- உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான திறந்த வெளியில் மலம் கழிக்கும் மக்கள் (சுமார் 62 கோடி பேர்) இந்தியாவில் இருப்பதாக, குறிப்பாக இந்திய கிராமங்களில் இருப்பதாக யுனிசெஃப் அமைப்பு தெரிவித்துள்ளது.
- திறந்தவெளியில் மலம் கழித்தல் என்பது ஒரு பொது சுகாதாரக்கேடு. இது வயிற்றுப்போக்கு போன்ற ஆபத்தான நோய்களை குழந்தைகளுக்கு ஏற்படுத்தும்.
- யுனிசெஃப்’இன் கூற்றுப்படி, திறந்த வெளியில் மலம் கழித்தலும் மோசமான சுகாதாரமும் குழந்தைகளுக்கான நோய்களுக்கும் ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கும் மிக முக்கிய காரணங்களாகும்.
- திறந்த வெளியில் மலம் கழித்தல், பெண்கள், சிறுமிகள் மீதான உடல் ரீதியான தாக்குதல் அபாயத்திற்கும் வழிவகுக்கிறது. கழிப்பறை இல்லாத வீடுகளில் அவர்கள் தங்கள் இயற்கை உபாதையினை நீக்க இருள் வரும் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.
- போதுமான கழிப்பறைகளும் தண்ணீர் வசதியும் இல்லாததும், சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு இல்லாததும் மக்கள் திறந்த வெளியில் மலம் கழிப்பதற்கான முக்கிய காரணங்களாகும்.
- இந்தியாவில், குறிப்பாக, கிராமப்புறங்களில் திறந்த வெளியில் மலம் கழித்தலை, வீட்டிற்குள் கழிப்பறை பயன்படுத்துவதைவிட சிறந்ததாகக் கருதுகின்றனர். இதனால் மலம் கழிப்பதற்கான நடைமுறையை மாற்றுவது அரசுக்கு சவாலாக உள்ளது.
- 2014ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி, தனது "தூய்மை இந்தியா' பிரசாரத்தின் ஒரு பகுதியாக 2019-க்குள் பொது வெளியில் மலம் கழிப்பதை அகற்றும் முயற்சியைத் தொடங்கினார்.
- 60 மாதங்களில் 62 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு கழிப்பறைகள் வழங்கப்பட்டுள்ளதையும், 11 கோடிக்கும் அதிகமான கழிப்பறைகள் கட்டப்பட்டுக் கொண்டிருப்பதையும் பார்த்து உலகமே வியப்படைவதாக தூய்மை இந்தியா திட்டத்தின் முதற்கட்ட நிறைவுநாளில் அதாவது மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாள் விழாவில் பிரதமர் குறிப்பிட்டார்.
- இது ஒரு மிகப்பெரிய சாதனை என்பதனை எவரும் மறுக்க இயலாது. ஆனால், இந்திய கிராமப்புறங்களில் திறந்த வெளியில் மலம் கழிக்கும் வழக்கம் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது என்ற இந்திய அரசாங்கத்தின் கூற்று, தேசிய புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்டுள்ள தகவல்களுக்கு முரணாக உள்ளது.
முரணான தகவல்கள்
- இந்தியா முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் நடத்திய கணக்கெடுப்பின் அடிப்படையில், நவம்பர் 2019இல் வெளியான தேசிய புள்ளிவிவர அறிக்கை கிராமப்புறங்களில் 29.7 % குடும்பங்கள் கழிப்பறை வசதியின்றி இருப்பதாக கூறுகிறது.
- ஒடிஸாவில் இந்திய கிராமப்புறங்களில் மிக அதிகமாக 50.7 % குடும்பங்கள் கழிப்பறை வசதியின்றி இருப்பதாகவும், தமிழக கிராமங்களில் கழிப்பறை இன்றி இருக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை 37.2 % என்றும் அந்த அறிக்கைக் கூறுகிறது.
