TNPSC Thervupettagam
September 10 , 2019 1905 days 860 0
  • வரைவு- தேசிய கல்விக் கொள்கை 2019 எனும் அறிக்கையை குணம் நாடி, குற்றமும் நாடி, அவற்றுள் மிகை நாடும் முறையில் முதலில் குணங்களை நாடும்போது முதலாவது, அங்கன்வாடி என்பதைத் தொடக்கப் பள்ளியுடன் இணைத்தல் என்பது குழந்தைகளின் பராமரிப்பு அடுத்தகட்டமான கல்வி கற்றலுக்கு ஆயத்தப்படுத்துதல்  இரண்டிற்கும் இணக்கமாகும்  திட்டமாகிறது.

வட்டார மொழி

  • இரண்டாவது இயல் 4-5-1-இல் குறைந்தது ஐந்தாம் வகுப்பு வரை, அதிகபட்சமாக எட்டாம் வகுப்புவரை கற்பித்தல் மொழி வட்டார மொழி  அல்லது தாய் மொழியாக அமைய வேண்டும்- எனவும் 4-7-1-இல் மாநிலங்களே அவர்களது பாடப் புத்தகங்களைத் தயார்படுத்தும். என்.சி.இ.ஆர்.டி. பாட நூல்களைத் தழுவியும் இருக்கலாம். இத்தகைய பாடப்புத்தகங்கள் அவரவர்தாய் மொழியில் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் கூறுதல் வரவேற்புக்குரியது.
  • தொடக்கக் கல்வி மட்டுமல்ல மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்நிலைக் கல்வியும் தாய்மொழியில் அமைதலே இளையோரின் கற்றல்  திறனையும், சுய சிந்தனைத் திறனையும் எளிமைப்படுத்துவதாகவும், மேம்படுத்துவதாகவும் அமையும்.
  • அடுத்து, இயல் 4.3.1-இல் கலை மானுடவியல், அறிவியல், விளையாட்டு தொழிற்கல்வி ஆகிய துறைகளில் தங்களின் விருப்பத்துக்கேற்ப தேர்ந்தெடுக்க மாணவர்களுக்கு அதிக வாய்ப்பளிக்கப்படும் எனவும், இயல் 4.9-இல் பொதுத் தேர்வு பல தரப்பட்ட பாடங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். மாணவர்கள் தங்களுக்குப் பிடித்தமான பாடங்களைத் தேர்வு செய்து பொதுத் தேர்வு எழுத வகை செய்ய வேண்டும் எனவும் அமைதல் வரவேற்கத்தக்கது.
  • தற்போது, அரசு குறிப்பிட்ட பாடங்களைத் தொகுப்புகளாக்கி, அவற்றுள் ஏதேனுமொரு தொகுப்பைத் தேர்வு செய்துகொள்ள அனுமதிக்கிறது. அவ்வாறின்றி, மாணவன் தனக்கு  விருப்பத்திற்கும், திறனுக்கும், பாடங்களை ஒரு தொகுப்பாகக் கொள்ள வாய்ப்பளிக்க வேண்டும்.  அதாவது இயல் 11.1.1-இல் இளநிலைப் பட்டப்படிப்பு பற்றிய பகுதியில்  பாடங்களைத் தீர்மானிப்பதில் மாணவர்களுக்குப் போதுமான நெகிழ்வுத் திறன் வழங்கப்படும்.

விருப்பப் பாடம்

  • மாணவர்கள் தங்களின் சிறப்புப் பாடப்பகுதியான மேஜர் (வரலாறு, வேதியியல், தத்துவம், கணிதம், மின்பொறியியல்) என்பவற்றுடன் கூடுதல் விருப்பப் பாடமாக இசை, தமிழ், இயற்பியல், புவியியல் என்பவற்றுள் ஒன்றையும் தேர்வு செய்யலாம். அதாவது முதன்மைப் பாடமாக இயற்பியலையும் கூடுதல்  விருப்பப் பாடமாக வரலாற்றையும் தேர்ந்தெடுக்கலாம் என இருத்தல் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கும்  பொருத்தமாக வேண்டும்.
  • அடுத்து இயல் 4-9-5-இல் அடிப்படைத் தரவுகள்  திறன்கள் போன்றவற்றைச்  சோதிக்கும்  வகையில்  பொதுத் தேர்வுகள் மாற்றியமைக்கப்படும். இதன் குறிக்கோளாவது பள்ளிக்கு ஒழுங்காகச் செல்லும் மாணவர் எவ்விதப் பயிற்சி மையத்தின் உதவியும் இல்லாமல் சுய முயற்சியின் மூலம் தேர்வுகளில் வெற்றி பெறுமாறு மாற்றியமைப்பதாகும். 

