TNPSC Thervupettagam

கள்ளுண்டு களி கொண்ட ஔவையும் ஒயின் அருந்தி மெய்மறந்த அபு நுவாசும்!

July 16 , 2024 184 days 373 0

சிறிய கள்ளும், பெரிய கள்ளும் – திரிபுவாதம்

  • பல்துறைப் பேராசிரியர்கள் கலந்துகொண்ட ஒரு கூட்டம் நடந்துகொண்டிருந்தது. அது இலக்கியக்கூட்டம் அல்ல என்றாலும் இலக்கியம் பேசப்பட்டது. திடீரென ஒரு பேராசிரியர் எழுந்து வந்தார். ஔவையாரின் “சிறிய கட்பெறினே“ என்னும் புறநானூற்றுப்பாடலை எடுத்துக்கொண்டு பேச ஆரம்பித்தார்.

“சிறியகள் பெறினே எமக்குஈயு மன்னே

பெரியகள் பெறினே

யாம்பாடத் தான் மகிழ்ந் துண்ணுமன்னே “

  • (புறநானூறு, பாடல் 235, வரிகள் 1,2,3)
  • இப்பாடல், ஔவையார் மன்னன் நெடுமான் அஞ்சியைப் புகழ்ந்து பாடியது.
  • “குறைந்த அளவில் கள் கிடைத்தால் அதனை மன்னன் நெடுமான் அஞ்சி எனக்குத்தந்துவிடும் உயர்ந்த குணம் உடையவன். அதிக அளவில் கள் கிடைத்தால் எனக்கும் தருவான், அவனும் அருந்துவான். கள்ளுண்டு நான் பாட, அதனைக்கேட்டு மகிழ்ந்து அவனும் கள்ளுண்டு களிகொள்வான்” என்று ஔவையார் பாடுகிறார். ஆனால் அந்தப் பேராசிரியரோ, காலம்காலமாக தமிழாசிரியர்கள் இப்பாடலுக்கு இப்படித் தவறான உரை எழுதியும் சொல்லியும் வருவதாக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார் (தவறாக உரை எழுதுகிறார்கள் என்பது உண்மையும்கூட). அதோடு, இதுவரையிலும் யாரும் கேட்டறியாத, ‘மகத்தான’ மற்றொரு பொருளை ‘உண்மைப்பொருள்’ என்று எடுத்துரைத்தார்.
  • சிறியவர்கள் குடிக்கும் கள், பெரியவர்கள் குடிக்கும் கள் என்று கள்ளானது இருவகைப்பட்டிருந்ததாம். சிறியவர்கள் குடிக்கும் கள்ளில் குறைவான போதை இருக்குமாம். அதுவே ‘சிறிய கள்’ என்றார். பெரியவர்கள் குடிக்கும் ‘பெரிய கள்ளில்’ போதை மிகுந்திருக்குமாம். ஆகவே, சிறியவர் குடிக்கும் போதைக் குறைந்த கள்ளை நெடுமான் அஞ்சி, ஔவைக்கு மட்டும் கொடுத்திருக்கிறான். போதை மிகுந்த கள் என்றால் அதனைத் தான் குடித்ததோடு ஔவைக்கும் கொடுத்திருக்கிறான் என்று இதுவரையிலும் யாரும் சொல்லாத புதிய விளக்கம் ஒன்றைச்சொல்லித் தலைகீழாகப் புரட்டிப்போட்டார்.
  • அந்தப் பேராசிரியரும் பல்துறை வித்தகர்தான், பலபல பட்டங்கள் பெற்றவர்தான். ஆனாலும் அது ஏற்புடையதில்லை என்று சொன்னபோது அதனை அவர் ஏற்க மறுத்துவிட்டார். அதோடு ஔவை, கள் குடித்ததாகச் சொல்வதை ஏற்பதில் அவருக்கு உடன்பாடில்லை. அது, அவரது இன்றைய சமூகக் கட்டமைப்பு பற்றிய அவரது மனநிலையை வெளிப்படுத்துவதாக இருந்தது. இவர்போல இன்னும் சிலர் அல்லது பலர் இருக்கக்கூடும். அதனால் எது உண்மை என்பதை வெளிப்படுத்தவேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

ஔவை கள் குடித்தது உண்மையா, இல்லையா?

