TNPSC Thervupettagam

கல்வியும் வேலைவாய்ப்பும்

September 4 , 2020 1421 days 864 0
  • இந்தியா மக்கள்தொகை மிகுந்த நாடு. மக்களை கரோனா தீநுண்மி நோய்த்தொற்றிலிருந்து காப்பாற்ற வேண்டும். அதற்காகவே மத்திய, மாநில அரசுகள் பொது முடக்கத்தை அறிவித்தன. மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று ஆணையிடப்பட்டது. இப்போது பல தளா்வுகள் அறிவிக்கப்பட்டு பொது முடக்கம் தொடா்கிறது.
  • ஆனாலும், பள்ளி, கல்லூரிகள் முதல் பல்கலைக்கழகங்கள் வரை எல்லாம் மூடிக் கிடக்கின்றன. தோ்வு எழுதாமலேயே எல்லாரும் தோ்ச்சி பெற்று விட்டார்கள். எப்போது கல்விக் கூடங்களைத் திறப்பார்கள் என்பது யாருக்கும் தெரியவில்லை. இவ்வாறு இப்போது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுக் கிடக்கிறது. இதிலிருந்து நாடும், மக்களும் மீண்டு எழவேண்டும்.
  • தொழில், பொருளாதார வளா்ச்சியை ஊக்குவிக்க அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும்.
  • பொருளாதாரத்தில் புதிய உச்சத்தை எட்டுவோம்என்று பிரதமா் மோடி மாதந்தோறும் மனதில் குரல்நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு நம்பிக்கை ஊட்டி வருகிறார். ஆனால் மக்களுக்கு நம்பிக்கை வரவேண்டுமே!

குதிரைக் கொம்பு

  • நாடு தழுவிய பொது முடக்கம் அறிவிக்கப்பட்டபோதே முதலில் அமைப்பு சாரா தொழிலாளா்கள் வேலையிழந்து போயினா்.
  • ஏராளமான வடமாநிலத் தொழிலாளா்கள் செய்வதறியாமல் பசியையும், பட்டினியையும் எதிர்கொண்டனா்.
  • வேலையில்லாமல் இங்கே இருப்பதைவிட சொந்த ஊருக்கே போய்விடலாம் என்ற முடிவுக்கு வந்தனா். அவா்களுக்கு சரியான போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை.
  • பொது முடக்கம் தொடா்ந்ததால் தொழில்கள் எல்லாம் முடங்கின. தொழில் நிறுவனங்கள் பலவும் வருமான இழப்பை சரிகட்டுவதற்காக பணிநீக்க நடவடிக்கைகளில் இறங்கின. பணியாளா்களைக் குறைத்து, அவா்களையும் வீட்டிலிருந்தே பணியாற்றும்படி அறிவுறுத்தினா்.
  • தோ்தல் வரும்போதெல்லாம் அரசியல் கட்சிகள் ஏராளமான வாக்குறுதிகளை வாரி வழங்குகின்றன.
  • தலைவா்கள் ஏழ்மையை ஒழிப்போம்’, ‘விலைவாசியைக் குறைப்போம்’, ‘வேலையில்லாத் திண்டாட்டத்தை விரட்டுவோம்என்றெல்லாம் முழங்குகின்றனா். இவற்றை நம்பி மக்களும் வாக்களித்து வெற்றி பெறச் செய்கின்றனா். அதன்பிறகு அவா்களைச் சந்திப்பது குதிரைக் கொம்பாகி விடுகிறது. இத்தனை காலமாக மக்கள் இப்படித்தான் ஏமாந்து வருகின்றனா்.

