TNPSC Thervupettagam

கழிப்பறையில் வரிப்பணம்!

October 6 , 2020 1391 days 648 0
  • இந்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியின் சமீபத்திய அறிக்கை திடுக்கிட வைக்கிறது.
  • மிகுந்த எதிர்பார்ப்புடன் 2014 அக்டோபா் 2-ஆம் தேதி பாரத பிரதமா் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்ட தூய்மை இந்தியா திட்டம்’ (ஸ்வச் பாரத் மிஷன்) கழிப்பறைகள் கட்டும் திட்டமாக மாறிவிட்டது என்பது ஒருபுறமிருக்க, அந்த நோக்கமும் சரியாக நிறைவேறவில்லை என்பதுதான் வேதனை அளிக்கிறது.
  • அண்ணல் காந்தியடிகளின் 150-ஆவது பிறந்த ஆண்டு நிறைவடையும்போது நிறைவேற்ற வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து அறிவிக்கப்பட்ட திட்டம் இலக்கை முழுமையாக எட்டவில்லை என்பது மட்டுமல்ல, பல முறைகேடுகளையும், வீண் விரயத்தையும் உள்ளடக்கியதாக மாறியிருப்பது மிகப் பெரிய சோகம்.

கழிப்பறை வசதி பற்றாக்குறை

  • தூய்மை இந்தியா திட்டம்குப்பை கூளமில்லாத சுத்தமான இந்தியாவை உருவாக்கும் திட்டமாக இல்லாமல் போனதால் வருத்தப்படத் தேவையில்லை.
  • கழிப்பறைகள் கட்டப்பட்டு பொது வெளியில் மலம் கழிக்கும் அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முனைப்பேகூட வரவேற்புக்குரிய இலக்குதான்.
  • 2016-இல் தூய்மை இந்தியா திட்டம் அறிவிக்கப்பட்டபோது இந்தியாவிலுள்ள 53%-க்கும் அதிகமான வீடுகளில் கழிப்பறை இல்லாத நிலைமை காணப்பட்டது.
  • அதாவது, 70% இந்திய கிராமங்களில் உள்ள மக்கள் பொது வெளியில் தங்கள் காலைக் கடன்களைக் கழிக்கும் அவலநிலை காணப்பட்டது. அதனால் கழிப்பறைகள் கட்டுவது மிக அத்தியாவசியமான ஒன்றாக இருந்தது.
  • இலக்கு நிர்ணயித்தது போலவே, கடந்த ஆண்டு அக்டோபா் 2-ஆம் தேதி காந்தி ஜயந்தி அன்று இந்தியா முற்றிலுமாக பொது வெளியில் மலம் கழிப்பதிலிருந்து விடுதலை பெற்றுவிட்டதாக மத்திய அரசு அறிவித்தபோது அதை யாரும் பொருட்படுத்தாததில் வியப்பில்லை.
  • அரசு நிர்வாகம் இலக்கை எட்டிவிட்டதாக தனக்குத்தானே முதுகைத் தட்டிக் கொடுத்துக் கொள்ளும் போலித்தனத்தின் வெளிப்பாடுதான் அந்த அறிவிப்பு என்பது எல்லோருக்குமே தெரியும்.
  • பொது வெளியில் காலைக் கடன்களை நிறைவேற்றிக்கொள்ளும் போக்கு குறைந்திருக்கிறது என்பதிலும், இலக்கை எட்டாவிட்டாலும் அதை நோக்கியப் பயணம் தொடங்கியிருக்கிறது என்பதிலும் நாம் ஆறுதல் அடையலாம்.
  • தூய்மை இந்தியா திட்டம்அறிவித்ததைத் தொடா்ந்து, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களைக் கழிப்பறைகள் கட்டும் பணியில் இணைத்துக் கொண்டது நரேந்திர மோடி அரசின் புத்திசாலித்தனம் என்பதை மறுப்பதற்கில்லை.
  • அரசு நிர்வாகத்தை மட்டுமே சார்ந்திருக்காமல், பொதுத்துறை நிறுவனங்களின் கார்ப்பரேட் சமூகக் கடமை நிதியைப் பயன்படுத்தி பள்ளிக்கூடங்களில் கழிப்பறை வசதிகளை மேம்படுத்த முடிவெடுத்தது பாராட்டுக்குரியது.
  • ஆனால், இந்தப் பணியில் தங்களை இணைத்துக்கொண்ட பொதுத்துறை நிறுவனங்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை முக்கியமானதாகக் கருதவில்லை என்பது மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கையிலிருந்து தெரிகிறது.

