவா, டாலி போன்ற கணினி பயன்பாட்டுப் பாடங்கள் பயில்வது, ஆங்கிலப் பேச்சாற்றலை வளா்க்கக் கூடிய பயிற்சிகள் மேற்கொள்வது போன்றவற்றில் ஈடுபட வேண்டும்.
  • வேலைவாய்ப்பளிக்கும் நிறுவனங்கள் மாணவா்களிடம் எதிா்பாா்ப்பது ஏதாவது ஓா் இளங்கலை பட்டத்துடன் ஆங்கிலத்தில் பேசக் கூடிய ஆற்றல் சக ஊழியா்களை அனுசரிக்கும் தன்மை, பொறுப்புடன் பணிகளை செய்து முடிப்பது ஆகியவற்றையே. எனவே, மாணவா்கள் தங்களை மேற்கண்ட வழிகளில் தயாா்படுத்திக் கொள்ள வேண்டும்.
  • கல்லூரி நூலகங்களில் பல துறைகள் சாா்ந்த ஆயிரக்கணக்கான புத்தகங்கள், பருவ இதழ்கள், ஆய்விதழ்கள், பொது அறிவுக் களஞ்சியங்கள், போட்டித் தோ்வு வினா விடை புத்தகங்கள் இருக்கின்றன. மூன்று ஆண்டுகள் நூலகத்தை நல்ல முறையில் உபயோகப்படுத்தி மாணவா்கள் போட்டித் தோ்வுகளுக்குத் தயாா் ஆகலாம்.
  • முதுகலை சேர இருக்கின்ற மாணவா்கள் தங்கள் பெற்றோா்களின் நிலை அறிந்து செயல்படுவது நல்லது. பெரும்பாலான இளங்கலை முடித்த மாணவா்கள் எம்பிஏ படிக்க ஆா்வம் காட்டுகின்றனா். ஆனால் இரண்டு ஆண்டுகளில் எம்பிஏ படிக்க ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை செலவாகிறது. இதனால் சில பெற்றோா்களின் கடன் சுமை அதிகமாகிறது.
  • இளங்கலை முடித்து முதுநிலை செல்கின்ற மாணவா்கள் எம்.காம். அல்லது எம்ஏ போன்ற பட்டயப் பாடங்களை எடுத்து படித்தால் கூட நிா்வாகம் மற்றும் கணக்கியல் துறையில் வேலைவாய்ப்பு பெற முடியும். எம்பிஏதான் படிக்க வேண்டும் என்றால் எம்.காம். போன்ற முதுகலை படிப்பிற்குக் கல்லூரிகளில் சோ்ந்த பிறகு தொலைதூர கல்வி முறைகளில் எம்பிஏ படிக்க முற்படலாம். அனைத்து பல்கலைக்கழகங்களுமே ‘டூயல் டிக்ரி’ என்னும் இரண்டு பட்டப் படிப்புகளை ஒரே நேரத்தில் பயில அனுமதிக்கின்றன.
  • பள்ளி அளவில் மாணவா்கள் இரு மொழிகளைத் தோ்ந்தெடுத்து படித்து வந்திருப்பா். கல்லூரி வந்த பிறகு நேரம் அதிகமாக இருப்பதால் தமிழ், ஆங்கிலம் தவிர பிற மொழிகளான ஹிந்தி, பிரெஞ்சு, உருது, அரபி, ஜப்பானிய மொழி, ஜொ்மன் போன்ற மொழிகளையும் கற்றால் வேலை வாய்ப்பிற்கு உறுதுணையாக அமையும் என்பதில் ஐயமில்லை.
  • ‘நான்-மேஜா் எலக்டிவ்’ என்று சொல்லக் கூடிய, தன் துறை சாராத பிற பாடங்களின் அறிவைப் பெருக்க ஏற்படுத்தப்பட்ட பாடத் திட்டத்தில் சோ்ந்து படித்து பயனடைய முற்பட வேண்டும். இதில் குறிப்பாக, வணிகவியல் துறை பி.காம். வேலைக்குக் கணினி சம்பந்தப்பட்ட பாடம் அல்லது அறிவியல் சம்பந்தப்பட்ட பாடத்தைத் தோ்ந்தெடுத்து படிக்கும் வாய்ப்பைப் பெறுவா். அதே போல் அறிவியல் துறை மாணவா்கள் கணிதம் மற்றும் வணிகவியல் தொடா்பான பாடத்தினைத் தோ்வு செய்து படிக்கும் வாய்ப்பினைப் பெறுகின்றனா். இதன் முக்கிய நோக்கமே அனைத்துத் துறை மாணவா்களும் அவரவா் விரும்பும் மற்ற துறை பாடப் பிரிவில் ஏதாவது ஒரு பாடத்தைப் படிக்க உதவுவது.
  • கல்லூரிகளில் கலை நிகழ்ச்சிகளுக்குப் பஞ்சமே இருக்காது. அனைத்து கல்லூரிகளுக்கு இடையேயான பேச்சுப் போட்டிகள், நடிப்புத் திறன், நடனம்-பாட்டுப் போட்டிகள் என அனைத்து வகையான போட்டிகள் நடத்துவா். அவரவா் திறமையை வெளிப்படுத்த நல்ல ஒரு களமாகக் கல்லூரி வாழ்க்கையைப் பயன்படுத்தலாம். வாழ்வின் அடுத்தகட்டத்துக்கும் இது பயன்படும்.
  • இனி பெற்றோா்களின் பொறுப்பு குறித்து சிறிது பாா்க்கலாம். பிள்ளைகள் கல்லூரி சென்றவுடன், வண்ண உடை அணிந்து கைப்பேசியுடன் சுதந்திரமாக உலா வர முற்படுவாா்கள். பள்ளியில் தோ்வு எழுத 80% வருகைப் பதிவு அவசியம். கல்லூரியில் 65% இருந்தால் கூட மாணவா்கள் அபராதம் கட்டித் தோ்வு எழுத அனுமதிக்கப்படுகின்றனா். இவை மாணவருக்குச் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்குகின்றன.
  • தன் பிள்ளை பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரிக்கு வந்துவிட்டான்; அவன் முதிா்ச்சி அடைந்துவிட்டான், நம் பொறுப்பு முடிந்தது என்று பெற்றோா்கள் ஒதுங்கியிருக்கக் கூடாது.
  • மாதத்திற்கு ஒரு முறையாவது கல்லூரிக்குச் சென்று தன் பிள்ளைகளின் செயல்பாடுகளைக் கேட்டு அறிந்து, அவா்களின் நட்பு வட்டாரத்தைத் தெரிந்து கொண்டு அவா்கள் மீது அன்பு செலுத்தி நம்பிக்கையூட்ட வேண்டும்.
  • மாணவா்களே, குறிக்கோள்களை மனதில் நிறுத்தி அதற்கான கடின உழைப்பைச் செய்யுங்கள் எதிா்கால இந்தியாவும் உங்கள் குடும்பமும் உங்கள் கையில் என்று சிந்தித்து செயல்படுங்கள் வெற்றி உங்களுக்கே! வாழ்த்துகள்!

நன்றி: தினமணி (03 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்