- மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், ஜனவரி 2021 முதல் மே 2023க்கு இடைப்பட்ட காலத்தில் 1,958 பதின்பருவப் பிரசவங்கள் நிகழ்ந்ததாக வெளியாகியிருக்கும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் இந்தப் புள்ளிவிவரத்தை அரசிடமிருந்து பெற்றிருக்கிறார் சமூகச் செயல்பாட்டாளர் வெரோனிகா மேரி. இத்துடன் வட்ட, மாவட்ட அளவிலான மருத்துவமனைகளில் நிகழ்ந்த பிரசவங்களும் கணக்கில் கொள்ளப்பட்டால் பதின்பருவப் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும்.
- பதின்பருவக் கர்ப்பம், குழந்தைப்பேறு போன்றவற்றுக்குக் குழந்தைத் திருமணமும், விடலைக் காதலும் முக்கியக் காரணங்களாக இருக்கின்றன. இந்தப் புள்ளிவிவரங்கள் தற்போதும் நடைமுறையில் இருக்கும் குழந்தைத் திருமணங்களின் எண்ணிக்கையையும் மறைமுகமாகச் சுட்டிக்காட்டுகின்றன.
- இது மதுரை மாவட்டத்துக்கான தனிப்பட்ட பிரச்சினை அல்ல. ஏற்கெனவே நான்கு வட தமிழக மாவட்டங்களில் ஐந்து நாள்களில் மட்டும் 41 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப் பட்டது, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் குழந்தைத் திருமணங்கள் நடைபெறுவதை உறுதிப்படுத்துகிறது.
- இது தேசிய அளவிலான பிரச்சினை என்பதை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் ஒப்புக்கொண்டுள்ளது. மத்திய சுகாதாரத் துறை சார்பில் ‘குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் 2030’ அறிக்கை 2022 ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. இந்தியாவின் மக்கள்தொகைப் பெருக்கத்தில் பதின்பருவக் குழந்தைப்பேறு முக்கியப் பங்கு வகிப்பதாக அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.
- இந்தியாவில் 44% மாநிலங்களில் குழந்தைத் திருமணங்கள் அதிக அளவில் நடத்தப் படுவதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. பிஹார், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், அசாம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் அதில் முன்னிலை வகிக்கின்றன.
- குழந்தைத் திருமணமும் அதைத் தொடர்ந்த பதின்பருவக் கர்ப்பங்களும் தடுத்து நிறுத்தப்பட வேண்டிய சமூகச் சீர்கேடுகள். குடும்பத்தினரது ஏற்பாட்டில் நடத்தி வைக்கப்படுகிற குழந்தைத் திருமணங்கள் ஒருபக்கம் என்றால், மற்றொரு பக்கம் பதின்பருவத்தினர் காதல் வயப்பட்டு வீட்டை விட்டு வெளியேறித் தாங்களாக மணம் புரிந்துகொள்வதும் நடக்கிறது.
- இதுபோன்ற காதல் மணங்களில் சம்பந்தப்பட்ட பெண் கருவுற்றுவிட்டால், அதைச் சட்டத்துக்கு விரோதமான முறையில் கலைப்பதற்கும் குடும்பத்தினர் தயங்குவதில்லை. குடும்பத்தினர் தங்களைப் பிரித்து வைக்கக்கூடும் என்கிற அச்சத்திலும் காதல் இணையர், குழந்தைப் பேறுக்குப் பிறகே வீடு திரும்புகின்றனர். இதுவும் பதின்பருவக் குழந்தைப்பேறுக்கு மறைமுகக் காரணமாக அமைகிறது.
- இதிலும் கிராம, நகர வேறுபாடு உண்டு. மதுரை மாவட்டத்தில் கிராமப்புற மருத்துவமனைகளில் 1,380 பிரசவங்களும் நகர்ப்புற மருத்துவமனைகளில் 578 பிரசவங்களும் நிகழ்ந்திருக்கின்றன. கல்வியும் பொருளாதார நிலையும் சமூகக் கட்டமைப்பும் குழந்தைத் திருமணங்களில் நேரடித் தாக்கம் செலுத்துகின்றன.
- அரசு சார்பில் குழந்தைத் திருமணம், வயதுக்கு மீறிய செயல்கள் ஆகியவற்றின் மோசமான விளைவுகள் குறித்து அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டாலும் அடிமட்ட அளவில் சுகாதாரச் சேவையில் ஏற்பட்டுள்ள இடைவெளியைச் சீராக்குவதில் இன்னும் கவனம் தேவைப்படுகிறது. பள்ளி, கிராம அளவிலான கணக்கெடுப்பும் கண்காணிப்பும் அவசியம்.
- 1098, 181 போன்ற குழந்தைகளுக்கான உதவி எண்களின் பயன்பாட்டைப் பதின்பருவத்தினர் மத்தியில் பரவலாகக் கொண்டுசேர்க்க வேண்டும். அரசின் தொடர்ச்சியான கண்காணிப்பும் துரிதச் செயல்பாடுகளுமே பதின்பருவக் கர்ப்பத்தைத் தடுக்கும்.
நன்றி: இந்து தமிழ் திசை (07 – 09 – 2023)