TNPSC Thervupettagam

கல்வி: ஒரு முடிவில்லா பயணம்

April 12 , 2024 278 days 211 0
  • இந்தியாவில், பட்டமளிப்பு நாள் என்பது உங்கள் கல்லூரி அல்லது பல்கலைக்கழகப் படிப்பை நிறைவுசெய்வதைக் குறிக்கும். இதையே அமெரிக்காவில் ‘தொடக்க நாள்’ என்பர். உங்கள் கற்றல் செய்முறை இன்னும் நிறைவடையவில்லை என்பதையும், உங்கள் வாழ்க்கையின் புதிய கட்டத்தை நீங்கள் தொடங்கப்போகிறீர்கள் என்பதையும் உணர்த்துவதால், அமெரிக்கச் சொல்லாக்கம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும்.
  • ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் சிறப்புச் சார்பியல் கோட்பாடு தொடர்பான ஆய்வினை முதலில் உறுதிப்படுத்திய புகழ்பெற்ற பிரிட்டிஷ் இயற்பியலாளர் சர் ஆர்தர் எட்டிங்டன் குறித்து ஒரு கதை உள்ளது. விருந்தொன்றில், அவர் என்ன செய்கிறார் என்று ஒரு ஒரு பெண் அவரிடம் கேட்டார். "நான் இயற்பியல் படிக்கிறேன்" என்று பதிலளித்தார் எட்டிங்டன். "ஓ… நீங்கள் இன்னும் இயற்பியல் படிக்கிறீர்களா? நான் கடந்த ஆண்டே இயற்பியல் படித்து முடித்துவிட்டேன்!” என அப்பெண் கூறினார்.
  • நம்மில் பெரும்பாலானோர் அப்பெண் செய்த அதே தவறைச் செய்கிறோம். நாம் கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறியவுடன் நம்முடைய படிப்பை ‘முடித்துவிட்டோம்’ என எண்ணுகிறோம். ஆனால், உண்மை என்னவென்றால், கற்றல் என்பது வாழ்நாள் முழுவதும் நிகழும் செய்முறையாகும். கல்வி என்பது ஓர் இலக்கல்ல. அது உங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் பயணிக்கும் பாதையாகும்.
  • மற்றொரு கதை உள்ளது – அநேகமாக கட்டுக்கதையாக இருக்கலாம். ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஒருமுறை தனது மாணவர்களுக்கு இயற்பியலில் ஒரு வினாத்தாளை அமைத்தார், அதில் ஒவ்வொரு வினாவும் முந்தைய ஆண்டின் வினாத்தாளில் இருந்து மீண்டும் கேட்கப்பட்டு இருந்தது! இதை மாணவர்கள் சுட்டிக்காட்டியபோது, அதற்கு ஐன்ஸ்டைன் "சரி, வினாக்கள் ஒரே மாதிரியாக இருக்கலாம், ஆனால் அதற்கான விடைகள் இந்த ஆண்டு வேறுபட்டவை ஆகும்." என பதிலளித்தார். ஐன்ஸ்டைனின் கூறியதற்கான பொருள் யாதொனில், இயற்பியல் நிலையானது அல்ல, கடந்த ஒராண்டில் பெரிய அளவில் முன்னேறியுள்ளது என்பது ஆகும்.

தொடர் கற்றலின் முக்கியத்துவம்

  • இன்று, வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் அறிவின் அதிவேக வளர்ச்சியை நாம் எதிர்கொள்கிறோம். தனது துறையில் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளாத யாதொரு நபரும் புதுமையற்றவராகவும், பழமைவாதியாகவும் மற்றவர்கள் எள்ளி நகையாடுவதற்கு உரியவராகிறார். ஒரு நல்ல மருத்துவர் என்பவர், மருத்துவத் துறை அல்லது அறுவை சிகிச்சையின் அண்மைக் கால முன்னேற்றங்களைத் தெரிந்துவைத்துகொள்ள வேண்டும்.
  • ஒரு நல்ல வழக்கறிஞர், தனது குறிப்பிட்ட துறையில் தொடர்புடைய அனைத்து சட்டங்கள் மற்றும் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் அண்மைக் கால தீர்ப்புகளையும் தெரிந்துவைத்திருக்க வேண்டும்.
  • இந்திய ஆட்சிப் பணியில் அதிகாரிகளாக இருப்பவர்கள், ஒவ்வொரு நாளும் – அனைத்து வகையிலான டஜன் கணக்கான கோப்புகளைப் படிப்பதோடு மட்டுமன்றி, ஒரு துறையிலிருந்து மற்றொரு துறைக்கு பணி இடமாற்றம் செய்யப்படும்போது, ஒவ்வொரு துறையின் சட்டங்கள், விதிகள், அரசாணைகள் மற்றும் கையேடுகளைப் படிக்க வேண்டிய சூழலுக்கு உள்ளாகிறார்கள். எனவே, இந்தப் பட்டமளிப்பு தினத்துடன் உங்களுடைய ‘கற்றல்கள் முடிந்துவிட்டது’ என்று நீங்கள் நினைத்தால் அது பெரிய மிகத் தவறாகும்.
  • எந்தவொரு நிறுவனத்திலும், நீங்கள் இரண்டு வகையான மக்களைக் காணலாம் - ஒரு சிலர், எப்போதும் புதியவற்றைக் கற்றுக்கொள்வதில் ஆர்வமாக இருப்பர். பலர், கற்றலை நிறுத்திவிட்டு, 'அறிவுசார் சிந்தனை’ அற்றவர்களாக மாறுகிறார்கள்! இதில் நீங்கள் எந்த வகையைச் சார்ந்தவராக இருக்க வேண்டும் என்பது இவற்றிலிருந்து தெளிவாகிறது. எனக்குத் தெரிந்த ஒவ்வொரு வெற்றியாளரும், ஆர்வமுடையவர்களாக இருப்பார்கள்; 5 வயது குழந்தையைப் போல் கேள்விகள் கேட்டுக்கொண்டே இருப்பார்கள்; தொடர்ந்து புதியவற்றைக் கற்பவர்களாக இருப்பார்கள். ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு நம் உடல்ரீதியான வளர்ச்சி நின்றுவிடும், ஆனால் நமது மனம் சார்ந்த வளர்ச்சிக்கு எல்லைகளே இல்லை.

நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

  • அன்புள்ள பட்டதாரிகளே…
  • அறிந்துகொள்ளும் ஆர்வத்துடன், உங்கள் பணிக்கான சரியான ‘மனப்பான்மை’யை வளர்த்துக்கொள்ளுமாறு நான் உங்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். பணியளிப்பவர்கள் எவரிடம் கேட்டாலும், புத்திகூர்மையும் அறிவாற்றலும் நிரம்பிய பலர் சுற்றி இருந்தாலும், சிறந்த பணியாளர்கள் கிடைப்பது கடினம் என்று அவர் உங்களுக்கு கூறுவார். மக்களில் பலருக்கு ‘மனப்பான்மை பிரச்சினைகள்’ உள்ளன. ‘உங்கள் மனப்பான்மை உங்கள் வாழ்வின் உயரத்தைத் தீர்மானிக்கிறது’ என்று சரியாகக் கூறப்பட்டுள்ளது.
  • அதாவது, உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எவ்வளவு உயர்வீர்கள், நீங்கள் ‘வெற்றியாளர்’ அல்லது ‘தோல்வியாளர்’ என்பதை உங்கள் அணுகுமுறையே தீர்மானிக்கிறது. வெற்றியாளர்களுக்கும் தோல்வியாளர்களுக்கும் இடையிலான அணுகுமுறை வேறுபாடுகளை ஒருவர் பின்வருமாறு அழகாக விவரித்துள்ளார்:
    • வெற்றியாளர்கள் நேர்மறையான கண்ணோட்டத்துடன் இருப்பர். தோல்வியாளர்கள் எப்போதும் எதிர்மறையான சிந்தனையு உடையவர்களாக இருப்பர்.
    • வெற்றியாளர்கள் ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒரு தீர்வைக் காண்பார்கள். தோல்வியாளர்கள் ஒவ்வொரு தீர்விலும் ஒரு பிரச்சினையைக் காண்பார்கள்.
    • வெற்றியாளரிடம் எப்போதும் ஒரு திட்டம் உண்டு. தோல்வியாளரிடம் எப்போதும் ஒரு சாக்குப் போக்கு உண்டு.
    • வெற்றியாளர்கள் குழுவின் ஒரு அங்கமாக இருப்பார்கள். தோல்வியுற்றவர்கள் குழுவிலிருந்து விலகி இருப்பவர்கள்.
    • ‘இது கடினமாக இருக்கலாம், ஆனால் அது சாத்தியமாகும்’ என வெற்றியாளர்கள் கூறுவார்கள். தோல்வியடைந்தவர்கள், ‘இது சாத்தியமாக இருக்கலாம், ஆனால் அது மிகவும் கடினம்’ என்று கூறுவார்கள்.
  • எல்பர்ட் ஹப்பார்ட் என்ற அமெரிக்க எழுத்தாளர் எழுதிய ‘கார்சியாவுக்கு ஒரு செய்தி’ என்ற அழகான சிறு கட்டுரையை  நீங்கள் படித்திருப்பீர்களா என்று எனக்குத் தெரியாது. அவ்வாறு படிக்கவில்லை எனில் இத்தலைப்பை ‘கூகுள்’ செய்து, இந்த ஊக்கமளிக்கும் கட்டுரையைப் படிக்குமாறு நான் பரிந்துரைக்கிறேன்.
  • அமெரிக்காவுக்கும் ஸ்பெயினுக்கும் இடையே 1898ஆம் ஆண்டில் போர் ஒன்று நடந்தது. கியூபா அப்போது ஸ்பானிஷ் காலனி ஆதிக்கத்தில் இருந்தது. கியூபாவின் புரட்சித் தலைவராக இருந்த கார்சியா என்பவர் ஸ்பெயின் நாட்டினருக்கு எதிராக சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் ஒரு அடர்ந்த காட்டுப் பகுதியில் மறைந்திருந்தார். அமெரிக்க ஜனாதிபதி வில்லியம் மெக்கின்லி, அவர்களின் பொது எதிரியான ஸ்பெயினுக்கு எதிரான போரில் கார்சியாவின் ஆதரவைப் பெற விரும்பினார். ஆனால், அவரை எப்படித் தொடர்புகொள்வது என்று தெரியவில்லை. அவருடைய ஆலோசகர்கள் அவரிடம் “ரோவன் என்று ஒரு நபர் இருக்கிறார், அவர் தனக்கு ஒப்படைக்கப்பட்ட எந்த வேலையையும் வெற்றிகரமாகச் செய்வதில் பெயர் பெற்றவர். ஒருவேளை அவர் கார்சியாவைத் தொடர்புகொண்டு இத்தகவலை வழங்கலாம்” எனக் கூறினார்.
