- ஒரு நாட்டின் வலிமையும் அதன் எதிர்காலமும் அந்த நாட்டின் கல்வித் தரத்தைப் பொறுத்தது என்பதே உண்மை.
- தொடர்ந்து பல்வேறு சவால்களுக்கும் வீழ்ச்சிகளுக்கும் மத்தியில் அமெரிக்கா தொடர்ந்து வல்லரசாகத் திகழ்வதற்கு அங்குள்ள சுதந்திரமான தொலைநோக்குடைய தரமான பள்ளி, உயர்கல்வி நிறுவனங்களும் அங்கு பணியாற்றும் திறமைமிக்க ஆசிரியர்களும் ஆய்வாளர்களுமே காரணம்.
- இதனால்தான் அவர்களால் திறமைமிக்க சாதனையாளர்களை உருவாக்க முடிகின்றது. இதனால் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னாள் மாணவர்கள் என்றும் நன்றியுணர்வோடு தங்களை உருவாக்கிய கல்வி நிறுவனங்களுக்கு ஏராளமான பணத்தை நன்கொடையாகக் கொடுக்கிறார்கள்.
- உதாரணமாக, இந்தியத் தொழிலதிபர்கள் ரத்தன் டாடா, ஆனந்த் மஹிந்திரா, நாராயண மூர்த்தி போன்றோர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்குக் கொடுத்த நன்கொடைகள் பல கோடி ரூபாய்.
- ஆனால் இந்தியாவில், இந்திய தொழில் நுட்ப நிறுவனங்களைத் தவிர வேறு எந்தக் கல்வி நிறுவனமும் முன்னாள் மாணவர்களிடமிருந்து பெருமளவு நிதியுதவி பெற்றதாகத் தகவல்கள் இல்லை.
- இதற்கு முக்கியக் காரணம் நம் உயர்கல்வி நிறுவனங்களின் தரமில்லாத பேராசிரியர்களும், தரமற்ற கல்வி முறையுமே.
ஒழுக்கம் ஊட்ட வேண்டும்
- உலகமயமாக்கல் உலகத்தைக் சுருக்கி தொடர்புகளை அதிகரித்து வருகின்றது. இக்காலகட்டத்தில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள, நம் அடிப்படைக்கல்வியையும், உயர்கல்வியையும் உலகத்தரத்திற்கு மாற்றியமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
- ஒரு கல்வி நிறுவனத்தின் தகுதியோ புகழோ அங்குள்ள பெரிய கட்டடங்களாலோ நவீன ஆய்வுக் கூடத்தாலோ தீர்மானிக்கப்படுவதில்லை. மாறாக, அங்கு பணியாற்றும் தகுதியுடைய ஆசிரியர்களால்தான் தீர்மானிக்கப்படுகிறது.
- இந்த அடிப்படையில்தான் வளர்ந்த நாடுகள், பல்கலைக்கழக துணைவேந்தர்களைவிட திறமைமிக்க பேராசிரியர்களை அழைத்து, அவர்களுக்கு அதிக ஊதியம் கொடுத்து அவர்களைத் தங்கள் கல்வி நிறுவனங்களில் நியமித்து தங்கள் கல்வி நிறுவனங்களின் தரத்தை உயர்த்துகின்றன.
- நாம் எதிர்காலத்தில் உலக நாடுகளோடு போட்டி போடுவதற்கு தகுதியான இளம் சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.
- முதலாவதாக, அடிப்படைக் கல்வியின் தரத்தையும், கட்டமைப்பையும் நாம் உயர்த்தியாக வேண்டும்.
- உதாரணமாக, தில்லியிலும், கேரளத்திலும் பள்ளிக் கல்வித்துறை நவீன, தரமான கட்டமைப்புகளோடும், புதிய பாடத்திட்டத்தின் மூலமும் மிகப்பெரிய அமைதிப் புரட்சியை உருவாக்கி வருகின்றன.
