TNPSC Thervupettagam

கல்வி என்பது கனவல்ல

September 24 , 2023 460 days 340 0
  • ‘பெண் எனும் போர்வாள்’ தொடரின் அறிமுகத்தைப் படித்ததுமே வினையாற்றி இருந்தார் வாசகர் ஒருவர். ‘இன்னும் எத்தனை காலம்தான் ஆணாதிக்கம் பற்றிப் பேசப் போகிறீர்கள்? குடும்ப உறவுகள் சிதைந்து தனி மரமானது யாரால்? குடும்பப் பெண்களால் அல்லவா? விண்ணிற்கும் பெண் போகலாம். விழுமியங்களை மீறக் கூடாது. ஆண்களால் குழந்தை பெற முடியாது. இருவரும் சமம் என்பது ஏட்டுச்சுரைக்காய். ஆணாதிக்கம் முற்றிலும் அகற்றப் படவில்லை என்பது உண்மைதான். தான்தோன்றித்தனம் அதற்கு விடையாகாது’ என்று அன்புடன் எழுதியிருந்தார். ‘இப்பல்லாம் யார் சாதி பார்க்குறாங்க?’ என்பதற்குச் சற்றும் குறைவில்லாதது இது. ஒரு வாசகரின் கருத்தல்ல இது; பெரும்பாலான ஆண்களின் எண்ணமும் இதுவாக இருக்கலாம்.
  • பெண்கள் தான்தோன்றித்தனமாக நடந்துகொள்வதால் எதுவும் மாறிவிடாது என அந்த வாசகர் சொல்லியிருக்கிறார். குடும்ப அமைப்பில் ஆணின் கை ஓங்கியும், பெண்ணுக்குக் கைகளே இல்லாதபடியும் ஆண்கள் ‘தான்தோன்றித்தனமாக’ விதிகள் வகுத்தது குறித்து, இங்கே பலருக்கும் எந்தக் கேள்வியும் இல்லை. வரலாறு நெடுகவும் ஆண்களின் தான் தோன்றித் தனமான செயல்பாடுகள் பெண்களை எப்படி அடிமைப் படுத்தி வந்திருக்கின்றன என்பதைப் பற்றிப் பேசவும் பலர் விரும்புவதில்லை. பெண்களை அடக்கி ஒடுக்கி வைத்திருக்கும் ஆணாதிக்கச் சிந்தனையின் மீது வீசப்படுகிற சிறு கல்லைக்கூடப் பலரால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. அதனால்தான் தங்களுக்கான உரிமைகளைக் கேட்கிற பெண்களை மட்டம் தட்டி, மூலையில் உட்காரவைக்கத் துடிக்கிறார்கள். விதிவிலக்குகளை மனதில் வைத்துப் பெண்கள் அனைவரும் இப்படித் தான் எனக்கூறிப் பொதுமைப்படுத்த முயல்கிறார்கள். பெண்ணுரிமை குறித்து வாய்திறந்தாலே, ‘குடும்பம் உடைந்துவிடும், பண்பாடு சிதைந்துவிடும்’ என்கிற பழைய பல்லவியையே இன்னும் எத்தனை காலத்துக்குப் பாடிக் கொண்டிருக்கப் போகிறோம்?

அடிமூட்டைக்கும் கீழே

  • தாங்கள் அடிமைப்படுத்தப்படுகிறோம் என்பதைப் பெண்கள் உணரவே பல்லாண்டுக ளாகின. எவையெல்லாம் தங்களது இயல்பு, கடமை எனப் பெண்கள் நம்பவைக்கப்பட்டிருந்தார்களோ அவையெல்லாம் ஆணாதிக்கச் சமூகத்தால் திட்டமிட்டுத் தங்கள் மீது சுமத்தப்பட்டவை என்பதை உணர்ந்துகொள்ளக் கல்வி அவர்களுக்குப் பெரும் துணையாக இருந்தது. சாதிய அடுக்குகள் மேலோங்கியிருந்த நம் இந்தியச் சமூகத்தில் கல்வி என்பது ஒரு காலத்தில் அனைத்து ஆண்களுக்கும் வழங்கப்படவில்லை. அடுக்கப்பட்ட மூட்டைகளில் அடிமூட்டையாக இருக்கும் ஒடுக்கப்பட்டோருக்குக் கல்வி என்பது வெறுங்கனவாக மட்டுமே இருந்த நிலையில் அடிமூட்டைக்கும் அடியில் இருக்கும் பெண்களின் நிலை மிக மோசமாக இருந்தது. சாதியப் படிநிலையோடு பாலினப் பாகுபாடு, வீட்டு வேலைகள், குழந்தைத் திருமணம், வறுமை போன்றவை பெண்கள் கல்வி பெறுவதைப் பாதித்தன. இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே இதே நிலைதான் வெவ்வேறு வடிவங்களில் செயல்படுத்தப்பட்டது.
  • 17ஆம் நூற்றாண்டில் பெண் கல்விக்கான சிறு வெளிச்சம் ஆங்காங்கே தென்படத் தொடங்கியது. 1800களில் உலக நாடுகளில் இருந்து ‘முதல் பெண்கள் பள்ளி’, ‘முதல் பெண்கள் கல்லூரி’, ‘உயர் கல்வி பயின்ற முதல் பெண்’ போன்ற நம்பிக்கைகள் துளிர்விட்டன. பெண்களுக்கான முதல் உயர்நிலைப் பள்ளியை அமெரிக்கா 1826இல் தொடங்கியது. ஜோதிராவ் ஃபுலேவும் அவருடைய மனைவி சாவித்ரிபாய் ஃபுலேவும் இணைந்து இந்தியாவின் முதல் பெண்கள் பள்ளியை 1848இல் தொடங்கினர். லண்டனில் பெண்கள் நால்வர் 1879இல் இளங்கலைப் பட்டம் பெற்றனர். இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்புதான் கல்வி என்பது பெண்களுக்குமானதுதான் என்பதை இந்த உலகம் அரை மனதாக ஏற்றுக்கொண்டது. அதன் விளைவுதான் இந்த ‘முதல்’கள்.

