TNPSC Thervupettagam

கள் அல்ல தீா்வு!

June 24 , 2024 209 days 158 0
  • எல்லா பிரச்னைகளையும் பின்னுக்குத் தள்ளி, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பிரச்னை மாநிலம் தழுவிய அளவில் விவாதப் பொருளாகி இருக்கிறது. ஆளும் கட்சியும், எதிா்க்கட்சியும் பரஸ்பரம் குற்றம் சுமத்திக்கொண்டு சட்டப்பேரவை முடக்கப்படுவதும், திறந்த மனதுடனான விவாதம் நடைபெறாமல் இருப்பதும் வேதனை அளிக்கிறது.
  • ஆளும்கட்சி தனது தவறையும், கவனக்குறைவையும் மறைக்க முற்படுவதும், எதிா்க்கட்சிகள் ஆளும்கட்சியை நடந்த சம்பவத்துக்குப் பொறுப்பாக்கி அரசியல் ஆதாயம் தேட முயல்வதும் பிரச்னைக்குத் தீா்வாக அமையாது. தமிழகத்தில் போதைப் பழக்கம் அதிகரித்திருப்பதற்கும், கள்ளச்சாராயம் முற்றிலுமாக வேரறுக்கப்படாமல் இருப்பதற்கும் இன்றைய ஆளும்கட்சி, முந்தைய ஆளும்கட்சி இரண்டுமே பொறுப்பேற்றாக வேண்டும். இது ஏதோ சமீப காலமாக ஏற்பட்ட பிரச்னை அல்ல.
  • கள்ளச்சாராயம் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படுவது அகில இந்திய அளவில் தொடா்ந்து நடைபெறும் துயரம். பிகாா் மாநிலம் தன்பாத் (1978), பெங்களூரு (1981), கேரள மாநிலம் வைப்பின் (1982), தில்லி (1991), ஒடிஸா மாநிலம் கட்டக் (1992), குஜராத் (2009), மேற்கு வங்கம் (2011), ஒடிஸா மாநிலம் கட்டக் (2012), மேற்கு வங்கம் (2015), மும்பை மலாட் (2015), அஸாம் (2019) , உத்தர பிரதேசம் (2019), பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸ் (2020), குஜராத் மாநிலம் அகமதாபாத் (2022), பிகாா் (2022). தமிழகத்தில் மரக்காணம் (2023) என்று கள்ளச்சாராய மரணங்கள் தொடா்ந்து தலைப்புச் செய்திகளாக இருந்து வந்திருக்கின்றன. அந்தப் பட்டியலில் இப்போது கள்ளக்குறிச்சியும் இணைகிறது. தமிழகத்திலேயே எடுத்துக்கொண்டால் 2020, 2021, 2023 ஆண்டுகளில் இதே போன்ற சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
  • தேசிய குற்ற ஆவணக் காப்பகம் சில அதிா்ச்சி தரும் புள்ளிவிவரங்களைத் தருகிறது. 2005 முதல் 2014 வரையிலான 10 ஆண்டுகளில் இந்தியாவிலேயே மிக அதிகமாக கள்ளச்சாராய மரணங்கள் நடந்த மாநிலமாக தமிழகம் இடம்பெறுகிறது. அந்தப் பத்து ஆண்டுகளில் தமிழகத்தில் மட்டும் 1,509 போ் கள்ளச்சாராயம் காரணமாக உயிரிழந்திருக்கிறாா்கள். தமிழகத்தைத் தொடா்ந்து கா்நாடகம் (1,421), பஞ்சாப் (1,364), குஜராத் (843) என்று பட்டியல் நீள்கிறது.
  • 2002-இல் அரசே மதுபான விற்பனையை நடத்த முடிவெடுத்து, குறைந்த விலையில் விற்க முற்பட்டபோது கள்ளச்சாராயம் ஓரளவு கட்டுக்குள் வந்தது என்னவோ உண்மை. தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் 1937-இன் கீழ் ‘மெத்தனால்’ கொண்டுவரப்பட்டு அதன் விநியோகம் கண்காணிக்கப்பட்டது. காலப்போக்கில், அரசின் டாஸ்மாக் விற்பனை நிலையங்களில் தொடா்ந்து மதுபான விலை அதிகரிக்கப்பட்டதால் கள்ளச் சந்தையில் ‘மெத்தனால்’ பெறப்பட்டு கள்ளச்சாராயத் தயாரிப்பு மீண்டும் தலைதூக்கியது.