- இதனால் அங்கெல்லாம் மாணவர்கள் அரசுப் பள்ளியில் பயில்வதை முக்கியமாகக் கருதுகின்றனர். இதுபோன்று, ஒடிஸா மாநிலத்திலும் ஆசிரியர் நியமனத்தில் மிகச்சிறந்த நெறிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன.
- இரண்டாவதாக, காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை பணிமூப்பு அடிப்டையிலும் தகுதியின் அடிப்படையிலும் நியமிப்பதோடு, கல்வியாண்டு தொடங்குவதற்கு ஒரு மாத்திற்கு முன்பே அவர்களுக்கு நியமன ஆணை கொடுத்து அவர்களை ஆயத்தம் செய்ய வேண்டும்.
- மூன்றாவதாக, ஆரம்பக்கல்வி முதல் உயர்கல்வி வரை விளையாட்டு, இசை, ஓவியம் போன்ற திறமைகளுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும்.
- தற்போதைய இளைய தலைமுறையினர், சமூக ஊடகங்களுக்கு அடிமையாகி, தங்கள் மன, உடல் வலிமையை இழப்பதோடு, சிந்திக்கும் திறனையும் இழந்து வருவது வேதனைக்குரியது. கிரேக்க தத்துவ ஞானியான பிளேட்டோ, "உடற்பயிற்சியும், இசைஞானமும் இல்லாத கல்வி அரைகுறைக் கல்வி' என்று கூறினார்.
- மேலும், ஜப்பானியர்களைப் போன்று சிறுவயதிலிருந்தே நற்குணங்கள், சுத்தம் பேணுதல், பிறர் நலம் நாடுதல், சட்டத்தை மதித்தல், நேர்மையான உழைப்பு, சவால்களை எதிர் கொள்ளும் மனவலிமை போன்றவற்றை மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
- ஒருவர் தவறான வழியில் ஈட்டிய செல்வம் அவருடைய குடும்பத்திலும் சமுதாயத்திலும் பேரழிவை உண்டாக்கும் என்ற ஒழுக்கக் கல்வியையும் மாணவர்களுக்கு ஊட்டவேண்டும்.
சுதந்திரமான பல்கலைக்கழகம்
- நான்காவதாக, தேசிய, சர்வதேசப் போட்டித் தேர்வுகளுக்கு நம் மாணவர்களை ஆயத்தப்படுத்தும் முயற்சிகளை பள்ளிப் பருவத்திலிருந்தே உருவாக்க வேண்டும்.
- இதற்காக நம் பாடத்திட்டங்கள் சர்வதேசத் தரத்தில் மேம்படுத்தப்பட வேண்டும். தற்போது பெரும்பாலான மத்திய கல்வி நிலையங்களின் நுழைவுத் தேர்வுகளில் கேரளத்தைச் சேர்ந்த மாணவர்கள் அதிகமாக வெற்றி பெறுவது அங்குள்ள கல்வித்தரத்தின் பிரதிபலிப்பே.
- ஐந்தாவதாக, பள்ளி - கல்லூரி வளாகங்கள் பராமரிக்கப்பட்டு, விளையாட்டுத் திடல்கள் நவீனமாக்கப்பட்டு, அங்குள்ள கட்டமைப்புகளும் மேம்படுத்தப்பட வேண்டும்.
- கட்டமைப்புகளை மேம்படுத்த பல்வேறு தொழில் நிறுவனங்கள், முன்னாள் மாணவர்கள், நன்கொடையாளர்கள் ஆகியோர் மூலம் நிதியைப் பெற்று திட்டங்களை நிறைவேற்ற அந்தந்தப் பகுதியிலுள்ள கல்வி நிறுவனங்களை ஊக்கப்படுத்த வேண்டும்.
- இதற்காக மக்கள் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், பொதுநல அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் அடங்கிய குழுக்களை அமைக்கலாம்.