  • எனவே, ஜனாதிபதி ரோவனை அழைத்து, ஒரு அறிமுகக் கடிதத்தையும், ரகசியச் செய்தி அடங்கிய முத்திரையிடப்பட்ட உறையையும் கார்சியாவிடம் அளித்தார். “என்ன இது? கியூபா நாடு போரினால் சிதைந்து கிடக்கும் நேரத்தில், காடுகளுக்கு நடுவில், ஏறத்தாழ ஒரு தகவலும் இல்லாத நிலையில் நான் கார்சியாவைக் கண்டுபிடிப்பேன் என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள்?” என்று ரோவன் சொன்னாரா? இல்லை. ரோவன் உறையைப் பெற்று, சில விசாரணைகளை மேற்கொண்டு, படகில் கியூபாவுக்குச் சென்று, ரகசியக் கடற்கரை ஒன்றில் இறங்கி, காட்டுக்குள் முன்னேறிச் சென்று, கார்சியாவைச் சந்தித்து, ஜனாதிபதியின் ரகசியச் செய்தியை அளித்துவிட்டு, பதினைந்து நாட்களுக்குள் அமெரிக்கா திரும்பினார்!
  • எல்பர்ட் ஹப்பார்ட், அவரது கட்டுரையில், பணி குறித்த ரோவனின் நேர்மறையான அணுகுமுறையையும், செயல்களைச் செய்து முடிக்கும் திறனையும் பாராட்டினார், மேலும் அவரைப் போல நம்பத் தகுந்தவர்கள் வெகு சிலரே இருக்கிறார்கள் என்று புலம்பினார். மிக அதிகப் பணியாளர்கள் ‘பொறுப்பைத் தவிர்ப்பவர்கள்', அவர்கள் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதைத் தவிர்த்து, பொறுப்புகளை வேறொருவரிடம் அளிப்பதற்கு முயற்சிக்கின்றனர். இன்னும் சிலர் ‘வெற்றுப் பேச்சாளர்க’ளாக இருக்கிறார்கள், அவர்கள் அதிகம் வாக்குறுதி அளிக்கிறார்கள், ஆனால் குறைவாகவே முடிவுகளை வழங்குகிறார்கள். மேலும் சிலர் இருக்கிறார்கள், அவர்கள் எதைச் செய்தாலும் அதைக் குழப்புவார்கள் – அத்தகைய நபர்கள் எதிர்ப்பத மிதாஸ் தொடுதலைக் கொண்டுள்ளார்கள் – அவர்கள் ‘குழப்பவாதிகள்’.
  • சிறு சதவீதப் பணியாளர்களுக்கு மட்டுமே செயல்களைச் செய்து முடிக்கும் திறன் உள்ளது, அவர்களை நம்பிச் செயல்களை ஒப்படைக்கலாம் – அவர்களே ‘செயலைச் செய்து முடிப்பவர்கள்'. ஒவ்வொரு நிறுவனத்திலும் இந்த நான்கு வகைப் பணியாளர்கள் உள்ளனர் – பொறுப்பைத் தவிர்ப்பவர்கள், வெற்றுப் பேச்சாளர்கள், குழப்பவாதிகள் மற்றும் செயலைச் செய்து முடிப்பவர்கள். சதவீதங்கள் மட்டுமே மாறுபடுகின்றன. ரோவனைப் போல் செயல்களைச் செய்து முடிப்பவராக, செயல்களை முடிப்பார் என நம்பத் தகுந்தவராக, ஒரு ‘லட்சியவாதி’யாக இருப்பதே உங்கள் முயற்சியாக இருக்க வேண்டும்.

இன்றியமையாதது சிந்தனை!