  • அந்தப் பேராசிரியர் அந்தப் பாடலை முழுமையாக வாசித்துப் பொருள் விளங்கினாரா என்பதே நமது கேள்வி. காரணம் அதற்கடுத்த இரண்டு வரிகளிலேயே தேவையான பதில் வெளிப்படையாகப் பேசப்படுகிறது.

“சிறுசோற் றானும் நனிபல கலத்தன் மன்னே

பெருஞ்சோற் றானும் நனிபல கலத்தன் மன்னே”

  • (புறநானூறு, பாடல்-235, வரிகள் 4,5)
  • அதே மன்னன் நெடுமான் அஞ்சி, நிறையச் சோறு (பெருஞ்சோறு) இருக்குமானால், பலருக்கும் கொடுத்துத் தானும் உண்பான். சோறு குறைந்த அளவில் (சிறுசோறு) இருக்குமானால், அப்போதும் அதனைத் தான்மட்டுமே உண்ணாமல், பலருடன் பகிர்ந்து உண்ணும் உயரிய குணம் படைத்தவன் என்று ஔவை மன்னன் நெடுமான் அஞ்சியைப் புகழ்ந்துரைக்கிறார். இங்கு, ‘சிறுசோறு', ‘பெருஞ்சோறு’ என்பன முறையே கொஞ்சம், மிகுதி என்னும் பொருளை மட்டுமே தருகின்றன. அந்தவகையில், அதற்கு முன்பாக வரும் ‘சிறிய கள்’, ‘பெரிய கள்’ என்பன ‘கொஞ்சம்’, ‘மிகுதி’ என்னும் பொருளையேத் தருகின்றன என்று உறுதிப்படக் கூறலாம். தவிரவும், அன்றும் சரி இன்றும் சரி, சிறியவர் குடிக்கும் கள், பெரியவர் குடிக்கும் கள் என்றெல்லாம் பிரிவினைகள் இருந்ததே இல்லை. இதே போக்கு நீடித்தால், ஆண்கள் குடிக்கும் கள், பெண்கள் குடிக்கும் கள் என்று இருந்ததாகக்கூட சிலர் திரிக்கக்கூடும்.

ஔவை, காட்டமான கள் குடித்ததற்கு அழுத்தமான சான்று

“ ஊர்உண் கேணிப் பகட்டிலைப் பாசி

வேர் புரை சிதாஅர் நீக்கி, நேர்கரை

நுண்நூல் கலிங்கம் உடீஇ உண்ம்எனத்

தேள்கடுப் பன்ன நாட்படு தேறல்

கோள்மீன் அன்ன பொன்கலத்து அளைஇ

ஊண்முறை ஈத்தல் அன்றியும் கோண்முறை

விருந்திறை நல்கி யோனே; அந்தரத்து

அரும்பெறல் அமிழ்தம் அன்ன

கரும்புஇவண் தந்தோன் பெரும்பிறங் கடையே ”

