TNPSC Thervupettagam

கல்விமுறை மாறவேண்டும்

July 29 , 2023 533 days 295 0
  • மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் குடிமைப் பணித் தேர்வுகளில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்துவருகிறது. இந்த சரிவுக்கான காரணம் ஆய்வு செய்யப்பட வேண்டும். 
  • நடப்பு ஆண்டில் குடிமைப் பணித் தேர்வுகளில் தமிழக அளவில் முதலிடம் பிடித்தவரால், தேசிய அளவில் 107-ஆவது இடத்தையே பிடிக்க முடிந்தது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் வரை, தமிழ்நாட்டில் இருந்து குடிமைப் பணித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் பல்வேறு மாநிலங்களிலும் திறமையான அதிகாரிகளாகப் பெயர் பெற்றனர். 
  • இப்போதும் பல மாநிலங்களில் தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் உயர் பதவிகளை வகிக்கிறார்கள். ஆனால், மத்திய அரசின் முக்கியமான பொறுப்புகளில் முன்புபோல தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்கிற குறைபாடு அதிகரித்து வருகிறது. 
  • ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் அதிகாரிகளைத் தேர்வு செய்வதற்காக குடிமைப் பணித் தேர்வுகளை யுபிஎஸ்சி நடத்திவருகிறது. இதில், கடந்த 2014-ஆம் ஆண்டு அகில இந்திய அளவில் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் பங்கு 11 சதவீதமாக இருந்தது. இது 2017-இல் 7 சதவீதமாகவும், 2019-இல் 6.69 சதவீதமாகவும் குறைந்தது. இது மேலும் சரிந்து 2020-இல் 5 சதவீதமாக ஆகிவிட்டது. 2021-இல் தேர்வில் பங்கேற்ற 685 பேரில் 27 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.
  • மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது, தமிழகத்தில் தொடக்கக் கல்வி முதலே குழந்தைகளுக்கு ஊக்கம் அளிக்கப் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. முன்னாள் முதல்வர் காமராஜர் காலத்தில் தொடங்கப்பட்ட மதிய உணவுத் திட்டம் அடுத்தடுத்து வந்த ஆட்சியாளர்களால் விரிவுபடுத்தப்பட்டது. ஒன்று முதல் பிளஸ் 2 வரை பயிலும் 75 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு பாடநூல்கள், நோட்டு புத்தகங்கள் இலவசமாக வழங்கப் படுகின்றன. இவர்களுக்குப் பேருந்துகளில் இலவசப் பயண சலுகையும் வழங்கப்படுகிறது.
  • பல்வேறு வகுப்புகளில் பயில்வோருக்கு சீருடை, புத்தகப் பை, காலணிகள் உள்ளிட்டவையும் இலவசமாக வழங்கப்படுகின்றன. 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, மிதிவண்டி ஆகியவையும் வழங்கப்படுகின்றன.
  • அரசுப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு பிளஸ் 2 வரை படித்து கல்லூரியில் சேரும் மாணவிகளை ஊக்குவிப்பதற்காக 'புதுமைப் பெண்' திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது. பொறியியல் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட 7.5 சதவீத ஒதுக்கீட்டால் கடந்த 2 ஆண்டுகளில் 16,600 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இவர்களுக்கான கல்வி, விடுதி, போக்குவரத்து என அனைத்துக் கட்டணங்களையும் அரசே ஏற்றுள்ளது. 
  • இதேபோன்று, மருத்துவப் படிப்பிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடம் ஒதுக்கப்படுகிறது. ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உதவித் தொகை, முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு கல்விக் கட்டணச் சலுகை, முதுநிலைப் பட்டப் படிப்பு மாணவர்கள் 1,200 பேருக்கு உதவித் தொகை, கேட், ஜிமேட் போன்ற போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி உள்ளிட்ட ஏராளமான நலத்திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுகின்றன. இந்தத் திட்டங்கள் முழுமையான பயன்களை அளித்துள்ளனவா என்ற கேள்வி எழுகிறது.
  • 2,667 கல்லூரிகளுடன், தமிழ்நாட்டில் ஒரு லட்சம் பேருக்கு 40 என்ற விகிதத்தில் கல்லூரிகள் உள்ளன. விகிதாசாரத்தில், தமிழ்நாட்டைவிட கர்நாடகம் (ஒரு லட்சம் பேருக்கு 62), ஆந்திரம் (ஒரு லட்சம் பேருக்கு 49) ஆகிய இரு மாநிலங்கள் மட்டுமே முன்னணியில் உள்ளன. 
  • அண்மையில் நடைபெற்ற பிளஸ் 1 பொதுத் தேர்வில் 70,431 பேர் தேர்ச்சி பெறவில்லை. இவர்களில் பெரும்பாலானவர்கள் நடப்பு ஆண்டில் பிளஸ் 2 வகுப்பில் சேராமல் பல்வேறு பணிகளுக்குச் செல்ல அதிக வாய்ப்புள்ளது. இதேபோன்று, கடந்த ஆண்டு பிளஸ் 1 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத சுமார் 40,000 மாணவர்கள் உள்பட 50,000 மாணவர்கள் 2023-இல் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதவில்லை.
  • இவை ஒருபுறம் இருக்க, தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளில் மாணவர்களின் குறைவான தேர்ச்சி குறித்து மத்திய பள்ளிக் கல்வித் துறை செயலர் சஞ்சய் குமார் கூறியுள்ள கருத்து கவனத்தில் கொள்ளத்தக்கது. சிபிஎஸ்இ, மாநிலப் பாடத்திட்டம் என வெவ்வேறு பாடத் திட்டங்களில் பயிலும் மாணவர்களுக்கு இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்ற பாடங்களில் வேறுபாடு உள்ளது. இதனால், தேசிய அளவிலான தேர்வுகளில் மாணவர்கள் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடுகிறது என்கிறார் அவர்.
  • அதேபோன்று, பிளஸ் 2 வரையில் மனப்பாடம் செய்து புத்தகத்தில் உள்ளதை அப்படியே எழுதுவதை  ஊக்கப்படுத்துவது நமது குறைபாடு. இதனால், குடிமைப் பணித் தேர்வுகளில் திறன் தேர்வு, நேர்முகத் தேர்வுகளில் பங்கேற்பவர்கள் திணறுகிறார்கள். நேர்முகத் தேர்வில் பங்கேற்கும் தமிழக மாணவர்கள் ஆளுமைத் திறனை வெளிப்படுத்துவதில்லை என்பதும் பரவலான கருத்து.
  • பல்வேறு ஊக்கத் திட்டங்கள் மாணவர்களைப் பள்ளிக்கு வரத் தூண்டினாலும், கல்வி முறையில் மனப்பாட முறையும், மதிப்பெண்களை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதும் மாறினால் மட்டுமே நாம் எதிர்பார்க்கும் மாற்றங்கள் சாத்தியமாகும்.

நன்றி: தினமணி (29–07–2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்