  • அன்புள்ள பட்டதாரிகளே…
  • ‘சுய சிந்தனை’ திறனை வளர்த்துக்கொள்ளுமாறு உங்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். வேறு வகையில் கூறுவதாயின் நீங்கள் ஆக்கப்பூர்வ சிந்தனையுடையவறாக இருக்க வேண்டும். மக்கள் ஏன் ரஜனிகாந்த் அல்லது ஷாருக்கான் அல்லது டாம் குரூஸ் மீது அதிக பற்றுடன் இருக்கிறார்கள்? ஏனென்றால் அவர்கள் ‘தனித்துவமானவர்கள்’; அவர்களில் ஒவ்வொருவரிடமும் ஏதோ ஒரு தனித்தன்மை உள்ளது. அவர்களைப் போன்றே நடந்துகொள்பவர்களை யாரும் மதிப்பதில்லை. நீங்கள் செய்யும் தொழில் எதுவாக இருந்தாலும், அதில் தனித்தன்மையுடனும்  ஆக்கப்பூர்வ சிந்தனையுடனும் மற்றவர்களிடமிருந்து மாறுபட்டும் இருக்க முயற்சி செய்யுங்கள்; (நேர்மறை எண்ணத்துடன் செயல்படுங்கள்!).
  • நாம் ஒரு புதிய திரைப்படத்திற்குச் செல்லும்போது அல்லது புதிய உணவகத்தில் சாப்பிடும்போது அல்லது புதிய  கருவியை வாங்கும்போது, அவை சாதாரணமாக யாதொரு சிறப்பம்சத்தைக் கொண்டிருக்காவிட்டால்,  மற்றவற்றிலிருந்து வேறுபடுத்திக் காட்ட எதுவும் இல்லை என்றால் நாம் ஏமாற்றமடைகிறோம்.
  • நீங்கள் ஒரு வேலைக்கான நேர்காணலுக்கு அல்லது பதவி உயர்வுக்கான நேர்காணலுக்குச் செல்லும்போது அல்லது புதிய திட்டத்தைத் தொடங்குவதற்கு கடனுக்காக வங்கியை அணுகும்போது மேற்சொன்னதைப் போன்று ஆக்கப்பூர்வ புதிய சிந்தனையுடன் செயல்படுவது சிறப்பாக அமையும். நீங்கள் எவ்வளவு  தனித்துவமானவர்கள் என்பதும் மற்றவர்களிடமிருந்து நீங்கள் எவ்வளவு தனித்து நிற்கிறீர்கள் என்பதைப்  பொறுத்தும் நீங்கள் மதிப்பிடப்படுவீர்கள்.
  • ஆப்பிள் நிறுவன (Apple Inc.) தலைவர் மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ் படைப்பாற்றலின் மிகச் சிறந்த ஆளுமையாக இருந்தார். அவர் கல்லூரி படிப்பை இடையில் நிறுத்தினாலும், சாதாரண மக்களாலும் பயன்படுத்தக்கூடிய மிகவும் ஆக்கப்பூர்வமான மற்றும் பயனர்-எளிதான தயாரிப்புகளான வரைகலை இடைமுகம் மற்றும் சுட்டி (Mouse) கொண்ட முதல் கணினியான ‘ஐ-மேக்’ (i-Mac), ‘ஐ-பாட்’ (i-Pod), ‘ஐ-ஃபோன்’ (i-Phone), ‘ஐ-பேட்’ (i-Pad) மற்றும் ‘ஐ-க்ளௌட்’ (i-Cloud) ஆகியவற்றை உலகிற்கு வழங்கியுள்ளார்.
  • அவர் இறந்த பின்னர், ஸ்டீவ் ஜாப்ஸ் கிறிஸ்தவ சொர்க்கத்தில் இருப்பதாகவும், அவருடைய தேவதைகள் இசைக்கும் யாழ்கள் உகந்ததாக இல்லை என்றும் மேலும் மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் கடவுளிடம் கூறுவது போன்ற பிரபலமான கேலிச்சித்திரம் ஒன்று உண்டு. ஸ்டீவ் ஜாப்ஸ், உங்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.
  • நெகிழி பாட்டில்களில் அடைக்கப்படும் ஷாம்பூவைத் தயாரிக்கும் ஜப்பானிய நிறுவனம் ஒன்று, எப்போதாவது (சில ஆயிரம் தடவைகளில் ஒருமுறை) நெகிழி  பாட்டிலில் ஷாம்பூ நிரப்பப்படாமல் விட்டுவிடப்படும் வகையில் தங்கள் தயாரிப்பில் குறைபாடு இருப்பதைக் கண்டறிந்தனர். வாடிக்கையாளர்கள் தங்கள் பாட்டில் காலியாக இருப்பதைக் கண்டு எரிச்சலடைந்தனர். இந்தப் பிரச்சினையை எதிர்கொள்வதற்கு ஆலோசனைகள் வழங்குமாறு கோரப்பட்டது.
  • ஒரு மேலாளர் அனைத்து நெகிழிப் புட்டிகளும் ஊர்திப்பட்டையில் (Conveyor belt) நகர்த்திக்கொண்டிருக்கையில் அவற்றை எக்ஸ்ரே (X-ray) செய்ய பரிந்துரைத்தார். மற்றொருவர் அகச்சிவப்பு கதிர்களைப் (infra-red rays) பயன்படுத்துமாறு பரிந்துரைத்தார். மூன்றாவதாக ஒருவர் ஷாம்பு (Shampoo) நிரப்பப்பட்ட ஒவ்வொரு புட்டியையும் எடையிடுமாறு பரிந்துரைத்தார். ஆனால், சிறிய ஒரு பிரச்சினையைத் தீர்ப்பதற்குச் செலவுமிக்க தீர்வுகளுக்குப் பரிந்துரைகள் வழங்கப்பட்டதால், மூன்று பரிந்துரைகளும் நிராகரிக்கப்பட்டன.
  • பின்னர் ஒரு மேலாளர் மிகவும் எளிமையான ஒரு தீர்வைப் பரிந்துரைத்தார். ஊர்திப்பட்டையின் (Conveyor belt) ஓரத்தில் ஒரு மின்விசிறியை வைக்க வேண்டும், அது ஒரு வெற்று நெகிழி புட்டியைக் காற்று விசையால் தள்ளுவதற்குப் போதுமான வேகத்தில் சுழலும், ஆனால் ஷாம்பு நிரப்பப்பட்ட புட்டிகளைத் தள்ளுவதற்குப் போதுமானதாக இருக்கக் கூடாது என்று அவர் பரிந்துரைத்தார். அவரது ஆலோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது பணியில் ஆக்கப்பூர்வமான சிந்தனையை பயன்படுத்துவதற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.