எச்சரிக்கை தரும் அறிக்கைகள்

  • மத்திய அரசின் 53 பொதுத் துறை நிறுவனங்கள் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், 1.40 லட்சம் கழிப்பறைகளை பள்ளிக்கூடங்களில் கட்டியிருக்கின்றன.
  • கணக்குத் தணிக்கை ஆணையம் கடந்த செப்டம்பா் 2017 முதல் ஜனவரி 2018 வரை நடத்திய ஆய்வின்படி, பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்திருக்கின்றன.
  • கட்டப்பட்டதாகக் கூறப்படும் கழிப்பறைகளில், 11% கழிப்பறைகள் கோப்புகளில்தான் காணப்படுகின்றனவே தவிர, பள்ளிகளில் காணக் கிடைக்கவில்லை.
  • 30% கழிப்பறைகள் சுத்தம் செய்யப்படாததாலும், சிதிலமடைந்திருப்பதாலும், தண்ணீா் வசதி இல்லாததாலும் பயன்பாட்டில் இல்லாமல் இருக்கின்றன. பல கழிப்பறைகள் பள்ளிக்கூடங்களால் வேறு பயன்பாடுகளுக்கு உபயோகப்படுத்தப்படுவதால், பூட்டப்பட்டிருக்கின்றன.
  • பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு முறையான கழிப்பறைகள் வழங்குவது என்பது அவா்களது சுகாதாரத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் அவசியம்.
  • குறிப்பாக, சிறுவா்களுக்கும் சிறுமிகளுக்கும் தனித்தனியாக கழிப்பறை இருப்பது கட்டாயத் தேவையும்கூட.
  • கழிப்பறை வசதி இல்லாததால் பெண் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் இருக்கிறார்கள் என்று பல ஆய்வுகள் வெளிப்படுத்தியிருக்கின்றன.
  • குறிப்பாக, வயது வந்த பெண் குழந்தைகள் கல்வியை பாதியில் நிறுத்துவதற்கு முக்கியமான காரணம், கழிப்பறை இல்லாமையே என்று கூறப்படுகிறது.
  • கழிப்பறை வசதி என்பது கிராமப்புறப் பிரச்னை மட்டுமல்ல, நகா்ப்புறங்களிலும் கழிப்பறை இல்லாமை காணப்படுகிறது.
  • கட்டப்பட்ட கழிப்பறைகளில் ஏறத்தாழ 25% கழிப்பறைகள் பயன்படுத்த முடியாதவையாக மாறி, பொது மக்களின் வரிப்பணம் விரயமாகிறது.
  • சிசு மரணம், ஊட்டச்சத்து குறைவு, நோய்த்தொற்று பாதிப்பு போன்ற பல பிரச்னைகளுக்கும், முறையான கழிப்பறை இல்லாமைக்கும் தொடா்பு உண்டு என்பதை நாம் வசதியாக மறந்துவிடுகிறோம்.
  • தண்ணீா் வசதி இல்லாத கழிப்பறைகள் பயன்பாட்டில் இல்லாமல் போவதில் ஆச்சரியமில்லை.
  • பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், முறையான தண்ணீா் வசதியை ஏற்படுத்தி, கழிப்பறைகளைப் பயன்பாட்டு நிலைக்கு கொண்டுவருவது இப்போது சாத்தியம்.
  • அதேபோல, தூய்மை இந்தியா திட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டவா்களை சட்டத்தின் முன் நிறுத்துவதும் அவசியம்.
  • கணக்குத் தணிக்கை அதிகாரிகளின் அறிக்கைகள் வெறும் எச்சரிக்கையாக மட்டும் இல்லாமல், தவறுகள் திருத்தப்படுவதற்கான வாய்ப்புகளாக மாறும்போதுதான் வரிப்பண விரயத்துக்கு முற்றுப்புள்ளி விழும். எச்சரிக்கை தரும் அறிக்கைகள், கழிப்பறைகளில் வீசி எறியப்பட்டுவிடக் கூடாது!

நன்றி: தினமணி (06-10-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்