  • (புறநானூறு, பாடல் 392, ஔவை)
  • அதியமான் நெடுமான் அஞ்சியின் மகனும், மன்னனுமான பொருட்டெழினியை ஔவை பாடியது.
  • ஔவை, கிழிந்த அழுக்கடைந்த ஆடையுடன் மன்னன் ‘பொருட்டெழினி’ முன்சென்று அவனைப் புகழ்ந்து வாழ்த்துகிறார். மன்னன், ஔவையின் பழைய மாசுபடிந்த ஆடையை அகற்றி, நுண்ணிய நூலால் ஆன தூய ஆடையை உடுத்தச்செய்து, விண்மீன்கள் போன்று ஒளிவீசும் பொற்கலங்களில் கள்ளை ஊற்றிக்கொடுத்து, நல்லதொரு விருந்தும் அளித்திருக்கிறான். ஔவைக்குக் கொடுக்கப்பட்ட கள்ளைக் குடித்த பிறகு, அந்தக்கள் பல நாள்கள் ஊறவைத்திருந்த கள் என்றும், அதனைக் குடித்ததும் தேள்கொட்டியதுபோல் கடுப்பினைத் தந்தது (போதையைத் தந்தது) என்றும் ஔவை குறிப்பிடுகிறார். இப்படியாக ஔவை கள் குடித்துக் களித்திருக்கிறார் என்பதை அறிய முடிகிறது.
  • அதியமான் நெடுமான் அஞ்சியின் முன்னோர்தான் கடல்கடந்த நாட்டிலிருந்துக் கரும்பைத் தமிழ் மண்ணிற்குக் கொண்டுவந்தவர்கள் என்னும் செய்தியையும் இப்பாடலின் இறுதி வரிகளிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.

சங்க காலத்தில் பெண்களும் கள் அருந்தினார்களா?

”உண்மின் கள்ளே, அடுமின் சோறே

எரிக திற்றி ஏற்றுமின் புழுக்கே

வருநர்க்கு வரையாது பொலங்கலம் தெளிப்ப

இருள்வனர் ஒலிவரும் புரிஅவிழ் ஐம்பால்

ஏந்துகோட்டு அல்குல் முகிழ்நகை மடவரல்

கூந்தல் விறலியர் வழங்குக அடுப்பே”

  • (பதிற்றுப்பத்து, பாடல் 18, வரிகள் 1- 6)
  • சேர மன்னனின் கொடையால் வளம்பெற்ற பாணன், தனது இல்லத்திற்கு வரும் விருந்தினருக்குச் சிறப்பான உணவளிக்கும் நோக்கில் பாணர் மகளிருக்குக் கட்டளைகள் பிறப்பிக்கிறான். உணவு சமைப்பதற்கு முன்பாக பாணர் மகளிரைக் கள் அருந்தவும், அதன் பிறகு இறைச்சியை அறுக்கவும், வேகவைக்கவும், சோறு சமைக்கவும் கூறுகிறான்.
  • சங்க காலத்தில் கள் என்பது அறம்சார்ந்து விலக்கப்பட்ட பொருள் அல்ல. கள்ளானது, அனைத்து நிலங்களிலும் உணவாகக் கருதப்பட்டிருக்கிறது. வீட்டிற்கு வரும் விருந்தினருக்குக் கள் அல்லது நெல்லில் தயாரித்த மதுவைக் குடிக்கக் கொடுத்திருக்கின்றனர். மன்னர்களும், தங்களை நாடிவரும் புலவர்களுக்கும், கலைஞர்களுக்கும் கள்ளும், தேறலும், வேகவைத்த ஊனும் வழங்கியிருக்கின்றனர். சங்க இலக்கியங்களில் பரவலாக இந்தப் பண்பு காணப்படுகிறது. கள்ளும், ஊன் உணவும் கொடுத்து விருந்தோம்பல் செய்வது சங்ககாலத்தில் பொதுப்பண்பாக இருந்திருக்கிறது. கள் உண்பது அறத்திற்கு எதிரானதாகப் பார்க்கப்படவில்லை.