படைப்புத் திறனை மெருகேற்ற வேண்டும்!

  • கி.மு. 3500க்குப் பின்னர்தான் சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டது என்பது உங்களுக்கு தெரியும். ஆனால், சுமைகளை எடுத்துச் செல்ல பயன்படுத்திவந்த பெட்டிகளுக்குக் கீழே சக்கரங்களை வைக்க வேண்டுமென இன்றிலிருந்து 30 ஆண்டுகளுக்கு முன்னர் வரையிலும் யாரும் நினைக்கவில்லை, மேலும் மக்கள் அதிக எடை மிகுந்த பெட்டிகளைப் பெருமுயற்சி செய்து தூக்கிச் சென்றனர். இன்று, நம்மிடம் இழுவைப்பெட்டிகள்(Strolleys) உள்ளன - அதாவது பெட்டிகளுக்குக் கீழ் சக்கரங்களைக் கொண்டுள்ளவையாக உள்ளளன - அவற்றை இழுத்துச் செல்வது எளிதாக உள்ளது. ஆக்கப்பூர்வமான சிந்தனைப் பயன்பாட்டிற்கு இது மற்றொரு எடுத்துக்காட்டாகும்.
  • எனவே, படைப்புத் திறன் என்பது அறிவியல் அறிஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், கலைஞர்கள் மற்றும் இசைக் கலைஞர்களுக்கு மட்டுமே உரித்தானது என்று தவறாக எண்ணிக்கொண்டிருக்க வேண்டாம். நீங்கள் எதனைச் செய்தாலும் படைப்பாக்கத் திறனுடன் அதனைச் செய்ய இயலும்.
  • பாதகமான சூழ்நிலையில், நமது கல்விமுறையானது மனனம் செய்து படிக்கும் முறை வாயிலாக, கல்வி கற்றலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகவும் சுய சிந்தனை அல்லது படைப்பாக்கத் திறன் கொண்ட சிந்தனைக்கு மிகக் குறைந்த முக்கியத்துவம் அளிப்பதாகவும் உள்ளது. இது உண்மையில் சுயமாக சிந்திப்பதைத் தடுப்பதாகவும் உள்ளது. தலைசிறந்த அமெரிக்க பேச்சாளர் ராபர்ட் கிரீன் இங்கர்சால் “நம்முடைய கல்விமுறை கூழாங்கற்களை மெருகூட்டுகிறது மற்றும் வைரங்களை மங்கச் செய்கிறது” என்று கூறியுள்ளார்.
  • பெரும்பாலான ஆள்சேர்ப்பு நிறுவனங்கள் தேர்வுகளில் பெறப்படும் மதிப்பெண்களுக்குக் குறைந்தளவில் ‘வரம்புநிலை’யை (cut-off) நிர்ணயித்து அதன் பிறகுதான் ஏனைய திறன்களைப் பார்க்கின்றன, முக்கியமாக நீங்கள் மற்றொருவருடன் தொடர்புகொள்ளும் திறன் மற்றும் படைப்பாக்கத் திறனுடைய சிந்தனைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நீங்கள் கல்லூரியில் படிக்கும் காலத்திலும், பணிக்குச் சென்ற பின்னர், இந்த இரண்டு திறன்களையும் பட்டைத் தீட்டி வளர்த்துக்கொள்வதற்கான முயற்சிகளை உணர்வுப்பூர்வமாகவும் தீவிரமாகவும் மேற்கொள்ள வேண்டும்.