- ஆறாவதாக, தனியார் கல்வி நிறுவனங்களை ஒழுங்குபடுத்த வேண்டியது அவசியம். தமிழகத்தில் ஒரு காலகட்டத்தில் தனியார் கல்வி நிறுவனங்கள் புற்றீசல் போல முளைத்தன. ஆனால், அந்தக் கல்வி நிறுவனங்களில் தகுதியான ஆசிரியர்கள் நியமிக்கப் படவில்லை.
- நியமிக்கப்பட்டவர்களுக்கு சரியான ஊதியமோ, பணிப் பாதுகாப்போ வழங்கப் படவில்லை. தரமில்லாத ஆசிரியர்களால் எப்படி தரமான மாணவர்களை உருவாக்க முடியும்? சரியான ஊதியம் கொடுக்கப்படாவிட்டால் எப்படி தகுதியான ஆசிரியர்கள் கிடைப்பார்கள்?
- இன்றைய குழப்பமான சூழ்நிலையில் பல்வேறு தனியார் தொழில் நுட்ப கல்லூரிகளுக்கும் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரிகளுக்கும் மூடுவிழா நடத்தி வருவது நல்ல முன்னேற்றம்.
- இந்தச் சூழ்நிலையில், இக்கல்வி வியாபாரிகள் தாங்களாக முன்வந்து தங்கள் கல்வி நிறுவனங்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.
- இல்லையென்றால் முறைகேடாகச் செயல்படும் தனியார் கல்வி நிறுவனங்களை அரசே ஏற்று நடத்த வேண்டும்.
- ஏழாவதாக, கல்லூரி உதவிப் பேராசிரியர்களை நேர்மையாக நியமனம் செய்ய வேண்டும். அதுவும் வெளிப்படையான முறையில், காலதாமதமின்றி நியமிக்க வேண்டும்.
- எட்டாவதாக, தகுதி வாய்ந்த, தொலைநோக்குடைய மற்றும் பன்னாட்டு அனுபவம் உடைய பேராசிரியர்களையே துணைவேந்தர்களாக நியமிக்க வேண்டும்.
- துணைவேந்தர்களை நியமிப்பதில் பல கோடிகள் கைமாறியதாக சமீபத்தில் காலமான முன்னாள் துணைவேந்தர் ஆனந்தகிருஷ்ணன் வெளிப்படையாக குற்றம்சாட்டியது இங்கு நினைவு கூரத்தக்கது.
- கோடிகளைக் கொடுத்து துணைவேந்தர் பதவியைப் பெறுபவரின் முக்கிய வேலை, தான் கொடுத்த பணத்தைப் பலமடங்காகத் திரும்ப எடுப்பதாகத்தான் இருக்கும்.
- தரமற்ற விரிவுரையாளர்களைப் பணம் பெற்று நியமிப்பது, தகுதியற்றவர்களுக்கு பதவி உயர்வு கொடுப்பது, தரமற்ற கட்டடங்களைக் கட்டுவது, தகுதியற்ற தனியார் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் கொடுப்பது என்று பண வசூல் செய்வதுதான் இவர்களின் முக்கியமான வேலையாக இருக்க முடியும். இத்தகைய அவலநிலையை முடிவுக்குக் கொண்டு வந்து புதிய தொடக்கத்தை உயர்கல்வியில் உருவாக்க வேண்டும்.
- இவற்றுடன் மத்திய பல்கலைக்கழகங்களைப் போன்று தமிழ்நாட்டிலும் துணைவேந்தருக்கான பதவிக் காலத்தை ஐந்தாண்டுகள் என்று நிர்ணயம் செய்ய வேண்டும்.
- அப்போதுதான் நீண்ட காலத் திட்டத்தோடு அரசியல் கட்சிகள், அதிகார வர்க்கத்தினர் தலையீடின்றி சுதந்திரமாக பல்கலைக்கழகங்கள் செயல்பட முடியும்.