கல்வியும் சமூக அறிவும்

  • உலகம் இப்படி ஏற்றுக்கொண்டதாலேயே அனைத்துப் பெண்களும் கல்வியறிவு பெறுவதில் ஆணுக்கு நிகராக நடத்தப்படவில்லை. பொருளாதார வசதி படைத்த மேல்தட்டுப் பெண்களில் சிலர் மட்டுமே கல்வியறிவு பெற அனுமதிக்கப்பட்டனர். இருந்தபோதும் கல்வி நிலையங்கள் அவர்களை இருகரம் நீட்டி வரவேற்றுவிடவில்லை.
  • இந்தியாவில் பெண் கல்வியைச் சமூகக் கட்டமைப்பு தடுத்தது என்றால் அமெரிக்காவிலோ நிறவெறி. இந்தியாவில் குழந்தைகள் நாளாகத் தற்போது நாம் கொண்டாடுகிற நவம்பர் 14, ரூபி பிரிட்ஜஸ் என்கிற ஆறு வயதுச் சிறுமியின் வாழ்க்கையில் மட்டுமல்ல, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையிலும் திருப்புமுனையாக அமைந்தது. கறுப்பினத்தவர் என்கிற ஒரே காரணத்துக்காக அமெரிக்கக் காவலரால் ஜார்ஜ் ஃபிளாயிட் மிதித்துக் கொல்லப்பட்ட 2020ஆம் ஆண்டைப் பலராலும் எளிதாக மறந்துவிட முடியாது. இப்போதே இந்த நிலை என்றால் 70 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்ரிக்க அமெரிக்கர்களின் நிலையைப் புரிந்துகொள்ளலாம். அமெரிக்கர்களிடம் நிறவெறியும் வெறுப்புணர்வும் தலைவிரித்தாடிய சூழலில் ஆப்ரிக்க அமெரிக்கச் சிறுமியான ரூபி பிறந்தார். அவர் பிறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்புதான் அமெரிக்கப் பொதுப்பள்ளிகளில் கறுப்பினக் குழந்தைகளும் சேர்த்துக்கொள்ளபப்பட வேண்டும் என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. ‘பள்ளிகளில் பாகுபாடு, உரிமைகளில் சமத்துவம்’ என்கிற கருத்தாக்கம் எப்படிச் சரியாக இருக்க முடியும் என்பதுதான் உச்ச நீதிமன்றத்தின் வாதம். பொதுப்பள்ளிகளில் கறுப்பினக் குழந்தைகளும் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்கிற தீர்ப்பு வெளியாகி ஆறு ஆண்டுகள் கழித்து ரூபி பிரிட்ஜஸைப் பொதுப்பள்ளியில் அவருடைய பெற்றோர் சேர்த்தனர்.
  • ரூபியைப் பள்ளியில் நுழைய விடாமல் தடுக்க நிறவெறி கொண்ட அமெரிக்கப் பெற்றோர்களும் ஆர்ப்பாட்டக்காரர்களும் பள்ளிக்கு வெளியே கோஷம் எழுப்பியபடி நின்றனர். நான்கு பாதுகாவலர்கள் புடைசூழப் பள்ளிக்குள் நுழைந்தாள் ரூபி. தங்கள் பகுதியில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவுக்காகத்தான் அவ்வளவு கூட்டம் கூடியிருக்கிறது என்று நினைத்த அந்தச் சிறுமியின் கண்கள் அமெரிக்கப் பெண் ஒருவர் வைத்திருந்த பொம்மை சவப்பெட்டியைப் பார்க்க நேர்ந்தது. சவப்பெட்டிக்குள் தன்னை அடைத்துவைக்க நினைக்கிறது இந்தச் சமூகம் என்பதை உணர்ந்துகொண்ட ரூபி பிரிட்ஜஸ் சிறிதும் பின்வாங்கவில்லை. பள்ளியில் தனித்துவிடப்பட்டபோதும் படிப்பைக் கை விட வில்லை. பார்பரா ஹென்றி என்கிற ஆசிரியரின் துணையோடு கசப்பான நாள்களை ரூபி கடந்து வந்தார். இந்தச் சம்பவத்தை மையமாக வைத்து, புகழ்பெற்ற ஓவியர் நார்மன் ராக்வெல் 1964 இல் வரைந்த ஓவியம், மனித உரிமைப் போராட்டத்தின் முக்கியக் கருவியாகத் திகழ்ந்தது. உலகம் முழுவதும் பெண்கள் கல்விச் சாலையின் படியேறிய கதைகள் எல்லாம் இப்படியானவை தாம். நோபல் பரிசு பெறும் தகுதி கொண்ட ஒருவர் பெண் மீதான பிற்போக்குச் சிந்தனையைக் கொண்டிருக்க முடியும் என்பதை இந்திய விஞ்ஞானி ஒருவர் நிரூபித்தார். யார் அவர்? அடுத்த வாரம் பார்ப்போம்.

நன்றி: இந்து தமிழ் திசை (24 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்