விஞ்ஞானமும் அஞ்ஞானமும்

  • நான் உங்களிடம் கடைசியாக கேட்டுக்கொள்வது என்னவென்றால், நீங்கள் எந்தப் பணியை மேற்கொண்டாலும், அதனைப் படைப்பாக்கப்பூர்வச் சிந்தனையுடனும், இக்கட்டான சூழ்நிலையைக் கையாளுவதற்கான நுண்ணாய்வு மனநிலை அல்லது அறிவியல்ரீதியான மனப்பாங்குடன் செயல்படுவதற்கான பழக்கத்தையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
  • ஏன் நோபல் பரிசாளர்களையோ அல்லது காப்புரிமை உடையோரையோ மிகக் குறைவாகவே நம் நாடு உருவாக்குகிறது என்று எப்பொழுதாவது சிந்தித்ததுண்டா? அதற்கான வசதிகளிலும், நிதியுதவிகளிலும் காணப்படும் பற்றாக்குறை என்ற பழமைவாதத்தை இன்னமும் கூறிக்கொண்டிருப்பது  சரியல்ல. மேலும், கணிதத்திற்கு அல்லது சமூக அறிவியலுக்கு எத்தகைய வசதிகள் எந்த வகையில் உங்களுக்கு தேவைப்படுகிறது?
  • நாம் சிறந்த விஞ்ஞானிகளையும் கண்டுபிடிப்பாளர்களையும் குறைவான எண்ணிக்கையிலேயே உருவாக்குவதற்குக் காரணம், நம்மிடம் அறிவியல்ரீதியான சிந்தனை இல்லாததுதான்; அதாவது, மக்களாகிய நாம் மூடநம்பிக்கைகள், அர்த்தமற்றச் சடங்குகள் ஆகியவற்றைப் பின்பற்றுவது, ஏனைய ‘புனைவுருத் தோற்ற’த்தை ஏற்படுத்தி அதனை நம்புவதற்கும், அறிவுக்குப் பொருந்தாத நம்பிக்கையின் அடிப்படையிலான கருத்துக்களை ஏற்றுக்கொள்வதற்கும் உட்பட்டிருக்கிறோம்.
  • முதலில் களைகளை அகற்றாமல் அழகான தோட்டத்தை உருவாக்க முடியாது என்பதுபோல, மூடநம்பிக்கைகள் மற்றும் குருட்டுச் சிந்தனைகள் போன்ற ‘களைச் செடிகளாகிய குழப்பம்’ மக்களின் மனதில் இருக்கும் வரை அறிவியல் சார்ந்த பண்பாட்டினை உருவாக்குவது சாத்தியமற்றது. எனவேதான், இந்திய அரசமைப்புச் சட்டம் அறிவார்ந்த, விவேகமான மனப்பான்மையை மக்களின் மனதில் புகுத்துவதை ‘அடிப்படைக் கடமை’யாக உருவாக்குகிறது.
  • ஒருவர் அறிவியலில் பட்டம் பெற்றிருப்பதாலேயே அவர் அறிவியல்ரீதியான மனப்பாங்கு கொண்டவராக இருக்க வேண்டும் என்று தவறாக நினைத்துவிடாதீர்கள்! அறிவியலில் அவரின் பட்டப்படிப்பு என்பது, அவர் பல அறிவியல் உண்மைகளைப் பொருளுணராமல் மனப்பாடம் செய்து ஒருமுறை கற்றுக்கொண்டார் என்பதேயாகும். அவற்றில் பெரும்பாலானவற்றை அவர் மறந்துவிட்டிருக்கலாம். அதனால்தான், இந்தியாவில் உயர் அறிவியல் என்பது பெருமளவிலான மூடநம்பிக்கையுடன் இணைந்து காணப்படக்கூடிய ஒரு விசித்திரமான சூழ்நிலை உள்ளது.
  • பல இயற்பியல் விரிவுரையாளர்கள் சூரிய மற்றும் சந்திர கிரகணங்களின் அறிவியல் கோட்பாட்டை வகுப்பறையில் கற்பிக்கிறார்கள், ஆனால் கிரகணத்தின்போது சூரியனையும் சந்திரனையும் விழுங்குவதாகக் கருதப்படும் கற்பனை உருவங்களான ராகு மற்றும் கேது மீதான அவர்களின் நம்பிக்கையில் இன்றளவும் ஒட்டிக்கொண்டுதான் உள்ளது. பல வேதியியல் விரிவுரையாளர்கள் வகுப்பறையில் நிறை மாறாவிதி மற்றும் ஆற்றல் மாறா விதியை (Law of conservation of mass and energy) கற்பிக்கிறார்கள்.
  • ஆனால், சில குறிப்பிட்ட தெய்வ மனிதர்கள் கூறுகிற ‘வெறுமையான ஒன்றிலிருந்தும் எதையும் உருவாக்க முடியும்’ என்றும் நம்பத் தயாராக இருக்கிறார்கள். கல்வி கற்றல் என்பது மக்களிடையே பரவலான செயலாக மாறும்போது, அத்தகைய கல்வியைக் கற்பவர்கள் சிறந்த பகுத்தறிவுச் சிந்தனையாளர்களாக உருவாகுவார்கள் என்ற நம்பிக்கை பொய்யாகிவிட்டது. நமது கல்விமுறை, கல்வியறிவில்லாத ஏமாளியைக் கல்வியறிவு பெற்ற ஏமாளியாகவும், கல்வியறிவற்ற மூடநம்பிக்கை கொண்டவரை கல்வியறிவுடைய மூடநம்பிக்கை