மேம்படட்டும் கல்வித்துறை
- ஒன்பதாவதாக, நம் பல்கலைக்கழகங்கள் உலகத் தரத்திற்கு வளர வேண்டுமென்றால் உலகத் தரமான ஆய்வுகளை மேற்கொள்ள வாய்ப்பு வசதிகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.
- குறிப்பாக, பல்கலைக்கழகத்தின் ஒவ்வொரு துறையும் வளர்ந்த நாடுகளில் உள்ள பல்கலைக்கழங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டு, மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், ஆசிரியர்கள் பரிமாற்றத்திற்கும், கூட்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
- இதன்மூலம் பெருமளவு நிதியை நம் பல்கலைக்கழகங்கள் ஈர்க்கும் வாய்ப்புகள் உள்ளன. ஒவ்வொரு பல்கலைக்கழகமும் போட்டி போட்டு புதிய புதிய பாடத்திட்டங்களை அறிமுகப் படுத்தி, தேசிய, சர்வதேச அளவில் மாணவர்களை ஈர்த்து அடுத்த பத்தாண்டுகளில் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் குறைந்தது 25,000 மாணவர்கள் பயிலும் அளவிற்கு எல்லாத் துறைகளிலும் வளர்ச்சிபெறும் திட்டங்களை உருவாக்க வேண்டும்.
- பத்தாவதாக, ஒவ்வொரு பல்கலைக்கழகமும் சமூகவியல், மொழியியல் போன்ற அனைத்துப் பாடங்களுக்கும் சம அளவில் முக்கியத்துவம் கொடுத்து, தொலைநோக்கு ஆய்வுகளை மேற்கொள்ள ஊக்கப்படுத்த வேண்டும்.
- இறுதியாக, ஆனாலும் முக்கியமாக அரசியல்வாதிகளுக்கும், பிரபலமானவர்களுக்கும் பல்கலைக் கழகங்கள் கெளரவ டாக்டர் பட்டம் கொடுக்கும் அவலநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப் பட வேண்டும்.
- தமிழகத்தைத் தவிர வேறெங்கும் பிரபலங்களும் அரசியல்வாதிகளும் தங்கள் பெயருக்கு முன்னால் கெளரவ டாக்டர் பட்டத்தைப் போட்டுக் கொள்வது கிடையாது. மிதமிஞ்சிய புகழ்ச்சி தான் மிகப்பெரிய ஊழல்களுக்குக் காரணமாகிறது.
- தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்துள்ளதால், வியாபாரக் கல்வி நிறுவன உரிமையாளர்களும், சுயநலமே வடிவான துணைவேந்தர்களும், ஆட்சி அதிகாரத்திலுள்ள அனைவருக்கும் கெளரவ டாக்டர் பட்டத்தை வழங்குவதற்கு வரிசையில் நிற்பார்கள்.
- நல்லாட்சி ஒன்றே தன் லட்சியம் என்ற முழக்கத்தோடு செயல்படத் தொடங்கியிருக்கும் தமிழக முதல்வருக்கு கெளரவ டாக்டர் பட்டத்தைவிட இந்தியாவின் தலைசிறந்த முதல்வர் என்று வரலாறு எதிர்காலத்தில் பட்டம் கொடுப்பதே சிறப்பானதாக இருக்கும்.
- தற்போதைய அரசின் வெற்றியும் புகழும் கல்வித்துறையைச் சீர்படுத்தி, மேம்படுத்துவதில் தான் உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.
- கல்வித்துறை சீர்கெட்டால் ஒட்டுமொத்த சமுதாயமும் சீர்கெடும். கல்வித்துறை மேம்பட்டால் அனைத்துத் துறைகளும் மேம்படும். மேம்படட்டும் கல்வித்துறை!
நன்றி: தினமணி (02 – 06 - 2021)