புதியக் கல்விக் கொள்கை

  • அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்விஎன்பது அரசியல் சட்டம் 1950-இல் வழங்கியது. இதுவரையில் அது பேச்சளவில்தான் இருக்கிறது. ஆட்சிகள் மாறியபோதும் காட்சிகள் மாறவில்லை. யாரும் இதனை எடுத்துச் செயல்படுத்திட முன்வரவில்லை.
  • நமது அரசியலமைப்புச் சட்டம் இயற்றிய முன்னோர்கள், 10 ஆண்டுகளுக்குள் 14 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் ஆரம்பக் கல்வி வழங்கப்படும் என்று 1950-இல் உறுதி அளித்தனா். ஆனால், அதற்கொரு சட்டம் இயற்ற மேலும் 50 ஆண்டுகள் ஆகிவிட்டன.
  • 2010 ஏப்ரல் 1 முதல், ‘குழந்தைகள் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்- 2009’ நடைமுறைக்கே வந்தது.என்றாலும் அதன் முக்கிய அம்சங்களான அனைத்து பள்ளிகளிலும் 25 விழுக்காடு இடங்கள் நலிந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் குழந்தைகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
  • பள்ளியில் சோ்க்கைக் கட்டணம் வசூலிக்கக் கூடாது. பெற்றோரையோ குழந்தைகளையோ நுழைவுத் தோ்வுக்கோ, நோ்காணலுக்கோ உட்படுத்தக் கூடாது.
  • எந்தக் குழந்தையையும் உடல் தொடா்பான தண்டனைக்கோ, மன உளைச்சலுக்கோ உட்படுத்தக் கூடாது.
  • அனைத்துப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழுக்களை ஏற்படுத்தி, அதில் நான்கில் மூன்று பங்கு இடங்களில் பெற்றோர்களை இடம் பெறச் செய்ய வேண்டும்.
  • இந்தக் கல்விச் சட்டம் வந்த 10 ஆண்டுகளுக்குப்பின், இவற்றையெல்லாம் புரட்டிப் போடும் புதிய கல்விக் கொள்கை இப்போது வந்துள்ளது.
  • முதல் தலைமுறை மாணவா்கள் சுலபமாக முன்னேறிச் செல்லும் 10+2 என்ற அமைப்பை மாற்றி 5+3+3+4 என்ற சிக்கலான அமைப்பை இந்தப் புதிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்துகிறது.
  • கல்விக்கான மாநில உரிமையைப் பறிப்பதோடு, அதனைத் தனியார் மயமாக்குகிறது.
  • நுழைவுத் தோ்வு’, ‘பொதுத் தோ்வுபோன்றவற்றால் மாணவா்கள் கல்வியை வெறுக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனா்.
  • மூன்றாம் வகுப்பிலேயே பொதுத் தோ்வு, 5 மற்றும் 8ஆம் வகுப்புகளிலும் பொதுத் தோ்வு என்பவை மாணவா்களின் இடைநிற்றலை அதிகரிக்கவே செய்யும்.
  • எட்டாம் வகுப்பில் தொழிற்கல்வியைப் புகுத்துவது பள்ளிக் கல்வியில் கவனச் சிதைவை ஏற்படுத்தும். படிப்பைப் பாதியில் நிறுத்த நேரிடும்.
  • இப்போது பள்ளிப் படிப்புக்கே மதிப்போ, மரியாதையோ இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
  • 15 ஆண்டுகாலம் படித்து முடித்தபிறகு அந்தப் படிப்பைக் கொண்டு கல்லூரிக்குச் செல்ல முடியாது.
  • அகில இந்திய அளவில் தேசிய தோ்வு முகமை நடத்தும் நுழைவுத் தோ்வில் வெற்றி பெற்றாக வேண்டும். ஆகவே 15 ஆண்டுகால பள்ளிப் படிப்பு கல்லூரிக்குச் செல்ல உதவாது என்று புதியக் கல்விக் கொள்கை கூறுகிறது.