பகுத்தறிவுச் சிந்தனையின் அவசியம்

  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் சிறந்து விளங்குவதற்கு மட்டுமின்றி, உங்கள் அன்றாட வாழ்வில் மோசடி செய்பவர்களிடமிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கும் அறிவியல் மனப்பாங்கு அல்லது பகுத்தறிவுச் சிந்தனை அவசியமாகும். நீங்கள் பகுத்தறிவுச் சிந்தனையை வளர்த்துக்கொள்ளாவிட்டால், உங்கள் வாழ்க்கை ‘ஏமாளியின் பயணம்' (Gullible’s Travels) போன்றதாக மாறிவிடும். மேலும் நீங்கள் மோசடி செய்யும் விற்பனையாளர், தொழிலதிபர், மோசடி செய்பவர் மற்றும் தெய்வ மனிதர்கள் ஆகியோரால் எளிதில் ஏமாற்றப்படுவீர்கள்.
  • உங்களை எப்படி அழகாக்குவது என்பது முதல் உங்களை எப்படி உயரமாக்குவது, உங்கள் உடல் எடையைக் குறைப்பது, தட்டையான வயிற்றைப் பெறுவது என எல்லாவற்றுக்கும் பெரும் கட்டணம் வசூலித்து போலியான சிகிச்சைகளை வழங்குபவர்கள் இருக்கிறார்கள். நிச்சயமாக, இந்தச் சிகிச்சைகள் பலனளிக்காது. அத்தகைய மோசடியாளர்களிடமிருந்து விலகியிருங்கள். பணத்தைப் பெருக்குவதற்கான பல்வேறு வகை திட்டங்களை உங்களுக்கு உறுதியளித்து, தாமதமின்றி இதில் உங்களை இணைத்துக்கொள்ளுங்கள் என்று உங்களை துரத்துபவர்களும் உள்ளனர். அவர்களிடம்தான் பணம் மேலும் மேலும் பெருகும், உங்களிடம் இல்லை. இப்படிப்பட்ட நபர்களிடம் பணத்தை முதலீடு செய்து ஏமாற்றமடைந்த எத்தனையோ நபர்களை நானறிவேன்.
  • மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன், நீங்கள் அத்தகைய நபர்களிடமிருந்து விலகியே இருங்கள். ‘தெய்வ மனிதர்கள்’ (godmen) என்று தங்களை வெளிப்படுத்திக்கொள்பவர்களும் இருக்கிறார்கள் - இறைவன் அவர்களுக்குச் சிறப்புச் சலுகைகளை வழங்கி, மற்றவர்களுக்கு மேலாக அவர்களை வைத்து, மக்களின் ஆன்மீக வழிகாட்டிகளாக அவர்களை நியமித்ததுபோல. உங்களுக்கும் இறைவனுக்கும் இடையில் எந்தவொரு மனிதரும் ‘இடைத்தராக’ராக இருக்கத் தேவையில்லை. உங்களுக்கு எனது அறிவுரை என்னவென்றால், இதுபோன்ற அனைத்து தெய்வ மனிதர்களிடமிருந்தும் விலகி இருங்கள் என்பதேயாகும்.
  • நன்கு அலங்கரிக்கப்பட்ட மூடர்கள் இருப்பதுபோல, ஜோதிடம், நாடி ஜோதிடம், கிளி ஜோதிடம், ஆகூழ் அட்டைகள் / நல்வாய்ப்பு அட்டைகள் (tarot cards), மனையடி வேதாந்த நூல் (vastu), ஃபெங் ஷூய் (feng shui), படிக ஆற்றல் (crystal power), தடப்பிரிப்பு (channeling), கைரேகை (palmistry), எண் கணிதம் (numerology) மற்றும் முற்றிலும் மூடத்தனமான 'பெயரியல்’ (nameology) போன்றவை நன்கு அலங்கரிக்கப்பட்ட மூடச் சிந்தனைகளின் முழு உருவாகும்.
  • சமூகத்தின் நன்கு கற்றறிந்த பிரிவினரிடம்கூட இந்நம்பிக்கை பரவலாக இருப்பதுடன், அவற்றைப் பிரபலப்படுத்துவதில் அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் முக்கியப் பங்கு வகித்தபோதிலும், இவ்வகையிலான மூடத்தனமான போலி அறிவியலை நம்பாதீர்கள் என்று நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். தத்துவஞானி பெர்ட்ரான்ட் ரஸ்ஸல் குறிப்பிட்டதுபோல்: "ஒரு கருத்து பரவலாக பின்பற்றப்பட்டுவருகிறது என்பதால் மட்டுமே அது முற்றிலும் அபத்தமாகாது என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை; உண்மையில், மனிதகுலத்தின் பெரும்பான்மையான மூடத்தனமான பார்வையில், புத்திசாலித்தனத்தைவிட ஒரு பரவலான நம்பிக்கையும்கூட மூடத்தனமானதாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது."