பூசல் தீர்த்து வைத்தக் கள்

  • மருத நிலத்து நெல் உழவர்கள் அறுவடைக்காலத்தில், நெற்களத்தில் அடித்துவைத்திருந்த பொங்களியை (தூற்றாத நெற்பொலி) காற்றில் தூற்றுகின்றனர். அம்மருதநிலம், நெய்தல் நிலத்தை ஒட்டியிருந்தது, நெய்தலில் தூய வெண்மை நிறத்தில் உப்புப்பாத்திகளில் உப்பு விளைந்திருந்தது. நெல் உழவர்கள் தூற்றியதில் தூசுகளும், துரும்புகளும் காற்றில் பறந்துசென்று விளைந்திருந்த உப்புப்பாத்திகள் மீது படிந்து உப்பை மாசுபடுத்திவிட்டன. மாசு படிந்த உப்பை விற்க முடியாது. யாரும் வாங்கமாட்டார்கள். அதனால் ஏற்பட்ட வலி காரணமாக மழைவேண்டா உப்புழவர்கள், மழைவேண்டும் நெல்உழவர்களுடன் பூசலிடுகின்றனர்.
  • தொளியை (சேற்றை) அள்ளி ஒருவர்மீது மற்றவர் வீசுகின்றனர். வாய்ப்பூசல் முற்றிக் கைகலப்பாக மாறிவிடுகிறது. இதனைக் கவனித்துக்கொண்டிருந்த மருதநிலத்துத் தலைநரைத்தப் பெரியவர்கள் சண்டையை விலக்குகின்றனர். மிகுந்த கோபத்துடன் இருந்த உப்பு விளைவிக்கும் ‘நுளையர்களுக்கு’ முற்றிவிளைந்தத் தேன்போல் சுவைமிகுந்தக் கள்ளைக்கொடுத்து அமைதிப்படுத்துகின்றனர். இப்படிப்பட்டக் காட்சி ஒன்று 366-வது அகநானூற்றுப் பாடலில் பதிவாகியுள்ளது.

“தாழ்சினை மருதம் தகைபெறக் கவினிய

நரைமூதாளர் கைபிணி விடுத்து,

நனைமுதிர் தேறல் நுளையர்க்கு ஈயும்

பொலம்பூண் எவ்வி நீழல் அன்ன”

  • (அகநானூறு, பாடல் 366, குடவாயிற் கீர்த்தனார்)
  • இரண்டு நிலப்பரப்பைச் சேர்ந்தவர்களிடையே நிகழ்ந்த ஒரு பூசலை, அதனால் உருவான கசப்புணர்வை, அன்புடன் கொடுத்த கள் நீக்கியிருக்கிறது என்பதிலிருந்தே சங்ககாலத்தில் கள்ளின் பெருமையை நாம் புரிந்துகொள்ளலாம்.