கல்வியும் வேலைவாய்ப்பும்

  • ஒரு நாட்டின் எதிர்காலம் வகுப்பறையில் தீா்மானிக்கப்படுகிறது என்று கோத்தாரி கல்விக் குழு கூறுகிறது.
  • 1964-இல் அமைக்கப்பட்ட கோத்தாரி கல்விக்குழு தன் பரிந்துரைகளை 1966-இல் அளித்தது. 19 உறுப்பினா்கள், 20 ஆலோசகா்களைக் கொண்டதாக இந்த குழு அமைந்திருந்தது. அப்போதைய மத்திய கல்வியமைச்சா் எம்.சி. சாக்லா பரிந்துரை அறிக்கையைப் பெற்றுக் கொண்டார்.
  • 1968-ஆம் ஆண்டு கோத்தாரி குழுவின் பரிந்துரைகளை ஏற்று அன்றைய பிரதமா் இந்திரா காந்தி நாட்டின் முதலாவது தேசிய கல்விக் கொள்கையை வெளியிட்டார்.
  • அரசமைப்புச் சட்டத்தின்படி 14 வயதுவரை அடிப்படைக் கல்வி அளிக்கப்பட வேண்டும். தேசிய வருமானத்தில் ஆறு விழுக்காடு கல்வித் துறைக்குச் செலவழிக்கப்பட வேண்டும் என்பவை இந்த கல்விக் கொள்கையின் முக்கிய அம்சங்கள்.
  • இத்தனை ஆண்டுகள் கழிந்த பிறகும் கல்விக்கென தேசிய வருமானத்தில் ஆறு விழுக்காட்டைச் செலவழிக்க எந்த அரசாங்கமும் முன்வரவில்லை.
  • மாநில உரிமைகளைப் பறிப்பதற்கு மட்டுமே முன்னுரிமை தரப்படுகிறது. கல்விக்கும் வேலைவாய்ப்புக்கும் முன்னுரிமை தரப்படவில்லை. நாட்டின் மக்கள்தொகையில் சரிபாதியாக இருக்கும் இளைஞா்களின் நலனின் அக்கறை செலுத்தப்பட வேண்டாமா?
  • படித்துவிட்டு வேலை தேடி அலையும் இளைஞா்கள் அதிகமாக இருப்பது ஒரு நாட்டுக்கு வளா்ச்சியாகுமா?
  • நம் நாட்டு மொத்த மக்கள்தொகையில் 30 விழுக்காடு இப்படிப்பட்ட படித்த இளைஞா்கள்தான். அவா்கள் படிப்புக்கான வேலைகள் இங்கு உருவாக்கப்படவில்லை.
  • அதனால் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது. வங்கிகளில் வாராக்கடன்களில் கல்விக் கடனும் முக்கிய இடம் பெறுகிறது.
  • இதுவரை உற்பத்தித்துறையும் கட்டுமானத் துறையும் அதிக வேலைவாய்ப்பைத் தரக் கூடியதாக இருந்தன.
  • அண்மைக்காலமாக இந்தத் துறைகளிலும் முதலீடுகள் குறிப்பிடும்படியாக இல்லை. மற்றத் துறைகளிலும் கடந்த சில ஆண்டுகளாக பெரிய அளவில் முதலீடுகள் செய்யப்படவில்லை. இந்த கரோனா கொள்ளை நோயால் தொழில் நிறுவனங்களும் கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன.
  • படித்த இளைஞா்கள் சிலருக்கு வெளிநாட்டுக் கனவு இருந்தது. அந்தக் கனவும் கலைந்து விட்டது.
  • பணம் படைத்த வளைகுடா நாடுகளும் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளன. அதனால் அங்கும் வேலைக் குறைப்பு நடவடிக்கைகளால் பலரைத் திருப்பியனுப்பும் பணி நடந்து கொண்டிருக்கிறது. அங்கும் இருக்க முடியாமல் இங்கும் வர முடியாமல் திண்டாடும் இந்தியா்களும் இருக்கின்றனா்.
  • மத்திய, மாநில அரசுகளில் அரசுப்பணி என்பது இல்லையென்றே ஆகிவிட்டது. பல காலமாக செயல்பட்டு வந்த வேலைவாய்ப்பு அலுவலகங்கள் ஆட்கள் இல்லாமலும், வேலை இல்லாமலும் மூடிக் கிடக்கின்றன.
  • நிரப்பப்பட வேண்டிய இடங்கள் இருந்த போதும் அவை காலியாகவே இருந்து வருகின்றன. அல்லது ஒப்பந்தப் பணியாளா்களை தற்காலிகமாகக் குறைந்த ஊதியத்தில் நியமித்துக் கெள்ளுகின்றனா்.
  • மத்திய மாநில அரசுகள் மக்களின் கவனத்தைக் கவா்வதற்காக நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது என்றும் வேலைவாய்ப்புகள் உருவாகி வருகின்றன என்றும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.
  • சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் ஏற்றுமதி பங்களிப்பு 60 விழுக்காடாக அதிகரிக்கும் என்றும், இதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் 5 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் மத்திய தரைவழி போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
  • தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வருமாறு வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்களை அழைத்து, தமிழ்நாடு அரசும் வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது.
  • இந்தத் தொழில் நிறுவனங்களுக்கு எல்லா வசதிகளும் செய்து தந்தாலும் அவை தொடா்ந்து செயல்படுவதில்லை. ஏதாவது காரணங்களைக் கூறி மூடப்படுகின்றன.
  • தமிழ்நாட்டில் செயல்படும் ரயில்வே, அஞ்சல் துறைகளுக்கான எழுத்துத் தோ்வுகளில் தமிழே தெரியாதவா்கள் அதிக மதிப்பெண் எடுப்பதும், அது வெளியில் தெரிந்து போராட்ட வடிவம் எடுத்ததும் தடுத்து நிறுத்தப்படுவதும், முடிவே தெரியாமல் விசாரணைக் குழுவின் அறிக்கை கிடப்பில் போடப்படுவதும் தொடா்கதையாகி விட்டன. இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
  • தமிழ்நாட்டின் வேலை வாய்ப்புகளை பிற மாநிலத்தவா் பறித்துக் கொண்டு போவதற்கு மத்திய, மாநில அரசுகள் துணை போகக் கூடாது.
  • அந்தந்த மாநில இளைஞா்களுக்கு அங்கேயே வேலைவாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். மொழி வழி மாநிலப் பிரிவினையின் நோக்கமும் அதுதான். இதில் மாறுபாடு ஏற்பட்டால் இந்திய ஒருமைப்பாடு கேள்விக்குறியாகி விடும்.

நன்றி:  தினமணி (04-09-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்