- 93.3 % கிராமப்புற வீடுகளில் கழிப்பறைகள் இருப்பதாக சுட்டிக் காட்டும் 2018-19 இந்திய அரசின் தேசிய வருடாந்திர கிராமப்புற சுகாதார கணக்கெடுப்பு தரவு, மேற்கூறிய இரண்டு அரசு தரவுகளில் இருந்தும் முரண்படுகிறது.
- திறந்த வெளியில் மலம் கழித்தல் நாட்டில் இன்னும் முற்றாக அகற்றப்படவில்லை என்றும் புள்ளிவிவரங்கள் தவறாக இருக்க வாய்ப்புகள் அதிகம் என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
- கழிவறைகளைக் கட்டுவதில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியதாகவும் உண்மையில் மக்கள் அவற்றைப் பயன்படுத்தத் தவறிவிட்டதாகவும் துயர் நீக்கு பொருளாதாரத்திற்கான ஆராய்ச்சி நிறுவனம் (ரைஸ்) தெரிவித்துள்ளது.
- தூய்மை இந்தியா பிரசாரம் தொடங்குவதற்கு முன்பு இந்தியாவில் 39 % குடும்பங்களுக்கு மட்டுமே கழிப்பறை வசதி இருந்தது.
- 2019 பிப்ரவரியில் உலக வங்கியால் நடத்தப்பட்ட தேசிய கணக்கெடுப்பு இன்னும் 10 % கிராமப்புற மக்கள் திறந்த வெளியில் மலம் கழிப்பதாக கூறுகிறது. இவர்களில் 96 % பேருக்கு வீட்டில் கழிப்பறை வசதி இருப்பதாகவும் இந்த கணக்கெடுப்பு கூறுகிறது.
- கழிவுநீர் சேகரிக்கும் தொட்டி கொண்ட பல கழிப்பறைகளில் கழிவுநீர் ஐந்து முதல் ஏழு ஆண்டுகளுக்குள் நிரம்பி விடுவதும், மோசமான கட்டுமானம், மோசமான பராமரிப்பு காரணமாக செயல்படாத கழிப்பறைகளுமே, வீடுகளில் கழிப்பறை இருந்தும் திறந்த வெளியில் மலம் கழிக்க முக்கிய காரணங்களாக பிபிசி 2019’இல் நடத்திய ஆய்வு கூறுகிறது.
- கிராமங்களில் கழிப்பறைகள் கட்டுவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியது. ஆனால் அதன் பராமரிப்பையும் கழிவுநீர் மேலாண்மையையும் கருத்தில் கொள்ளவில்லை.
- "கழிவறைகளை நிர்மாணிப்பது மட்டுமல்லாமல், அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது, எவ்வாறு பராமரிப்பது என்பதையெல்லாம் மக்களுக்குக் கற்பிக்க வேண்டும்' என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
- இந்தியாவில் இன்னும் சாதி பிரச்சினை இந்த அணுகுமுறையினை மாற்றுவதற்கான குறிப்பிடத்தக்க தடையாக இருக்கிறது.
- கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மத்திய பிரதேச மாநிலத்தின் பகேடி கிராமத்தில் திறந்த வெளியில் மலம் கழித்த இரண்டு சிறுமிகள் அடித்துக் கொல்லப்பட்டனர்.
- திறந்தவெளியில் மலம் கழிப்பதை நிறுத்துவதன் மூலமே நிறைய சுகாதார நன்மைகள் கிடைக்கும்.
- சிலர் திறந்தவெளியைத் தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் சுகாதாரம் தொடர்பான பிரச்னைகளை நாம் அதிகம் சந்திக்க வேண்டியிருக்கும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
- திறந்தவெளியில் மலம் கழித்தல் என்பது ஒரு நடத்தை சார்ந்த பிரச்னை அல்ல. இதனைக் கருத்தில் கொண்டு, இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ள தூய்மை இந்தியா திட்டம் கழிவு மேலாண்மையோடு, மக்களின் நடத்தை மாற்றங்களையும் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
- இன்று (நவ. 19) உலக கழிவறை நாள்.
நன்றி: தினமணி (19-11-2020)