  • கோப்பர்நிக்கஸுக்கு முந்தைய, பிரபஞ்சத்தின் புவிமையக் கோட்பாட்டின் அடிப்படைக் கொண்ட ஜோதிடம் என்பது முற்றிலும் மூடத்தனமானது. வெவ்வேறு பத்து ஜோதிடர்கள் உங்களுடைய ஜாதகத்தை தயாரித்திருப்பார்கள் எனில், நீங்கள் பெரும்பாலும் பத்து வெவ்வேறு விதமான விளக்கங்களையே பெறுவீர்கள்!
  • புத்தர் மற்றும் கௌடில்யர் முதல் சுவாமி விவேகானந்தர் வரை வரலாற்றில் அனைத்து அறிவார்ந்த நபர்களும் ஜோதிடத்தைக் கண்டித்தே உள்ளனர். ஆயினும் லட்சக்கணக்கான மக்கள் தங்களுடைய பயணம், திருமணம், மதச் செயல்பாடுகள் போன்ற  செயல்பாடுகளை ஜோதிடத்தின் மீதான அவர்களுடைய நம்பிக்கையின்படியே ஒழுங்குபடுத்துகிறார்கள்; ராகு காலம் போன்ற பழக்கவழக்கங்களைக் கடைபிடிக்கின்றனர். திருமணத்தில் ஜாதகம் பொருந்தவில்லை என்ற சில ஜோதிடர்களின் கூற்றால் லட்சக்கணக்கான நல்ல திருமணங்கள் நடைபெறுவதில் முட்டுக்கட்டைகள் விழுகின்றன என்பதால் ஜோதிடத்தின் தாக்கம் குறித்து நான் மிகவும்  கவலை கொள்கிறேன். ஏனென்றால், ‘மாங்கல்ய தோஷம்’ என்னும் காரணத்தின் அடிப்படையில் லட்சக் கணக்கான பெண்கள் திருமணம் ஆகாமலேயே உள்ளனர்.
  • பிரபல திரைப்பட நடிகை ஐஸ்வர்யா ராயும் ‘மாங்கல்ய தோஷம்’ என்று அழைக்கப்படுகிற திருமணம் குறித்த ஒரு ஜோதிட நம்பிக்கையால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆனால், அவரது அந்தப் பிரச்சினையில், ஜோதிடர்கள் அவரை முதலில் வாழை மரத்துடன் திருமணம் செய்யவைத்து, அதன் பின்னர் அபிஷேக் பச்சனுக்கு திருமணம் செய்துவைத்து அந்தப் பிரச்சினைக்கு தீர்வு கண்டார். இச்செயலைவிட முட்டாள்தனம் வேறு ஏதேனும் உண்டா?
  • ஜோதிடரீதியான ஜாதகப் புத்தகத்தை தூர எறிந்துவிட்டு, ஒவ்வொரு குழந்தை பிறக்கும்போது அக்குழந்தையின் ‘மரபணு ஜாதக’த்தை (genetic horoscope) உருவாக்கி, திருமணத்திற்கு முன் மணமகன் மற்றும் மணமகளின் மரபணு ஜாதகங்களின் பொருத்ததைப் பார்க்கத் தொடங்கும்   நேரமல்லவா இது? உங்களிடம் தர்க்கரீதியான சிந்தனையை வளர்க்கிற பழக்கத்தையும், எது உண்மையானது, எது போலியானது என்பதை வேறுபடுத்திப் பார்க்கும் திறனையும் வளர்க்கவில்லை எனில் நீங்கள் கற்ற கல்வி பயனற்றதாகிவிடும்.
  • பெரும்பாலான இளைஞர்கள், குறிப்பாக உங்கள் வயதிலுள்ள இளைஞர்கள் அறிவுரைகளை விரும்புவதில்லை என்பதை நான் அறிவேன்! அறிவுரை கூறுபவர்கள் மற்றும் அறிவுரையைப் பின்பற்றாதவர்கள் என இரண்டு வகையான முட்டாள்கள் இருப்பதாக கூறப்படுகிறது! நீங்கள் இரண்டாவது வகையைச் சார்ந்தவர் அல்ல என்ற நம்பிக்கையில் நான் வேண்டுமென்றே முதல் வகையைச் சேர்ந்தவனாக என்னை தேர்ந்தெடுத்துக்கொண்டேன்!

நன்றி: அருஞ்சொல் (12 – 04 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்