கள் பற்றிய இன்றைய பார்வை

  • இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு முன்பு வரையிலும், பெரியவர்கள் தங்களுடன் ஆண் பிள்ளைகளை அழைத்துச்சென்று அவர்களுக்கும் கள் வாங்கிக் கொடுத்தது இந்தத் தமிழ்மண்ணில் நிகழ்ந்ததா, இல்லையா? நெல்லை, குமரி மாவட்டங்களில் ஆப்ப மாவு புளிப்பதற்குக் கள் ஊற்றப்பட்டது. அதனால் ஆப்பம் வயதுக்குவந்த ஆண்களுக்கு மட்டுமே என்று இருந்ததா என்ன? ஆண்கள், பெண்கள், சிறியவர், பெரியவர் என்று குடும்பத்தில் அனைவருக்கும் விருப்பமான உணவாக ஆப்பம் இருந்தது அல்லவா?
  • இன்று அரசே நடத்தும் மதுபானக்கூடங்களில் விற்கப்படும் வடித்துப்பகுத்த வெளிநாட்டு வகை மதுவகைகளில் போதை மட்டுமே உண்டு. ஆனால், கள்ளில் போதையுடன் மருத்துவக்குணங்களும் உண்டு. அரசு விற்கும் வெளிநாட்டு மதுபானங்களைவிடவும் பனங்கள் சிறப்பானதே. கள்ளச்சாராயம்போல கள்ளிலும் கலப்படங்கள் செய்யும் வாய்ப்புகள் உள்ளன என்பதை மறுக்கமுடியாது. அதனால், பனங்கள்ளை அரசே கொள்முதல் செய்து, குப்பிகளில் அடைத்து விற்கலாம். இன்றைய மதுபானங்கள் விற்பனையால் ஏழைகளின் உழைப்புச் சுரண்டப்பட்டுக் கார்பொரேட் முதலாளிகள் மட்டுமே பெரும்பொருள் ஈட்டிவருகின்றனர். மாறாக அரசு கள் விற்பனையைத் தொடங்கினால் பலநூறு கள் இறக்கும் ஏழைத்தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வாழ வழி கிடைக்கும், அரசு வருவாயும் பெருகும்.
  • திருக்குறள், நாலடியார் போன்று அறம் உரைக்கும் கீழ்க்கணக்கு நூல்களில்தான் கள் உண்பது தவறு என்னும் கருத்துக் கூறப்படுகிறது, கள்ளுண்ணாமை வலியுறுத்தப்படுகிறது. வரலாற்றைத் திருத்தி எழுதுகிறோம் என்று சொல்லும் சில ‘அறிஞர்கள்’ இப்படித்தான் இன்றைய நம் சமகாலத்து அறங்களைச் சங்ககாலத்துத் தமிழருக்கும் பொருத்தித் தங்கள் அறிவை (அறியாமையை) நிலைநாட்டி வருகிறார்கள். இன்று நாம் வாகனங்களில் விரைந்துசெல்கிறோம் என்பதற்காக, முன்பு நடைப்பயணம் போனவர்களை முட்டாள்கள் என்று சொல்லமுடியுமா?
  • நம் அனைவரின் முன்னோர்களும் ஆடையின்றி அம்மணமாகத் திரிந்தவர்கள்தான். இன்றைய நம் நாகரிகக்காலத்தில் நின்றுகொண்டு அக்காலத்து மனிதர்களை மதிப்பீடு செய்வதில் எவ்வித ஞாயமும் இருக்கமுடியாது. ஒரே நாளில், ஒரே ஆண்டில் நாம் இன்றைய நிலைக்கு வந்துசேர்ந்துவிடவில்லை. நாம், இன்றைய நாகரிகக் காலத்திற்கு வந்துசேர்வதற்குப் பல மில்லியன் ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. நமது இன்றைய நிலைக்கு, நமக்கு முன்னால் வாழ்ந்த அனைத்து மனிதர்களின் உழைப்பும், சிந்தனையும் தேவைப்பட்டிருக்கிறது. படிப்படியாக முன்னேறித்தான் மனிதன் இன்றைய நிலைக்கு வந்துசேர்ந்திருக்கிறான். இதையெல்லாம் புரிந்துகொள்ளாத சிலர்தான் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்கிறேன் என்றும், வரலாற்றைத் திருத்தி எழுதுகிறேன் என்றும் அப்பாவி மக்களைத் தவறாக வழி நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

ஔவையாரம்மன் கோயில்கள்

  • ஔவையார் வாழ்ந்த காலத்தில், அவர் பெண்களுக்கு நெருக்கமான தோழியாக, பாடம் சொல்லும் புலவராக, பாதுகாப்பு அரணாக, வாழ்க்கை நெறியாளராக எனப் பல வழிகளிலும் பெண்களின் அன்றாட வாழக்கையில் பின்னிப்பிணைந்து வாழ்ந்ததன் காரணமாகவே தமிழ்மண் எங்கும் ஔவை தெய்வமாகக் கொண்டாடப்படுகிறார். குமரியிலும், நெல்லையிலும், ‘ஔவையாரம்மன்’ கோயில்கள் பல உண்டு. அக்கோயில்களில் ஔவையை இன்றளவும் பெண்கள் வழிபட்டு வருகிறார்கள். ஔவை கள்குடித்தார் என்று யாருமே ஔவையை வெறுக்கவில்லை.
  • ஔவைக்குப் பல இடங்களில் கோயில்கள் உள்ளன. அவற்றுள் கன்னியாகுமரி மாவட்டம் தாழக்குடி அருகில் உள்ள ஔவையாரம்மன் கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆடிமாதம் செவ்வாய்க்கிழமைகளில் கூட்டம்கூட்டமாகப் பெண்கள் இங்கு வந்து, அருகில் ஓடும் தோவாளைக்கால்வாயில் குளித்து முழுகி, கொழுக்கட்டை அவித்து ஔவைக்குப் படைத்து வழிபட்டுச் செல்கிறார்கள். அதிக அளவில் மலையாளத்துப் பெண்கள் வருவது குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய செய்தி.