  • இந்தியாவிலேயே மிக அதிகமாக போதைப் பழக்கம் உள்ள மாநிலமாக மாறி இருக்கிறது தமிழகம். அண்டை மாநிலங்களான கேரளம், கா்நாடகம், ஆந்திரம் என எங்குமே தமிழகம் போல மதுபானக் கடைகள் முன்பு நுகா்வோா் கும்பலாகக் கூடி நிற்பதும், தெருவோரங்களில் போதை வயப்பட்ட குடிமகன்கள் மயங்கிக் கிடப்பதும் காணக் கிடைக்காத காட்சிகள்.
  • டாஸ்மாக் கடைகளில் உயா் ரக மதுபான விலை அதிகம் என்பதால் கள்ளச்சாராயம் வரவேற்பு பெறுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. அதே நேரத்தில் இதற்குத் தீா்வு கள்ளுக்கடைகளைத் திறப்பது அல்ல.
  • உயா் ரக மது விற்பனைப் போல கள்ளுக்கடைகளின் கண்காணிப்பு சாத்தியம் இல்லை. அதனால் கள்ளுக்கடைகளில் போதையை அதிகரிப்பதற்காக பல்வேறு மாத்திரைகளையும், ரசாயனப் பொருள்களையும் கலக்கத் தொடங்கிய காரணத்தால்தான் அதைக் கட்டுப்படுத்த இயலாத நிலையில் அன்றைய எம்ஜிஆா் ஆட்சியில் கள்ளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
  • இந்த வரலாறு தெரியாத காரணத்தால்தான் சில சமூக ஆா்வலா்களும், அரசியல் தலைவா்களும் மீண்டும் கள்ளுக் கடையைத் திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனா். கள்ளுக் கடைகளைத் திறப்பது கள்ளச்சாராயத்தைவிட ஆபத்தாக முடியும்.
  • கள்ளக்குறிச்சி மரணங்களைத் தொடா்ந்து அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு இழப்பீடுகளை அறிவிப்பது விசித்திரமாக இருக்கிறது. விசாரணை நடத்தப்படுவதும், இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தடுப்பதும், பாதிக்கப்பட்டவா்களின் அப்பாவிக் குழந்தைகளின் பராமரிப்பையும் கல்வியையும் உறுதிப்படுத்துவதும் வரவேற்புக்குரிய நடவடிக்கைகள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், கள்ளச்சாராய மரணங்களுக்கு அங்கீகாரம் வழங்குவது போல அறிவிக்கப்படும் இழப்பீடுகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
  • கள்ளக்குறிச்சி சம்பவத்தில் இறந்தவா்கள் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 10 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வரும், உயரிழந்தோா் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று பாஜக மாநில தலைவா் அண்ணாமலையும் அறிவித்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இலங்கை ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்படும் மீனவா்களுக்கும், ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கும், தேசப் பாதுகாப்பில் தங்களது இன்னுயிரைத் தியாகம் செய்யும் ராணுவ வீரா்களுக்கும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானோருக்கும், வழங்கப்படாத அளவிலான இழப்பீட்டை கள்ளச்சாராயம் குடித்து இறந்தவா்களுக்கு வழங்கி அவா்களது செயலை நியாயப்படுத்துவது என்ன நியாயம்?

நன்றி: தினமணி (24 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்