பொதுத் தேர்வு

  • பொதுத் தேர்வு என்பது, அடிப்படைக் கற்றல் திறன்கள், ஆய்வுத் திறன் ஆகியவற்றைப் பரிசோதிக்கும் வண்ணம் இருக்கும், பொதுத் தேர்வினை ஆண்டுக்கு இரண்டு முறை எழுதும் வகையில் தேர்வுகள் மாற்றிமைக்கப்படும் மாணவர்களின் மன அழுத்தத்தைக்  குறைத்து, பாடங்களை இலகுவாக்க, இறுதித் தேர்வு முறையை மாற்றி பருவத் தேர் வினை உள்ளடக்கிய பொதுத்தேர்வு முறை நடைமுறைப்படுத்தபடும்  என அமைதல்  முற்றிலும் வரவேற்புக்குரியது.
  • தற்போதைய முறையில் ஒவ்வோர் ஆண்டும் அனைத்துப் பாடங்களுக்குமாக பொதுத்தேர்வு என்பது இளம் வயது மாணவர்களைக் கடுமையான மன உளைச்சலுக்கு உட்படுத்துவது நல்லதல்ல, குறிப்பாக பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பாடங்களை ஒருங்கிணைந்த இரண்டாண்டு பாடத் திட்டமாக்கி, இரண்டுக்கும் மேற்பட்ட பருவத் தேர்வுகளாகவும் ஒரு பருவத் தேர்வில் தோல்வியுறும் பாடத்தை அடுத்த பருவத் தேர்வில் சேர்த்து எழுதும்படியாகவும் அமைத்தல் அவசியமாகும். அவ்வாறே, பொதுத்தேர்வு என்பது பள்ளிப் பாடவேளைகளுக்கு அப்பால் தனிப் பயிற்சி தேவைப்படாத வகையில் அமைதலும் அவசியம்.
  • அடுத்து இயல் ஆறில், மூன்றாம் பாலினத்தவர், மாற்றுத்திறனாளிகள், மனவளர்ச்சி குன்றியோர் முதலானவர்களுக்கான கல்வி வசதி குறித்துக் குறிப்பிடுதல் கவனத்துக்கு உரியவாகின்றன. தற்போது அத்தகையவர்களுக்கான சிறப்புப் பள்ளிகள் தனியார் துறையாக இயங்குகின்றன. பல்வேறு காரணங்களால் அத்தகையவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டிருப்பதால், வட்டாரத்திற்கொரு அரசு சிறப்புப் பள்ளி அனைத்துக் கட்டமைப்புகளுடன் இயங்குதல் அவசியமாகிறது. 