புலனின்பக் கவிஞன் அபு-நுவாஸ்

  • கள்ளுண்டு கவிபுனைந்த தமிழ்ப்புலவர் ஔவையைப் பற்றி எழுதும்போது நினைவுக்கு வரும் மற்றொரு கலகக்கவிஞன் அபு-நுவாஸ். நம் ஔவை கள் குடித்தார் என்றால், அபு-நுவாஸ் ஒயின் அருந்தினார்.
  • உலகம் எங்குமே, புலனின்பத்தில் பெருவிருப்பம்கொண்ட கவிஞர்கள் மிகச் சிறப்பான கவிதை வரிகளைப் படைத்திருக்கிறார்கள். அப்படி ஒரு புலனின்பக் கவிஞர்தான், ‘ஒயின்-கவிஞர்’ என்று அழைக்கப்படும், ஒன்பதாம் நூற்றாண்டைச்சேர்ந்த அரபுக்கவிஞர் அபு-நுவாஸ்.
  • அபு-நுவாஸ், இன்றைய ஈரான் நிலப்பகுதியைச் சேர்ந்த அன்றைய ‘அஹ்வாஜ்’ நகரில் பிறந்தவர். அவரது அப்பா ஓர் அரேபியர், அம்மா பாரசீகர். மேற்குலகில், புலனின்பக் கவிஞர்களில் மிகச் சிறப்பானவராக அபு-நுவாஸ் கருதப்பட்டாலும், மத்தியகிழக்கைச் சேர்ந்த கவிஞர்களான ஒமர் கயாம், கலில் கிப்ரான் போன்று பரவலாக அறியப்படவில்லை. இத்தனைக்கும், அபு-நுவாஸ் இஸ்லாம் தோன்றிய ஆரம்பக் காலத்தைச் சேர்ந்தவர். அபு-நுவாஸ் ஒரு புலனின்பக் கவிஞர் என்பதுகூட அவர் அறியப்படாமல் இருந்ததற்குக் காரணமாக இருந்திருக்கக்கூடும்.
  • அலெக்ஸ் ரோவல் பிரிட்டனைச் சேர்ந்த இதழாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். மேலை நாடுகளில் அறியப்படாமல் இருந்த அபு-நுவாசின் ஒயின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். அலெக்ஸ் ரோவல்லின் சிறப்பான மொழிபெயர்ப்பால் ஈர்க்கப்பட்ட பதிப்பாளர்கள், அவற்றை நூலாக வெளிக்கொணர்ந்திருக்கிறார்கள். அந்த நூலில், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட 125 அபு-நுவாஸ் கவிதைகள் இடம்பெற்றுள்ளன.
  • இஸ்லாமின் ஆரம்ப காலகட்டத்தில் வாழ்ந்த அபு-நுவாஸ், அன்றைய முஸ்லிம் பழமைவாதிகளுடன் முரண்பட்டே வந்திருக்கிறார். அதன் காரணமாக, அபு-நுவாசின் நடத்தையை ‘தடைசெய்யப்பட்டது’ என்னும் பொருளில் ‘ஹராம்’ என்று சொல்லிவந்திருக்கின்றனர். இஸ்லாம் குறிப்பிடும் ஐந்து முதன்மையான இறைவழிபாட்டில் ஹஜ் பயணம் போவதும் ஒன்றாக இருக்கிறது. அப்படி இருந்தும், அந்த ஹஜ் பயணத்தில் முரண்பட்டு ஒயினை உயர்த்திப் பிடித்திருக்கிறார், அபு-நுவாஸ்.
  • ‘ஒயினோடும், பரத்தையோடும் கூடி இருக்கும் எனக்கு ஹஜ் பயணம் போகவேண்டிய அவசியம் என்ன? என்று மதநம்பிக்கையோடு முரண்படும் கேள்வியை எழுப்பியிருக்கிறர்.
  • இப்பூவுலகிலேயே சொர்க்கத்தைக் காட்டுகிறது ஒயின் என்கிறார் அபு-நுவாஸ்.

