TNPSC Thervupettagam

களமச்சேரிக் குண்டுவெடிப்பு: களையப்படட்டும் தீவிரவாதம்

November 1 , 2023 435 days 266 0
  • அக்டோபர் 29 அன்று கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள களமச்சேரியில் மதப் பிரார்த்தனைக் கூட்டத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில், 12 வயதுச் சிறுமி உள்பட மூன்று பேர் இறந்துள்ளனர். 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். வன்முறைச் சம்பவங்கள் எந்தப் பின்னணியிலிருந்தும் உருவெடுக்கக் கூடாது என்பதற்கான உதாரணமாக இந்தச் சம்பவம் நடந்தேறியிருக்கிறது.
  • யெகோவாவின் சாட்சிகள்’ எனும் மதப் பிரிவு நடத்திய பிரார்த்தனைக் கூட்டத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் பல கேள்விகளை எழுப்புகிறது. 1905இல் இந்த மதப் பிரிவு இந்தியாவில் அறிமுகமானது. சி.டி.ரஸல் என்கிற அமெரிக்கர் தோற்றுவித்த இந்த மதப் பிரிவைக் கேரளத்தில் 15,000க்கும் மேற்பட்டோர் பின்பற்றுகின்றனர். 1912இல் திருவிதாங்கூர் சமஸ்தான ஆட்சிக் காலகட்டத்தில் ரஸல் நேரடியாகத் திருவனந்தபுரத்துக்கு வந்து, மதப் பிரச்சாரத்தை மேற்கொண்டார். திருவிதாங்கூர் அரசும் அவருக்கு ஆதரவு நல்கியது.
  • யெகோவாவின் சாட்சிகள் மதப் பிரிவினர், உலகம் முழுவதும் பரவலாக இருக்கின்றனர். இவர்களுக்கு ஊர்கள், மாநிலங்கள், நாடுகள் என்ற எல்லைகள் இல்லை; அதனால் இவர்கள் தாங்கள் வசிக்கும் நாட்டின் நாட்டுப் பண்ணுக்கோ கொடிக்கோ மரியாதை அளிப்பதில்லை. அது தங்களது மத நம்பிக்கைக்குச் செய்யும் துரோகம் என நம்புகிறார்கள்.
  • அமெரிக்காவில் மட்டும் இவர்கள் தமது நம்பிக்கைக்கு எதிரான 50 வழக்குகளுக்காக நீதிமன்றப் படியேறியுள்ளனர். இந்தியாவில் 1986இல் இம்மதப் பிரிவைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் தேசிய கீதம் பாட மறுத்ததற்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம், இந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள் தேசிய கீதத்தைப் பாட வேண்டிய அவசியமில்லை என்று தீர்ப்பளித்தது.
  • இது ஒரு பக்கம் இருக்க, களமச்சேரிக் குண்டுவெடிப்பை இஸ்ரேல்-ஹமாஸ் போருடன் தொடர்புபடுத்தியும் இஸ்லாமியத் தீவிரவாதிகள் இதை நிகழ்த்தியிருக்கக்கூடும் என்றும் கருத்துகள் பரப்பப்பட்டன. பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் தலைவர்களும்கூட இம்மாதிரியான அபிப்ராயத்தைப் பகிர்ந்துகொண்டனர். சமூக ஊடகங்களும் செய்தித் தொலைக்காட்சிகளும் இதற்கு விலக்கல்ல.
  • டொமினிக் மார்ட்டின் என்பவர் ஃபேஸ்புக் நேரலையில் வந்து இந்த குண்டுவெடிப்புக்குப் பொறுப்பேற்ற பிறகுதான் இந்த ஊகங்கள் நீங்கத் தொடங்கின. யெகோவாவின் சாட்சிகள் மதப் பிரிவைப் பின்பற்றுபவராக இருந்த இவர், அந்த மதத்தின் நம்பிக்கை தேசவிரோதமானது என்றும், அதனால்தான் தேசப் பற்றாளனாக இந்தக் குண்டுவெடிப்பை நிகழ்த்தியதாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
  • காவல் துறையிடம் சரணடைந்த மார்ட்டின் கைதுசெய்யப்பட்டு, அவர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. கேரள காவல் துறையும் தேசியப் புலனாய்வு முகமையும் வழக்கு விசாரணையைத் தொடங்கியுள்ளன. இதற்கிடையே, இச்சம்பவம் தொடர்பாக ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் போன்றோர் தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றன. ராஜீவ் சந்திரசேகர் மீது கேரளக் காவல் துறை வழக்கும் தொடர்ந்திருக்கிறது.
  • ஜனநாயக நாட்டில் நமது அரசமைப்புச் சட்டம் வழங்கும் உரிமைகளுக்குள் யாரும் எந்த மதத்தையும் பின்பற்றும் சுதந்திரம் உண்டு. மார்ட்டின் நிகழ்த்திய இந்தக் கொடூரம் ஜனநாயக விரோதமானது; கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டியது. தேசத் துரோகம் மட்டுமல்லாமல், தேசப்பற்றின் பெயரிலான தீவிரவாதச் செயல்பாடுகளும் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும். தீவிரவாதச் செயல்களைத் தடுப்பதில் மட்டுமல்ல, வெறுப்புணர்வை வேரறுப்பதிலும் அனைத்துத் தரப்பினரும் கைகோப்பது அவசியம்.

நன்றி: தி இந்து (01 – 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்