ஆசிரியர்களுக்குப் பயிற்சி

  • அத்துடன் ஆசிரியப்பயிற்சிக் கல்லூரி ஒவ்வொன்றிலும்  சிறப்புப் பள்ளியில் பணியாற்றுவதற்கான சிறப்புப் பயிற்சிப் பிரிவு இணைக்கப்பட வேண்டும். 6-8-7-இல் குறிப்பிடப்படுமாறு சிறப்புப் பயிற்சி முடித்த சிறப்புக் கல்வியாளர்களை அந்தந்த வட்டாரத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுடனும் பணி செய்வதற்குத் தேவையான எண்ணிக்கையில் நியமிக்கலாம்.
  • அவர்கள், கடுமையான அல்லது பல குறைபாடுகளைக் கொண்ட மாணவர்களின் மறுவாழ்வு மற்றும் கல்வித் தேவைகளைக் கவனிப்பதுடன், அத்தகைய மாணவர்கள் கல்வி மற்றும் திறன்களை வீட்டிலேயே பெறுவதற்கு பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களுக்கு உதவி புரியலாம்.
  • அடுத்து ஆசிரியர்கள் குறித்த இயல் 5-இல் நான்காண்டு கால ஒருங்கிணைந்த ஆசிரியப் பயிற்சிப் படிப்பு பற்றி விவரிக்கப்படுதலும் கவனத்துக்குரியதாகிறது. ஒருங்கிணைந்த ஆசிரியர் பயிற்சி என்பது பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பாடப் பிரிவுகளில், தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்க்கான பயிற்சி என்பதும் ஒரு பாடப் பகுதியாக வேண்டும். அவ்வாறே இளநிலைப்பட்டப் படிப்பில் 9,10-ஆம் வகுப்புகளுக்குரிய ஆசிரியப் பயிற்சியும் முதுநிலை பட்டப்படிப்பில் பிளஸ் 1, பிளஸ் 2  வகுப்புகளுக்கு உரிய ஆசிரியப் பயிற்சியும் விருப்பப் பாடங்களாக அமைந்தால், ஆசிரியராக விரும்புவோர் பள்ளிப் படிப்பும் பட்டப் படிப்பும் முடித்த பின்னர் மீண்டும் கல்லூரிச் சேர்க்கைக்கு அலைவதிலிருந்து விடுபடுவர்.  
  • அத்துடன் அதே இயலில் கூறப்படுமாறு ஒருங்கிணைந்த ஆசிரியப் பயிற்சி பெறுவோர் அருகிலிருக்கும் பல்வேறு நிலைப் பள்ளிகளுடன் இணைந்து செயல்படுதல் என்பது ஆசிரியப் பயிற்சியை நிறைவான பயிற்சியாக்கும்.
  • அடுத்து, தொழிற்கல்வி குறித்தான  இயல் இருபதில் அனைத்துக் கல்வி நிறுவனங்களும் ஒரு தசாப்த காலப் பகுதியில்  தொழிற்கல்வியை தங்களின் கல்விச் சலுகைகளில் ஒருகட்டமாக ஒருங்கிணைக்க வேண்டும். அவர்கள் ஐ.டி.ஐ.-க்கள், பாலிடெக்னிக்குகள், உள்ளுர் வணிகங்கள், தொழில்கள், மருத்துவமனைகள், பண்ணைகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் ஒத்துழைப்பார்கள் எனக் குறிப்பிடுதல் அவசியமான மாற்றமாகும்.
  • அதே சமயம்  தொழிற்கல்வி என்பது கலைப் பாடங்களுடன் கூடுதல் விருப்பப் பாடமாக  அமைய வேண்டும். மருத்துவம், பொறியியல் உள்பட அனைத்துத் தொழில்துறைப் பாடங்களும் அந்தப் பருவநிலைக்கேற்ப அமைய வேண்டும். மருத்துவம் பொறியியல் முதலியவற்றில் உயர்நிலைப் பயிற்சி மட்டுமே மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி எனத் தனி அமைப்புகளாக வேண்டும்.

தொழில் வளர்ச்சி

  • இதன் மூலம் ஒவ்வொரு கல்வி நிலையமும் சிறிய அளவில் பொருள் விளைவித்து விற்பனை செய்யும் தொழிலகமாகவும், வணிக நிலையமாகவும், தொழில் முகமையாகவும், எளிய மருத்துவ ஆலோசனை பெறுமிடமாகவும் அமையும்.
  • இதனால் தொழில் வளர்ச்சி என்பது நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாகும். மக்களுக்குத் தேவையான எளிய பொருள்கள் மலிவு விலையில் கிடைக்கும் சூழல் உருவாகும். இதனுடன் இயல் 16-05-02-இல் கூறப்படும், தொழில்முறைக் கல்வியோ, பொதுக் கல்வியோ தனித்து வழங்கும் நிறுவனங்கள் இரண்டையும் வழங்கும் நிறுவனங்களாக மாற வேண்டும் என்பதும் சரியான முடிவாகிறது.
  • அதே சமயம் தொழிற்கல்வி என்பது கிராமப்புற மாணவர்களை அவர்களுடைய பெற்றோரின் பரம்பரைத் தொழில்களில் தக்க வைத்தலாக அமையக் கூடாது. மாறாக, அவரவர் பரம்பரைத் தொழில்களிலிருந்து விடுபட்டு நவீன தொழில்களிலும், மின்னணுச் சாதனங்கள் தயாரித்தல் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களிலும் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை வழங்குவதாக அமைய வேண்டும்.
  • இவ்வாறாக மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கையில் உள்ள அம்சங்கள் குறித்து நல்லதையே நினைப்போம். துணை நிற்போம்.

நன்றி: தினமணி (10-09-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்