‘கடவுளிடம்கூட இல்லாத

நம் காலிஃப் போற்றிப் புகழும்

இப்பிறப்பில் நமக்குத் தெரியாத சொர்க்கத்தை

இப்போதே நமக்குக் காட்டும்

சூரியக் கதிர்களைப் பழிக்கும்

ஒளிரும் உன்னதமான ஒயினை

நான் வெறுக்க முடியுமா?

  • ஒயினைக் கொண்டாடியதாலோ என்னவோ பிந்தைய காலங்களில் அபு-நிவாசை ஒரு சிறந்த கவிஞராகக் கொண்டாடாமல் மௌனம் காத்துவிட்டது இஸ்லாமிய உலகம் என்று விமர்சகர் ஃபிலிப் கென்னடி கூறுகிறார்.
  • பொது ஆண்டுக்குப் பிறகு 814-இல் அபு நுவாஸ் மரணமடைந்தபோது, அன்று ஆட்சிப் பொறுப்பிலிருந்த காலிஃப், அல்-மாமுன் கூறிய வரிகளை நினைவுபடுத்துவது சிறப்பாகும். “நம் காலத்து வசீகரம் நம்மைவிட்டுப் பிரிந்துவிட்டது. அவரைப் பழித்த அனைவரும் கடவுளின் சாபத்திற்கு உள்ளாவார்கள்” என்று காலிஃப் கூறியிருக்கிறார்.
  • பரவலாக அறியப்படவில்லை என்றபோதும், மத்திய கிழக்கு நாடுகளில் அனைத்து வீடுகளிலும் அறியப்பட்ட கவிஞராகவே அபு-நுவாஸ் பெயர் இருந்திருக்கிறது. லெபனான் நாட்டைச் சேர்ந்த அரபுக்கவிஞர் கலில் ஜிப்ரான், அபு-நுவாசின் உருவத்தைத் தனது கற்பனையில் ஓவியமாகத் தீட்டியிருக்கிறார். பாக்தாத் நகரில் அபு-நுவாசிற்கு சிலை நிறுவப்பட்டிருக்கிறது. ஒயினைக் கொண்டாடும் பெரும்பகுதிக் கவிதைகள், அரபுப்பகுதியில் இருந்தே வந்திருப்பதாக ரோவல் கூறுகிறர். இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பே அப்பகுதியில் ஒயின் தயாரிப்பதும், ஒயின் அருந்துவதும் நடைமுறையில் இருந்திருக்கிறது. அன்றைய நாளில், நீண்டநாள் புளிக்கவைக்கப்பட்ட ஒயின் சிறப்பு மிகுந்தது என்பது பொதுவான கருத்தாக இருந்திருக்கிறது. இக்கருத்து, ஔவை கூறும் ‘தேள்கடுப் பன்ன நாட்படு தேறல்’ என்பதோடு இசைந்துபோகிறது. பழைய ஒயின் பற்றி அபு-நுவாஸ் படைத்திருக்கும் இந்த வரிகள் தன்னை மிகவும் ஈர்த்ததாக அலெக்ஸ் ரோவல் கூறுகிறார்.

“சரளமாகப் பேசும் நடை

அவள் குடித்த பழைய ஒயினின் கொடை;

மக்களிடையே மூப்பர்போல் நிமிர்ந்து அமர்ந்து

அவள் சொல்வாள் பழந்தேசத்துக் கதைகள்”

  • ஔவை கள் குடித்ததையும் அபு-நுவாஸ் மது அருந்தியதையும் மட்டுமே அளவுகோலாக வைத்துக்கொண்டு அவர்களைச் சுருக்கிப் பார்க்க முடியாது என்பதற்கு இன்றளவும் நிலைத்திருக்கும் அவர்களுடைய கவிதைகளே சான்று பகரும்.

நன்றி: இந்து தமிழ் திசை (16 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்